Kidny

Kidny

இது றியாழுக்கு தேவைதானா?


- இப்னு ஆபியா

'இது றியாழுக்கு தேவைதானா?' என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் றியாழ். நல்ல மனிதனை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஏமாற்றிவிட்டார், இது றியாழுக்கு சரிவராது, அரசியல் றியாழுக்குச் செய்யத்தெரியாது, இது றியாழுக்குத் தேவைதானா போன்ற கேள்விகள் கல்குடா தொகுதியெங்கும் ஒரு சமயம் நிலவியது. றியாழுக்கு வாக்குப்போட்டவர்களை விட வாக்களிக்காதவர்கள் றியாழைத் தொடர்புபடுத்தி இதுபோன்ற கேள்விகளை சமூகவலைத்தளங்களில் எழுதியும், சந்திச் சண்டைகளில் பேசியும் திரிந்தார்கள்.

 

இப்போது றியாழ் மு.கா. தலைவரின் அமைச்சு மூலம் கல்குடாவில் ஆரம்பித்து வைத்துள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு பின்னர் இக்கேள்விகள் காலாவதியாகி போய்விட்டன. றியாழின் ஆளுமை பற்றி எதிர்த்தரப்புவாதிகள் மௌனமான குரல்களில் ஒழித்து ஒழித்து பேசுவது எமது காதுகளுக்கு எட்டுகிறது.

 

கல்குடா தொகுதியின் அரசியலில் சென்ற பாராளுமன்ற தேர்தலில் றியாழ் தோற்றுப்போன ஒருவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கி அமீரலியை எதிர்த்து போட்டியிட்டார். அமீர் அலி பழைய அரசியல்வாதி யென்றாலும், றியாழ் அவருக்கு பெருத்த சவாலாகவே அமைந்தார். கல்குடாத் தொகுதியில் றியாழ் வெற்றியடைந்ததாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். ஏனென்றால் றியாழ் மு.காவின் வாக்குவங்கியை அதிகரிக்கச் செய்தார்.

 

அராஜக ஆட்சியை மாற்றுவோம் என்றே றியாழ் கல்குடா தொகுதிக்கு வருகைதந்தார். அதில் வரையறுக்கப்பட்ட வெற்றியையும் அடைந்திருக்கிறார். றியாழ் இப்போது கல்குடாத் தொகுதி அரசியலில் தனக்கென தனித்துவ இடத்தினை அவரது இரண்டு வருட அரசியல் வாழ்க்கையில் பிடித்திருக்கிறார். இது மு.காவின் வெற்றி என்பதை காட்டிலும் றியாழின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லவேண்டும். மு.கா.வில் தேர்தல் கேட்பதும், தோற்பதும், காணாமல் போவதும் என்ற தொடர் கதை றியாழோடு முற்றுப்பெற்றுள்ளது.

 

பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு கல்குடாத் தொகுதியெங்கும் அமீர் அலியின் ஆதரவாளர்கள் வெடில் வெடித்து, தொடர்வாகனப் பவணி வந்து வெற்றியை கொண்டாடினர். ஆனால் இரண்டு வருடங்கள் கழிந்த பிற்பாடு அதே வெடில் வெடித்து, தொடர்வாகனப் பவணியில் றியாழ் கல்குடாத் தொகுதிக்கு அழைத்துவரப்பட்டார். இது ஒரு ஆச்சரியமான சம்பவம்தான். கூடவே மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமும் அவரது ஆதரவாளர்களும் உயர்ரக வாகனங்களில் கல்குடாவின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பலகோடி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள். நீண்டகால இடைவெளியின் பின்னர் மு.காவின் கட்சிக் கொடியும் கல்குடாத் தொகுதியில் தலைநிமிர்ந்து பறந்தது. அரசியல் காலங்களில் அராஜக ஆட்சி கவிழ்க்கப்படும் என்று சொன்ன அந்த றியாழ், மெல்ல மெல்ல அந்த எட்டை பிடிக்கபோகிறார் என்பது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துள்ளது.

