Yahya

எனக்கு எதுவும் தெரியாது.. அண்மையில் நடந்த இரண்டு சம்பவங்கள்..


- ஸபர் அஹ்மத்-

இரண்டு சுவாரசியமிகு சம்பவங்கள் தேசம் எங்கும் பேசு பொருளாகி வைரலாகி இருக்கின்றன.

யாராலும் அடக்கமுடியாத அருமந்த பிள்ளை கிம் ஜோன் ஆளும் வடகொரியா நாட்டில் வேளா வேளைக்கு ஏவுகணை எறியும் பயிற்சி விளையாட்டு நடக்கும்.. 

வடகொரியாவின் அட்டகாசங்களை இலங்கை அரசு வன்மையாய் கண்டிப்பதாக ஒரு செய்தி கடந்த வாரம் முழுவதும் வாவ் ரியாக்‌ஷன்களுடன் ஓடியது.' ஒருத்தனுக்கு எழுந்து நிற்கவே வக்கில்லயாம்,இதில் வடகொரியாவுக்கே வடை ஒரு பார்சலாமா ' என்று உச்சபட்ச அதிர்ச்சியில் நெட்டிசன்களும் பொதுஜனமும் முடியைப் பிய்த்துக் கொண்டனர்.

'எங்கோ தப்பு நடந்துவிட்டதே' என்று வெலவெலத்துப் போன அரசாங்கம் இந்த அறிக்கை பற்றி ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ எதுவும் தெரியாது என்று கூறி இருக்கிறது.

ஒரு சர்வதேச விவகாரத்தில் ஊர் பேர் தெரியாதவர்கள் எல்லாம் கருத்து சொல்லும் அளவுக்கு ரொம்பப் பலமாய் இருக்கிறது நாடு.இப்போது அறிக்கைவிட்ட ஆளைத் தேடிக் கொண்டு இருக்கிறார்களாம்.

அப்படியே யாராவது எதையாவது ஹெக் செய்து பலஸ்தீனுக்கும் ஆதரவாய் ஒரு அறிக்கைவிட்டு சர்வதேச கவனம் ஈர்க்க வைத்துவிட்டு ஓடிப் போய் ஒளிந்து கொள்ளுங்கள்.

கொரியா பாணியில் ' இன்னொரு எனக்கும் தெரியாது ' கூத்துப் பட்டறை ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ரவி கருணாநாயக்கவால் நேற்று நிகழ்த்தப்பட்டது.மகிந்த காலத்தில் நடந்த பகல் கொள்ளைகள் எல்லாம் தேசப்பற்று நிறத்தில் சிங்களத்தில் இருந்தன.பாமர மக்களுக்கும் புரிந்தது.

ஆனால் இந்த ஆட்சியில் நடந்த ' பிணை முறி' என்னும் மத்தியவங்கிக் கொள்ளையைப் புரிந்து கொள்ள நிறைய மெனக்கிட வேண்டி இருக்கிறது.

தெரிந்தவர்களிடம் போய்க் கேட்டால் முதலில் எக்கோனமிக்ஸ் கற்பிக்கிறார்கள்.

ஆட்டோ ஸ்டாண்டில், சலூனில் 'ஏதோ பெரிதாய் அடிச்சிட்டாங்க' என்கிறார்கள்.யாருக்கும் அடி ஆழம் விளங்கவில்லை.

இதன் சூத்திரதாரி முன்னால் மத்தியவங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன்.அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸாம்.என்ன அல்சேஷனோ குடும்பமே அல்லோலகல்லோலப்பட்டு அலங்கோலமாய் அலைகிறது. அதுவல்ல விசயம்.


மத்தியவங்கி நிதி மோசடியில் சிக்கி இருக்கும் அர்ஜுன் அலோஷியஸுக்கும் அப்போது நிதியமைச்சராய் இருந்த ரவிகருணாநாயக்கவுக்கும் இடையில் நடந்த கொடுக்கல் வாங்கல்கள், எஸ் எம் எஸ் பரிமாற்றங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றன.அர்ஜுன் அலோசியஸ் வீட்டில் 9 மாதம் ரவி 11.5 மில்லியன் வாடகை கொடுத்து தங்கி இருந்தாராம்.

ரவி கருணாநாயக்கவின் மகளுக்கு அந்த வீட்டின் மீது ஆசை வந்ததாம்.உடனே 155 மில்லியன் கொடுத்து வீட்டை வாங்கிவிட்டாராம்.

ஆனால் தான் இத்தனை நாள் வாடகை கொடுத்துவிட்டு கொள்வனவு செய்த வீடு அர்ஜுன் அலோஷியஸின் வீடு என்று தெரியாதாம்.எப்படி இருக்கிறது கதை ?

ரவி கருணாநாயக்க போன்ற அப்பாக்களை அடைந்த மகள்களுக்கே தெரியும் ஆடம்பர வாழ்க்கைக்கு முன்னால் அவமானம் எல்லாம் வெறும் கால்தூசு என்று... :(
எனக்கு எதுவும் தெரியாது.. அண்மையில் நடந்த இரண்டு சம்பவங்கள்.. எனக்கு எதுவும் தெரியாது.. அண்மையில் நடந்த இரண்டு சம்பவங்கள்.. Reviewed by Madawala News on 8/03/2017 04:15:00 PM Rating: 5