Ad Space Available here

கொழும்பின் கைக்கு மாறும் மாகாணங்களின் மூக்கணாங்கயிறு..


மாட்டு வண்டில்களின் மூக்கணாங்கயிறு அந்த வண்டிலை ஓட்டிச் செல்பவனின் கைகளிலேயே எப்போதும் இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் அந்த மாடுகளை அவன் கட்டுப்படுத்துவதற்கு இது அவசியமானது. அதற்கு மாற்றமாக, மாட்டு வண்டிலின் உரிமையாளர் என்பதற்காக வீட்டில் இருக்கும் ஒருவரிடம் மூக்கணாங்கயிற்றை கொடுக்க முடியாது.அல்லது இந்த மாட்டு வண்டிலை எப்படியாவது தனது தேவைக்காக பயன்படுத்த நினைக்கின்ற ஒருவரிடம் கையிற்றைக் கொடுத்துவிட்டு, வண்டிலோட்டி ஆயாசமாக இருந்துவிட முடியாது. அப்படி இருந்தால், வண்டிலையும் மாடுகளையும் அதனூடான பயணத்தையும் அவர் தொலைக்க நேரிடலாம். இது, மாகாண சபை அரசியல் அதிகாரத்திற்கும் பொருந்தும்.

இப்போது நாட்டின் அரசியல் பெருவெளியில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தமும் மாகாண சபைகள் சட்டத்தின் மீதான திருத்தமும் காரசாரமான வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டுள்ளன. 'அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரேநாளில் நடாத்த வேண்டும்' என்ற தோரணையில்,எட்டு மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் அடுத்தடுத்து மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கம் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு பயந்துகொண்டு தேர்தலை ஒத்தி வைப்பதற்காகவே மாகாண சபைகளின் காலத்தை நீடிக்கின்றதா என்பது இதில் பிரதானமான சந்தேகமாகும்.

முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் 'அம்பாறை மாவட்டத்தில் உள்ள இரு பிரதேசங்களை துபாய், பஹ்ரைனைப் போல அபிவிருத்தி செய்வோம்' என்று சொன்னதாக செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே அரசாங்கம் மாகாண சபைகளின் ஆயுட்காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதிபெற்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. ஆனால், 'துபாய், பஹ்ரைன்' கதைகளை பாராட்டுவதற்கும் கிண்டலடிப்பதற்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் 20ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை தேர்தல் ஒத்திவைகப்பு போன்ற விடயங்களுக்கு கொடுக்கப்படவில்லை.

முஸ்லிம் சமூகத்திற்குள் சில சிவில் அமைப்புக்கள், ஒரு அரசியல் கட்சி மற்றும் செயற்பாட்டாளர்களை தவிர பொது மக்களோ சமூகவலைத்தள போராளிகளோ பெரிய முஸ்லிம் கட்சிகளோ இதில் கரிசனை காட்டியதாக கருத முடியாது. முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைகள் பெரும்பாலும் அன்றன்றைய நாட்களை கடத்துவதற்கான அற்பத்தனமான விடயங்களுக்குப் பின்னால் இருப்பதையும், எந்தப் பெரிய விடயத்தையும் இரண்டு வாரங்களில் மறந்து விட்டு வேறு ஒரு பராக்குகாட்டலின் பக்கம் கவனத்தை திருப்பிவிடுவதையே இது மீளவும் நிரூபிக்கின்றது.

காலாவதியாகும் சபைகள்

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆயுட்காலம் அடுத்த மாதம் முற்பகுதியுடன் நிறைவுக்கு வருகின்றது. வடக்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் ஆட்சிக்காலம் இன்னும் ஒரு வருடத்திலும், தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் காலஎல்லை சரியாக இரண்டு வருடங்களிலும் நிறைவடையவுள்ளது. எனவே முதலாவதாக ஆயுட்காலம் முடிவடையும் 3 சபைகளுக்கு உடனடியாக தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டிய தேவையுள்ளது. அதனைச் செய்து முடிப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் கொள்கை அடிப்படையில் உறுதியாகவே இருந்தது.

