tg travels

அரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும் - 2


-Muja ashraff-

பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இப்போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக பரிணமித்து வந்த நிலையில், இதன் காரணமாக தனது மேலாதிக்கத்திற்கு எந்தவிதமான சவாலும் உருவெடுத்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது.

தொடர்ந்த போராட்டங்களின் மையமாக மக்களை வாட்டி வதைத்து மறுகாலனியாதிக்கத்திற்கான எதிர்ப்பாக இல்லாமல், ஜனநாயகம், பலகட்சி ஆட்சி முறை  போன்ற சில சில்லறை முதலாளித்துவச் சீர்திருத்தக் கோரிக்கைகளைச் சுற்றியே அமைந்தது. இது எதார்த்தத்தில் வெறுமனே சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே சுருங்கிப் போனது. அதாவது வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு முதலான பிரச்சினை காரணமாக எழுந்த எதிர்ப்புணர்வு பின்னர் வெறும் ஆட்சியாளரை மாற்றும் போராட்டமாக மட்டும் மாறிப்போனது. இந்த போராட்டங்களில் உழைக்கும் மக்கள் வெகுவாக அணிதிரண்டாலும் அவர்களை வழிநடத்தியது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அறிவுஜீவிகள்தான்.

எகிப்திலும், துனீசியாவிலும் ஏற்பட்டிருக்கும் ‘மாற்றம்’ வெறுமனே ஆட்சியாளர்களின் பெயர் மாற்றம் மட்டும் தான் – பென் அலிக்கு பதிலாக பதவிக்கு வந்துள்ள முகம்மது கன்னோசி ஆகட்டும்; எகிப்தில் முபாரக்கை அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமாகட்டும் – இவர்களுக்குள் கொள்கையளவில் எந்த வேறுபாடும் கிடையாது. துனீசியாவின் முகம்மது கன்னோசியும் அவரது கூட்டாளிகளும் இவர்களைத் தாங்கி நிற்கும் இராணுவமும் அமெரிக்க அடிவருடிகள் தான். அதே போல் எகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும்  இராணுவமும் அமெரிக்க ஆதரவு இராணுவம் தான். இந்நாடுகளில் தன்னெழுச்சியாகத் துவங்கிய மக்கள் போராட்டங்களின் திசைவழி இன்னதென்பதை  அமெரிக்காவே தீர்மானிப்பதாகவே அமைந்தது.

இப்படியாக, எகிப்து மற்றும் துனீசியாவில் நடந்த மக்கள் எழுச்சி ஆயுதம் தாங்கிய போராட்டமாக அல்லாமல் அமைதியான வழியிலேயே நடத்தப்பட்டன. மேலும், போராட்டக்காரர்களுக்கு அயல் நாடுகளில் இருந்து ஆயுத உதவியோ இராணுவ உதவியோ வழங்கப்படவில்லை. எகிப்தின் பல்வேறு நகரங்களின் கட்டுப்பாடுகளை முபாரக் இழந்து கொண்டிருந்த சமயத்தில் பிற நாடுகள் எதுவும் போராட்டக்காரர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தமது தூதர்களை அனுப்பி வைக்கவில்லை, இப்போது பஹ்ரைனில் அரச எதிர்ப்பாளர்களை இராணுவம் மிருகத்தனமாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் போதும் அம்மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கவில்லை.

ஆனால், இது அனைத்தும் லிபியாவில் நடந்து கொண்டிருக்கிறது. மட்டுமல்லாமல், லிபியாவில்  கடாஃபியை எதிர்த்து போராட்டங்கள் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே அதன் மீது இராணுவ நடவடிக்கை ஒன்றிற்கான தயாரிப்புகளில் அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஈடுபட்டிருந்தன.
அரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும் - 2 அரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும் - 2 Reviewed by Madawala News on 9/05/2017 01:24:00 PM Rating: 5