Yahya

ஜனாதிபதி, பிரதமர் நினைத்தால் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அடுத்த செக்கனில் வழங்க முடியும்அஸ்லம் எஸ்.மௌலானா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நினைத்தால் 13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அடுத்த செக்கனில் வழங்க முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை உவெஸ்லி கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வின் மாலை அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலமைச்சர் மேலும் உரையாற்றுகையில்;


"இந்த நாட்டில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக சிறுபான்மை சமூகத்தினர் நசுக்கப்பட்டும் அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டும் வருகின்றன. இதனால் நாட்டின் சமாதான சூழல் சீர்குலைந்து போயுள்ளது. எந்தவொரு இனமும் நிம்மதியாக வாழ முடியாத துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் பொருட்டு, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேச்சுவார்த்தைகள் தான் முன்னெடுக்கப்பட்டுள்ளனவே தவிர சிறுபான்மையினருக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை.


யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியவில்லை. தற்போது நல்லாட்சியில் முன்னெடுக்கப்படுகின்ற சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு சில சக்திகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வழங்குவதற்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அவை கூட நிறைவு செய்யப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டே வருகின்றன.


இதனால் சிறுபான்மையினர் மத்தியில் சந்தேகமும் கவலையும் வலுக்கிறது. கடந்த 2015 ஜனவரி-08 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மீது சிறுபான்மையினர் நம்பிக்கை வைத்து ஆட்சியில் அமர்த்துவற்கு அணி திரண்டிருந்தனர். அதே போன்று பெரும்பான்மை மக்களில் கணிசமானோரும் அவர்களை ஆதரித்தே நல்லாட்சி மலர்ந்தது.


புதிய அரசியலமைப்புக்கும் தீர்வு முயற்சிகளுக்கும் எதிராக இன்று மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை இன்றும் ஒட்டுமொத்த சிறுபான்மையினரிடமும் இருக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று காலம் ஏன் இழுத்தடிக்கப்படுகிறது என்றுதான் புரியவில்லை. 


அதேவேளை 13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்குவதற்கு பேச்சுவார்த்தை எதற்கு என்று நான் கேட்கின்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. கல்வித்துறையை பொறுத்தமட்டில் மாகாண சபைகளுக்கு 95 வீதமான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை அமுல்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை எதற்கு? இதற்காக 95 வீதமான நிதியை ஒதுக்கித்தருவதற்கு பேச்சுவார்த்தை எதற்கு?


இந்த அடிப்படையில் எமது மாகாண சபைக்கு நிதியொதுக்கீடு செய்யப்படுமாயின் கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் தேவைகளை நிறைவு செய்து, பிரச்சனைகளை தீர்த்து வைக்க எம்மால் முடியுமாக இருக்கும். ஜனாதிபதி, பிரதமர் போன்றோரிடம் நாம் இதனைக் கோருகின்றபோது அவர்களது காதுகளுக்கு கேட்பதாக இல்லை. இதற்கான நியாயத்தையாவது சொல்லுங்கள் என்றால் அதற்கும் பதில் இல்லை.


இது போன்று 13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் நினைத்தால் அடுத்த செக்கனில் வழங்க முடியும். மக்களின் பிரச்சினைகள், தேவைகள் பற்றி நாம் எடுத்துரைப்பதை செவிசாய்க்க அவர்கள் மறுப்பது ஏன் என்று புரியவில்லை.


இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தினருக்கு சம அந்தஸ்த்து, கௌரவம், உரிமைகள் வழங்கப்பட்டால் மாத்திரமே பெரும்பான்மை சமூகத்தினரும் நிம்மதியாக வாழ முடியும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்காக சிறுபான்மையினர் எதிர்பார்க்கின்ற நியாயமான அரசியல் தீர்வை மேலும் இழுத்தடிப்பு செய்யாமல் விரைந்து முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

ஜனாதிபதி, பிரதமர் நினைத்தால் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அடுத்த செக்கனில் வழங்க முடியும் ஜனாதிபதி, பிரதமர் நினைத்தால் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அடுத்த செக்கனில் வழங்க முடியும் Reviewed by Madawala News on 8/02/2017 01:22:00 PM Rating: 5