இருப்பினும், ஒவ்வொரு மாகாண சபைகளுக்கும் தனித்தனியாக தேர்தலை நடத்தாமல் ஒரே நாளில் தேர்தலை நடாத்துவது சிறந்தது என்ற அடிப்படையில் அதனைச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையில் அரசியலமைப்பின் உறுப்புரைகள் மற்றும் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் அதற்குரிய பிரிவினை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்தது. இதற்காக சட்டவரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தையும் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டமூலத்தையும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வாத்தமானி அறிவித்தல்கள் கடந்த 3ஆம் திகதி வெளியாகியுள்ளன என்பதுடன், பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதற்காக காத்திருக்கின்றது.

அரசாங்கத்தின் அச்சம்

தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு அரசாங்கம் உள்ள10ற அச்சம் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் அணிநிலை முரண்பாடுகள், ஆளும் கட்சிகள் இரண்டுக்கும் இடையில் உள்ள அதிகாரப் போட்டி என்பவற்றின் பின்னணியில் மாகாண சபைத் தேர்தலையோ உள்ள10ராட்சி மன்ற தேர்தலையோ நடாத்துவதற்கு இது பொருத்தமான காலமல்ல என்று அரசாங்கம் கருதுகின்றது. என்னதான் ஒரேநாளில் தேர்தல் நடாத்தும் நோக்கிலேயே இதைச் செய்தாலும், தேர்தலை பிற்போடுதலும் அதனூடாக பலப்பரீட்சையை பிற்போடுவதுமே இதிலுள்ள மறைமுக நோக்கம் என்று பரவலாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மறுக்கக் கூடியவை அல்ல.

இலங்கையின் அரசியலில் மிகவும் செல்வாக்குச் செலுத்திய 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் பிரகாரமே 1988ஆம் ஆண்டு இலங்கையில் மாகாண சபைகள் முறைமை அறிமுகமானது. சுருங்கக்கூறின், மத்தியில் குவிந்துள்ள அதிகாரத்தை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுப்பதே இந்த ஏற்பாட்டின் அடிப்படை நோக்கமாகும். ஆனாலும், 13ஆவது திருத்தம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பின்வந்த அரசியல் மற்றும் யுத்த சூழலின் பின்னணியில் மாகாண சபைகளுக்கு எல்லா அதிகாரங்களையும் கொடுக்காமல் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை மாத்திரமே மத்திய அரசாங்கம் கொடுத்திருந்தது.

பெரும்பாலான அதிகாரங்களை தம்வசம் வைத்திருப்பதன் மூலம் மாநில அரசாட்சியின் பிடியை தமக்குள் வைத்துக் கொண்டிருக்காமல், 13ஆவது திருத்தத்தின் படி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, நிதி, பொலிஸ் அதிகாரங்களை (வடக்கிற்கும் கிழக்கிற்கும்) வழங்க வேண்டுமென கோரி வருகின்றனர். முஸ்லிம்கள் இதற்காக பேராhடவில்லை என்பது மட்டுமன்றி, அதிகாரம் வழங்கப்பட்டால் என்ன நடக்குமோ என்ற அச்சமும் கணிசமானோரிடம் இருக்கின்றது.

மாகாண சபைகள் சட்ட ஏற்பாட்டின் படி ஒரு மாகாண சபையின் ஆட்சிக்காலம் இரண்டு விதத்தில் முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என்று விடயமறிந்தவர்கள் கூறுவதுண்டு. முதலாவது, முதலமைச்சரின் சம்மதத்துடன் ஆளுநர் மாகாண சபையை கலைத்தல், அடுத்தது, விஷேட சூழ்நிலை ஏற்படும் போது ஜனாதிபதி தனக்கிருக்கின்ற பயன்படுத்தி மாகாண சபையின் சுயாதீனமான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரல் அதாவது தனக்குக் கீழ் கொண்டுவருதல் என்பவையாகும்.

