Kidny

Kidny

மெகா டீல் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நிலை நாட்ட நாம் தவறிவிட்டோம்  - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார


- கஹட்டோவிட்ட ரிஹ்மி -

இன்று திறைசேரிப்பத்திர கணக்குகள் பற்றி அதிகமானோர் கதைப்பது புரிகிறது. அதுவும் நல்ல விடயம் தான்.ஏனெனில் நாட்டில் நடைபெறுவதை நாட்டு மக்கள் அறிந்து கொண்டு பேசுவதனால், மிகவும் சரியானவற்றைச் செய்வதற்கான சந்தர்ப்பம் அரசுக்கு ஏற்படுகிறது. 

ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விடயம், இவ்வாறான விடயங்கள் மக்களுக்குத் தெரிய வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது ஜனவரி 8 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமாகும்.அவ்வாறு இல்லாமல் முன்னைய அரசு இன்றிருந்தால் இவ்வாறான சந்தர்ப்பத்தை மக்களுக்கு அளித்திருக்க மாட்டார்கள்.

அவ்வாறான சந்தர்ப்பத்தை நாம் வழங்கியிருக்கும் இந்த நிலையில், திருட்டு மூலம் வயிறு வளர்த்த கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று எமக்கு விரல் நீட்டுகிறார்கள்.

உங்களுக்கு அவர்களைக் கண்டால் ஞாபகம் வருவது எவரை,,,,தமது தலையில் அழுக்குகளை வைத்துக் கொண்டு நான் சுத்தம்! நான் சுத்தம்!! என்று சத்தமிடும் கோழிகள் போன்றுதான் இவர்களது கதை. 

அன்று திருட்டினை சட்டரீதியாகச் செய்தவர்கள் இன்று திருட்டைப் பற்றிப்பேசுகிறார்களே என்பதைப் பார்க்கும் போது இவ்வாறான ஒரு நகைச்சுவையும் உள்ளதா? என்று எண்ணத் தோன்றும். நாங்கள் ஒன்றை இவர்களுக்குச் சொல்ல வேண்டும், எமது அரசு குற்றங்களுக்கு அனுசரணை வழங்குவதில்லை. அவ்வாறு ஒரு குற்றம் நடைபெற்றால், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க பிரதமர் தயங்கவும் மாட்டார். அதே போன்று தூயவர்கள் போல் கதைக்கும் கூட்டு எதிரணிக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். அவர்கள் அன்று செய்த பாரிய குற்றங்களை நாங்கள் விரைவில் வெளிக்கொணர்வோம்" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். சென்ற 06 ஆம் திகதி மொனராகலை, அதிமலேயின் 70 ஆம் பிரிவில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், நாங்கள் அரசு என்ற வகையில் போன்று கட்சி என்ற வகையிலும் களவு, துஷ்பிரயோகம் போன்றவற்றை எதிர்ப்போம். இன்று எமது கட்சிக்கு ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது. நாங்கள் அதனை மறைக்க முயலவில்லை. பிரதமரது எண்ணம், இந்த அரசை சிறந்த கொள்கை உள்ள ஒரு அரசாக கொண்டு செல்வதாகும். அதனால்தான் இந்த விடயத்தை மிகவும் வெளிப்படையாகக் கொண்டு சென்றோம். அன்று மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கோப் குழு நியமிக்கப்பட்டதே நடைபெற்ற குற்றங்களை மறைப்பதற்காகவாகும். அன்று எவ்வாறான விடயங்கள் நடைபெற்றன? ஏதாவது விடயம் தொடர்பாக ஒரு விசாரணை நடைபெற்றதா? ஆனால் நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த குழுவிற்குத் தலைவராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமித்தோம். திருடும் எண்ணம் எம்மிடம் இருந்தால் ஏன் அவ்வாறு எதிர்க்கட்சி ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும்.எங்களது தேவை, சரியான ஒரு அரச நிர்வாகம் இந்த நாட்டில் நடைபெறவேண்டும். கடந்த காலத்தில் எவ்வாறு குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் நடைபெற்றது என்பது எமக்குத் தெரியும். நாங்கள் அதற்கு இடமளிக்க மாட்டோம். மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த உங்களுக்கு அது தெரியும். எமது கட்சியும் அவ்வாறான ஒரு கட்சியாகும். 


இன்று கூட்டு எதிரணியினர் எம்மீது குற்றஞ்சாட்டுவதற்கு நாமும் ஒரு தவறு செய்துவிட்டோம். ஏனெனில் இந்த மெகா டீல் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட எமது அரசு தவறி விட்டது. நாங்கள் தப்பி விட்டோம் என்பது அவர்களுடைய எண்ணம். சென்ற அரசில் பாரிய மோசடிகளைச் செய்தவர்களுக்கு எதிரான விசாரணைகளை விரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அவர்களை வேண்டிக்கொள்கிறோம். 


நாட்டு மக்கள், மோசடிகள், ஊழல்கள் அற்ற ஒரு நாட்டையே எம்மிடம் கேட்டார்கள். இன்று ஊழல், மோசடிகளைத் தவிர்த்து ஆட்சி செய்வதைப் போன்று கடந்த காலத்தில் மோசடி செய்பவர்களைத் தண்டிப்போம். அப்போதுதான் நல்லாட்சி அரசின் நோக்கங்கள் நிறைவேறும்.

இன்று நாட்டில் நீதி நிலைநாட்டப்படுவதில்லை என்று சத்தம் போடும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு நாடு அந்த நேரம் எந்நிலையில் இருந்தது என்பது மறந்து விட்டது. இன்று அமைச்சர்களே ஆணைக்குழு முன்னால் ஆஜராகி சாட்சியளிக்கின்றனர்.சட்டமா அதிபர் திணைக்களம் குறுக்கு விசாரணை செய்கிறது. 

இதுதான் இந்த நாட்டிற்கு இவ் அரசாங்கம் கொண்டு வந்த மாற்றம், சுதந்திரம். அந்த சுதந்திரத்தை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருவதுடன், எதிர்காலத்திலும் நாட்டின் அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

மெகா டீல் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நிலை நாட்ட நாம் தவறிவிட்டோம்  - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மெகா டீல் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நிலை நாட்ட நாம் தவறிவிட்டோம்  - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார Reviewed by Madawala News on 8/09/2017 11:12:00 PM Rating: 5