Ad Space Available here

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உணர்சி அரசியலை மீண்டும் உறுதி செய்திருக்கின்றது. அ.அஸ்மின்


வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கியிருப்பதாக ந.தே.மு ஊடக அறிக்கையொன்றினை நேற்றைய தினம் (5-8-2017) வெளியிட்டிருந்தது. இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள்; ந.தே.மு தனது உணர்ச்சி அரசியலை மீண்டும் ஒருதடவை உறுதி செய்திருக்கின்றது, என்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


2017 ஆகஸ்ட் மாதத்திலே “காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைகள்” குறித்து நான் முன்வைத்த கருத்துக்களும் 2017 மே மாத்திலே “வடக்குக் கிழக்கு இணைப்பு” தொடர்பில் நான் முன்வைத்த கருத்துக்களும், குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களிடம் கண்டனங்களைப் பெறக்கூடிய கருத்துக்களேயாகும்; ஆனால் உணர்வு ரீதியாக மாத்திரமே சிந்திக்கின்றபோது கொதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்காக அறிவுசார்ந்த ரீதியில் நோக்குகின்றபோது அர்த்தம் தரக்கூடிய கருத்துக்களை முன்வைக்காமல் இருக்கமுடியாது. நான் முன்வைத்த இரண்டு கருத்துக்களையும் அறிவு சார்ந்து நோக்கினால் அதிலே பொதிந்திருக்கின்ற அர்த்தங்களும், அதன்மூலம் மக்களுக்கு கிடைக்ககூடிய நன்மைகள் என்ன என்பதையும் கண்டுகொள்ளமுடியும். எனவே கிழக்கு முஸ்லிம் மக்களின் உணர்வுகளை என்னுடைய கருத்துக்கள் பாதித்திருந்தால் அதற்காக நான் மனம்வருந்துகின்றேன். அதுமாத்திரமன்றி என்னுடைய கருத்துக்கள் குறித்து மேலும் தெளிவினை ஏற்படுத்துவது என்னுடைய கடமை என்றும் எண்ணுகின்றேன்.


வெளிப்படையாகப் பேசுதல் என்பதை நான் பேச்சளவில் கடைப்பிடிக்கின்ற ஒருவன் அல்ல, விமர்சனங்கள் வராத சூழலில், மூடிய அறைக்குள் இத்தகைய கருத்துக்களை முன்வைக்கின்ற அளவிற்கு நான் முதுகெலும்பில்லாத ஒருவன் அல்ல. மக்கள் விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக என்னுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும், அதுசார் நியாயங்களையும் மூடிமறைக்கின்றவனாக நான் இருக்க விரும்பவில்லை. ஆனால் என்னுடைய கருத்துக்களினூடாக எவரையும் நான் நோகடிப்பதையோ அல்லது பலியிடுவதையோ நோக்கமாகக் கொண்டவனுமல்ல. அத்தோடு என்னுடைய கருத்துக்களுக்கு நான் சார்ந்திருக்கின்ற கட்சி பொறுப்புக்கூறவேண்டும் என்றும் நான் எண்ணுவதில்லை, கட்சியின் நிலைப்பாடுகளும் கொள்கைகளும் கருத்துக்களும் கட்சி அடையாளத்தோடு முன்வைக்கப்படுவது வழமை, அதே சந்தர்ப்பத்தில் கட்சியின் அங்கத்தவர்கள் தமக்கிருக்கின்ற கருத்துக்களை அதன் நியாயங்களை மக்கள் முன்வைப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும், அங்கத்தவர்களின் கருத்துக்கள் முற்றுமுழுதாக கட்சியின் கருத்துக்களாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.


 ஆனால் மேற்படிக் கருத்துக்களை உடனடிக் காரணிகளாக வைத்துக்கொண்டு என்னைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு, அல்லது என்மீது சேறுபூசுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள்; மாற்றுக் கருத்துக்களுக்கு, ந.தே.மு கொடுக்கும் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அத்தோடு சிக்கல் நிலைகளைக் கையாள்கின்ற பக்குவமற்ற சிறுபிள்ளைத் தனத்தின் வெளிப்பாடாகவே இதனை நான் காணுகின்றேன். மாற்றுக் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் என்று நீங்கள் உரக்கப் பேசுவது இன்னொரு சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கேயன்றி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அல்ல, என்பது மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களிலும் நீங்கள் நடந்துகொண்ட விதங்களை வைத்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. எது எவ்வாறாயினும்; கட்சிசார்ந்து ஒரு தீர்மானத்தை ந.தே.மு மேற்கொண்டிருக்கின்றது; அதனை நான் மதிக்கின்றேன், இதுசார்ந்த சட்டரீதியான நடைமுறைகள் என்ன என்று ஆராய்ந்து அவற்றை முன்னெடுக்கவும் நான் உத்தேசித்திருக்கின்றேன்.  


