Ad Space Available here

இலங்கை முஸ்லிம் அரசியலில் ஒரு புதிய பாதையை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.


  • அப்துல் சத்தார், கூட்டு எதிர்கட்சியின் ஸ்ரீ லங்கா பொதுசன முன்னணியின் முஸ்லிம் அமைப்பான ஸ்ரீலங்கா முற்போக்கு முஸ்லிம் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய விசேட செவ்வி.


நேர்காணல் இக்பால் அலி

சிறுபான்மை சமூகத்தின் கடந்த கால இழப்புகள் அழிவுகளை ஒத்த நிகழ்கால அரசியல் நகர்வுகள் சம்மந்தமாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு மட்டுமல்லாது பெரும்பான்மை மக்களுக்குக் கூட அரசியல் எதிர்பார்ப்புகள் இன்று ஒரு கசப்பான கதையாக உள்ளது. விசேடமாக அழிவுகள் என்று சொல்லும் போது எங்களுக்கு என்றும் மறக்க முடியாத நிகழ்வான 83 ஜுலை கலவரம் அதே போன்று 30 வருட கால யுத்த இழப்புகள் உட்பட தற்கால இனவாத முன்னெடுப்புகளால் எதிர்காலம் சம்மந்தமாக நம்பிக்கை இழந்து இருக்கும் சிறுபான்மை சமூகம் மிகவும் எதிர்பார்ப்போடு உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மிகவும் மனவேதனையாக உள்ளது.

விசேடமாக அண்மையில் பாராளுமன்றத்தில் 83 ஆம் ஆண்டு கலவரம் சம்மந்தமாக கேள்வி எழுப்பிய போது அதற்கு ஆளும் அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட பதில் ஆயிரக் கணக்கான அப்பாவி தமிழ் மக்களையும் கோடிக் கணக்கான சொத்துக்களையும் சேதமாக்கிய உலகமே அறிந்த அந்த கோரத் தனத்தை மூடும் வகையில் அமைந்தது. இதைவிட இன்று சிறுபான்மையினது அரசியல் நகர்வு சம்மந்தமாக என்ன சொல்ல வேண்டி இருக்கிறது.

புதிய அரசியல் யாப்புத் திருத்தச் சட்டம் சம்மந்தமாக கூட்டு எதிரணியினரின் கருத்து என்ன?

இந்த விடயத்தில் எல்லா இனத்திற்கும் சாதாணமான முறையில் அரசியல் யாப்பு அமைவதுதான் நன்மையானது இலங்கையின் அரசியல் யாப்பு இலங்கையர்களின் சிந்தனைகளில் மாத்திரம் உருவாவதன் மூலம்தான் நியாயமானதாக அமையும் இல்லாமல் மேற்கத்திய நாடுகளில் அல்லது அண்டைய நாட்டினதோ அல்லது வேறு நாடுகளின் உளவு சேவைகளின் விருப்பங்களை நிறைவேற்ற அமைக்கப்படும் என்றால் அது எதிர்காலத்தில் மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்படும் போது கடந்த அனுபவங்களையும் இன்று முஸ்லிம் சமூகத்திற்கு வட மாகாணத்தில் இழைக்கப்பட்டு கொண்டிருக்கும் அநியாயங்களையும் பார்க்கும் போது அந்த மாகாணத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக ஆக்கப்படும் போதும் நடக்கக் கூடிய அசாதாரண நிலைமைகளுக்கு முஸ்லிம்கள் பலியாவது தவிர்க்க முடியாததாகும். ஆதலால் இன்றுள்ள தமிழ் அரசியல்வாதிகளோடு முஸ்லிமகள் இணைந்து செல்லக் கூடிய நம்பிக்கையை இழந்தவர்களாக முஸ்லிம் சமூகம் உள்ளது. இப்படியான பல சிக்கல்களுக்கு மத்தியில் புதிய அரசியல் யாப்பென்பது எட்டாக் கனியே.

