Kidny

Kidny

ஊடகங்களின் இரு முகங்கள்..


எம்.எம்.ஏ.ஸமட்

ஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவுக்கு எவ்வளவு சங்கமித்திருக்கிறது, அவசியமாகியிருக்கிறது என்பதை சமகாலத்தில் எவரும் அறியாமலில்லை. அந்தளவுக்கு ஊடகங்கள் மனித வாழ்வியலில் இரண்டரக் கலந்ததாகக் காணப்படுகிறது. மனித வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் ஊடகங்களின் செல்வாக்கு அதி முக்கியத்துவம்மிக்கதாகக் காணப்படுவதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

 

அதேபோல,; ஒரு சில ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் செயற்பாடுகள் ஊடகத்தர்மத்தையும், ஊடக ஒழுக்கக்கோவையும் மாசுபடுத்துவதாகவும், சமூக ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்த துணைபோகின்றவையாகவும் நோக்கப்படுவதோடு, தங்களுக்கு விரும்பிய ஆட்சியை நிலைநாட்டுவதற்கும், அதற்காக செய்திகளையும், விபரணங்களையும் வடிவமைத்து மக்கள் மயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் அறியாமலிருக்க முடியாது. ஏனெனில், சில ஊடகங்களின் செயற்பாடுகள் ஒருபுறம் நேர்மறை முகத்தைக் கொண்டதாகவும் மறுபுறம் எதிர்மறை முகத்தைக் கொண்டதாகவும் அமையப் பெற்றிப்பதை அவதானிக்க முடிகிறது.

 

சமகால அரசியல் அரங்கின் பேசுபொருளான பிணை முறிவு தொடர்பான குற்றச்சாட்டு உட்பட அரசினதும், எதிரணியினரதும் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் ஒவ்வொரு ஊடகமும் எத்தகைய தளத்தில் இருந்து கொண்டு தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்ற ஊடகங்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன என்பதை வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது.

 

இருப்பினும், உலகளாவிய ரீதியிலும், உள்ளுரிலும்; இடம்பெறுகின்ற நிகழ்வுகளை சமூக வர்க்கத்திலுள்ள சாதாரண பாமரன் வரை தெளிவானதொரு பார்வையோடு கொண்டு செல்லும் ஒரு உன்னதமான பணியினைச் செய்வதிலும், இக்கட்டான கால கட்டங்களில் மக்களை பாதுகாக்கும் பணியிலும், விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளிலும் தங்களை அர்ப்பணம் செய்து, சமூகப் பணியை முன்னெடுக்கின்ற ஊடங்கங்களையும், ஊடகவியலாளர்களையும்; பாராட்டாமலும் இருக்க முடியாது. இவ்விடயத்தில் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் நேர்மறை முகம் வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.

ஊடகங்களும் சமூகப்பணியும்


தனிநபராலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலோ சமூக நலன்கருதியும,; மேம்பாடு கருதியும் செய்யப்படும் சேவையானது சமூகப்பணியென வரையறை செய்யப்படுகிறது. தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்ற ஊடகங்களுக்கான தனித்துமான செயற்பாட்டுடன் இயங்குகின்ற ஊடகங்கள் மேற்படி வரையறைக்குள் நின்று செயற்படுவது மாத்திரமின்றி, சமூகப் பணியிலும் தங்களை அர்ப்பணித்துச் செயற்படுகின்றமை உண்மையில் வரவேற்றகத்தக்கது.


நாட்டில் காலத்திற்குக்காலம் நிகழும் அனர்த்தங்களின்போது மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளிலும், பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் செயற்பாடுகளிலும் ஊடக நிறுவனங்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன. இவை அவற்றின் நேர்முகச் செயற்பாடுகளாகும்.

2004ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திலும் அதன் பின்னரும் இந்நாட்டில் நிகழ்ந்த இயற்கை அனர்த்தங்களின்போதும் மக்களை அவற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும், அனர்த்த கால நிலைமைகள் தொடர்பில் மக்களை அறிவூட்டும் பொருட்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், உதவுவதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும,; பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் என பல்வேறு கோணங்களில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் செயற்பட்டதையும் செயற்பட்டுக் கொண்டிருப்பதையும் சமூகப் பணிக்கான கண்ணோட்டத்தில் காண முடிகிறது.