தானாகவே ஆயுட்காலம் முடிவடைந்த மாகாண சபை கலைக்கப்பட்டதாக கருதப்படமாட்டாது என்பதுடள் ஆயுள் ஏற்கனவே காலாவதியானதாக கொள்ளப்பட்டு, தேர்தல் நடத்தப்படுவதே நியதி. இதனையும் தாண்டி, ஆயுட்காலம் முடிவடைந்த மாகாண சபைகளுக்கு தேர்தலை பிற்போட வேண்டுமென்றால் சட்டத் திருத்தம் அவசியமானது என்பது சட்டமறிந்தோரின் கருத்தாகும். அதனையே அரசாங்கம் தற்போது செய்து கொண்டிருக்கின்றது எனலாம்.

மாகாண சபைகள் சட்டம் (திருத்தம்)' என்ற தலைப்பில் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபை தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்காகன வர்த்தமானியும், அதேபோன்று 'இலங்கையின் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம்' என்ற இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான திருத்தம் ஒன்றை கொண்டு வருவது என்றால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒரு வாதமும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினாலேயே போதுமானது என்றொரு பிரதிவாதமும் இவ்விடத்தில் முன்வைக்கப்படுகின்றது.

கூட்டு எதிரணி குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இதனை கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், அரசாங்கத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியுமா என்ற சந்தேகமும் ஒருபுறம் இருக்கின்றது. ஆனால், நீரூக்குள்ளால் நெருப்பைக் கொண்டுபோகக் கூடிய ஆட்சியாளர்கள் எந்தப் பெரிய காரியத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற அடிப்படையில் சிறுபான்மைச் சமூகங்கள் இதன் சாதகபாதகம் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

வர்த்தமானி உள்ளடக்கம்

மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) தொடர்பான வர்த்தமானியில், அரசியலமைப்பின் 154உ உறுப்புரையின் குறிப்பிட்ட ஒரு பகுதியானது 'அரசியலமைப்பின் 154ஈஈ எனும் உறுப்புரையின் நியதிகளின் படி குறித்துரைக்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் எல்லா மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒன்றை (நடத்துதல்) என்று திருத்தப்படுகின்றது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரேநாளில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடாத்துவதற்கான சட்ட ஏற்பாட்டை இது கொண்டுவருகின்றது.

அதேவேளை, 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வர்த்தமானி பல மாற்றங்களை கொண்டு வருகின்றது. அதன்படி,

1)அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடாத்தப்படல் வேண்டும்.

2) அனைத்து மாகாணசபைகளும் கலைக்கப்பட்டதாக இருக்க வேண்டிய திகதி பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும். அத்திகதி இறுதியாகத் நிறுவப்பட்ட மாகாணசபையின் பதவிக்கால முடிவுத்திகதிக்குப் பின்னராக இருக்கக் கூடாது.  

3) ஒரே தினத்தில் தேர்தல் நடக்கும் குறித்துரைக்கப்பட்ட திகதிக்கு முன்னர் முடிவடையும் மாகாண சபையின் ஆட்சிக்காலம் குறிப்பிட்ட திகதி வரை நீடிக்கப்பட்டதாக கருதப்படும்.

4) (ஒரே தினத்தில் தேர்தல் நடக்கும்) குறித்துரைக்கப்பட்ட திகதியில் முடிவடையாதிருக்கின்ற மாகாண சபையின் ஆட்சிக்காலம் அத்திகதியில் முடிவடைதல் வேண்டும் என்பது போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில் என்ன பிரச்சினை என்று சிலர் கேட்கக் கூடும். அரசாங்கம் மேலே 4ஆவதாக குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில் இம்முறை மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாயின் குறிப்பாக சிறுபான்மையினருக்கு பெரிய பிரச்சினைகள் இல்லை. கிழக்கு மக்கள் உரிய காலத்திலும் வடக்கு மக்கள் ஒரு வருடத்திற்கு முன்னரும் வாக்களிக்க நேரிடலாம். வேறுசில மாகாண மக்கள் 2 வருடங்கள் முன்கூட்டி தேர்தலை சந்திக்கலாம். ஆனால், ஆளும் கட்சிகள் அதைச் செய்ய மாட்டாது. ஓரளவுக்கு தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற மாகாண சபைகளில் உரிய காலத்திற்கு முன்னரே தேர்தலை நடத்தினால் ஒருவேளை அவற்றின் அதிகாரம் இல்லாது போய்விடுமோ என்ற அச்சம் ஐ.ம.சு.மு.வுக்கும் ஐ.தே.கவுக்கும் இருக்கின்றது.

