Ad Space Available here

20 இற்கான ஆதரவு: திருத்த முடியாத அரசியல் கலாசாரம்..

இலங்கையின் அரசியலமைப்பை 20 தடவை திருத்தினாலும், திருத்த முடியாத கேடுகெட்ட அரசியல் கலாசாரமும், சுயநல அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியலில் நிரம்பி இருப்பதையே, நாம் தொடர்ச்சியாக கண்கொண்டிருக்கின்றோம். கிழக்கு மாகாண சபை 20ஆவது திருத்தத்திற்கு கண்ணைமூடிக் கொண்டு ஆதரவளித்ததிலும் அது மீள உணரப்பட்டது. ஆயினும், 20ஆவது திருத்தம்; அரசியலமைப்புக்கு முரண் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்குமாயின், அதனைக் கூட நினைத்தபடி இலகுவாக திருத்த முடியாது போகக் கூடும்.

மத்திய அரசாங்கத்திடம் இருக்கின்ற அதிகாரங்களை மாகாண ரீதியாக பகிர்ந்தளிப்பதற்கான ஆட்சிக் கட்டமைப்பாக உள்ள மாகாண சபைகள், கொழும்பிலுள்ள ஒரு நிறுவனத்தின் பிராந்திய கிளை போல இயங்க முடியாது. கொழும்பில் இருந்து வருவதெல்லாம் சரி என கண்ணைமூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்தக் கடப்பாடும் மாகாண சபைகளுக்கு கிடையாது. அந்தவகையில், வட மாகாண சபையில் அவ்வாறான ஒரு அதிகாரத் தோரணை இருப்பதை கண்கூடாக காண்கின்றோம். ஆனால், கிழக்கு மாகாண சபையில் 20இற்கு ஆதரவளித்து வரை, பல சந்தர்ப்பங்களில் அந்த பண்பியல்பை காண முடியவில்லை.

பாவமன்னிப்பு கோரல்
சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு பாதகமான பல முன்மொழிவுகளுக்கு மத்தியில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் மாகாண அரசியல்வாதிகளும் ஆதரவளித்த சம்பவங்கள் முன்னரும் பல தடவை இடம்பெற்றிருக்கின்றன. தாங்கள் சார்;ந்திருக்கின்ற கட்சிகளை திருப்திப்படுத்துவதற்காகவும் தங்களது 'காட்டில் மழைபெய்ய' வேண்டும் என்ற சுயஇலாபத்திற்காகவும் இதைச் செய்து வந்திருக்கின்றார்கள்.

முன்னைய ஜனாதிபதியை இன்னுமொரு தடவை ஜனாதியாக்குவதற்கு வழிவகுத்த 18ஆவது திருத்தத்திற்கு கையுயர்த்தியது, மாகாணங்களின் அதிகாரங்களில் கைவைக்கும் திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கச் செய்தமை, முரண்பாடுகளை தீர்க்காமலேயே உள்ள10ராட்சி சபை தேர்தல் சட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றில் கையுயர்த்திமை என தொடர்ச்சியாக இது நடந்து வந்திருக்கின்றது.

இவ்வாறு நெடுகிலும் வரலாற்றுத் தவறை  செய்துவிட்டு, எல்லாம் கைமீறிப் போன பிறகு அந்நியன் படத்தில் வரும் கதாபாத்திரம் போல திடீரென மாறி, 'ஐயோ நாம் தெரியாமல் செய்து விட்டோம்' என்றோ அல்லது 'தெரிந்து கொண்டே படுகுழியில் விழுந்துவிட்டோம்' என்றோ அவர்களே தலையில் அடித்துக் கொள்வார்கள்.  மக்களிடத்தில் வந்து பாவமன்னிப்பு கோரும் தொனியில் வாக்குப் பிச்சை கேட்பார்கள். இதுதான் வழமை.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த விடயத்திலும் இவ்வாறு ஒரு தவறைச் செய்து விட வேண்டாம் என்றே முஸ்லிம் மக்களும் சமூக நலன்விரும்பிகளும் கடந்த சில நாட்களாக கோரி வந்தனர். ஆனால், சிறுபான்மையினரின் வசமுள்ள மாகாண சபைகளுள் ஒன்றான வடமாகாண சபை அந்த கோரிக்கைக்கு செவிமடுத்துள்ளது. மற்றைய சபையான கிழக்கு மாகாண சபை இதனை அலட்டிக் கொள்ளாமல் தன்விருப்பம் போல ஆதரவளித்திருக்கின்றது.