தற்போது இலங்கையின் சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ள டெங்கு நுளம்பு பரவுவதைக் கட்டுப்படுத்துவதிலும், அவை தொடர்பில் மக்களை அறிவூட்டுவதிலும் அனைத்து ஊடகங்களும் தங்களுக்குரிய பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.


கடந்த வாரத்தில் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது அரச மற்றும் தனியார் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் முழுப்பங்களிப்பையும் புரிந்திருக்கின்றமை குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்கள் ஜனரஞ்சக நிகழ்ச்சிகளை ஒளி, ஒலிபரப்புச் செய்து தங்கள்; அலைவரிசைகளின் பக்கம் நேயர்களை கட்டிவைத்திருப்பதற்கும,; வர்த்தக நோக்கிலான ஒலி, ஒளிபரப்புகளுக்கும் அப்பால் சமூகப் பணிகளிலும் தங்களை அர்ப்பணிக்கின்றன என்பதைப் புடம்போட்டிருக்கின்றன. ஊடகங்களின் இந்நடவடிக்கைககள் டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளுக்கு புத்துயிர்ப்பு அளித்திருக்கிறது.


ஏனெனில், கடந்த எட்டு மாதங்களில் நாடளாவிய ரீதியில் 125,387 பேர் டெங்கு வைரஸ் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை அiடாயளம் காணப்பட்டுள்ளதுடன் 280க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் டெங்கு நுளம்புகள் அதிகம் விருத்தியடையும் பிரதேசங்கள் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைககளின் பயனாக டெங்கு குடம்பிகளின் விருத்தி குறைந்துள்ளதாக சுகாதாரத்துறையினரின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு ஊடகங்களின் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் கள நடவடிக்கைகளும் துணைபோயிருக்கிறது என்பது நிதர்சனமாகும்.


இவற்றோடு, ஊடகங்களின் செயற்பாடுகள் மக்களின் நலன்களை மேம்படுத்துவதாகவும், சமூக முறைமைகள் மற்றும் மனித நடத்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், சமூகங்களுக்கிடையில் ஏற்படும் சிக்கல்களைக் களைந்து சிறந்த உறவு முறையை ஏற்படுத்துவதாகவும், சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதாகவும் அமைவதும் காலத்தின் தேவையாகவுள்ளது. இவற்றையும் தங்களது சமூகப் பணிச் செயற்பாடுகளில் உள்ளடக்க வேண்டிதொரு கடப்பாடு ஊடகங்கள் மீது உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுவது காலத்தின் பொறுத்தமாகும்.


சமகாலமும் ஊடகங்களின் பொறுப்பும்


சிந்தனைத்தளத்தை ஊடுறுவுதல்;, பெரும் இலாபம் ஈட்டுவதற்கான வழிகளை முன்நோக்கி நகர்த்துதல்;, அதிகளவிலான வாசகர்களையும் நேயர்களையும் தங்கள் ஊடகத்தின் பக்கம் கவர்ந்திழுத்தல்;, அவற்றிற்கு முன்னுரிமை வழங்குதல் என்ற சித்தாத்தங்களிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தி, இளைஞர் யுவதிகளின் இளைமைக்காலப் பண்புகளை ஆரோக்கியமாக்கவும், மக்களின் வாழ்வியலில் சிறந்த மாற்றத்தினை உருவாக்கவும், சமூக மட்டத்தில் புரையோடிப்போயிருக்கும் சமூகச் சீரழிவுச் செயற்பாடுகளை சமூக மட்டத்திலிருந்து ஒழிக்கவும், மனப்பாங்குகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நேர்மயச் செயற்பாடுகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை வழங்குவதும் ஊடகங்களின் சமகாலப் பொறுப்புமிக்க பணியாகவுள்ளன.


