Ad Space Available here

மறிச்சிக்கட்டி விவகாரம்:இருப்பை தக்கவைக்க கடைசித் தருணம்..


உலக சரித்திரத்திலும், முற்கால இதிகாசங்களிலும் அநேக போராட்டங்கள் மண்ணுக்கானவையும் நிலமீட்புக்கானவையுமாகவே இருந்திருக்கின்றன. உலக மகா யுத்தங்கள், அரபு நாடுகளில் மேற்குலகம் மேற்கொண்ட அடக்குமுறைகள், தென்னாசியப் பிராந்தியத்திலும் ஏனைய பிராந்தியங்களிலும் ஆதிக்க சக்திகள் முன்னெடுத்துள்ள நகர்வுகள் எல்லாமே அடிப்படையில் நிலத்தையும் அதற்குள்ளே புதைந்திருக்கின்ற வளத்தையும் இலக்கு வைத்தததாகவே அமைந்திருப்பதை, உய்;த்தறிந்து கொள்ளலாம்.

எந்தக் காரணத்திற்காகவும் தாங்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களை விட்டு வெளியேறி காலம்முழுக்க வேறு பிராந்தியங்களில் மகிழ்ச்சியாக வாழ்ந்த மக்கள் குழுமம் என்று உலகில் எந்த மக்கள் கூட்டத்தையும் குறிப்பிடுவது கடினமாகும். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வெளியேறிச் சென்றால் எத்தனையோ வசதி வாய்ப்புக்களைப் பெறலாம் என்றிருக்கின்ற போதும் கூட, தமது நிலத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக அங்கேயே வாழ வேண்டும் என்ற பிடிவாதத்திற்காக, உணவின்றியும் நீரின்றியும் இராணுவக் கெடுபிடிகளுக்குள்ளும் ஆயுதங்களின் கட்டுப்பாட்டிலும் பதுங்கு குழிகளுக்கும் பறண்களின் மேலேயும் ஒழிந்து மறைந்தென்றாலும் தமது மண்ணிலேயே வாழ்கின்ற இலட்சக்கணக்கான மக்களை நாம் கண்டிருக்கின்றோம்.

அதேபோல், அந்த பிடிவாதத்தில் கடைசிமட்டும் உறுதியாக இருந்து, எந்த நாட்டிலும் தஞ்சம் தேடாது தமது சொந்த மண்ணிலேயே ஒரு அகதியைப் போல, வழிப்போக்கன் போல வாழ்ந்து உணவின்றி, தண்ணீரின்றி, நெருக்குவாரப்பட்டு மாண்டுபோன பெருந்தொகையான மக்களையும் வரலாறு அறிந்து வைத்திருக்கின்றது.

மண்ணின் மகிமை

இதுதான் சொந்த மண்ணுக்கு இருக்கின்ற பெறுமதியும் மதிப்பும்! பூர்வீக மண் மீதான ஈர்ப்பும் பிணைப்பும் வெறுமனே கட்டடங்களாலும் செல்வத்தாலும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, அது உணர்வுகளின் பாற்பட்டது. எல்லா இன மத பேதங்களுக்குமப்பால் நின்று உலகில் வாழ்கின்ற மேட்டுக்குடிவாசிகள் தொடக்கம் விளிம்புநிலை சமூகங்கள் வரை அனைவருக்கும் இவ்வுணர்வு பொருந்தும். வடபுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இன்னும் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற முடியாதிருக்கும் பெருந்தொகையான முஸ்லிம்களுக்கும், வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக தமது பூர்வீகம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள இலங்கைச் சோனகர்களின் வாரிசுகளும் இந்த பொதுவிதியின் விதிவிலக்காக இருக்க முடியாது.

அந்த வகையிலேயே மன்னார் மாவட்டத்தில் ஏழெட்டு கிராம மக்களின் இருப்பு பற்றிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்ற விளாத்திக்குளம் ஓதுக்கக்காடு மற்றும் மாவில்லு பேணற்காடு பிரகடனங்கள் தொடர்பாக பேச வேண்டியிருக்கின்றது. இப்பிரகடனம் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைக்காலம் நாளை 21ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அதுபற்றி ஆராய்தல் மேலும் அவசியமாகின்றது.

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக, வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால்;; வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் ஒரு பகுதியினரின் மீள்குடியேற்றம் மற்றும் எதிர்கால இருப்பு தொடர்பான விடயங்களில், அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இவ்விரு வர்த்தமானி அறிவித்தல்கள் பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சுருங்;கக் கூறின், மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருந்த இடைக்காலத்தில், பூர்வீகக் குடியிருப்புப் பிரதேசங்களில் ஒரு பகுதியும் பாதுகாக்கப்பட்ட காடுகளாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றன. இதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது.

