Ad Space Available here

முழு கள்ளர்கள் மக்கள் முன் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளார்கள்..


-எம்.வை.அமீர் -

இன்றைய இளைஞர்கள், ரவிகருணாநாயக்கவைப் போன்று ஒன்றும் தெரியாது என்று கூறுவது போன்று இருக்க முடியாது. யாரைக் கள்ளன் என்று யார் யார் எல்லாம் சொன்னார்களோ! அவர்கள்தான் முழுக்கள்ளர்கள் என மக்கள் முன் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதுதான் இறைவனுடைய தீர்மானம் என்று தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

மருதமுனை மனாரியன்’ஸ் Y2K நண்பர்கள் வட்டம் நடாத்திய 22 விளையாட்டுக்கழகங்கள் பங்குகொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி தினமான 2017-08-06 ஆம் திகதியன்று, அமைப்பின் தலைவர் ரி.முபாரிஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அதாவுல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தொடர்ந்து உரையாற்றிய தேசிய காங்கிரஸின் தலைவர், இளைஞர்கள் என்போர் ஒருகாலத்தினுடைய சமுதாயத்தினுடைய முதுகெலும்புகள் என்று கூறலாம் என்றும். இளைஞர்களை வைத்தே அந்தக்காலத்தினுடைய நாகரீகம் அந்த சமுதாயத்தினுடைய சிந்தனை, போக்கு அவர்களுடைய வீரம் எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியும். நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது தலைவர் அஷ்ரப் பெரும் தலைவராக அடையாளம் காணப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலே, ஆயுதம் தூக்குவதிலிருந்து தவிர்ந்து ஜனநாயக வழியில் எங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம் வாருங்கள் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தலைவர் அஷ்ரப் அவர்களோடு இணைந்து இந்த நாட்டில் பெரிய சக்தி ஒன்றினை உருவாக்கிச் சென்றதனை நாங்கள் மறந்துவிட முடியாது. ஆனால் கால ஓட்டம் நமது தலைவர் மரணித்தான் பின்பு இன்று அந்த இயக்கமும் அதற்கு வாக்களித்த மக்களும் இன்றிருக்கின்ற இளைஞர்களும் தடுமாறி மூக்கணான் கையிறில்லாத வண்டிகளைப்போன்று எங்குபோகிறோம் என்ற கொள்கையில்லாதவர்களைப் போன்று சென்று கொண்டிருக்கின்றது.

இன்றைய சூழலில் கட்சிகள் என்ற கொள்கைகளுக்கப்பால் நாம் என்ற விதத்தில் சிந்திக்க வேண்டியுள்ளது. இன்றைய சூழலில் நமக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வோமாகவிருந்தால் போதும். எதிர்காலத்தில் இந்தசமுகத்துக்கு நீங்கள் தலைமை வகிப்பீர்கள் எந்தவிதமானதொரு சந்தேகமுமில்லை என்றும் தெரிவித்தார்.

நாங்கள் வாழுகின்ற இந்தக்காலத்தில் ஒருக்காலமுமில்லாதவாறு மோடியினுடைய அரசாங்கத்தில் இந்தியாவில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்தால் முஸ்லிம் மக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கிறார்கள். மாட்டைப்பற்றி சொன்னால் கொல்கிறார்கள் முஸ்லிம் என்றால் கொல்கிறார்கள். மகாத்மா காந்தி உருவாக்கிய ஜனநாயக இந்தியாவில் இவ்வாறான நிலை நிலவுகிறது. அந்தநாட்டில் முஸ்லிம்கள் வாழமுடியாது தடுமாறுகிறார்கள். அதனுடைய தொடர்ச்சி இலங்கையிலும் இன்று இடம்பெற்றுக்கொண்டிருகின்றது.

கடந்த அரசாங்கத்தின் என்னென்ன பிழைகளையேல்லாம் சொல்லி முஸ்லிம் மக்களை ஏமாற்றி வாக்குகளைப்பெற்று ஆட்சியை கைப்பற்றினார்களோ அந்த அநியாயங்களை 200 மடங்கு அதிகமாக இன்றைய அரசாங்க, புரிந்து வருவதனை நமதுமக்கள் மிகவும் தெளிவாக அறிந்துகொண்டிருக்கிரார்கள். இலங்கையில் என்ன நடக்கிறது. முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறது. முஸ்லிம்கள் எங்கும் உரித்தொடு வாழமுடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். வில்பத்து என்றாலும் எங்களுக்குப் பிரச்சினை, வடமாகாணத்தில் முல்லைத்தீவிலே 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்களது இல்லடங்களுக்குச் செல்வதற்கு முற்படுகின்றபோது தமிழ் பேரினவாதிகள் அதற்கு எதிராக குரல்கொடுக்கிறார்கள்.

வடகிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் அவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலே வாழ்கின்றபோது அவர்களையும் விரட்டியடிக்க முற்படுகிறார்கள் பள்ளிகளுக்கு கல்வீசுகிறார்கள். இவைகளை அடக்கப்போகின்றோம் என்று வந்தவர்கள் இன்று அதைவிடவும் அதிகமாக செய்துகொண்டு வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம். கேவலம் ஒரு ஞானசார ஹாமதுருவை நாய்க்கூண்டிலே அடைப்போம் என்று வந்தவர்கள் ஞானசாரவும் அவரது இயக்கத்தாரும் சேர்ந்து அரசாட்சி செய்துகொண்டிருக்கின்ற ஒரு அவலநிலையை இந்த நாட்டிலே நாங்கள் பார்க்கிறோம்.


மத்திய மலைநாட்டிலே வடகிழக்கு கலாசார நிகழ்வின்போது இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் எல்லோரையும் கூட்டிவைத்துவிட்டு அங்கு வந்தவர்களில் சிலர் இஸ்லாத்தைப் பற்றி மிகவும் மோசமாக பேசியுள்ளார்கள். அதன்போது சிலர் வெளியேறி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நாம் தொட்டுசொல்வதற்கான காரணம் உங்களுக்கு இன்னும் படிப்பதற்கு நிறைய இருக்கிறது. நீங்கள் வருங்காலத்தினுடைய தலைவர்கள். நாங்களும் ஒரு தலைவர்களாக இருக்கிறோம் இருந்திருக்கிறோம் வழிநடத்தியிருக்கிறோம். என்றால் அதற்கு உங்களைப்போன்ற இந்தக்காலத்தில் வாழ்கின்ற நீங்கள் என்ன பயிற்சிகளைப் பெறுகின்றீர்களோ அதேபோன்று நாங்கள் இளமையில் பெற்ற பயிற்சிகள் தான் காரணம்.


இன்றைக்கு முஸ்லிம் சமூகத்துக்குத் தேவையானது கட்சிகளுமல்ல பெரும் அரசியல் பொறுப்புகளுமல்ல. இன்று முஸ்லிம் சமூகத்துக்குத் தேவைப்படுவது அல்லாஹ் ரசூலுக்குப் பயந்து சமூகத்தில் கருணை காட்டி அன்பு காட்டக்கூடிய ஒரு அமீரே வேண்டும் என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. அந்த அமீர் ஊருக்கு ஒருவர் வேண்டும் ராஜா தேவையில்லை.

இஸ்லாமிய வழிமுறையிலே அரசாட்சி செய்யவேண்டும் என்று ரசூலேகரீம் அவர்கள் சகாபாக்களுக்கு சொன்னார்களோ அவ்வாறான அமீர்களை நாம் இனங்காணவேண்டும். ஒவ்வொரு காலத்திலும் தேர்தல் வருகின்றபொழுது களியாட்டங்களுக்கு, திருவிழாக்களுக்கு கடைகளைத் திறப்பதைப்போன்று மருதமுனையிலும் பலகடைகள் முளைக்கும். முஸ்லிம் காங்கிரஸ் கடை, தேசிய காங்கிரஸ் கடை, மக்கள் காங்கிரஸ் கடை, ஐக்கியதேசியக்கட்சிக்கடை. சிலைவைப்பதற்கும் வாக்குப்போடுவதற்கும் நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். தயாகமகே கடை எஸ்.எல்.எப்.பி.கடை என எல்லாக்கடைகளும் வைத்திருக்கிறோம். தனித்தனியாகவும் வைத்திருக்கிறோம். ஊர்மக்கள் கூட்டாகவும் வைத்திருக்கிறோம் ஆனால் தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப்பின்பு எந்த கடைகளாலும் நாங்கள் உயர்ச்சிபெறவில்லை.

எங்களுடைய மாவட்டம் கிழக்கு மாகாணம் முஸ்லிம்கள் பலமாக வாழுகின்ற மாகாணம் என்று ஒரு புறமிருக்க, அம்பாறை மாவட்டம் அதனுடைய தலை. இங்கு எங்களால் வாழமுடியாத அளவுக்கு நிலைமைகள் மாறியுள்ளது. என்ன காரணம் என என்னுடைய இளைஞர்களுக்கு நான் சொல்ல வேண்டும்.

