tg travels

கட்சிக்கு தலைவர் ஹக்கீமாக இருந்தாலும் கல்முனைக்கு தலைவன் ஹரீஸ் தான்..

அஹமட் மன்சில்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமாக இருக்கின்ற போதிலும் கல்முனைக்கு தலைவன் பிரதி அமைச்சர் ஹரீஸ் தான் என்பது கல்முனைத் தொகுதியில் வாழும் அதிகமான முஸ்லீம் காங்ரஸ் போராளிகளின் கருத்தாகும்.இக் கருத்தானது உடன்பாட்டிற்கு உரியதாகும்.கல்முனைத் தொகுதியில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கல்முனைத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியே பிரதி அமைச்சர் ஹரீஸ் என்பதும் நாடறிந்த உண்மையாகும்.

கல்முனைத் தொகுதியில் நடைபெறும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பேசு பொருளாக இருக்க வேண்டிய பிரதி அமைச்சர் ஹரீஸ் அங்கு நடைபெறும் அபிவிருத்திகளுக்கு பின்னால் இலைமறை காயாகவே இருந்து கொண்டிருக்கிறார்.மக்களிடையே கல்முனைக்கான அபிவிருத்திகளை அதிகளவில் செய்தவர் யார்?என கருத்துக் கணிப்பீட்டை மேற்கொள்கின்ற போது பிரதி அமைச்சர் ஹரீஸிற்கான இடம் மக்கள் மத்தியில் உச்சரிக்கப்படுவது குறைவாகத்தான் இருக்கும்.ஆனால் யதார்த்தமாக சிந்திருக்கின்ற போது பிரதி அமைச்சர் ஹரீஸின் நாமமே கல்முனையின் அபிவிருத்திக்கான கருத்துக் கணிப்பீட்டில் முதன்மை வகிக்க வேண்டும்.

பிரதி அமைச்சர் ஹரீஸின் நாமம் கல்முனைத் தொகுதியின் அபிவிருத்தியில் இலைமறை காயாக இருப்பதற்கு காரணம் என்ன?என்பதை ஆழ்ந்து சிந்திக்கின்ற போது அங்கு நடைபெறும் அபிவிருத்தி செயற்பாட்டு திறப்பு விழாவின் கதாநாயகனாக முன்னிற்பது அக் கட்சியின் தலைவர் என பதில் சுலபமாக கிடைத்து விடும்.திருமண வீட்டில் மணமகனாகவும் இறந்த வீட்டில் சவமாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படும் கட்சியின் தலைமை இருக்கும் போது கல்முனைத் தொகுதியின் அபிவிருத்திக்கு பிரதி அமைச்சர் ஹரீஸின் நாமம் உச்சரிக்கப்படுவது மக்கள் மத்தியில் குறைவாக இருக்கிறது.

கல்முனைத் தொகுதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தனது நாமத்தை அதிகமாக உச்சரிக்க வைப்பதில் அமைச்சர் ஹக்கீம் மும்முரமாக ஈடுபடகிறார்.அதற்கு பலமான காரணமும் உண்டு.கல்முனைத் தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் கோட்டை என அன்றிலிருந்து இன்றுவரை அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகின்றது.இத் தொகுதியில் தன்னை நிலை நிறுத்தினால் மாத்திரமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைமைத்துவத்தை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதும் சாணக்ய தலைவருக்கு தெரியும்.இதன் காரணமாகவே கல்முனையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஹரீஸின் நாமம் பின் தள்ளுப்பட்டு ஹக்கீமின் நாமம் முன்னோக்கி நகர்கிறது.

கல்முனைத் தொகுதியை பொறுத்தவரை அதிகமான அரசியல் போட்டி நிலவும் ஒரு இடமாகும்.தேர்தல் காலங்களில் வேட்பாளர்களாக யாரை நிறுத்துவது என அதிகமான போட்டி நிலவுவதும் அங்குதான்.அவ்வாறான போட்டித் தன்மை ஏற்படுகின்ற போது தான் விரும்பியவரை தன்னுடைய அதிகாரத்துடன் வேட்பாளராக கல்முனைத் தொகுதிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகவும் அபிவிருத்தி செயற்பாடுகளில் அமைச்சர் ஹக்கீம் அவருடைய நாமத்தை முன்னிலைப்படுத்துகின்றார்.ஆனால் உண்மையில் கல்முனைத் தொகுதியின் அபிவிருத்திக்கு காரணமாக அமையும் பிரதி அமைச்சர் ஹரீஸின் நாமம் மக்களிற்கு சென்றடைவதில்லை.

இவை அனைத்திற்கும் மேலதிகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் அடுத்த தலைமைத்துவம் பிரதி அமைச்சர் ஹரீஸாகும் என்பது போராளிகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் விடயமாகும்.எனவே அபிவிருத்தி செயற்பாடுகளில் ஹரீஸின் நாமம் அதிகமாக உச்சரிக்கப்பட்டு தலைமைத்துவம் அவரை சென்றடையும் என்ற தலைமைத்துவ அச்சத்திலும் ஹக்கீமினால் ஹரீஸின் நாமம் தொடர்ச்சியாக மழுங்கடிக்கப்பட்டு வருகிறது.

கட்சிக்கு தலைவர் ஹக்கீமாக இருந்தாலும் கல்முனைக்கு தலைவன் ஹரீஸ் தான்.. கட்சிக்கு தலைவர் ஹக்கீமாக இருந்தாலும் கல்முனைக்கு தலைவன் ஹரீஸ் தான்.. Reviewed by Madawala News on 8/14/2017 12:02:00 AM Rating: 5