Kidny

Kidny

பௌத்த மதத் தலைவர்கள் சட்டத்தை கையில் எடுத்து சமூகங்களிடையே இன பேதங்களை ஏற்படுத்த திட்டமிட்ட சதி!


எம்.ஜே.எம்.சஜீத்

கிழக்கு மாகாணத்தில் பௌத்த மதத் தலைவர்கள் சட்டத்தை கையில் எடுத்து தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களிடையே இன பேதங்களை ஏற்படுத்த திட்டமிட்ட சதிகள், பின்னனியில் சில இனவாத அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்கள் விழிப்பாக செயற்படவேண்டும்.

கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை

 கடந்த 30 வருட கால கொடூர யுத்தத்தினால் கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் மூன்று சமூகங்கள் மத்தியிலும் உள்ளன. இவ்வாரான பிரச்சினைகள் பேச்சு வார்த்தைகள் ஊடாக தீர்வுகளைக் காண முயற்சிக்காமல் இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்தவரும் சில பௌத்த மதத் தலைவர்களை சட்டத்தை கையில் எடுக்க வைத்து கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் இன பேதங்களை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டங்கள் திட்டமிடப்பட்டு இந்நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் இனவாதத்தின் ஊடாக தங்களின் அரசியல் இருப்பிடங்களை உறுதிப்படுத்த முயற்சிக்கும் சிங்கள , தமிழ் அரசியல் தலைமைகளும் இணைந்து செயல்படுகின்றனர். இந்த விடயத்தில் கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் விழிப்பாக செயற்படவேண்டும் என அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நடைபெற்ற தேசிய காங்கிரஸின் தெளிவான பாதை என்ற பொதுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தினார்.

கிழக்கு எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தொடர்ந்தும் உரையாற்றுகையில்...

கிழக்கு மாகாணத்தில் மூன்று சமூகங்களினிடையே உள்ள பிரச்சினைகளை அரசியல் தலைமைகள் ஒன்றாக அமர்ந்து தீர்வுகளைக் காணாமல் இனவாதத்தினை பரப்பும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

வட்டமடு – மேச்சல்தரை, விவசாயக் காணிகள் தொடர்பான பிரச்சினைகளில் தமிழ் - முஸ்லிம் விவசாயிகள், கால் நடை உற்பத்தியாளர்கள் உள்ளனர். இரண்டு சமூகங்களின் அரசியல் தலைமைகள் இப்பிரச்சினைக்கு தீர்வுகளைக் காணாமல் வெளிமாகாணங்களில் இருந்து இனவாத தீயை பரப்பும் பௌத்த மதத்தலைவர் ஒருவரை அம்பாறை மாவட்டத்திற்கு கொண்டு வந்து தமிழ் அரசியல் தலைமைகள் இப்பிரச்சினையை வேறு நிலைக்கு மாற்றியுளளனர்.


இறக்காம மாணிக்கமடுவில் முஸ்லிம்களின் பூர்வீகமான காணிகளை பறித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு இனவாத சில அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும் முயற்சி செய்த போது தமிழ் தலைமைகள் வேடிக்கை பார்த்து மறைமுக உதவிகளையும் இந்த விடயத்தில் வழங்கியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பகிரங்கமாகவே தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தினை உருவாக்கி அரச அதிகாரிகளை அவமானப்படுத்திய பௌத்த மதத் தலைவர் மட்டக்களப்பு மாவட்ட மொறாவோட காணிப்பிரச்சினையில் தலையிட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். இந்த பின்னனியிலிருந்து தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம், தமிழ் உறவுகளை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.


வட மாகாணத்தில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு தமிழ் அரசியல் தலைமைகள் தடையாக இருந்து வருகின்றமை குறித்து வட மாகாண முஸ்லிம் மக்கள் தங்களின் வேதனைகளை அண்மையில் வட மாகாணத்திற்கு நாங்கள் விஜயம் செய்த போது கண்ணீருடனும், கவலையுடனும் தெரிவித்தனர். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை தடை செய்து வருகின்றனர்.


1990ம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த 1350 முஸ்லிம் குடும்பங்கள் புத்தளம், கொழும்பு, அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் கடந்த 30 வருட காலமாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.

சென்ற 2010ம் ஆண்டில் மீளக் குடியமர்த்துவதற்காக 5550 குடும்பங்கள் விண்ணப்பித்தது. இவர்களின் மீள்குடியேற்றத்திற்கான காணிகளை வழங்குவதற்காக 03 தடவைகள் காணிக் கச்சேரி நடைபெற்றுள்ளது. 970 முஸ்லிம் குடும்பங்களை மாத்திரம் மீள்குடியேற்றுவதற்கான காணியினை 'கூழா முறிப்பு' என்ற இடத்தில் அடையாளம் காணப்பட்டு முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போது வடக்கு முதலமைச்சரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயம் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட போது வட மாகாண முதலமைச்சர் கூட்டத்திலிருந்து வெளியேறி உள்ளார். இதுமட்டுமின்றி இதனை இனவாதச் செயற்பாடாக காட்டுவதற்கும் முயற்சி செய்கின்றனர்.


