Ad Space avaiable

பலூஜா சுற்றி வளைக்கப்படுகிறது...

Muja ashraff -
அபரிமிதமான அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்துக்கு எதிராக ஃபலூஜா மக்கள் நடத்திய நெஞ்சுரம் மிக்க போராட்டங்களும், அடைந்த வெற்றிகளும் நாடெங்கிலும் மக்களால் கொண்டாடப்பட்டது, உலகத்தார் கவனத்தை எல்லாம் ஃபலூஜா தம் பக்கம் ஈர்த்துக் குவித்தது.  அமெரிக்க ஆக்கிரமிப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

வெறிகொண்ட அமெரிக்க இராணுவத் தலைமையகம் பெண்டகன் நவம்பர், 2004-ல் அதற்கு எதிர்வினை ஆற்றியது. ஃபலூஜா சுற்றி வளைக்கப்பட்டது.  உள்ளிருப்போர் அனைவரும் எதிரிகள் என்று அறிவிக்கப்பட்டனர். நகரம் படுபயங்கரமான ஆயுதங்கள் தரித்த ஈவிரக்கமற்ற ஏராளமான இராணுவத்தினரின் விளையாட்டுக் களம் ஆக்கப்பட்டது.  தப்பி ஓட முயன்ற மக்கள் குடும்பத்துடன் மீண்டும் அந்த கொலைக் களத்தில் பிடித்துத் தள்ளப்பட்டனர் என்று எழுதியது அசோசியேடட் பிரஸ்.

பேரழிவு இரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் புளுகிக்கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்காதான் வெள்ளைப் பாஸ்பரஸ் என்ற இரசாயனப் பொருளை மிகப் பெரும் அளவில் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தியது. போர்க்களத்தை ஒளியூட்டவே வழக்கமாய் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம் மரணத்தை விளைவிக்கும் பயங்கரமான இரணங்களை ஏற்படுத்தக் கூடியது. கதவுகள், சன்னல்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மக்களின் உடைகள் என தன் வழிப்பட்ட தடைகள் அனைத்தையும் எரித்துக்கொண்டு முன்னேறி இறுதியில் மனிதத் தோலையும், உள்ளிருக்கும் எலும்பையும் தின்று செறிக்கும் அகோரப்பசி கொண்டது அந்த இரசாயனம்.

மக்கள் பதுங்கி இருக்கும் பாதுகாப்பான குடியிருப்புக் கட்டிடங்களின் உள்ளிருக்கும் பிராண வாயுவையும் உரிஞ்சி எடுத்துவிடும் தன்மை கொண்ட வெள்ளைப் பாஸ்பரஸ் இத் தாக்குதலில் ஏராளமாகப் பயன்படுத்தப்பட்டது.  இத்தோடு நில்லாமல் சொல்லொணாத் துயரைத் தலைமுறை தலைமுறைக்கும் விளைவிக்கும் கதிர்வீச்சுத் தன்மைகொண்ட ஏராளமான குண்டுகள் இந்த நகரத்தின் மீதான குவிந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன என்றும் அஞ்சப்பட்டது.
பலூஜா சுற்றி வளைக்கப்படுகிறது... பலூஜா சுற்றி வளைக்கப்படுகிறது... Reviewed by Madawala News on 8/02/2017 03:51:00 PM Rating: 5