Kidny

Kidny

மத்திய வங்கி முறியில் மோசடி செய்த பணத்தை பறிமுதல் செய்து மக்களிடம் கொண்டு சேர்ப்போம் ..


மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விடயத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற உயர் மட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சதித்திட்டங்கள் இடம்பெறுவதாக ஹெல உறுமய கட்சியின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். 

அத்துடன், இந்த ஆட்சியில் நடந்த குற்றங்கள் தொடர்பில் எந்த தடைகளும் இல்லாது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த கால ஊழல் மோசடிகள் குறித்தும் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். குற்றவாளிகளை தப்பிக்க இடமளிக்க முடியாது. என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட அப்போது நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் அடக்குமுறை ஆட்சியே காரணமாகும். ஆட்சி மாற்றப்பட்டதிலிருந்து கடந்த கால ஊழல்கள் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வந்தோம். ஆனால், ஆட்சி மாற்றத்திலும் ஊழல் ஆரம்பிக்கப்பட்டமை எமக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாகும். குறிப்பாக மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் நடைபெற்ற ஊழல் மிகவும் மோசமான ஒன்றாகும். சாதாரண குற்றங்களை போல இதனை எம்மால் கருத முடியாது. குறிப்பாக ஆட்சி மாற்றம் பெற்று 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் 10 பில்லியன் ரூபாய் ஊழல் மோசடி இடம்பெற்றது. இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் எழுந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு மீண்டும் மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில் 73 பில்லியன் ரூபாய் ஊழல் இடம்பெற்றது. 

இந்த இரண்டு விவகாரத்திலும் குறித்த ஒரு நிறுவனம் மட்டுமே தொடர்புபட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் 300 மில்லியன் இலாபம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன் நிறுவனத்தின் இலாபம் 25 ஆயிரம் மில்லியனையும் தாண்டியுள்ளது. இந்த தொகையில் அதிகமானவை திறைசேரிக்கு உரிய நிதியாகும். இந்த விவகாரம் இவ்வாறு இருக்கையில் யாரும் அறியாத இன்னொரு பக்கமும் இடம்பெற்றது. அதாவது, மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில் இதுவரையில் கையாண்ட விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.இதில் பிணைமுறிகள் விடயத்தில் பிரதான பங்கு வகித்த ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டும் நிராகரிக்கப்பட்டன. அடுத்த இடத்தில் இருந்த இலங்கை வங்கியின் செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருசிலரது தனிப்பட்ட தேவைகளை கருதி இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்காகவே மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில் புதிய நடைமுறைகள் கையாளப்பட்டுள்ளன. 

இந்த அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை இலக்கு வைத்து மாத்திரம் ஆட்சி அமைக்கவில்லை. கடந்த ஆட்சியில் மிகப்பெரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதை மறுக்கவே முடியாது. ஆனால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களின் பின்னணியிலும் பாரிய ஊழல் மோசடிகள் இருந்தன.அதனை தடுக்கவே ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினர்.ஊழலை தடுக்க வேண்டுமென்ற ஆட்சி மாற்றத்தில் பங்களிப்பு செய்த மக்களின் முதுகில் குத்தும் விதத்தில் இந்த அரசாங்கத்திலும் ஊழல் இடம்பெற்றுவிட்டது.எனினும் இந்த விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயற்பட்ட விதம் வரவேற்கத்தக்கது.ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு உடனடியாக ஊழலை கண்டறியும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தமை நல்லாட்சியின் எடுத்துகாட்டாகும். 

எனினும், இந்த ஊழல் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கும் வழக்கை 20 ஆண்டுகளுக்கு இழுத்தடிப்பு செய்து இந்த ஊழலில் இருந்து தப்பித்துக்கொள்ள சிலர் முயற்சித்து வருகின்றனர்.ஆனால் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க போவதில்லை.இந்த ஊழலில் தொடர்புபட்ட முக்கிய குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் மூலம் தண்டிக்க எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.அதேபோல் இன்றும் இவர்களிடம் பல கோடி ரூபாய்கள் மக்களின் நிதி பதுக்கிவைக்கப்பட்டுள்ளது.

அவற்றை முழுமையாக பறிமுதல் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையும் முன்னெடுப்போம்.இப்போது அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னைய ஆணைக்குழுக்கள் போன்றதல்ல.இந்த ஆணைக்குழுவிற்கு சகல அதிகாரங்களும் உள்ளன.

இப்போது மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் போன்று இனியொருபோதும் இடம்பெறாத வகையிலான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க கூறவும் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து மத்திய வங்கி பிணைமுறி விவகாரங்களை கையாள்வதில் மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் இந்த அரசாங்கம் உருவாக்கப்பட முன்னரும் மத்திய வங்கியில் ஊழல் இடம்பெற்று வந்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதில் தாமதம் உள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

இதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே விரைவில் இந்த விசாரணைகளை முன்னெடுக்க நீதி அமைச்சர் செயற்பட வேண்டும். கடந்தகால குற்றங்கள் தொடர்பில் பொலிஸ்,நீதிமன்ற விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர்.ஆகவே உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும். இந்த ஆட்சியில் நடந்த குற்றங்கள் தொடர்பில் எந்த தடைகளும் இல்லாது விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த கால ஊழல் மோசடிகள் குறித்தும் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

மத்திய வங்கி முறியில் மோசடி செய்த பணத்தை பறிமுதல் செய்து மக்களிடம் கொண்டு சேர்ப்போம் .. மத்திய வங்கி முறியில் மோசடி செய்த பணத்தை பறிமுதல் செய்து மக்களிடம் கொண்டு சேர்ப்போம் .. Reviewed by Madawala News on 8/15/2017 12:52:00 PM Rating: 5