இரண்டு பிரகடனங்கள்

1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் யுத்தம் முடிவடைந்த பிறகு மெல்ல மெல்ல மீளக் குடியேற தொடங்கியிருந்த வேளையில், 2012 மே 11ஆம் திகதி அப்போதைய சுற்றாடல் அமைச்சர் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். இதன்படி விளாத்திக்குளத்தை மையமாகக் கொண்ட காட்டின் சுமார் 15ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு 'விளாத்திக்குளம் ஓதுக்கக்காடு' என பிரகடனம் செய்யப்பட்டது. இருப்பினும், முஸ்லிம்களினதும் சிறிதளவான தமிழர்களின்; பூர்வீக குடியிருப்பு நிலங்கள் தார்மீகமற்ற விதத்தில் ஒதுக்கக்காடாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இதனை சம்பந்தப்பட்ட மக்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். அப்போது முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இப்படிச் செய்தமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்தநிலையில், முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் வாக்குகளால் வெற்றிபெற்ற நல்லாட்சி அரசாங்கம் வெந்த புண்ணில்வேல் பாய்ச்சுவதாக இன்னுமொரு வர்த்தமானி அறிவித்தலை இவ்வருடம் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வேளையில் அங்கிருந்தவாறு இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான இறுதி ஒப்பத்தை இட்டதாக சொல்லப்படுகின்றது.

'40030 ஹெக்டெயார் விஸ்தீரணத்தைக் கொண்ட மாவில்லு, வெப்பல், கரடிக்குழி, மறிச்சுக்கட்டி, விளாத்திக்குளம் மற்றும் பெரியமுறிப்பு ஆகிய ஒதுக்குக்காடுகளுக்கு உரியதான காட்டுப்பிரதேசத்துக்தை மாவில்லு பேணற்காடு என பிரகடனம் செய்வதாக' இவ்வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், முசலி விளாத்திக்குளம் உள்ளிட்ட பூர்வீக முஸ்லிம் கிராமங்கள் அல்லது அவற்றின் ஒருபகுதி பேணற்காடுகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. முன்னமே ஒரு பகுதியை ஒதுக்கக்காடாக அறிவித்த வடு ஆறாதநிலையில் மீண்டும் பேணற்காடாக இன்னுமொரு பகுதியை பிரகடனம் செய்வது, நேரடியாக முஸ்லிம்களின் இருப்பையும் வாழ்வுரிமையையும் கேள்விக்குட்படுத்தும் செயல் என்ற அடிப்படையில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

வில்பத்து கூச்சல்  

இதற்கிடையில், 2012ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்த நிலையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி இங்குள்ள முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்தது. இச் செயலணியின் முடிவுகளின் படி மாற்றுக் காணிகள் சட்டமுறைப்படி விடுவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சில குடும்பங்களுக்கு தலா அரை ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டன. இது இனவாத சக்திகளின் கண்களை உறுத்தியது.

இந்த நேரத்திலேயே முதன்முதலாக 'வில்பத்தை அழித்து முஸ்லிம்கள் குடியேறுகின்றார்கள்' என்ற கோஷங்கள் மேலெழுந்தன. நாட்டின் வனவளத்தை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள் என்றும் வடக்கில் அமைச்சர் றிசாட் சட்ட விரோத குடியேற்றத்தை மேற்கொள்கின்றார்கள் என்றும் பரவலாக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பின்னணியில் சூழலியல் ஆர்வலர்கள் என்ற தோரணையில் இரு கடும்போக்கு அமைப்புக்களால் உயர்நீதிமன்றத்தில் இக்குடியேற்றத்திற்கு எதிராக மனுக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவ்வாறிருக்கும் போதே அண்மையில் இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல்; வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

'விளாத்திக்குளம் ஓதுக்கக்காடு' மற்றும் 'மாவில்லு பேணற்காடு' பிரகடனங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல்களில் பெருமளவு காடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் முசலி பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ்வரும் மறிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குளி, அகத்திமுறிப்பு, உள்ளிட்ட பிரதேங்களிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளும் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி செயலணியின் ஊடாக சட்ட ரீதியாக குடியேற வழங்கப்பட்ட பிரதேசங்களும் மீளவும் காடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக விடயமறிந்தோர் கூறுகின்றனர்.  

