Kidny

Kidny

இந்த உலகம் இதுவரை காணாத நெருப்பையும் சீற்றத்தையும் வடகொரியா சந்திக்கப் போகிறது!

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை வடகொரியா வானில் ஏவிப் பரிசோதித்துள்ளது.

அமெரிக்காவை குறிவைத்துத்தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அமேரிக்கா கருதுவதனால், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின் மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது.

இந்தத் தடை வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ''புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க நேரிடும்!'' என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.

இந்த எச்சரிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

இதனால் கடும்கோபமும் எரிச்சலுமடைந்த வடகொரியா ராணுவம், தற்போது அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் கடுப்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ''வட கொரியா கடுமையான ஊழிக்காலப் பேரழிவை சந்திக்க நேரிடும்.'' என கடும் எச்சரிக்கையுடன் நேற்று மிரட்டல் விடுத்துள்ளார்.

''அமெரிக்க ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இந்த உலகம் இதுவரை காணாத நெருப்பையும் சீற்றத்தையும் வடகொரியா சந்திக்கும்!'' என்று ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டார். இந்தச் செய்தியே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பத்திரிகைகள் பலவற்றிலும் இன்றைய முதற்பக்கப் பிரதான செய்தியாகியிருக்கிறது. தொலைகாட்சி, வானொலி போன்ற ஊடகங்களும் இந்தச் செய்தியைப் பரபரப்பாக ஒலி, ஒளி பரப்பிக் கொண்டிருக்கின்றன. 

இது இவ்வாறிருக்க, அமெரிக்க ஜனாதிபதியின் அந்த மிரட்டலுக்கு சீனா இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் சூழல் மிகவும் சிக்கலானதாகவும், உணர்வுப்பூர்வமானதுமாக உள்ள நிலையில் இதில் தொடர்புடையவர்கள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்வதை தவிர்க்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகம் இதுவரை காணாத நெருப்பையும் சீற்றத்தையும் வடகொரியா சந்திக்கப் போகிறது! இந்த உலகம் இதுவரை  காணாத நெருப்பையும் சீற்றத்தையும் வடகொரியா சந்திக்கப் போகிறது! Reviewed by Madawala News on 8/09/2017 09:58:00 PM Rating: 5