நாம் இலங்கையர்கள் தமிழ், முஸ்லிம்கள் சகோதரர்களாக வாழ வேண்டும். வட கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறிக் கொள்ளும் தமிழ் அரசியல் தலைமைகள் வட கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மாற்றான் தாய் மனப்பாங்கில் செயற்பட்டுக் கொண்டிருப்பதனை முஸ்லிம் சமூகம் தற்போது அடையாளம் கண்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சி நடைபெறுகின்றன எனக் கூறிக் கொண்டு கடந்த 02 வருட காலமாக இனவாதச் செயற்பாடுகளுக்கு அத்திவாரங்கள் இடும் நடவடிக்கைகளும், கட்சி ரீதியிலான அரசியல் செயற்பாடுகளுமே முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதன் யதார்த்தங்களை கிழக்கு மாகாண மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று பகிரங்கமாகவே கிழக்கு மாhண சபையில் இனம் சார்பான நடவடிக்கைகளும், கட்சி ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் முடிந்தால் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்னர். கிழக்கு மாகாண சபையினால் முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் பெரிதாக எதுவும் நடைபெறவில்லை என முஸ்லிம்களும், சிங்களவர்களும் தெரிவித்து வருகின்றனர்.


கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி முழு கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களுக்கும் பெரும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு மூவின சமூகங்களுக்கிடையில் இன உறவினை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வாய்ப் பேச்சளவில் கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சி நடைபெறுகின்றது எனக் கூறி இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்று வருவதனை கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் அறிக்கைகளிலிருந்து அறிய முடிகின்றது. அடுத்த மாதம் கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக் கலைப்பு தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட இருக்கும் இந் நிலையில் ஏதோ கிழக்கு மாகாண சபையால் பெரும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது போன்ற பாசாங்கினை சிலர் மேற்கொண்டு வருவது குறித்து நாம் கவலை அடைய வேண்டியுள்ளது.

ஒவ்வொரு தேர்தல்கள் வரும் போதும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களை சூடேற்றி வாக்குகளை பெரும் நோக்குடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் கல்முனையை மையமாகக் கொண்ட கரையோர மாவட்ட கோரிக்கையினை முன் வைக்கின்றனர்.

கல்முனையை தலைமையாகக் கொண்ட ஒரு நிருவாக மாவட்டம் உருவாக்கின்ற விடயத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் அதிகாரத்தை பாவித்து நமது நாட்டின் ஜனாதிபதிக்கும் , அரசாங்கத்திற்கும் உச்ச அதிகாரங்களை கொடுத்து கரையோர மாவட்ட கச்சேரியை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முழு வட கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் இனப் பிரச்சினைக்கு தீர்வாக கரையோர மாவட்ட கோரிக்கையை கோரி முழு முஸ்லிம் சமூகத்தையும் ஏமாற்றி வருவது குறித்து முஸ்லிம் சமூகம் கவலை அடைந்து வருகின்றது.

 

சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கோரிக்கையான தனியான நகர சபையினை வழங்குவதற்கு தேசிய காங்கிரஸினுடைய தலைவர் அல்ஹாஜ்.ஏ.எல்.எம்.அதாஉல்லா உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சராக இருந்த போது கல்முனை தொகுதியில் எந்தவொரு இனத்திற்கும், பிரதேசத்திற்கும் எதுவித அநியாயங்களும் இழைக்கப்படாத வகையில் கல்முனைக்கான மாநகர சபை, சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை, மருதமுனைக்கான நகர சபை, தமிழ் பிரதேசத்திற்கான பிரதேச சபையை உருவாக்குவதற்காக அம்மக்களுடன் நீண்ட காலம் உரையாடி கருத்துக்களைப் பெற்று அதை வர்த்தமாணியில் பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட இறுதி நேரத்தில் இம் முயற்சிகளுக்கு தடை விதித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் தற்போது சாய்ந்தமருது நகர சபை அமைப்பதற்காக நடவடிக்கைகளை அவர்களே மேற்கொள்வதாக கூறிவருகின்ற நிலைமைய பார்க்கின்ற போது சுயநல அரசியலுக்காக ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மாறுபட்ட கருத்துக்களை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்து வகின்றது எனத் தெரிவித்தார்.

பௌத்த மதத் தலைவர்கள் சட்டத்தை கையில் எடுத்து சமூகங்களிடையே இன பேதங்களை ஏற்படுத்த திட்டமிட்ட சதி! பௌத்த மதத் தலைவர்கள் சட்டத்தை கையில் எடுத்து சமூகங்களிடையே இன பேதங்களை ஏற்படுத்த திட்டமிட்ட சதி! Reviewed by Madawala News on 8/20/2017 08:57:00 PM Rating: 5