நான் விழுமிய அரசியலின்பால் நீண்டகாலமாக ஆர்வத்தோடு ஈடுபாடுகாட்டி வருகின்ற ஒருவன்; நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதில் எனக்கும் பங்கிருக்கின்றது. அதனை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நல்லாட்சி அரசியல் முறைமை, என்பது தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தீர்மானிக்கப்படக் கூடியதல்ல; மாறாக அது கொள்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவேண்டியதாகும். 2016 மார்ச் மாதம் 6ம் திகதி என்னுடைய வடக்கு மாகாணசபை உறுப்புரிமையினை விட்டு வெளியேறுமாறு நான் கேட்கப்பட்டேன்; அப்போது அதற்கான காரணங்கள் என்ன என்றும், அக்காரணங்களை வடக்கு முஸ்லிம் மக்களோடு கலந்துரையாடவேண்டும் என்றும் நான் ந.தே.முவைக் கேட்டுக்கொண்டேன். ஆனால் ஒருவருடத்திற்கும் அதிகமான இடைவெளி இருந்த சமயத்திலும் இதுகுறித்த காரணங்களையோ அல்லது வடக்கு முஸ்லிம் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களுக்கோ நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்வரவில்லை. மாறாக நான் சுயமாக ராஜினாமா செய்யவேண்டும் என்பதிலும் தலைமைத்துவசபைக்கு எவ்வித கேள்விஞானமும் இன்றிக் கட்டுப்படவேண்டும் என்பதுமே ந.தேமுவின் குறிக்கோளாக இருந்தது.


வடக்கைப் பொறுத்தவரையில் நான் 2010ம் ஆண்டு முதல் முழுநேர சமூகப் பணியாளனாக செயற்பட்டு வந்திருக்கின்றேன். என்னுடைய ஒரேயொரு எண்ணம் “வடக்கு முஸ்லிம் மக்களின் நிலைத்து நிற்கும் மீள்குடியேற்றமே” இதற்காக நான் பல்வேறு வழிகளில் செயற்பட்டு வருகின்றேன். வடக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்களது அடிப்படையான இலக்கு இதுவேயாகும். வேறு எண்ணங்களும் தேவைகளும் இரண்டாம் பட்சமானவையாகும்; வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திலே தமிழ் முஸ்லிம் உறவு மிகவும் அத்தியாவசியாமனதாகும். எனவே இதனைப் பாதிக்கும் எத்தகைய செயற்பாடுகளோடும் என்னால் உடன்படமுடியாது. இதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் ந.தே.முவிற்கு உணர்த்தியிருக்கின்றேன்.


என்மீது இன்று பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்; 2013-2015 வரையான மூன்று வருடங்களாக என்னுடைய எல்லா செயற்பாடுகளையும் மறந்துவிட்டு, நான் வழங்கிய பங்களிப்புகளை நிராகரித்துவிட்டே இன்று இவர்களால் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியுமாக இருக்கின்றது. கட்சியின் நலன்சார்ந்து இன்றும் சிந்திக்கின்ற காரணத்தினால் உட்கட்சி விவகாரங்கள் பலவற்றை நான் வெளியிடுவது பொறுத்தமானதாக இருக்கும் என நான் எண்ணவில்லை; ஆனாலும் என் மீது நிதிசார்ந்த முறைகேடுகள் என்றொரு அபாண்டமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதுவிடயத்தில் நான் மௌனமாக இருக்க முடியாது. நான் எத்தகைய நிதிசார்ந்த முறைகேடுகளில் ஈடுபட்டேன் என்பதை ந.தே.மு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று இவ்விடத்தில் நான் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த மூன்றுவருடங்களுக்கும் அதிகமாக என்னை ஒரு அரசியல்வாதியாக நோக்கிய எவருக்கும் என்னுடைய எளிமையான அரசியல் நடைமுறைகள் நன்கு தெரியும். தன்னுடைய முழுநேரத்தையும் மக்களின் பணிக்காக அர்ப்பணித்து செயற்படுகின்ற ஒருவனிடம் மிகவும் கேவலமான உண்மைக்கு மாற்றமான குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பது அபாண்டமேயாகும், என்றும் குறிப்பிட்டார்.

தகவல் எம்.எல்.லாபிர்


 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உணர்சி அரசியலை மீண்டும் உறுதி செய்திருக்கின்றது. அ.அஸ்மின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உணர்சி அரசியலை மீண்டும் உறுதி செய்திருக்கின்றது. அ.அஸ்மின் Reviewed by Madawala News on 8/06/2017 01:41:00 PM Rating: 5