இரண்டாவது வர்த்தமானிக்கான வரைபடம் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் களத்தில் நிற்காமல் கொழும்பில் இருந்தவாறும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அப்பிராந்திய அரசியல்வாதியான றிசாட் பதியுதீன் கூறி வருகின்றார். எது எப்படியிருப்பினும், இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்;ட பிரதேசங்கள் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் என்ற அடிப்படையிலும், அதற்கான ஆதாரங்களும் தடயங்களும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற காரணத்தாலும், அம்மக்களுக்கு அநியாயம் இழைக்காமல் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இருக்கின்றது.

சந்திப்பு முயற்சிகள்

அந்தவகையில், ஆரம்பத்திலிருந்து இது விடயத்தில் கவனம் செலுத்தி வரும் அமைச்சர் றிசாட்பதியுதீனுக்கு மேலதிகமாக அமைச்சர்களான பைசர் முஸ்தபா, றவூப் ஹக்கீம், காதர் மஸ்தான் எம்.பி. மற்றும் அசாத் சாலி உள்ளிட்ட பலர் தம்மாலான நடவடிக்கைகளை எடுத்தனர். அரசியல்வாதிகளில் சிலர் உண்மையாகவே காரியமாற்றினர் என்பதும் சிலர் வாயால் வடைசுட்டனர் என்பதும் தனிக்கதை.

இது இவ்வாறிருக்க, மேற்படி வர்த்தமானி அறிவித்தல்களை வாபஸ்பெறக் கோரியும் தமது நிலங்களை முழுமையாக விடுவித்துத் தருமாறு கோரியும் முசலி மற்றும் அதனையண்டிய பிரதேச மக்கள் மறிச்சுக்கட்டியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர், அந்த நேரத்தில், இவ்விவகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவருடனும் அவரது செயலாளருடனும் முஸ்லிம் அரசியல்வாதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் சந்திப்புக்களை மேற்கொண்டனர்.

இதன் விளைவாக, இவ்விடயம் தொடர்பாக அறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியால் விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. அரச உயர்மட்டத்தினருடனான சந்திப்பு, ஆராய குழு நியமிக்கப்பட்டமை என்பவற்றை பார்த்து சற்று ஆறுதலடைந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் மறிச்சுக்கட்டிக்கு சென்று, உண்ணவிரதமிருந்த மக்களுக்கு வாக்குறுதி அளித்தமையாலேயே 44 நாட்களின் பின்னர் அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது.  

தகவல் பற்றாக்குறை

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பேராசியரையும் சகோதர சமூகத்தைச் சேர்ந்த நால்வரையும் உள்ளடக்கிய முசலி காணிகள் தொடர்பாக ஆராயும் இவ் விஷேட குழு சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் அவதானத்தை செலுத்தி, தகவல்கள் மற்றும் ஆதாரங்களை திரட்டியுள்ளது. இருப்பினும், இக் குழுவுக்கு போதுமான, பரந்துபட்ட தகவல்கள் வழங்கப்படவில்லை என்று இப்போது கூறப்படுகின்றது. அதாவது, இக்குழுவுக்கு வழங்கப்பட்ட காலம் நாளை 21ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்து, அக்குழு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்ற நிலையிலேயே 'போதிய தகவல்கள் வழங்கப்படவில்லை' என்ற புகார் வெளியாகியிருக்கின்றது.

வன்னிக்கு விஜயம் செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமும் போதுமான தகவல்கள் வழங்கப்படவில்லை என்ற விடயத்தை சுட்டிக் காட்டியதுடன், இதனால் குறிப்பிட்ட பிரதேசங்களில் உள்ள பூர்வீகக் காணிகளை முஸ்லிம்கள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனபோதும், அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதி என்ற வகையில் தொடர்ச்சியாக வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்காக குரல்கொடுத்து வருபவரும் அதனால் பல சர்ச்சைகளுக்குள் சிக்கியவருமான அமைச்சர் றிசாட் பதியுதீனின் கருத்துப்படி போதுமான தகவல்கள், ஆதாரங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. மக்கள் பல தடவை பல அதிகாரிகளிடமும் இதே தகவல்களை வழங்கியிருக்கின்றனர்.

இதேநேரத்தில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த விசேட குழு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முறையாக மக்களை அணுகவில்லை என்ற ஒரு அபிப்பிராயம் மக்களின் பக்கமிருந்து சொல்லப்படுகின்றது. அதாவது, இந்தக் குழு அங்கு வருவதாக முன்கூட்டியே ஊர்வாரியாக அறிவித்தல் விடப்படவோ, மக்கள் அறிவுறுத்தப்படவோ இல்லை என்று ஒரு சிலர் கருத்து வெளியிடுகின்றனர். இதுவும் கவனிக்கத்தக்க விடயமாகும்.

