Ad Space Available here

கிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட வேண்டும்.


கிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அவர் சமர்பித்த இது தொடர்பான பிரேரணையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்கள் சுனாமியால் பாதிப்பை எதிர்கொண்ட பிரதேசங்களாகும். அத்துடன் இன்றளவில் ஏற்பட்ட டெங்கு நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும். சனத்தொகை அடிப்படையிலும் கிழக்கு மாகாணத்தில் அதிக சனத்தொகை கொண்ட பிரதேசங்களாக இவை காணப்படுகின்றன. மேற்படி பிரதேச மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்க இப்பிரதேச வைத்தியசாலைகளை மேம்படுத்தவேண்டியுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் ஏற்பட கூடிய இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க இவ்வைத்தியசாலைகளை மத்திய அரசுக்குள் உள்வாங்குமாறு இப் பாராளுமன்றத்தில் பிரேரிக்கிறேன் .

எனது பிரதேசத்தை பொறுத்தவரை கிண்ணியா வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருதல் அல்லது தரமுயர்த்துதல் சம்மந்தமான விடயம் பாரிய பிரட்சினையாக உருவெடுத்துள்ளது.கிண்ணியா வைத்தியசாலையை 85,000 தொடக்கம் 100000 வரையான மக்கள் உபயோகிக்கின்றனர். இவ்வைத்தியசாலையை கிண்ணியா பிரதேச மக்கள் மட்டுமல்லாது கிண்ணியாவை சூழவுள்ள பிரதேச மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். திருகோணமலையில் துரிதமாக வளர்ந்துவரும் சுற்றுலாத்துறையின் முக்கிய பகுதியாக உள்ள மாபிள் பீச் உம கிண்ணியா வைத்தியசாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் இங்கு சுற்றுலாவுக்கு வரும் வெளி மாவட்ட மக்களும் இவ்வைத்தியசாளையையே பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் கிண்ணியா பிரதேசத்துக்கு அண்மையில் உள்ள சின்னம்பிள்ளைசேனை, வெள்ளைமணல், நாச்சிகுடா, சீனக்குடா பகுதிகளில் இராணுவ விமானப்படை முகாம்கள் உட்பட பல பொலிஸ் நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கு பயிற்சி பெரும் வீரர்கள் மற்றும் இங்கு தொழில் புரிவோர் திருகோணமலை வைத்தியசாலைக்கு போகாமல் அருகிலுள்ள கிண்ணியா வைத்தியசாலையையே பயன்படுத்துகின்றனர்.

கிழக்குமாகாணத்தில் பல வைத்தியசாலைகள் மத்திய அரசுக்குள் உள்வாங்கியும் இன்னும் சில வைத்தியசாலைகள் A தரத்திலும் இயங்குகின்றன ஆனால் இந்த வைத்தியசாலைகளை விட எந்தவிதத்திலும் குறையாத தகுதியை கொண்ட கிண்ணியா வைத்தியசாலை இன்னும் B தரத்திலே காணப்படுகிறது.

சுனாமியால் முற்றுமுழுதாக அழிந்த கிண்ணியா வைத்தியசாலை சிறுது காலம் தற்காலிக இடத்தில் இயங்கி தற்போது ஒரு சிறிய பரப்புக்குள் இயங்குகிறது. இதனால் அங்கு முழுமையான சேவையை வழங்க முடியாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் மக்கள் நெருக்கடியால் குணமடைந்து செல்வதை விட புதிதாக ஒரு நோயுடன் செல்ல கூடிய நிலையே அங்கு காணப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று ஏற்பட்டிருந்த வேளை கிண்ணியா பிரதேசம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு பதினாறு உயிர்களை பலி கொடுத்ததை தவிர எமக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. பௌதீக வசதிகளின் அதிகரிப்போ தரமுயர்வோ எங்களுக்கு கிடைக்கவில்லை.

அத்துடன் இங்கு நான் சில விடயங்களை கூற கடமைப்பட்டுள்ளேன். திருகோணமலை வைத்தியசாலைகளிலுள்ள வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெரும் நோயாளர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது (2015 தரவுகளுக்கமைய ) திருகோணமலை வைத்தியசாலையில் 134301 நோயாளிகளும் தரம் A யிலுள்ள கந்தளாய் வைத்தியசாலையில் 129627 நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் தரம் A யிலுள்ள கிண்ணியா வைத்தியசாலையில் 159043 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மற்றும் ஏனைய வைத்தியசாலைகளை விட கிண்ணியா வைத்தியசாளையில்தான் அதிகமான பிரசவமும்,சத்திரசிகிச்சைகளுக்கும் இடம்பெறுகின்றன. அத்துடன் நான் இங்கு சமர்பிக்கவுள்ள தரவுகளை நோக்கினால் கிழக்குமாகாண வைத்தியசாலைகளிடையே தர்முயர்துவதட்கு எந்த நியதியை எடுத்துகொண்டாலும் அதில் கிண்ணியா வைத்தியசாலையை எந்த காரணம் கொண்டும் புறக்கணிக்க முடியாது. ஆகவே எனது கையிலுள்ள இந்த தரவுகளை ஹன்சாட்டில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் பல வருடங்களாக வைத்தியசாலை தரமுயர்வுக்காக மக்கள் போராடி அது ஒரு எட்டாக்கனியாகவே காணப்பட இறுதியாக அண்மையில் வீதிக்கு மக்கள் இறங்கி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவ்விடத்துக்கு விஜயம் செய்த கௌரவ ஜனாதிபதி அவர்கள் வைத்தியசாலையை பார்வையிட்ட பின் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் இந்த வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் உள்வாங்காவிட்டாலும் மாகாண சபையில் உயரிய இடத்தில் வைத்து இங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வேன் என வாக்குறுதி அளித்திருந்தார்.


