Ad Space avaiable

நாட்டின் பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு அனைத்து மக்களும் செழிப்பாக நாட்டில் வாழக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும்..


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறந்குதுறை எந்தவொரு காரணத்துக்காகவும் எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் உரித்தளிக்கப்படமாட்டாதென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


இலங்கை துறைமுக அதிகார சபையின் 38 ஆவது ஆண்டு விழாவில் நேற்று பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்காக கடன்பட்டிருக்காவிட்டால் கொழும்பு துறைமுகம் இதனைவிட அபிவிருத்தி அடைந்து நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி , எப்படியிருப்பினும் அந்த கடன்சுமையிலிருந்து மீண்டு கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்து முன்கொண்டு செல்வதாகவும் அனைத்து ஊழியர்களுக்கும் இழந்த சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் குறித்த சீன கம்பனிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை முன்னைய அரசாங்கத்தினால் தயாரித்து கலந்துரையாடப்பட்டு 2014 ஆண்டு செப்டம்பரில் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

அந்த உடன்படிக்கையில் பல பாரதூரமான விடயங்கள் இருந்தன. தற்போதைய அரசாங்கம் நாட்டுக்கு நன்மைபயக்கும் வகையில் திருத்தங்களை மட்டுமே செய்தது என தெரிவித்த ஜனாதிபதி, காணியின் அளவை அரைவாசியாக குறைத்தமை இலங்கை அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கமைய நிர்வகித்தல், குத்தகை முறையிலன்றி தாய்நாட்டின் ஒரு அங்குல நிலத்தையும் எந்தவொரு நாட்டுக்கோ வெளிநாட்டு கம்பனிக்கோ உரித்தாக்காமல் திருத்தியமை போன்றவை மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்தார்.

 

இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறான உடன்படிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதில்லை. தனது ஆலோசனைக்கமைய வெளிப்படைத்தன்மைக்காக அந்த உடன்படிக்கை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த உடன்படிக்கையில் பாரதூரமான விடயங்கள் உள்ளடங்கி இருந்தமையால் எதிர்க்கட்சியினர் அதனை பயன்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாதவாறு கடந்த அரசாங்கம் காலிமுகத்திடலுக்கு முன்னாலுள்ள 06 ஏக்கரை சங்ரிலா கம்பனிக்கு முழு உரித்தாக வழங்கியிருந்ததாகவும், போட்சிற்றிக்காக 240 ஏக்கர் உரித்தளிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.


தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் போட்சிற்றிக்காக உரித்தளிக்கப்பட்டிருந்த காணியை குத்தகை அடிப்படையில் மாற்ற முடிந்த போதிலும் சங்ரிலா கம்பனியுடனான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்ததன் காரணமாக அதனை மாற்ற முடியாமல் போனதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

விமர்சிப்பவர்கள் எவ்வாறு விமர்சித்தாலும் தாய்நாட்டின் ஒரு அங்குல நிலமும் வெளிநாட்டுக்கோ, வெளிநாட்டு கம்பனிக்கோ உரித்தளிக்கப்படமாட்டாதென தான் அன்றும் இன்றும் தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.


நாட்டின் பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு அனைத்து மக்களும் செழிப்பாக நாட்டில் வாழக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

மிகவும் விரைவாக ஆட்சிக்கு வரவேண்டிய சிலருக்கு தேவை இருந்த போதிலும் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வரவுள்ள பொது தேர்தலில் அன்றி அதற்கு முன்னர் அரசாங்கத்தை அமைக்கக்கூடிய முறை நாட்டில் இல்லையெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

இந்த நிகழ்வில் இலங்கை துறைமுக அதிகார சபையில் 38 ஆண்டுகளுக்கு கூடுதலாக பணியாற்றிய ஊழியர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தினால் ஜனாதிபதிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் அமைச்சர்களான மகிந்த சமரசிங்க, ஜோன் அமரதுங்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கயந்த கருணாதிலக்க, ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம, இலங்கை துறைமுக அதிகார சபை தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டின் பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு அனைத்து மக்களும் செழிப்பாக நாட்டில் வாழக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.. நாட்டின் பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு அனைத்து மக்களும் செழிப்பாக நாட்டில் வாழக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.. Reviewed by Madawala News on 8/02/2017 12:52:00 PM Rating: 5