Kidny

Kidny

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தடுமாற்றத்தில் இருக்கிறார்..


விடுதலைப் புலிகள் கோரிய இடைக்கால தன்னாட்சி அதிகாரம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கிய பின்னர்தான் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை பிரமர் ரணில் எதிர்கொண்டார் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வேண்டுமானால் மறந்திருக்கலாம் வரலாறு தெரிந்தவர்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் புரிந்து கொள்ளவேண்டும்.

2001ம் ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலை புலிகளோடு பிரதமர் ரணில் அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தில் முஸ்லிம்களை சிறுகுழுக்கள் என குறிப்பிடப்பட்ட ஒப்பந்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக, பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருந்து கையொப்பம் இட்டபோது வெட்கப்படாதவர், கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்ததை துரதஷ்டவசமானது என புலம்புவது வேடிக்கையானதொன்றாகும்.என தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண கொள்கைப் பரப்பு செயலாளர் எம்.சி. அஹமட் புர்க்கான் அவர்கள் தெரிவித்தார்.

சமகால அரசியலில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்றைய தினம் மருதமுனையில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்...

2005ம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் வடகிழக்கு முஸ்லிம்கள் சொந்த நாட்டிற்குள் அகதியாகியிருப்பார்கள். என்ற உண்மையை மறைத்து ஐ.தே.கட்சியின் கொள்கைகளையும், அதன் தலைமைத்துவத்தை முஸ்லிம்கள் மத்தியில் நியாயப்படுத்த அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு பொய் உரைப்பது முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவம் செய்கின்ற காரியம் அல்ல என்று கூறிய அவர், விடுதலை புலிகளுடனான சமாதான ஒப்பந்த காலத்தில் மூதூரில் இடம்பெற்ற படுகொலைகள், வாழைச்சேனையில் நடந்த அசம்பாவிதங்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவை ஏன் இதுவரை குற்றம்சாட்டவில்லை என்பதை அமைச்சர் ஹக்கீம் தெளிவுபடுத்த மறுக்கிறார் எனவும் கேள்வியெழுப்பினார்.

2001ம் ஆண்டைய சமாதான ஒப்பந்த காலத்தில் விடுதலைப் புலிகள் வேண்டிநின்ற அத்தனை அதிகாரங்களையும் தாரைவார்த்துக் கொடுத்தது மாத்திரமின்றி இடைக்கால தன்னாட்சி அதிகாரத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்க ரணில் விக்கிரமசிங்க தயரானார்.

அதற்காக மிஹிந்த மொரகொட, ரவூப்ஹக்கீம், ஜீ.எல் பீரீஸ், ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இரவுபகலாக மந்திர ஆலோசனை நடத்தியதை நாங்கள் மறந்துவிடவில்லை என்பதை அமைச்சர் ஹக்கீம் புரிந்து கொள்ள வேண்டும்.

இடைக்கால தன்னாட்சி அதிகாரம் என்பது என்பது என்ன? தமிழீழ நீதிமன்றம், தமிழீழ காவல்படை, தமிழீழ வைப்பகம், தமிழீழ காணிவாரியம், தமிழ் ஈழ கடல் வாரியம் என விடுதலைப் புலிகள் ரணில் அரசாங்கத்தின் போது கேட்டுக்கொண்டதை அதை வழங்குவதற்கு அமைச்சர் ஹக்கீம் அவர்கள் துணை போனதையும் மறந்துவிட்டார். ஆனால் அதை நாங்கள் மறந்துவிடுவதற்கு இல்லை. 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் அவர்கள் வெற்றியீட்டி இருந்தால் இன்றுவரை விடுதலைப் புலிகளின் ராஜ்யம் வடகிழக்கில் இருந்திருக்கும் என்பதையும் ஏலவே ரணில் அவர்கள் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் புலிகளுக்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் இன்று நாங்கள் கொழும்புக்கு செல்ல தமிழ் ஈழ கடவுச்சீட்டுடனும் தமிழ் ஈழ நாணயத்தாளுடனும் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெற்றியீட்டியதன் விளைவாக புரையோடிக்கிடந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவர காரணமாக அமைந்தது, என்பதை முஸ்லிம்கள் நாங்கள் மறந்துவிடக் கூடாது. இது இவ்வாறு இருக்க யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவருடன் இணைந்து முஸ்லிம்கள் தரப்பில் மஹிந்தவுக்கு பக்கபலமாக செயல்பட்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றோர், போராடிக்கொண்டிருந்த போது ரணிலுடன் சேர்ந்துகொண்டு அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களை காப்பாற்றுவதற்காக மறைமுகமாக செயல்பட்டதை நாங்கள் அறியாமல் இல்லை, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு அதன் பின்னரான காலப்பகுதியில் மஹிந்தவுக்கு நன்றிக்கடன் செலுத்த இருந்த முஸ்லிம்களை திசைதிருப்பி ரணில் விக்கிர சிங்கவை பின் கதவால் ஆட்சிக்கு கொண்டுவர ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் மஹிந்தவுக்கு விரோதமானவர்களாக காட்டிக் கொடுத்துவிட்டு பிற்பட்ட காலப்பகுதியில் அவருடைய அரசாங்கத்தில் நீதியமைச்சராக கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றுக்கொண்டு இருந்த போது அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு வராத வெட்கம் இப்போது வருவது ஆச்சரியமானதொன்றுதான்.

மஹிந்த ஆட்சியின் கடைசி இரண்டு வருடங்கள் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மஹிந்த தட்டிக்கேட்காதததினால் நாங்கள் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தோம் என கூவித்திரியும் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் ஞானசார தேரர் காட்டும் அடாவடித்தனங்களையும், அட்டூளியங்களையும் ஆதரித்து அவருக்கு பூரண சுதந்திரம் வழங்கும் ரணில் அவர்களின் நடவடிக்கைகளை எவ்வாறு பார்க்கிறார் என்பதையும் அவருடைய அரசாங்கத்தில் அமைச்சராக ஏன் தற்போது இருக்கிறார் என்பது பற்றியும் அதற்காக எப்போது வெட்கப்படப் போகிறார் என்பது பற்றியும் தெளிவுபடுத்தவேண்டும்.

காலத்திற்கு காலம் நிறம்மாறும் அரசியல் செய்யும் தலைமையை ஏற்று பயணிக்கும் முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு நிரந்தமான மாற்றுத்தீர்வுக்கான தலைமைத்துவத்தை அடையாளம் கண்டு முஸ்லிம் சமூகத்தின் மீதமுள்ள உரிமைகளையாவது தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தடுமாற்றத்தில் இருக்கிறார்.. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தடுமாற்றத்தில் இருக்கிறார்.. Reviewed by Madawala News on 8/06/2017 01:17:00 PM Rating: 5