சமூக வலைத்தளங்கள் உட்பட இலத்திரனியல் ஊடகங்களினூடாகக் காட்சிப்படுத்தப்படும் நாடகங்களும், திரைப்படங்களும் இன்னும் இதர நிகழ்ச்சிகளும் இளைய தலைமுறையினர் மத்தியில் பல்வேறு வடிவங்களில் எதிர்மறைச் தாக்கத்தை செலுத்துகின்றன. நாளாந்தம் இடம்பெறும் தற்கொலைகள், வால்வெட்டுக் கலாசாரங்கள், சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள், போதைவஸ்துப் பாவனை, கடத்தல், கொலை, கொள்ளை நடவடிக்கைகள் என தொடரும் சமூக விரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தனிக்கை செய்யப்படாத நாடகங்களினதும், திரைப்படங்களினதும் கதாபாத்திரங்களின் காட்சிகள் மேற்படி நாசகார நடவடிக்கைகளுக்கு வலுவூட்டுவதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.


இளைய தலைமுறையினரின் வழிதவறிய செயற்பாடுகளிலிருந்து அவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஊடகங்களினால் முடியும் என்பதிலும் சந்கேமில்லை. அடும்பங்கரை முதல் உடல் அலங்காரம் வரை என மனித வாழ்வியலின் அத்தனை கூறுகளிலும் ஊடகங்களின் தாக்கம் வியாபித்திருக்கிறது. அதனால், ஆரோக்கியமான சமூக மாற்றத்திற்கு ஊடகங்களின் வகிபாகம் இன்றியமையாதது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள யதார்த்தமாகும்.


மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி கொண்ட ஊடகங்களின் பணிகள் சமூகத்திலும் நாட்டிலும் நல்ல மாற்றங்களை உருவாக்க வேண்டும். அதற்காக ஊடக நிகழ்ச்சிக் கட்டமைப்புக்கள் மாற்றியமைக்கப்படுவது அவசியமாகவுள்ளது. இவ்வாறு நாட்டிலும்; சமூகங்கள் மத்தியிலும் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட நேர்மய இலக்கோடு ஊடக நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முனையும்போதுதான்; ஊடகத்துறையின் சமகால சமூகப் பணி தொடர்பான நடவடிக்கைகள் சமூக நலன்கொண்டவை என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவதோடு மாத்திரமின்றி, ஊடகங்களின் நேர்மயச் செயற்பாடுகளை மக்கள் புரிந்துகொள்ளவும் வழிவகுக்கும.;


ஊடகங்களின் நேர், எதிர் முகங்கள்

இன்றைய சூழலில், ஊடகங்களின் தாக்கம் அதன் செல்வாக்கு இல்லாத வாழ்க்கையை சிந்தித்துப் பார்க்க முடியாது. மக்களுக்கு நிகழ்வுகளை அறிவிப்பதற்காக அச்சு ஊடகங்கள் வடிவில் பிரபல்யமான ஊடகத்துறை, அதிகரித்த விஞ்ஞான தகவல் தொழில் நுட்ப புரட்சியின் காரணமாக இன்று பல்வேறு வடிவங்களில் பரிமாண வளர்ச்சியைப்;; பெற்றுள்ளது.

 

இருந்த இடத்தில் இருந்து கொண்டு உலகின் மூலைமுடுங்கெங்கும் நடந்தேறும் நிகழ்வுகளை அறியக் கூடிய அளவிற்கும், நேருக்கு நேராய் இருந்து வீடியோ செட் மூலம் உரையாடவும் என வாழ்வியலின் பல்வேறு விடயங்களுக்கு இன்று ஊடகங்கள் ஒரு மூலப் பொருளாக, அடிப்படைத் தேவைகளின் அவசியக் கருவியாக மாறிவிட்டது.

ஜனநாயகத்தின் முதுகெலுப்பாகவுள்ள ஊடகங்களின் செயற்பாடுகள் தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்ற பொதுவான மூன்று முக்கிய பணிக்கூறுகளைக் கொண்டுள்ளன. கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்கின்ற பணிதான் ஒரு ஊடகத்தின் முதல் பணியாகும். கருத்து என்பது செய்தி, கட்டுரை, விவாவதம், விமர்சனம், சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, பாடல் என்று அச்சு ஊடகங்கள் வாயிலாக பல்வேறு வடிவங்களில் மக்களிடம் கருத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.