'றியாழ் எங்கட புள்ளகிளி, அவன நாங்க இனி கைவிடமாட்டோம்' என மீராவோடையைச் சேர்ந்த ஒரு வயதான பாட்டி சொன்ன கதை எனது காதுகளில் இப்போது எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் கல்குடாத் தொகுதி முஸ்லிம் அரசியலில் ஓட்டமாவடி, வாழைச்சேனை அடைந்த பிரபல்யம் மீராவோடைக்கு கிடைக்கவே இல்லைதான். கொழும்பு அரசியலில் மீராவோடைக்கான தனி அத்தியாயத்தை றியாழ் துவக்கிவைத்துள்ளார். இந்த துவக்கம் மீராவோடை மக்களுக்கு கிடைத்த பெரியதொரு சமவாய்ப்பு. இந்த சமவாய்ப்பு கல்குடா முஸ்லிம் அரசியலில் புதிய வரலாற்றை ஆரம்பித்துவைத்திருக்கிறது.

 

இம்மாதம் ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது றியாழ் இந்த கல்குடாத் தொகுதி முஸ்லிம்கள் பற்றி பேசுகிறபோது, 'நான் ஏழை விவசாயிகளின் வாழ்க்கைக்கு புத்துயிர் அழிக்கும் நீர்ப்பாசன முறையினை அபிவிருத்தி செய்வேன், காணிப் பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளேன், குடிநீர்ப் பிரச்சினை இப்போது தீர்ந்துள்ளது. இன்ஸா அல்லாஹ் 2020 இல் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும். பட்டதாரிகளை கலாநிதிகளாக மாற்றவேண்டும். படித்த சமூகம் அரசியலை தலையில் சுமக்கவேண்டும். நான் கட்டுக் கோப்பான மத்திய சபையை அமைப்பேன். தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கல்குடா முஸ்லிம்கள் சார்பாக பல்லாயிரம் நன்றிகள்' என முடித்தார்.

 

சபையோடு சபையாக இருந்த என்னை பார்த்த ஒருவர் றியாழுக்கு பேசத்தெரியாது என்றார்களே! இவர் நன்றாகவே பேசுகிறார். அரசியலுக்கு பொருத்தமானவர் என வாய்மகிழ்ந்து சொன்னார். அப்போது விளங்கியது றியாழ் தேர்தலில் தோற்றாலும், மக்களின் மனங்களை வெற்றி கொண்டுள்ளார். இது இரண்டு வருட அரசியல் வாழ்வில் மிகப்பெரிய சாதனைதான்.

 

றியாழுக்கு இனி அமீர் அலி சவால் இல்லை. அமீர் அலி அபிவிருத்தி செய்யும் பிரதேச மக்கள் அவரை வணங்கி வழியனுப்புவார்களே தவிர இனியும் அந்த தவறை செய்ய மாட்டார்கள். அத்தோடு, தேர்தல் முறைமையில் கொணரும் மாற்றம், அமீர் அலியின் திட்டத்திற்கு பெரும் ஏமாற்றம் தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமீர் அலியால் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களுள் றியாழ் புகுந்துவிட்டார். இனி அமீர் அலி முதலிலிருந்து பழங்கதை சொல்லி அரசியலை துவக்கவேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. இது அமீர் அலிக்கு மாத்திரமல்ல, மு.காவின் பிற பிரதேச அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

 

றியாழ் தொடர்ந்து இயங்குவதற்கான சூழலை மு.கா.வின் தலைவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது தடைப்படுமானால் றியாழ் அரசியலை தொடர்வது கஸ்டம்தான். இந்த சமன்பாட்டை உடைக்க மு.கா.வின் அரசியல்வாதிகள் முனைவது வெளிப்படையாக தெரிகிறது. இப்போது றியாழுக்கு அமீர் அலி சவாலில்லை. அவரது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட அரசியல்வாதிகளே அவருக்கு சவால். இது நிரந்தரமல்ல என்றாலும், அவரது வளர்ச்சியை முளையில் கிள்ளியெறியலாம் என்ற அச்சம் உள்ளுர றியாழின் ஆதரவாளர்களுக்கு இருக்கவே செய்கிறது. பொறுத்துத்தான் களத்தைப் பார்க்கவேண்டும்.

இது றியாழுக்கு தேவைதானா? இது றியாழுக்கு தேவைதானா? Reviewed by Madawala News on 8/29/2017 02:03:00 AM Rating: 5