tg travels

பலூஜா... அமெரிக்காவின் ஹிரோஷிமா !


Muja ashraff -

ஈராக்கிய நகரம் பலூஜாவின் புற்றுநோய், சிசு மரணம் மற்றும் மகப்பேறில் பாலின விகிதாசாரம் 2005-2009 என்ற தலைப்பிலான ஆய்வில் பலூஜா நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக இருக்கிறது என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

ஜனவரி, பிப்ரவரி, 2010-ல் பலூஜாவின் 711 குடும்பங்களிலும், 4,843 தனி நபர்களிடமும், அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரணு அறிவியல் துறைப் [molecular biosciences] பேராசிரியரும், பசுமைத் தணிக்கைக்கான அறிவியல் ஆய்வுக்குழு என்ற சுயேச்சையான சூழலியல் அமைப்பின் இயக்குனருமான க்ரிஸ் பஸ்பி, மலக் ஹம்டன், எண்ட்சர் அரிஅபி மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் புற்றுநோய் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதையும், தற்போது அங்கு காணப்படும் புற்றுநோயின் தன்மை அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்ட புற்றுநோயின் தன்மையுடன் ஒத்திருப்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து தெரிவிக்கின்றனர்.

அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவெய்த் ஆகியவற்றில் காணப்படுவதைப்போல  இரத்தப் புற்றுநோய் [leukemia]  பாதிப்பு 38 மடங்கும், சிசு மரணம் 12 மடங்கும், மார்பகப் புற்றுநோய் 10 மடங்கும் பலூஜாவில் அதிகரித்து இருக்கிறது. பெரியவர்களிடையே பெரும் அளவில் மூளைப் புற்றுநோய்க் கட்டிகளும் [brain tumors] , சீழ்க் கொப்பளங்களும் [Lymphoma] காணப்படுவதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

1050 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம் 2005-க்குப் பின் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பிறப்பு விகிதம் 860 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்று தலைகீழாகி இருக்கிறது.  இந்த பாலின விகித மாறுபாடும் 1945-ன் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிந்திய ஹிரோஷிமாவை ஒத்திருக்கிறது.

RAI 24 என்ற இத்தாலிய தொலைக்காட்சி செய்தி நிலையத்தில் பேசிய பேராசிரியர் பஸ்பி, பலூஜாவில் காணப்பட்ட கதிர்வீச்சு தொடர்பான இந்த அதீதமான உயிர் மரபணுக்களின் மாறாட்டம் 1945-ம் ஆண்டு அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்குப் பின்னால் ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இது திறன் குறைந்த யுரேனியப் பிரயோகத்தால் விளைந்தது என்று நான் அனுமானிக்கிறேன்.  இவை தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியவை என்று கூறியிருக்கிறார்.
பலூஜா... அமெரிக்காவின் ஹிரோஷிமா ! பலூஜா... அமெரிக்காவின் ஹிரோஷிமா ! Reviewed by Madawala News on 8/06/2017 04:07:00 PM Rating: 5