Kidny

Kidny

நாம் சிறு பிள்ளைகள் அல்ல: விரும்பியே இஸ்லாத்தை ஏற்றோம்! இளைஞர்கள் வாக்குமூலம்!


கரூர் மாவட்டம் தோகைமலை தெற்குத் தெருவில் ஹோட்டல் நடத்திவரும் மனோகரன் என்பவர், தனது மகன்களான ராமமூர்த்தி மற்றும் மீனாட்சிசுந்தரம் இருவரையும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த, ஏற்கெனவே இஸ்லாமிய மதத்துக்கு மாறிய சுரேஷ் என்கிற அப்துல் ரஹ்மான் மூளைச்சலவை செய்து, மதமாற்றம் செய்துவிட்டதாக கரூர் மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகார் கொடுத்தார். அதில். 'தோகைமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம், நடவடிக்கை இல்லை. எங்க பகுதியில் உள்ள மசூதியில் உள்ள இஸ்லாமியப் பெரியவர்களும், எங்க பசங்களை 'மசூதிக்கு வர வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. அப்படினா, எங்க மகன்களை மதம் மாத்துனது எதுவும் பயங்கரவாத கோஷ்டியா என்பது தெரியவில்லை. நீங்கதான் எனது மகன்களைப் பழையபடி மீட்டுத் தரணும்" என்று கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.


மனோகரன் புகார் கொடுத்த அன்றே, அதே தோகைமலைப் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் தன் பங்குக்கு கலெக்டரிடம், 'அய்யா அந்த சுரேஷ், என் மகன் சரவணக்குமாரையும் இஸ்லாமிய மதத்துக்கு மாத்திட்டார். என் மகனையும் நீங்கதான் மீட்டுத் தரணும்' என்று கண்ணீரும் கம்பலையுமாக புகாரை நீட்டினார். 

இந்நிலையில் இந்தச் செய்தி பரபரப்பாக, மதமாற்றிய காரியதரிசியாக குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் என்கிற அப்துல் ரஹ்மான், நேற்று எட்டு மணி போல், சரவணக்குமார், மீனாட்சிசுந்தரம் மற்றும் ராமமூர்த்தி ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு கரூர் பிரஸ் கிளப் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம்,

"நான் அவர்களை மூளைச்சலவை எல்லாம் செய்து மதமாற்றம் செய்யவில்லை. அவர்கள் மூவரும் தாங்களாக விருப்பப்பட்டுதான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியிருக்கிறார்கள். நானும் இஸ்லாமியம் பிடித்து, தன்னிச்சையாகத்தான் மதம் மாறினேன். அதுபோல்தான், இவர்கள் மூவரும் இஸ்லாமிய மதம் பிடித்துப்போய், மதம் மாறியிருக்கிறார்கள். என்மீது எந்தத் தவறும் இல்லை. நான் ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். தேவையில்லாமல் என்மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். அவர்களிடமே கேளுங்கள், நான் அவர்களை மூளைச்சலவைசெய்து, மதம் மாற்றினேனா என்று" என்பதோடு ஒதுங்கிக்கொண்டார்.

அடுத்து பேசிய சரவணக்குமார், மீனாட்சிசுந்தரம் மற்றும் ராமமூர்த்தி மூவரும்,

 "எங்களை யாரும் கட்டாயப்படுத்தியோ, மூளைச்சலவை செய்தோ மதம் மாற்றவில்லை. அப்படி மாற்ற நாங்கள் ஒண்ணும் சின்னப்பிள்ளைகள் இல்லை. இஸ்லாம் குறித்தும், நபிகள் நாயகம் குறித்தும் பல புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொண்டோம். அதனால், இஸ்லாமிய மதக் கருத்துகள், வழிபாடுகள்மீது விருப்பம் வந்தது. அதன்பிறகே, சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறினோம். யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. நாங்கள் மதம் மாறிய விஷயம் எங்க குடும்பத்துக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். அவர்கள் தொடக்கத்தில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எங்களை மிரட்டி, மறுபடியும் இந்து மதத்துக்கு வரும்படி கேட்டார்கள். நாங்கள் மறுத்துவிட்டோம். உடனே, எங்களது குடும்பத்தினரை மிரட்டி, கட்டாயத்தின் பேரில் நாங்கள் மதம் மாறியதாக பொய்யான புகாரை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்க வைத்துள்ளனர். மேலும், எங்களது நடத்தைகுறித்து தவறாக விமர்சித்துவருகின்றனர். அப்படி விமர்சிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது புகார் அளிக்கப்போறோம்" என்றார்கள்.

(நன்றி: விகடன்)

நாம் சிறு பிள்ளைகள் அல்ல: விரும்பியே இஸ்லாத்தை ஏற்றோம்! இளைஞர்கள் வாக்குமூலம்! நாம் சிறு பிள்ளைகள் அல்ல: விரும்பியே இஸ்லாத்தை ஏற்றோம்! இளைஞர்கள் வாக்குமூலம்! Reviewed by Madawala News on 8/09/2017 07:28:00 PM Rating: 5