இளைஞர்களே! வாக்குப்பலம் என்பது என்ன? வாக்குப்பலத்தைப் பற்றி நமது சமூகத்தில் முதன்முதலாக அதனுடைய மகிமையை எடுத்துச்சொன்னவர் தலைவர் அஷ்ரப் அவர்கள். எங்களுக்கு வாக்குப்பலத்தைத் தெரியாது. மசூர் மௌலானா என்கிற ஆளுமை மருதமுனையில் இருந்து எல்லோரும் யுஎன்பி க்குப் போடுங்கள் என்றால் அந்த ஆளுமையின் நம்பிக்கையில் வாக்குப்போட்டவர்கள் நாங்கள். இவ்வாறு பழகிய எங்களுக்கு வாக்கினுடைய பலத்தைத் தெரியாது.

தலைவர் அஷ்ரப் அவர்கள்தான் வந்து சொன்னார்கள் உங்களுக்கு நாங்கள் ஒன்றுமே தரமாட்டோம் விளையாட்டு மைதானம் தரமாட்டோம் குடும்ப அட்டை தரமாட்டோம் மாவு தரமாட்டோம் 4000 ரூபாய் தரமாட்டோம் ஆனால் உங்களுக்கு விடுதலை பெற்றுத்தருவோம். வாக்கு என்பது பெறுமதியானது. அதனை சரியாகப்பாவிக்கவேண்டும் அரசியல் இல்லாமல் விடுதலை இல்லை என்று கூறினார். அப்போதுதான் வாக்கினுடைய பலத்தை அறிந்து வாக்கைப் போட்டார்கள்.

ஐந்து சதமேனும் அவர்களுக்குக்கொடுக்கவில்லை. எல்லாவற்றையும் நாங்களே செய்பவர்களாக வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்பவர்களாக அந்த வாழ்க்கை இருந்தது. அனால் தலைவர் அஷ்ரப் அவர்களுடைய இழப்பின்பின்பு இன்று இந்த நாட்டினுடைய ஐக்கிய தேசியக்கட்சியினுடைய ரணில் விக்கிரமசிங்க எந்தத் தலைவரோடு அஷ்ரப் கூட்டுச்சேர வேண்டாம் என்று சொன்னாரோ அந்தத் தலைமை வெளிநாடுகளில் பணங்களைப் பெற்றுக்கொண்டு உள்ளூர் தனக்கு வாசியான அரசியல் கட்சிகளுக்கும் பணத்தைக்கொடுத்து பணத்துக்காக நமது மக்களை வாக்குப்போடும் ஒரு ஏளனமான துர்ப்பாக்கியமான நிலைக்கு மாற்றியுள்ளார்கள்

வாக்கு என்று போட்டுவிட்டால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அந்தத் தலைமையை தீர்மானிக்கப்போவது அந்த வாக்குத்தான் இளைஞர்கள் இன்று விளங்கியிருக்கிறார்கள் முகநூல்கள் ஊடாக படித்தவர்கள் விளங்கியிருக்கிறார்கள் அவர்களுடைய சொந்த அறிவு அல்லது ஆய்வு தேடல் அல்லது படிப்பினைகளாக அவர்கள் கண்டிருக்கிறார்கள் ஆனால் வீட்டுக்குள்ளேயே இருக்கின்ற எந்த தாய்மாரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள்.


கல்முனையில் இப்ராகிம் என்கிற அரசியல் ஆய்வாளர் முகநூல்கள் ஊடாக பேசுகிறார் இந்த முஸ்லிம் காங்கிரஸுடைய பாட்டைப்போட்டு அதைக்கேட்டுத்தான் வாக்குப் போடுவது என்று எண்ணுவீர்களானால் உங்களுடைய தலைகளில் நீங்களே மண்ணை அள்ளிப்போடுவது போன்றாகிவிடும் என்று கூறுகிறார். இவர் என்ன அடிப்படையில் கூறுகிறார் என எனக்குத்தெரியாது. இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பது இப்போது புலனாகிறது.

இப்போதைய இளைஞர்கள் பணம்பெற்றுக்கொண்டு வாக்களித்தார்கள் என்ற பெயர் இருக்கக்கூடாது. இது ஒரு தர்மம் அதற்கு உதாரணமாக தயாகமகேயைச் சொல்ல முடியும். 20000 முஸ்லிம்கள் இந்த மாவட்டத்திலே ஐக்கியதேசியக்கட்சியைப் புரியாமலும் ரணில் விக்கிரமசிங்கவைப் புரியாமலும் தயாகமகேவைப் புரியாமலும் வாக்களித்தார்கள்.