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஒரு அங்கமான வில்பத்து விவகாரம் என அறியப்பட்ட பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்;க்கப்படாதிருப்பதை யாவரும் அறிவோம். இந்நிலையில், இப்பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்த மு.கா. தலைவர் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் போன்ற பொறுப்புள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்படி குழுவுக்கு தகவலை பெற்றுக் கொடுத்து, காணிகள் கைநழுவிப் போகாமல் தடுப்பதற்கு அல்லது வேறு காத்திரமான வழிகளில் காணியை தக்கவைத்துக் கொள்ள என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதை சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டும்.

ஒன்றுபட்டு செயற்படல்

எது எவ்வாறிருப்பினும், முசலி, மறிச்சுக்கட்டி மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளின் உரிமைத்துவத்தை நிரூபிப்பதற்கு இது கடைசித்தருணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில், வழக்கமான இனவாத சக்திகளுக்கு மேலதிகமாக பௌத்த மகா சங்கத்தின் பதவிநிலை உறுப்பினரான ஆனந்த சாகர தேரர் போன்ற வேறுபலரும், இந்த வர்த்தமானி அறிவித்தல்களை அரசாங்கம் வாபஸ் பெறக் கூடாது என பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார். இந்நிலையிலேயே ஜனாதிபதியால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் கிடைத்திருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்துவதற்கான கடைசித் தருணமே இது.

மாவில்லு பேணற்காடு பிரகடன வர்த்தமானியில் ஒப்பமிட்ட விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரான ஜனாதிபதியே, இனவாதிகள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற வேளையிலும் இக்குழுவை நியமித்திருக்கின்றார். அத்துடன் முஸ்லிம்களின் குடியிருப்புக் காணிகளுக்கு பிரச்சினை ஏற்படாது என்ற தொனியில் ஜனாதிபதி செயலகம் ஏற்கனவே அறிக்கை ஒன்றையுயும் வெளியிட்டிருந்தது.

இதேவேளை, சூழலியலாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட இரு அமைப்புக்களால், முசலியில் மீள்குடியேறியவர்கள் வனிபரிபாலன திணைக்களத்திற்கு உரித்தான காணிகளில் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரியும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை, கடந்த வாரம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எனவே, இந்தப் பின்னணியில் முடியுமான அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் வழங்க வேண்டும். அக்குழுவுக்கு முழு ஆதாரங்களையும் வழங்குவதன் மூலம் மேற்படி வர்த்தமானிகளில் மறுசீரமைப்பை கொண்டு வரலாம் என்பதையும் முஸ்லிம்கள் நினைவிற் கொண்டு செயலாற்ற வேண்டும். குறிப்பாக, பாடசாலைகள், மதஸ்தலங்கள் மற்றுமுள்ள கடந்தகால அத்தாட்சிகள் பற்றிய தகவல்கள், மீள்குடியேறும் குடும்பங்களின் எண்ணிக்கை, தேவைப்படும் காணியின் அளவு, அதன் அமைவிடம், எல்லை போன்ற விபரங்கள், அத்தோடு மக்களின் வாழ்வாதாரம் பற்றிய தரவுகளும் தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதே காரணத்தைச் சொல்லி அதாவது, தகவல் போதாமையால் இக்குழு பாதகமான சிபாரிசுகளை வழங்கிவிடக் கூடாது என்ற அடிப்படையில் இன்னும் ஒரு நிமிடமும் தாமதிக்காது தகவல்களை வழங்க வேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் இருக்கின்றது.

முசலி உள்ளிட்ட பிரதேச முஸ்லிம்கள் அரசாங்கத்தினதும், முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் வாக்குறுதியில் நம்பிக்கைவைத்தே தமது போராட்டத்தை கைவிட்டனர். நாட்டில் பரவலாக முஸ்லிம்கள் காணிப் பற்றாக்குறையுடன் இருப்பது மட்டுமன்றி அன்றாடம் காணிகளையும் பறிகொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறே வடபுல மக்களும் காடுகளின் பெயரால் வீடுகளை இழக்க விட முடியாது.

அந்தவகையில், எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகளும் காத்திரமான முறையில் செயற்பட வேண்டும். அதைவிடுத்து, வெற்று அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது.

அரசியலில் அறிக்கை என்பது ஒரு ஏட்டுச்சுரக்காய்!

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 20.08.2017)

 

 

மறிச்சிக்கட்டி விவகாரம்:இருப்பை தக்கவைக்க கடைசித் தருணம்.. மறிச்சிக்கட்டி விவகாரம்:இருப்பை தக்கவைக்க கடைசித் தருணம்.. Reviewed by Madawala News on 8/20/2017 01:56:00 PM Rating: 5