பாரதூரமான ஏற்பாடுகள்
இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தமானது, அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடு மட்டுமே என்றே வெளியுலகுக்கு காட்டப்படுகின்றது. ஆனால் அது தவறாகும். 20ஆவது திருத்தம் என்பது, இதற்கு மேலதிகமாக பல முன்மொழிவுகள உள்ளடக்கியுள்ளது.

அதன்படி,  எல்லா மாகாண சபைகளும் கலைக்கப்பட்டதாக இருக்க வேண்டிய திகதியை பாராளுமன்றமே தீர்மானிக்கும் என்ற விடயம் இதிலுள்ளது. அத்துடன்;, ஏதேனும் மாகாண சபை கலைக்கப்படும் பட்சத்தில் அச்சபையின் தத்துவங்கள், குறித்துரைக்கப்பட்ட (தேர்தல்) திகதி வரை பாராளுமன்றத்தால் பிரயோகிக்கப்படும் எனவும் இத்திருத்தம் கூறுகின்றது.
அதேபோன்று, (தேர்தல் நடைபெறும்) திகதிக்கு முன்னர் முடிவடையும் மாகாண சபையின் ஆட்சிக்காலம் தேர்தல் திகதி வரை நீடிக்கப்படுவதோடு குறித்துரைக்கப்பட்ட (தேர்தல்) திகதியில் முடிவடையாதிருக்கின்ற மாகாண சபையின் ஆட்சிக்காலம் அத்திகதியில் முடிவடைதல் வேண்டும் என்றும் 20ஆவது திருத்தத்தில் விதந்துரைள்ளது.
இதற்கமைய, மாகாண சபைகளின் ஆட்சிக்காலம், அவற்றை கலைத்தல், தேர்தல் நடத்துதல், கலைப்புக்கும் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தின் ஆட்சியதிகாரம் என பல விடயங்களில் பெயரளவிலேனும் இருந்த அதிகாரங்களில் மாற்றங்கள் கொண்டுவரும்; ஒரு முயற்சியாகவே 20ஆவது திருத்தத்தை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஒரு சட்டமூலம், திருத்தம் மாகாண சபைகளின் அனுமதி கோரி மத்திய அரசினால் அனுப்பப்படுகின்றது என்றால், அதில் மாகாண சபைகளுக்கு பாதகங்கள் இருக்க சாத்தியமுள்ளது என்றபடியால் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரசியல் நோக்கர்கள் அபிப்பிராயப்படுவதுண்டு. 20 இனை பொறுத்தரை, ஒரேநாளில் தேர்தலை நடத்துவது மட்டுமே அரசின் நோக்கமாக இருக்குமாயின், இவ்வளவு சிரமப்பட்டு நாட்டின் அரசியலமைப்பை திருத்தியே அதைச் செய்ய வேண்டும் என்பதில்லை. இத்திருத்தத்தில்; ஒரே நாளில் தேர்தல் நடத்துவது என்ற விடயம் மட்டுமே இருக்குமாயின் - ஊவா, தென் மாகாண சபைகள் ஏன் தோற்கடித்தன? வட மாகாண சபை ஏன் நிராகரித்தது? ஏனென்றால்... அதில் அதைவிடப் பாரதூரமான யாப்பு ரீதியான ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளன என்பதனாலாகும்.