அம்பாறையில் இருந்து ஹெலிகாப்டரில் வருவதைப் பார்ப்பதற்கும் அதற்குக்குடே வரும் பார்சலுக்கும் வாக்களித்துள்ளோம் அவற்றைச் செய்தவர்கள் நாங்கள்தான். கடைசியில் இறக்காமத்தில் சிலை வைக்கின்றபோது சொன்னார் மருதமுனையில் இருந்து பொத்துவில் வரைக்கும் 12000 ஏக்கர் காணிகள் திகவாப்பிக்கு உரியது என்று. அதேபோன்றுதான் பணத்துக்கு அடிமைப்பட்டு நாங்கள் வாக்குகளைப் போடுகின்றபோது றவூப் ஹக்கீமிடம் கூட உங்களது பிரச்சினைகளைப் பேச முடியாது. நான் பணம் கொண்டுவந்து செலவழித்துத்தான் வாக்கேடுத்தேன் தேர்தல் என்பது நேரமும் பணமும். குறிப்பிட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட பணத்தைச் செலவழித்து கிழக்குமாகாணத்தின் வாக்குகளை எடுத்திருக்கிறேன் என்ற, பேச்சைக் கேட்கின்ற உருமை இழந்த இளைஞர்களாக இருக்கக்கூடாது.


மார்புதட்டி நாங்கள்தான் வாக்களித்தோம் ஏன் எங்களுக்கு செய்யவில்லை என கேள்வி கேட்கக்கூடியவர்களாக மாறவேண்டும்.

இன்று இந்த நாட்டில் என்ன நடக்கின்றது பொதுபலசென என்ற இயக்கம் ஆர்எஸ்எஸ் என்ற இயக்கம் என்பன இரண்டுமே ஒன்றுசேர்ந்து ஒரே வேலைத்திட்டத்தின்கீழ் எங்களுக்கெதிராக பணியாற்றிக்கொண்டிருகின்றார்கள். இந்தக்காலத்தில் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தற்போது முஸ்லிம் தலைவர்கள் என்போர் தங்களது வாய்களும் கைகளும் கட்டப்பட்டநிலையில் இருக்கிறார்கள். ஆஸாத் சாலியாக இருந்தாலும் கடந்த தேர்தலில் ஒன்றைப் பேசினார்கள் இந்தத் தேர்தலில் வேறுஒன்றைப் பேசினார்கள் எல்லாவற்றையும் உருவாக்கிவிட்டு ஞானசாரவை பொலிசார் பிடிக்கவில்லை என வெட்கமில்லாமல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இதனூடாக அவர்களுடைய இயலாமையைக் காட்டிக்கொண்டுடிருக்கிறார்கள்

தேசிய காங்கிரஸினுடைய மீள்எழுச்சி மருதமுனையில் இருந்து ஆராம்பித்துள்ளது ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் எங்களுடன் கைகோர்த்து வருகிறார்கள் அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறும். இந்தமண்ணில் பிறந்து இங்குள்ள புழுதிய சுவாசித்து வாழ்பவர்கள் நாங்கள் எங்களது பிரச்சனைகளை நாங்களே ஆராய்ந்து தீர்க்க முற்படவேண்டும். கடந்தகாலங்களில் பல விடயங்களுக்கு தீர்வுகளைக் கண்டுள்ளோம் இனியும் எங்களை நாங்களே வழிநடத்த முன்வருவோம் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பதிவாளரும் மருதமுனை கல்வி அபிவிருத்தி மையத்தின் தலைவருமான எம்.எப்.ஹிபத்துள் கரீம், ஆசிய பௌண்டேசனின் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளரும் மருதமுனை கல்வி அபிவிருத்தி மையத்தின் செயற்பாட்டாளருமான எம்.ஐ.எம்.வலீத் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதிப்பதிவாளர் எம்.எஸ்.மர்சூக் மற்றும் தேசிய காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளர் ஏ.எம்.ஏ.சமட் செயலாளர் வி.எம்.சிபான் உள்ளிட்டவர்களும் மருதமுனை மனாரியன்’ஸ் Y2K நண்பர்கள் வட்டத்தின் உறுப்பினர்கள் விளையாட்டு வீரர்கள் பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இறுதிப்போட்டியில் அல்மனார் பாடசாலையில் 2007 ஆண்டு கல்விப்பொதுத் தராதரம் கற்றவர்களைக் கொண்ட அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

முழு கள்ளர்கள் மக்கள் முன் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளார்கள்.. முழு கள்ளர்கள் மக்கள் முன் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளார்கள்.. Reviewed by Madawala News on 8/07/2017 11:33:00 AM Rating: 5