எனவே, 3ஆவதாக குறிப்பிடப்பட்டுள்ள முறைமையையே அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பிருக்கின்றது. இதன்படி, இன்னும் சில நாட்களில் ஆயுட்காலம் முடிவடையவுள்ள கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் ஆட்சிக்காலம் உள்ளடங்கலாக 8 மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் 2019 செப்டம்பர் வரை நீடிக்கப்படலாம். ஊவா மாகாணத்தின் ஆட்சிக்காலம் மட்டும் நீடிக்கப்படாது. அதாவது, ஊவா மாகாணத்தின் ஆட்சிக்காலம் முடிவடைந்ததும் 9 மாகாண சபைகளுக்குமான தேர்தல் புதிய சட்டத்திருத்தத்தின் பிரகாரம் ஒரே நாளில் நடாத்தப்படும்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவது நல்லதே. ஆனால், அதனை அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எத்தனிக்கின்ற போது அதற்காக காத்திருப்பதன் மூலம் 8 மாகாணங்கள் பலிக்கடாவாகின்றன என்பதுதான் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது, அதாவது, 13ஆவது திருத்தத்தால் வழங்கப்பட்ட ஆளும் அதிகாரம் ஊவா தவிர ஏனைய மாகாணங்களில் உள்ள மக்களிடமிருந்து தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்படுகின்றது அல்லது மறைமுகமாக பறித்தெடுக்கப்படுகின்றது என்பதே கரிசனைக்குரிய விடமாக இருக்கின்றது.

இழக்கப்படும் அதிகாரம்

புதிய திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன்படி மேற்குறிப்பிட்ட மாகாண சபைகளின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டால் கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களில் உள்ள மக்கள் வாக்களித்து தம்மை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை 2 வருடங்களுக்கு செல்லுபடியற்றதாக இருக்கும். வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களின் மக்கள் உரிய காலத்தை விட ஒரு வருடம் பிந்தியே தமக்குரிய மாகாண சபையை தெரிவு செய்ய முடியும். அதேபோன்று, தென் மற்றும் மேல் மாகாணங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து 6 மாதங்களின் பின்னரே தேர்தல் நடைபெறும். எனவே, இது மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை மீறும் செயல் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இன்னுமொரு விடயமும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அதாவது, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தில், '154உஉ உறுப்புரை 154ஆ என்பதன் 8ஆம் பந்தியின் (இ) எனும் உட்பந்தியின் ஏற்பாடுகளின் நடைமுறையின் பிரகாரம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஒரு மாகாண சபை கலைக்கப்படும் பட்சத்தில் அந்த சபையின் தத்துவங்கள் குறி;த்துரைக்கப்பட்ட (தேர்தல்) திகதி வரை பாராளுமன்றத்தால் பிரயோகிக்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள சூசகமான சொற்பிரயோகங்களின் படி அல்லது நடைமுறை யதார்த்தத்தின் படி மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசின் கைக்குப் போகலாம் என்ற ஊகங்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.

மாகாண சபைகளை கலைத்து விட்டு (அதற்கு சாத்தியம் குறைவு) ஆளுநரின் கீழ்கொண்டு வந்து அவரை ஆட்டுவிப்பதன் மூலம், அல்லது கலைக்கப் போகின்றோம் என்று பயங்காட்டி முதலமைச்சரை அடிபணிய வைப்பதன் மூலம் மத்திய அரசாங்கம் மறைமுகமாக தனது பலத்தையும் அதிகாரத்தையும் மாகாண சபைகளின் மீது பிரயோகிக்கலாம். இவ்வாறு நடந்தால், 13ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளின் கைகளிலேயே கொடுக்கப்பட்டுள்ள மூக்கணாங்கயிறு, அந்தக் கையிற்றைக் கொடுத்த கொழும்பின் கைகளுக்கு தற்காலிகமாக போய்ச் சேர்வதற்கு நிறையவே வாய்ப்பிருக்கின்றது.