சமகால அரசியல் பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள் ?

அரசியல் என்ற வார்த்தையை சொல்ல முடியாதளவுக்கு இன்று இலங்கையின் அரசியல் ஒரு இக்கெட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் எந்த மூலை முடுக்கில் பார்த்தாலும் அரசியல்வாதிகள் இந்த நாட்டில் ஒரு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட பேர் வழிகளாகத் தள்ளப்பட்டுள்ளனர். அரசியல் அந்தஸ்து எந்த வகையில் இருந்தாலும் மக்கள் அரசியல்வாதிகளை ஒதுக்கி பார்க்கும் அளவுக்கு இன்றைய அரசியல் நிலை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது.

அரசியல்வாதிகள் என்றால் ஒரு காலத்தில் கௌரவமாக மரியாதையாக மதிக்கப்பட்டவர்கள். இருந்தாலும் இந்தக் காலம் மக்களைக் கண்டால் மறைந்து செல்லக் கூடிய நிலைக்கு இந்நாட்டின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

விசேடமாக முஸ்லிம் அரசியல்வாதிகளான அமைச்சர்களினதும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் நிலைமையை நோக்கும் போது ஒரே அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வதும் விமர்சித்துக் கொள்வதையும் தவிர அச்சத்தில் வாழும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களின் நிலைமையை பார்ப்பதற்கும் இன்று மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தையோ அடுத்த பிரச்சினைகளையோ பார்ப்பதற்குரிய சிந்தனையற்றவர்களாக இருக்கின்றார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான அச்சறுத்தல் நாசகார நடவடிக்கைகளின் தொடர்ச்சி சம்மந்தமான உங்கள் கருத்து என்ன?

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் என்றும் இல்லாதவாறு அச்சத்திற்கு உள்ளாகி மிகவும் மனோ ரீதியாக பலவீனப்பட்டு வாழும் நிலைமை மிகவும் கவலைக்குரியது. ஒரு காலத்தில் முஸ்லிம்களின் ஒற்றுமையாலும் வீரத்தாலும் எங்களுக்கு பயந்து ஓடிய அடுத்தவர்கள் இன்று முஸ்லிம்களை இலங்கையின் கேலிக்குரிய பிரஜைகளாக அணுகுவதும் சீண்டுவதும் சர்வசாதாரணமான விடயம். கடந்த கால ஆட்சியின் போது அன்று தொடக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக முஸ்லிம்கள் ஆட்சியிலிருந்தவர்களை முழு முஸ்லிம் சமூகத்தினதும் சக்திகளைப் பிரயோகித்து வீட்டுக்கு அனுப்பினாலும் தாம் அன்று செய்தது சரியானது தானா என்று எமது நெஞ்சங்களைத் தொட்டு கேட்குமளவுக்கு இன்று இலங்கை முஸ்லிம்களின் நிலை தள்ளப்பட்டுள்ளது.

அன்று சில சில சம்பவங்களுக்காக கொதித் எழுந்த நாங்கள் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்கள் வியாபார நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டும் பள்ளிவாசல்கள் பகிரங்கமாக தாக்கப்பட்டும் தாக்கியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டும் இலங்கை முஸ்லிம்களுக்கு நீதி மன்றங்கள் கூட நீதி வழங்குவதில் பாகுபாடு பார்க்கிறதா என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது. அன்று நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு கார்ட்டூனை சித்திரத்திற்காக போர்க் கொடி யேந்திய நாங்கள் இன்று எங்கள் எதிரிலேயே பட்டப் பகலில் அல்லாஹ்தஆலாவுக்கு எதிராக அல்குர்ஆனுக்கு எதிராக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராக பேசப்படும் போது இவைகளை எதிர்ப்பதற்கு சக்தியற்ற கோழைகளாக இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் முஸ்லிம்கள் என்பதை மறந்து தங்களுக்கு ஒரு மரணம் உள்ளது. மறுமை நாம் செய்தவைகளுக்கு அல்லாஹ்தஆலாவிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை மறந்து தங்களது வசதிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் இந்தப் பிரச்சினை சம்மந்தமாக வாய் மூடி மௌனிகளாக காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளை மாற்றும் வரை இந்த நிலைதான். ஏனென்றால் மஹிந்தவின் ஆட்சியிலும் மைத்தரியின் ஆட்சியிலும் சரி அன்று ஆமா சாமி போட்ட முஸ்லிம் வாக்குகளில் வாழும் ஒரே பெயரில் உள்ளவர்கள்தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் ஆட்சி மாறினாலும் காட்சி மாற வில்லை. 