எல்லா மாகாண சபைகளிலும் 20 இனை வெற்றிபெறச் செய்வது சவாலானதாக மாறியிருக்கின்ற சமகாலத்தில், அதற்கெதிராக 10 வரையான மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, நிலைமை தமக்கு சாதகமில்லை என உணர்ந்து கொண்ட அரசாங்கம் தாமாகவே முன்வந்து, தற்போதைய 20ஆவது திருத்தத்தில் மேலும் சில மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக அரசாங்கம், சட்டமா அதிபர் ஊடாக உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இவ்வாறு 20 பெரும் பிரளயங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒற்றைக்காலில் நின்று கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையும் அதற்காக முஸ்லிம்களின் தனித்துவ அடையாள சின்னமாக நோக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸூம் அக்கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் நஸீர் அகமட்டும் உறுப்பினர்களும் 'தீயா வேலை செய்திருக்கின்றமையும்' ஏனென்று தெரியாத சங்கதியல்ல. சுருங்கக் கூறின், ஆளும் தரப்பிற்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் தமது விசுவாசத்தைக் காட்டும் முயற்சியாகும்.
இதேவேளை, 20ஆவது திருத்தத்தை எதிர்ப்பதற்கு மு.கா. முடிவு செய்திருந்தால் மட்டுமே ஆதரவு பெறுவதற்கான பேரம்பேசல் அவசியப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் இருந்தே இத்திருத்தத்தை ஆதரிக்கும் முடிவிலேயே மு.கா. இருந்தமையால் அதற்கு அவசியம் இருந்திருக்காது. மாறாக ஒரு இலவச இணைப்புப் போல, அல்லது பழைய (நன்றிக்) கடனை செலுத்துவது போல இந்நடவடிக்கை தோன்றினாலும்;, கட்சியில் உள்ள ஓரிருவர் தமது சொந்தப் பேரம் பேசலுக்கான நீண்டகால 'முதலீடாக' இதனை பயன்படுத்துவார்கள் என்பது வேறுகதை.

எது எவ்வாறிருப்பினும், கடந்த 07ஆம் திகதி வரையும் 20ஆவது திருத்தத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்த த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11ஆம் திகதி எவ்வாறு முற்றுமுழுதாக நிலைப்பாட்டை மாற்றி ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதே ஆச்சரியமாகவுள்ளது. 20ஆவது திருத்தம் தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர் இது 29ஆம் திகதிக்கும், அதன்பின்னர் செப்டம்பர் 7ஆம் திகதிக்கும் பிற்போடப்பட்டது.

7ஆம் திகதி எப்படியாவது இதை நிறைவேற்றிக் கொள்ள முதலமைச்சரும் வேறு சிலரும் எடுத்த சூட்சுமமான, தந்திரமான பிரயத்தனங்கள் எல்லாம் பலிக்கவில்லை. இதற்கு காரணம் த.தே.கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுதிப்பாடாகும். இந்நிலையிலேயே 11ஆம்  திகதி பிற்பகல் வேளையில் 20ஆவது திருத்தம் வாக்கெடுப்பிற்குவிடப்பட்டது.

அவசரமான வாக்கெடுப்பு
37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் 25 உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாகவும் 8 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர். தேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடாக ஐ.ம.சு.மு.வில் உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், அமீர் ஆகியோர் எதிர்காலத்தில் சட்டப் பிரச்சினை எழலாம் எனக் கருதியோ என்னவோ வாக்கெடுப்பிற்கு சமூகமளித்திருக்கவில்லை.
20ஆவது திருத்தம் பாதகமானது என ஏற்கனவே அறிக்கைவிட்டிருந்த மு.கா. சார்பு உறுப்பினர் சிப்லி பாறூக்கும், தனிநபர் பிரேரணை கொண்டு வந்திருந்த பிரசன்னா இந்திரகுமாரும் மனச் சாட்சியுடன் வெளியேறி இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். எதுஎவ்வாறிருப்பினும், 20இற்கு ஆதரவளிப்பதில் கடைசி மட்டும் உறுதியாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 8 உறுப்பினர்கள், (கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டிருப்பினும்) இந்த விடயத்தில் நன்றிக்குரியவர்கள்.
இங்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வாறு பல்டி அடித்தார்கள் என்ற கேள்வி இருக்கின்றது. விசாரித்துப்பார்த்ததில் பல இரகசியங்கள் கசிந்தன. அதாவது, த.தே.கூட்டமைப்பை 20இற்கு ஆதரவாக மாற்றுவதற்காக மட்டு. மாவட்டத்தில் உள்ள பல மாகாண சபை உறுப்பினர்கள் ஒரு முக்கிய புள்ளியால் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர் என்று மாகாண சபை வட்டாரங்களில் தெரியவருகின்றது.

