tg travels

முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமைத்துவத்தின் கீழ் கல்குடா பிரதேசத்தில் பாரியளவிலான அபிவிருத்தி..


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமைத்துவத்தின் கீழ் கல்குடாத் தொகுதியானது மத்திய அரசாங்கத்தினூடாவும், மாகாண அரசாங்கத்தினூடாகவும் தற்பொழுது பாரியளவிலான அபிவிருத்திகளை கண்டு வருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.


காவத்தமுனை அல்-முபாறக் ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடி மண்ணிட்டு நிரப்பப்பட்டு புனரமைப்பு செய்வதற்கும் சுற்று மதில் அமைப்பதற்கும் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 18 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வேலைத்திட்டத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஆகியோர் 2017.08.11ஆந்திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்...


அந்த வகையில் கல்குடாத் தொகுதியில் வீதி, சுகாதாரம் மற்றும் பாடசாலை சார்ந்த அபிவிருத்திகள் என்று பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளின் தொடரில் இன்று காவத்தமுனை ஜூம்ஆ பள்ளிவாயலுக்கான மையவாடி மண்ணிட்டு நிரப்பப்பட்டு புனரமைப்பு செய்வதற்கும் சுற்று மதில் அமைப்பதற்குமான வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.


அத்துடன் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் சில மாதங்களில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஐ ரோட் திட்டத்தின்கீழ் சுமார் 8 கிலோமீட்டர் தூரமுடைய வீதிகள் கல்குடாத் தொகுதியில் காபட் வீதிகளாக புணரமைப்பு செய்யப்படவுள்ளன.


அத்துடன், நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளினால் கிடைக்கப்பெறுகின்ற அதிகாரங்கள் நம் சமூகத்திற்கு பிரயோசனமுள்ளதாக மாறியிருக்கின்றது என்கின்ற விடயத்தினை நாங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். 


அது மாத்திரமல்லாது கல்குடாப் பிரதேசம் இன்னும் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை எதிர் பார்த்திருக்கின்ற ஒரு பிரதேசமாகும் அதிலும் குறிப்பாக காவத்தமுனை பிரதேசத்தினை பொருத்த மட்டில் அதிகளவான வீதிகள் செப்பனிடப்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.


இன்ஷாஅல்லாஹ் எதிர்கலாத்தில் எங்களுக்கு அதிகாரங்கள் கிடைக்கப் பெறுகின்றபோது இன்னும் பாரியளவிலான அபிவிருத்திகளை இப்பிரதேசங்களுக்கு வழங்குவதற்கு அல்லாஹ் துணை இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டவனாக தனதுரையினை நிறைவு செய்தார்.


மழைகாலங்களில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வந்த காவத்தமுனை அல்-முபாரக் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரும் பொதுமக்களும் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் மையவாடியின் ஒரு பகுதி மண்ணிட்டு நிரப்பப்பட்டு மழை காலத்தில் எவ்வித சிரமமின்றி ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு ஏதுவான வகையில் புனரமைக்கப்படவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமைத்துவத்தின் கீழ் கல்குடா பிரதேசத்தில் பாரியளவிலான அபிவிருத்தி.. முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமைத்துவத்தின் கீழ் கல்குடா பிரதேசத்தில் பாரியளவிலான அபிவிருத்தி.. Reviewed by Madawala News on 8/14/2017 01:15:00 AM Rating: 5