அல்லாஹ்தஆலாவே திருக்குர்ஆனில் இதனை மிகவும் தெளிவாக எந்தவொரும் சமூகம் தங்களது தலை விதியை தானாக மாற்றிக் கொள்ளவில்லையோ அது வரையும் நாங்கள் அவர்களின் தலைவிதியை மாற்ற மாட்டோம் என்று சொல்கிறான். ஆதலால் இலங்கை முஸ்லிம்களிடத்தில் ஒரு புதிய ஆரோக்கியமான அரசியல் சிந்தனை வரும் வரையும் எங்கள் நிலைமை அதோ கதிதான்.

நீங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் கோபப்பட்ட நிலையில் என்ன காரணத்திற்காக இப்படி விமர்சனம் செய்கின்றீர்கள்?

இலங்கை அரசியல் வரலாற்றில் இன்று நாங்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கும் முஸ்லிம்களுக்குரிய உரிமைகளை பெற்றத் தந்தது எங்கள் அரசியல் மூதாதையளர்களான டி. பி. ஜாயா, மாக்கான் மார்க்கார், செர் ராசிக் பரீத், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் போன்றவர்கள் அன்று நாட்டின் முழு முஸ்லிம் சமூகத்தையும் பிரதிநித்துவப்படுத்தக் கூடிய ஓரிருவரே தேசிய அரசியல் கட்சிகள் மூலம் முஸ்லிம் சமூகத்திற்காக இருந்தாலும் அவர்கள் அன்று பெற்றுத் தந்த உரிமைகளும் சேவைகளும் இன்றியமையாதவை. ஆனால் துரதிஷ்டவசமாக 77 களுக்குப் பின்னால் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தோற்றத்திற்கு பின்னாலும் டசின் கணக்கான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்தின் ஏகப்பிரதிநிதிகள் என்று தங்களை மார்தட்டிக் கொண்டாலும் ஆட்சிகள் மாறும் பொழுது பொதியாக கொடுக்கப்படும் பணமூட்டைகளை வாரிக் கொண்டு தமக்கு சொகுசாக அரசியல் வியாபாரம் நடத்துவதற்கு கிடைக்கும் சலுகைகளையும் வசதிகளையும் நோக்காக கொண்டு செயல்படுதவதாலும் தமது தவறுகளை மறைப்பதற்கு ஒருவொருக்கொருவர் சாடிக் கொண்டு முஸ்லிம் சமூகத்தை அந்நியர்கள் பார்த்து சிரிக்குமளவுக்கு அரசியலில் பெரும் சாணக்கியர்களாக செயல்படுகிறார்கள். இவைகளை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.

இவைகளை மாற்றுவதற்கான உங்கள் கட்சியின் முன்னெடுப்புக்கள் எவை என்று கூறுவீர்களா?

பல தசாப்தங்களாக இலங்கை அரசியல் முஸ்லிம் அரசியல்வாதிகளின் அநியாயங்களை சகிக்க முடியாமல் இன்று முஸ்லிம் சமூகம் அலுத்துப் போய் உள்ளது. இந்த நிலைமைகள் மாற வேண்டும். நாங்கள் பல தசாப்தங்களை பின்னோக்கி சென்று விட்டோம். எங்கள் சமூகத்திற்கு தீர்க்கப்படாத பிரச்சினைகள் அடுக்கடுக்காக உள்ளன. எங்கள் மனதுகளைக் கூட தங்களது சுய அரசியல் இலாபத்திற்காக இன்றுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மாசுபடுத்தி விட்டார்கள். 

