Ad Space Available here

நாற்றத்தை மறைப்பதற்கு செண்டடிக்கும் நல்லாட்சி...!


மத்திய வங்கி முறி ஏலம் விட்ட விடயத்தில் பலகோடிகளை ஏப்பம் விட்ட விடயம் அம்பலமாகிவருகின்ற இந்த நிலையில்,அதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் மாட்டியும், இன்னும் மாட்டவேண்டிய நிலைமையும் தோன்றியிருப்பதனால்,அந்த அதிர்வலைகளை குறைக்கும் பொருட்டு முன்னால் ஆட்சியாளார்களின் ஊழல் விசாரணையை துரிதப்படுத்தி சரியோ பிழையோ அவசரமாக சிலபேரை கைதுசெய்து கூட்டுக்குள் அடைத்துவிட வேண்டும் என்று இன்றையை ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றார்களோ என்று என்னவேண்டியுள்ளது.


அதன் நிமித்தம் நாட்டின் பிரதமரே களத்தில் இறங்கியுள்ளார் என்றே என்னத்தோன்றுகிறது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய அவர்களை நேரடியாக சந்தித்து இலஞ்ச, ஊழல், மோசடிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் காலதாமதப்படுவதன் காரணம் என்னவென்றும் கேள்வி எழுப்பியதாகவும் அறிய முடிகிறது. 


விசாரணைகளை தாமதப்படுத்தாமல் விரைவாக முடிப்பதற்கு எவ்வகையான பொறிமுறைகளை கையாளவேண்டும் என்றும் விரிவாக ஆராய்ந்ததாகவும் தெரியவருகின்றது.


இப்படியான நடவடிக்கைகள் எதையொன்றையோ மறைப்பதற்கு எதையொன்றையோ செய்ய முயற்சிக்கின்றார்கள் என்பதையே உணர்த்தி நிற்கின்றது. இப்போது இவர்கள் காட்டும் கரிசணைகள் பொதுநலமா அல்லது சுயநலமா என்பது கால நேரத்தை பொருத்து இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.


இன்றய ஆட்சியாளர்கள்,முன்னய ஆட்சியாளர்கள் இலஞ்ச, ஊழலில் மோசடி செய்திருந்தால் ஒரு ஆணைக்குழுவை அமைத்து விசாரித்திருக்கலாம், அல்லது பாராளுமன்றத்திலாவது இந்த விடயத்தை முன்வைத்து இவர்களுக்கு எதிராக விசேச நீதிமன்றங்களை நியமித்து விசாரணையை முன்னெடுத்திருக்கலாம், அப்போதுதான் உண்மை நிலை வெகுவிரைவில் வெளிவர உதவியாக இருந்திருக்கும்.


ஆனால் இந்த இரண்டுவருடத்துக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கம் அதனையொன்றையும் செய்யாமல், நீதி தன்கடமையை செய்யும் நாங்கள் அதில் தலையிடமாட்டோம் என்று கூறிவந்தவர்கள், இன்று அதற்கு மாற்றமாக சட்டமா அதிபரை சந்தித்து விசாரணைகளை துரிதபடுத்துங்கள் என்று நாட்டின் பிரதமரே கூறுமளவுக்கு நிலைமை சென்றுள்ளதை பார்த்தால், தங்கள் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக நீதியில் இந்தரசாங்கம் தலையிடுவதுபோல்தான் தெரிகின்றது.


உண்மையிலேயே பணமுறி விடயத்தில் இந்த நல்லாட்சி அரசாங்கம் மாட்டிக்கொள்ளாமல் இருந்திருந்தால், பிரதமர் ரணில் அவர்கள் இந்தளவு இந்தவிடயத்தில் கரிசணை காட்டியிருப்பாரா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.


ஆகவே, யாராக இருந்தாலும் உண்மை வெளிவரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது, அதன் மூலம் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதையும் யாரும் எதிர்க்கவும் மாட்டார்கள். அதற்காக எதையொன்றையோ மறைப்பதற்கு அநியாயமாக யாரையும் பழிவாங்குவதற்காக, இன்றய ஆட்சியாளர்கள் நீதியில் கை வைக்கவும் கூடாது.


அரசியலில் போட்டியாக இருந்த சிரிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையை அன்றய ஜனாதிபதி ஜே.ஆர் அவர்கள் பறித்தவிடயத்தை யாரும் அன்று சரிகாணவில்லை, அதேப் போன்ற அரசியல் பழிவாங்கள்களும் இன்றய ஆட்சியாலர்களினாலும் நடந்துவிடுமோ என்று என்னத்தோன்றுகிறது.


முன்னய ஆட்சியாளர்கள் பிரதம நீதியரசர் சிராணி விடயத்திலும், முன்னால் இராணுவ தளபதி சரத்பொன்சேகா விடயத்திலும் நீதியை தன் கைக்குள் போட்டு கசக்கினார்கள் என்ற குற்றச்சாட்டிலும் உண்மைகள் இல்லாமலில்லை, அதனை நாங்களும் செய்யமாட்டோம் என்று வந்தவர்களான இந்த நல்லாட்சிகாரர்களும் தங்களது இயலாமையை மறைப்பதற்கு நீதியை தங்கள் இஷ்டத்துக்கு பாவிக்க முற்படுவதை யாராலும் அனுமதிக்கவும் முடியாது.


ஆகவே, நீதி தன் கடமையை செய்வதற்கு வழிவகைகளை ஏற்படுத்தி கொடுப்பதை விட்டுவிட்டு, நீதி எங்கள் விடயத்தில் அவசரமாக இயங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குள் சுயநலன்களும் இருக்குமோ என்று என்னவேண்டியுள்ளது.இது நாட்டு மக்களுக்கு நீதியின் மேலிருக்கும் நம்பிக்கையை இல்லாமல் செய்துவிடும் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை.

நாற்றத்தை மறைப்பதற்கு செண்டடிக்கும் நல்லாட்சி...! நாற்றத்தை மறைப்பதற்கு செண்டடிக்கும் நல்லாட்சி...! Reviewed by Madawala News on 8/19/2017 01:16:00 PM Rating: 5