அவ்வாறே ஒலி, ஒளியைக் கொண்ட இலத்திரனியியல் ஊடகங்களில் செய்தி, பாடல், நாடகம், விவரணச் சித்திரம், குறும்படம், ஆவணப்படம் சினிமாக, விளம்பர அறிவித்தல் என்று இந்த வடிவம் இன்னும் விரிவுபெறுகிறது. இணையத்தள உலகில் சமூக வலைத்தளங்களினூடாகவும் பல்வேறு வடிவில் கருத்துக்கள் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்றபோது முதலில் தகவல் தெரிவித்தல் என்ற பணி அ;ங்கு நடைபெறுகிறது. இப்பணி நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைபயக்கத்தக்தாக அமைவது அவசியமாகும். இவ்வாறான ஊடகங்களின் அநுகூலமான ஒரு முகம் நேர்மறைத்தன்மை கொண்டதாகவுள்ள நிலையில் அதன் மறுமுகம் எதிர்மறைத்தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது

ஊடகங்களின் எதிர்மறை முகமானது, நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லக் கூடியதாகவும், சமூக ஒற்றுமையை சீரழிக்கக் கூடியதாகவும், தனிநபர்களின் கௌரவத்தைப் பாதிக்கத்தக்கதாகவும் அமைந்து விடுகின்றன. தங்களது ஊடக நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை, ஊடக நிகழ்ச்சிகளினூடாக மறைமுகமாக மானபங்கப்படுத்துவது, அவர்களின் ஒருசில தவறுகளை மக்கள் மத்தியில் பாரிய குற்றமாக வெளிச்சம்போட்டுக் காட்டுவது, தாங்கள் விரும்பாத அல்லது நேசிக்காத மதத்தையோ அல்லது தனிநபர்களையோ எதிர்கின்றவர்களின் நடவடிக்கைகளுக்கும், மதநிந்தனைகைளுக்கும், வெறுப்புப் பேச்சுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் முன்னுரிமை வழங்கி அவற்றை தாம்சார்ந்த சமூகத்தின் மத்தியில் பரப்புரை செய்து அவை தொடர்பான எதிர்மறை எண்ணங்களை விருத்தியடையச் செய்யும் வகையில் தங்களது ஒலி, ஒளிபரப்பு மற்றும் அச்சுப்பதிவுகளை மேற்கொள்வது என்ற பல்வேறு எதிர்மறை செயற்பாட்டு முகத்துடன் ஒரு சில ஊடங்கள் தங்களது ஊடக நவடிக்கைகளை முன்னெடுத்து மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருக்கின்றன.

இவ்வாறு ஊடங்களின் இருமுகங்களுக்கு மத்தியில் அவற்றின் சமூகப்பணிகள், மக்கள் நலன்சார் நடவடிக்கைகள,; இளைஞர், யுவதிகளுக்கிடையிலான மனப்பாங்கு மாற்றங்களுக்கான நிகழ்ச்சிகள் என்பன ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பை உருவாக்;குவதோடு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரையும் உருவாக்கும்.

இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும். சமூக ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒரே தளத்திலிருந்து முன்னெடுக்கும் சக்தி மக்கள் மத்தியில் வியாபித்துள்ள ஊடகங்களுக்கு உண்டு;. சக்தி மிக்க ஊடகங்களும், ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் சார்ப்பு நிலைகளிலிருந்து விடுபட்டு, ஊடகத்தர்மத்தைக் காப்பாற்றி, அதன் பொறுப்பைச் சுமந்து, இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கிடையிலும் சமூக ஒருமைப்பாடு ஏற்படவும், இந்நாடு வெற்றிகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கவும் தங்களது தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்ற ஊடகச் செயற்பாடுகளை நடுநிலைத்தன்மையோடு முன்னெடுக்க முன்னுரிமை வழங்கும்போதுதான் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் சமூகப்பணிகள் மக்கள் நலன்சார்ந்ததாக அமையும். நாட்டுக்குப் பயனிக்கும். அவையே ஊடகங்களின் சமூகப் பணியில் முதன்மைப் பணியாகவும் பொறுப்புமாகவும் நோக்கப்படும் என்பதோடு ஊடகங்களின் நேர்மய நடவடிக்கைகளையும் நேர்மறையான முகத்தையும் வெளிச்சம்போடும் என்பதிலும் ஐயமில்லை.

விடிவெள்ளி – 10.08.2017

ஊடகங்களின் இரு முகங்கள்.. ஊடகங்களின் இரு முகங்கள்.. Reviewed by Madawala News on 8/11/2017 07:06:00 PM Rating: 5