அதேபோன்று அம்பாறை மாவட்டத்திலும் 10ஆம் திகதியிரவு ஆதரவு தேடும் கூட்டம் இடம்பெற்றுள்ளது. ஆளுநரும் இதில் கலந்து கொண்டிருக்கின்றார். எது எவ்வாறிருப்பினும் த.தே.கூட்டமைப்பின் மேல்மட்டத்தின் அனுமதியின்றி 20 இற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை அக்கட்சி எடுத்திருக்க மாட்டாது என்ற அடிப்படையில் அங்கிருந்தும் சமிக்கை வந்தபிறகே அவர்கள் கையை உயர்த்தி இருப்பார்கள் என்பதை இலகுவாகவே ஊகித்துக் கொள்ள முடியும்.

வெளியாகாத ஆவணம்
இதேவேளை, 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவு திரட்டுவதில் சிக்கல் இருந்தமையால் மேலும் புதிய திருத்தங்களை உள்ளடக்கிய 20 இற்கே நாம் ஆதரவு கோருகின்றோம் என்று கூறி, முதலமைச்சர் ஒரு வெள்ளைத்தாளை காண்பித்து முறைகேடான விதத்தில் ஆதரவு கோரியதாக எதிர்த்து வாக்களித்தோர் குறிப்பிட்டுள்ளனர். சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மேலதிக திருத்தங்களை உள்ளடக்கிய ஒரு ஆவணமாக இது இருக்கலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் கூறுகின்றார்.

20ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ள போதிலும், அவ்வாறு நீதிமன்றத்தால் அனுப்பப்படும் வியாக்கியானத்தையும், தீர்ப்பையும் சபாநாயகர் 19ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அறிவித்த பிறகே அது சட்டவலுப் பெறும். எனவே  நிலைமை இப்படியிருக்க, 19ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியாகப் போகின்ற முடிவுக்கு (தீர்ப்புக்கு) 11ஆம் திகதி கிழக்கு மாகாண சபை ஆதரவளித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.

20 தொடர்பில் கடைசியாக வெளியான வர்த்தமானியில் புதிய திருத்தங்கள் உள்ளடக்;கப்படவில்லை. அதுமட்டுமன்றி கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பப்பட்டது திருத்தப்படாத 20ஆவது திருத்தமாகும். எனவே, முன்வைக்கப்படாத திருத்தம் ஒன்றுக்கு வாக்களிக்க முடியாது என்ற அடிப்படையில் நோக்கினால், கிழக்கில் நிறைவேற்றப்பட்டது நாம் மேலே குறிப்பிட்ட ஏற்பாடுகளைக் கொண்ட 20 திருத்தமே என்பதில் மறுபேச்சில்லை. அதற்கு ஆதரவளித்து விட்டு 'திருத்தப்படப் போகும் மெருகூட்டப்பட்ட 20 இற்கே வாக்களித்தாக' கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
இதைத்தான், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கிழக்கு மாகாண சபையினர் விளங்காத் தன்மையால் ஆதரவளித்திருக்கக் கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

உண்மைதான், அப்படியொரு திருத்தப்பட்ட திருத்தம் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணம் கைவசம் இருந்திருந்தால் முன்னாள் நீதியரசரான வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அதனை நிராகரித்திருக்க மாட்டார். 'புதிய திருத்தங்களோடு வந்தால் அதைப் பரிசீலிப்பது' என்று அந்த மாகாண சபை அறிவித்திருக்கவும் மாட்டாது. எனவே இல்லாதததை காட்டி ஒரு கண்கட்டி வித்தையே கிழக்கில் வாக்கெடுப்பு நடந்திருப்பதாக எதிர்த்து வாக்களித்தோர் கூறுகின்றனர்.

