Ad Space avaiable

ரவி ராஜினாமா: நல்லாட்சி ஆடும் கண்ணாமூச்சி !

நேற்று ரவியின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கப் போவதாக ஶ்ரீலசுக அமைச்சர்கள் தெரிவித்த கருத்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கியது,

மாத்திரமன்றி இந்த அமைச்சர்கள் நேற்றய அமைச்சரவைக் கூட்டத்திற்கு ரவி வந்தால், தாங்கள் கூட்டத்தை பகிஷ்கரிக்கப் போவதாகவும் சொன்னதாகத் தெரிகின்றது. 

ரவி கூட்டத்திற்கு வரவில்லை. பிரதமர் அல்லது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில்தான் அவர் வரவில்லை என்ற சந்தேகம் இலுக்கிறது. 

குறித்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் ரவியை தனியாக சந்தித்து ஒரு மணித்தியாலத்துக்கு மேல் பேசியிருக்கின்றனர். 

அதன் பின்னர் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை ஆற்றிய ரவி தான் அருத்தங்களுக்கு பயந்து ராஜினாமாச் செய்யவில்லை என்றும் நல்லாட்சியை பாதுகாக்க தான் பெருமையுடனேயே வெளியேறுவதாகவும் சொல்லியிருக்கிறார். 

மத்திய வங்கி பிணைமுறி விற்பனை மோசடி ஏற்கெனவே குற்றுயிராய் கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேரை உலுக்கிய மோசடியாகும். 

அதன் ஆழ அகலம் இன்னும் சரியாக வெளிவரவில்லை. ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடக்கிறது. 

அதன்போதுதான் ரவி மில்லியன் கணக்கான லஞ்சத்தை வீட்டு வாடகை என்ற போர்வையில் பெற்ற அமைச்சரை, ஏதோ நாட்டுக்கு நல்லது செய்துவிட்டு தானாக விலகிப் போவது போன்று உபசரித்து அனுப்பியிருக்கிறது அரசு. 

இது தொடர்பான கொழும்பு டெலிக்ராப் இணையத்தள செய்தியில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனிப்பட்ட சந்திப்பின்போது, ரவி முன்வைத்த இரண்டு முக்கிய நிபந்தனைகளாக:

1. மத்திய வங்கி பிணைமுறி விற்பனை மோசடி விவகாரத்தில் தன்னை இனி சம்பந்தப்படுத்தக் கூடாது 

2. தன்னால் அரசு சாரந்த பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள தனது உறவினர்களை பதவிநீக்கம் செய்யக்கூடாது

இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆயின் ரவியின் இன்றைய பாராளுமன்றப் பேச்சில் தொனித்த ஆணவம் இவை உண்மையோ என்று யோசிக்கவைக்கிறது. 

குறித்த ரகசியக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எவ்வித வெளிப்படைத் தன்மையும் பேணப்படவில்லை. 

நல்லாட்சியில் அமைச்சர் பதவி விலகிவிட்டார் பார்த்தீர்களா என்று சிலர் இதில் பெருமை வேறு பேசுகிறார்கள். 

ஒருவேளை ரவி 'வெளுக்கப்பட்டு' மறுபடி அமைச்சராக கூட வரலாம். யார் கண்டார்.

-உவைஸ் மொஹிதீன்-
ரவி ராஜினாமா: நல்லாட்சி ஆடும் கண்ணாமூச்சி ! ரவி ராஜினாமா: நல்லாட்சி ஆடும் கண்ணாமூச்சி ! Reviewed by Madawala News on 8/10/2017 10:11:00 PM Rating: 5