அதன் பின் எனது வேண்டுகோளுக்கமைய அன்றைய ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தலைமையில் சகல் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சூறா சபையினர் கலந்துகொண்ட கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் ஐந்து வைத்தியசாலைகள் தரமுயர்தப்படவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டது. தெகியத்தகண்டிய, சம்மாந்துறை, வாழைச்சேனை, மூதூர், கிண்ணியா ஆகிய வைத்தியசாலைகளே தரமுயர்தப்படவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டது.

ஆனாலும் இரண்டுவாரங்களுக்கு முன் சுகாதார அமைச்சின் கீழ் யாருடைய ஏற்பாட்டில் என்று தெரியாதளவுக்கு மிகவும் ரகசியமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கிண்ணியா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகள் தரமுயர்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தாலும் சுனாமியாலும் பலவற்றை இழந்த நாங்கள் ஒரு நோய் தலைதூக்கும் போதும் பல உயிர்களை பலிகொடுத்த பின்பும் இதற்கான தீர்வுகள் எமக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கின்றது. இந்த நல்லாட்சியை உருவாக்க எமது மூதூர் தொகுதி அளித்த பங்கு நான் சொல்லி நீங்கள் அறிவதற்கில்லை. இந்த நல்லாட்சியில் இவ்வாறான குறைபாடுகள் இல்லாமல் சேவைகள் செய்யவே மக்கள் எம்மை இங்கு அனுப்பியுள்ளார்கள்.

இருந்தும் எமது பிரதேசத்தில் இவ்வாறான விடயங்கள் கட்சி ரீதியாக இன ரீதியாக முன்னெடுப்பதாக மாறியுள்ளது. இன்று தேர்தல் மேடைகளில் பேசும் பேச்சுகளைப் போல் இவ்வாறான விடயங்களை கட்சிக்கு சார்பானதாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாகாண சபையின் அதிகாரங்களை பறிக்கிறோம் என கூறுபவர்கள் ஏன் நாங்கள் அவ்வாறு செய்கிறோம் என்பதை இதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம். எந்தவித அடிப்படை வசதிகளுமற்று இயங்கும் இந்த வைத்தியசாலையின் பராமரிப்பு செலவுகளை கூட மாகாணசபையால் வழங்கமுடியாதுள்ளது. இதனால் எமது கிண்ணியா வைத்தியசாலைக்கு வரும் பல விடயங்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம். உதாரணமாக பல வருடங்களாக கட்டப்படும் தாதிகளுக்கான விடுதி கூட இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை.

இவ்வாறான காரணங்களால் எதிர்காலத்தில் ஏற்படும் நோய் தொற்றுகளால் பல உயிர்கள் காவு கொள்ளகூடிய அபாயம் நிலவுகிறது ஆகவே இதை முக்கிய விடயமாக கருதி வைத்தியசாலையை மத்திய அரசுக்குள் உள்வாங்க எதாவது சட்ட சிக்கல்கள் இருப்பின் முதலில் B தரத்தில் உள்ள எமது வைத்தியசாலையை A தரமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுங்கள்.

மேலும் மேலே குறிப்பிட்ட ஐந்து வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கான கூட்டம் யாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. எந்த அடிப்படையில் இந்த தரமுயர்த்தல் நடைபெற்றது. என்பதையும் கிண்ணியா வைத்தியசாலையும் அதில் உள்வாங்க வேண்டும் என்பதையும் இச்சபைக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் இந்த விடயம் சம்மந்தமாக கௌரவ பிரதமர் அவர்களின் கவனத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னேரே கொண்டு செல்லபட்டது. இது சம்ம்னதமாக அவர் ஒரு குழுவை நியமித்து இது தொடர்பான முழு தரவுகளையும் அவரின் மேசையில் வைத்துள்ளார். ஆகவே இதை கொண்டு இப்பிரட்சினைக்கான உரிய தீர்வை கௌரவ அமைச்சர் கௌரவ பிரதமர் கௌரவ ஜனாதிபதி ஆகியோர் பெற்றுத்தர வேண்டும்.

ஊடகப்பிரிவுகிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட வேண்டும். கிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட வேண்டும். Reviewed by Madawala News on 8/12/2017 12:21:00 PM Rating: 5