மாகாணங்கள் இணைப்பு
எவ்வாறிருப்பினும், 20ஆவது திருத்தம் என்பது தமிழர் வேண்டிநிற்கின்ற அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டுக்கு முரணானது எனக் கூறப்படும் நிலையில் த.தே.கூட்டமைப்பினர் ஏன் திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர் என்ற கேள்விக்கு போதுமான விடை கிடைக்கவில்லை. வடக்கில் நிராகரித்த த.தே.கூட்டமைப்பு கிழக்கில் ஏன் ஆதரிக்க வேண்டும்? அப்படியென்றால் வட மாகாண சபை த.தே.கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் அன்றி முதல்வர் விக்கினேஸ்வரனின் கைகளிலும், கிழக்கு மாகாணம் தலைவர் இரா. சம்பந்தனின் கட்டுப்பாட்டிலும் உள்ளதோ என்ற பல கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.
இதற்கு விடையாக, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து, இப்போது முஸ்லிம் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதற்கு வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, சமஷ்டி, மதச்சார்பின்மை ஆகிய விடயங்களை நிபந்தனைகளாக முன்வைத்துள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மனங்களில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்கும் பாங்கிலான இக்கருத்து, மறுபுறமாக வடக்கையும் கிழக்கையும் இணைக்க விரும்பாத பெருமளவான முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 

குறிப்பாக, இவ்விணைப்புக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வரும் தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, 'கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தை நீடிக்க முடியாது. அது ஜனநாயக விரோத செயல்' எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 'யாருடைய தேவைக்காகவும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது' என்று கூறியுள்ளார். 20இற்கு ஆதரவளித்ததை ஆட்சேபித்து கிழக்கில் கடையடைப்பும் ஆர்ப்பாட்டமும்  நடந்துள்ளது.

த.தே.கூட்டமைப்பு ஒரு கனதியான காரணமின்றி கிழக்கில் ஆதரவளித்திருக்கவும் மாட்டாது என்பது பட்டவர்த்தனமான விடயம். அப்படியாயின், இந்த நிபந்தனையை தெரிந்தவர்களாகவே கிழக்கு முதலமைச்சரும் மு.கா. மாகாண சபை உறுப்பினர்களும் 20இனை துணை போயிருக்கின்றார்களா? என்ற கேள்வி எழுகின்றது. அதேபோல், கிழக்கில் 20 நிறைவேற்றப்பட்ட பிறகு, அமைச்சரவையில் வைத்து 'எனக்கு 20 தொடர்பில் சிக்கல் இருக்கின்றது' என்று கூறியுள்ள மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம், த.தே.கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றாரா என்ற உப கேள்விக்கும் அவர் பதிலளிக்க வேண்டியுள்ளது.

20ஆவது திருத்தம் முற்றாக தோல்வி கண்டுவிடும் என்றோ வெற்றியடைந்து விடும் என்றோ இப்போது இறுதிமுடிவுக்கு வரமுடியாது. ஆனால், இதிலிருக்கின்ற முதலாவது விடயம், 20 ஆவது திருத்தத்தில் ஓரிரு நல்ல விடயங்கள் உள்ளடங்கியிருப்பினும் அதில் பல பாதகங்கள் இருக்கின்றது என்பதாகும். எனவேதான் அதற்கு ஆதரவளித்திருக்க வேண்டிய அவசியம் கிழக்கு மாகாணத்திற்கு கிடையாது. அத்தோடு இப்போது நிறைவேற்றப்பட்டிருப்பது மேலதிக திருத்தங்கள் உட்பொதிந்த 20ஆவது திருத்தம் எனக் கருதவே முடியாது. ஏனென்றால் அப்படியொன்று இன்னும் வெளியாகவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கும் நிபந்தனைக்கு இணங்கி அதனைச் செய்யவே முடியாது.

பேரம் பேசும் அரசியல் என்று சொல்லிக் கொண்டு சோரம்போவதும், திரும்பத்திரும்ப வரலாற்றுத் தவறுகளுக்கு துணைபோவதும் முஸ்லிம் தனித்துவ அரசியலுக்கு வெட்கக் கேடாகும்.

- ஏ.எல்.நிப்றாஸ் (17.09.2017)
20 இற்கான ஆதரவு: திருத்த முடியாத அரசியல் கலாசாரம்..  20 இற்கான ஆதரவு: திருத்த முடியாத அரசியல் கலாசாரம்.. Reviewed by Madawala News on 9/17/2017 06:56:00 PM Rating: 5