எனவேதான், தேர்தல் தொடர்பாக கவனம் செலுத்தும் கபே, பவ்ரல் போன்ற அமைப்புக்களும் ஜனநாயக செயற்பாட்டாளர்களும் இந்த திருத்தச் சட்டமூலங்களால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகள், இழப்புக்கள் குறித்து நேரிடையாகவே தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கிழக்கு மக்கள் அவையம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள், பேதங்களைக் கடந்து இதுதொடர்பான கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றன.

குறிப்பாக கூட்டு எதிரணியின் மஹிந்த தரப்பும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் கபே அமைப்பும் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளன. 'மாகாண சபைகளின் ஆட்சிக்காலத்தை நீடித்து, தேர்தலை பிற்போட முற்படுவது மக்களின் இறைமையை மீறும் செயல்;. அப்படிச் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்பட்டால் மாகாண சபைகளின் அதிகாரம் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படும். இதற்கு ஆதரவளிப்போர் துரோகியாக வரலாற்றில் பதியப்பவார்கள் என்ற தொனியில் கபே அமைப்பு கருத்து வெளியிட்டிருக்கின்றது.

உண்மையில், மாகாண சபைகளின் அதிகாரம் மத்திய அரசிற்குச் சென்றால் சிங்கள ஆட்சியாளர்களே இன்னும் பலம் பெறுவர். சிங்கள மக்கள் தமக்கான மாகாண சபையை தெரிவு செய்யும் உரிமையையே தற்காலிகமாக இழப்பார்கள். ஆனால், சிறுபான்மை தமிழர்களும் முஸ்லிம்களும் அதற்கப்பாலான மேலும் பல சவால்களையும் இழப்புக்களையும் சந்திப்பார்கள்.

மேற்சொன்ன ஊகங்கள் நிஜமானால், வடக்கு, கிழக்கு உட்பட 8 மாகாணங்களின் தமிழர்களுகளும் முஸ்லிம்களும் ஜனநாயக முறைப்படி வாக்களித்து புதிய மாகாண சபை உறுப்பினர்களை, முதலமைச்சர்களை தெரிவுசெய்யும் உரிமை ஆறு மாதம் முதல் 2 வருடங்கள் வரை பயனற்றதாக இருக்கும். மிக, முக்கியமாக இந்த இடைப்பட்ட காலத்தில் ஆளுநர் ஊடாகவோ அல்லது வேறு காய்நகர்த்தல்களின் ஊடாகவோ தற்போது சிறுபான்மையினரின் வசமுள்ள கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கட்டுப்பாடும் மறைமுகமாக பெருந்தேசிய ஆட்சியாளர்களின் கைகளுக்கு மாறும், தேவை ஏற்படும் போது மூக்கணாங்கயிறு இறுக்கப்படலாம்.

ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவனமக உற்றுநோக்குகின்ற போதிலும், இதற்கு எதிராக குரல்கொடுத்தாக தெரியவில்லை. முஸ்லிம் அரசியலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியைத் தவிர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ அல்லது தேசிய காங்கிரஸோ பகிரங்கமாக எதிர்த்துப் பேசவில்லை என்பது கவலைக்குரிய நமது அரசியல் யதார்த்தமும் தலைவிதியுமாக இருக்கின்றது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

மூக்கணாங்கயிறும் ஒரு அமானிதமே!

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 13.08.2017)


கொழும்பின் கைக்கு மாறும் மாகாணங்களின் மூக்கணாங்கயிறு.. கொழும்பின் கைக்கு மாறும் மாகாணங்களின் மூக்கணாங்கயிறு.. Reviewed by Madawala News on 8/13/2017 07:33:00 PM Rating: 5