தேர்தல் காலங்களின் போது நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்று கோசம் போட்டு முஸ்லிம்களை ஒன்று சேர்த்து வாக்குகளை ஈவிரக்கிமின்றி அபகரித்து அதன் மூலம் சுகம் அனுபவிக்கும் இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட வேண்டும். தேசிய கட்சிகள் தேசிய அரசியல் மூலமாக மட்டுமே இன்று முஸ்லிம் தள்ளப்பட்டிருக்கும் பாதாள நிலையிலிருந்து இலங்கையர் என்ற அந்தஸ்தோடு வாழக் கூடிய சூழலை உருவாக்கலாம்.

இலங்கை முஸ்லிம்களைக் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களை விட வெளிமாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மையான வாக்குப் பலத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் முஸ்லிம் பெயர்களில் உலாவும் அரசியல் கட்சிகளின் தந்திர போக்கால் முழு நாட்டிலுள்ள முஸ்லிம் வாக்காளர்களை பலிக்காடாக்களாக்கி தமது நோக்குகளை அடைவதால் நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களிடத்தில் முஸ்லிம் சமூகத்தினர் ஒரு சந்தேகத்திற்குரிய பிரஜைகளாக இன்று ஆக்கப்பட்டுள்ளார்கள். 

ஆதலால் கூட்டு எதிர்கட்சியின் அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுசன முன்னணியின் முஸ்லிம் அமைப்பான ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி மிகவும் உன்னிப்பாக எதிர்காலத்திற்குரிய இந்த நாட்டில் முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழக் கூடிய அரசியல் சூழலை உருவாக்குவதில் எமது நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றது.

என்றாலும் இன்று முஸ்லிம் அரசியலை குழப்பியடித்துக் கொண்டு தமது ஆதிக்கத்தை இழக்க முடியாமல் இருக்கும் அரசியல்வாதிகள் எமது இந்த அமைப்புக்குள் சில ஒற்றர்களை ஊடுருவ விட்டுள்ளதும் அவர்கள் மீது நாங்கள் மிகவும் அக்கறையாக இருப்பது மிகவும் வேடிக்கையான விடயமாகும்.

கூட்டு எதிர்கட்சியில் எதிர்காலத்தில் வரக் கூடிய பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநித்துவம் சம்மந்தமாக நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

இலங்கை முஸ்லிம் அரசியலில் ஒரு புதிய பாதையை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பல தசாப்பதங்களாக சேர்த்து வைக்கப்பட்ட பெரும்பான்மை சமூகத்துடனானா வேற்றுமைகள் வெறுப்புக்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அன்று எமது மூதாதை அரசியல் தலைவர்களால் எமக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டத போல் எமக்குரிய அந்தஸ்து கௌரவம் எங்களுக்கு கிடைக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் எங்களின் நடவடிக்கைகள் மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 


இலங்கை வரலாற்றில் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு முஸ்லிம் வாக்குகளையும் பெறக் கூடிய வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் கொழும்பு கண்டி, களுத்துறை, குருநாகல், புத்தளம் அநுராதபுரம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களை பிரதிநித்துவப்படுத்தக் கூடிய வகையில் பத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பதே எமது முயற்சியாகும்.

இக்பால் அலி

03-8 -2017

 

இலங்கை முஸ்லிம் அரசியலில் ஒரு புதிய பாதையை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இலங்கை முஸ்லிம் அரசியலில் ஒரு புதிய பாதையை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். Reviewed by Madawala News on 8/06/2017 02:05:00 PM Rating: 5