Yahya

20ஆவது திருத்தம்: கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தேடும் படலம் 
பலருக்கு சொந்தமான ஒரு விசாலமான காணியின் உரிமையை, அதைக்; கட்டியாளும் அதிகாரத்தை இன்னுமொரு தரப்பு மிகவும் சூசகமான முறையில் பறிக்க நினைக்கின்றது என்று எடுத்துக் கொள்வோம். 

அப்போது உரிமையாளர்களில் மூத்த பிள்ளைகள் தமது சொந்த நலனைக் கருத்திற் கொண்டு அதில் ஒரு பகுதியை அவர்களுக்கு தாரை வார்த்துவிட்டு, 'மீண்டும் காணியின் அதிகாரங்களை சில மாதங்களுக்குள் எழுதித் தருவோம்' என்று அவர்கள் வாக்குறுதியளித்ததாக குடும்பத்தினரிடம் கூற முடியுமா? இந்த வாக்குறுதியை நம்பி, காணியைக் கொடுத்துவிட்டு அது மீளத் தரப்படும் வரைக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே ஆளும் அதிகாரமில்லாமல் காலத்தைக் கடத்த முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு அந்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களே இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. இச்சூழலில், 9 மாகாண சபைகளுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடத்துதல் என்ற போர்வையில், எட்டு மாகாண சபைகளில் தேர்தலை ஒத்திப்போடவும், மாகாண சபைகளினது அதிகாரத்தை மிகவும் நுட்பமான முறையில் குறைப்பதற்கும் மத்திய அரசாங்கம் எடுக்கும் முயற்சியாக கருதப்படுகின்ற 20ஆவது திருத்தத்திற்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தேடும் படலம் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

கிழக்கு முதலமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸூம் ஐ,தே.க.வும் எப்படியாவது இதை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, 'பாதகமாக ஒன்றும் நடக்காது, எல்லா அதிகாரங்களும் பழையபடி கிடைக்கும்' என்ற தோரணையில் செயற்படுவது, வாய்மொழியை நம்பி காணியை (அதிகாரத்தை) எழுதிக் கொடுக்கும்; கதையை ஞாபகப்படுத்துகின்றது.

ஆதரவும் தோல்வியும்
அரசாங்கம் அரசியலமைப்பில் இருபதாவது திருத்தத்தை கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில், இந்த திருத்தத்திற்கு தேசிய ரீதியில் ஒரு தரப்பு ஆதரவையும் மறுதரப்பு எதிர்ப்பையும் தெரிவித்துள்ள ஒரு களச்சூழலில் இதற்கு எதிராக நீதிமன்றத்தில்; குறைந்தபட்சம் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. சமகாலத்தில் 20ஆவது திருத்தம் தொடர்பான மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அது நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை 20ஆவது திருத்தத்தை வடமத்திய மாகாண சபை மாத்திரமே அங்கீகரித்திருக்கின்றது. ஊவா மாகாண சபையில் இத்திருத்தம் தோல்வியடைந்துள்ளது. தென் மாகாண சபையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது பெரும் களேபரம் ஏற்பட்டதையடுத்து வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழர் ஆட்சியதிகாரத்தில் உள்ள வட மாகாண சபையில் தோற்கடிக்கப்படும் என்ற நிலையில், நிராகரிக்கப்பட்டுள்ளது.

வட-கிழக்கு என்ற ஒரு மாகாண சபையை உருவாக்கும் இந்தியாவின் கனவின் காரணமாகவே மாகாண சபை முறைமையே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றால் மிகையாகாது. எனவே, 13ஆவது திருத்தத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தை குறைக்கும் ஏதாவது ஒரு ஏற்பாட்டுக்கு வேறு எந்த மாகாண சபை ஆதரவளித்தாலும் கூட சிறுபான்மை மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் அந்;த ஆதரவை அளிக்க நியாயங்களில்லை. இங்கு நியாயங்கள் எனக் கூறப்படுவது மக்களுக்கான நியாயங்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதிகள் தமது சொந்த இலாபங்களை நியாயங்களாக முன்னிலைப்படுத்த முடியாது.

20ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்களின் பாரதூரத்தன்மையை புரிந்து கொண்ட வட மாகாண சபை அதனை நிராகரித்திருக்கின்றது. கடந்த 4ஆம் திகதி வட மாகாண சபையில் 20ஆவது திருத்தம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இதனை வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொண்டால் தோற்றுவிடும் என்பது நன்றாக தெரிந்தது. மாகாண சபைகளுக்கு அதிகபட்ச அதிகாரங்களை வழங்க வேண்டுமென குரல் கொடுத்து வருபவர்கள் என்ற வகையில், தமிழ் தேசிய அரசியல்வாதிகள் ஒரு அதிகாரக் குறைப்புக்கு வழிவகுக்கும் 20 இனை ஆதரிக்க முடியாது என்பதை முன்னமே கூறிவிட்டார்கள்.

எனவே, இது வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் முழுமையாக தோற்கடிக்கப்படும் நிலையிருந்தது. ஆகவேதான் வட மாகாண முதலமைச்சரும் ஓய்வுநிலை நீதியரசருமான சீ.வி.விக்கினேஸ்வரன், '20ஆவது திருத்தத்திற்கு ஏகமனதான ஆதரவின்மை காணப்படுவதால் இதை வாக்கெடுப்புக்கு விடுவதில்லை' என்றும் 'அதில் ஏதாவது புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிப்பது' என்றும், சபையின் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இங்கு வாக்கெடுப்பு இடம்பெறவில்லை என்றாலும், உண்மையில் வட மாகாண சபை 20 இற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. ஆனால், முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராகவும் சிறுபான்மையினர் ஆட்சியதிகாரத்தின் பிரதான பங்காளிகளாகவும் இருக்கின்ற கிழக்கு மாகாண சபையில் நிலைமைகள் தலைகீழாக உள்ளன. முதலமைச்சரே முன்னின்று அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொடுத்து, தனக்கும் தனது கட்சிக்கும் மத்திய அரசாங்கத்திடம் 'புள்ளிகளை' பெற்றுக் கொள்ள எத்தனிக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

தொடர் ஒத்திவைப்பு
கிழக்கு மாகாண சபையில் கடந்த மாதம் 25ஆம் திகதி இதுதொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் இது 29ஆம் திகதிக்கும், அதன்பின்னர் இம்மாதம் 7ஆம் திகதிக்கும் பிற்போடப்பட்டது. 20இற்கு ஆதரவாக உறுப்பினர்களை வசப்படுத்தும் வேலைகளும், டீல்களும், மூளைச்சலவை செய்யும் முயற்சிகளும் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சபையில் இத் திருத்தத்தை நிறைவேற்றும் நிலைமைகள் இல்லை என்பதால் கடந்த 7ஆம் திகதியும் அத் திருத்தத்தை சபையில் வாக்கெடுப்புக்கு விட முடியாமல் போய்விட்டது.

கிழக்கு முதலமைச்சர் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம், ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களின் சார்புப் போக்குள்ள ஒரு கட்சியாக மு.கா.வை வழிநடாத்தியிருக்கின்றார். 18ஆவது திருத்ததிற்கு பாராளுமன்றில் ஆதரவு வழங்கியதும், திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவைப் பெற்றுக் கொடுத்ததும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என ஆரம்பத்தில் தடுமாறியதும் இந்த அடிப்படையிலேயே இடம்பெற்றது.

தேர்தல் ஒன்று நெருங்கும் கட்டத்தில் மாத்திரமே அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை மு.கா. பெரும்பாலும் எடுத்திருக்கின்றது. குறிப்பாக, கடந்த தேர்தலில் பரவலான இடங்களிலும் மு.கா.,ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிட்டது. இந்த உடன்பாட்டிற்கு கைமாறாகவோ என்னவோ கண்டியில் ஐ.தே.க.வில் போட்டியிட்டு வெற்றிபெறும் வாய்ப்பும் கட்சித்தலைவர் ஹக்கீமுக்கு கிடைத்திருந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் அதேபோல் கிழக்கு முதல்வர் நஸீர் அகமட்டுக்கும் இடையில் நெருக்கமான பிணைப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இவ்வாறிருக்க, 20ஆவது திருத்தம் என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணத்தில் உருவான திட்டம் எனக் கருதப்படுகின்றது. எனவேதான் எப்பாடுபட்டாலும் கிழக்கில் அதனை நிறைவேற்றிக் கொடுத்து பிரதமரிடம் நல்லபிள்ளையாக ஆவதற்கு தலைவரும் முதல்வரும் முயற்சி செய்கின்றனர் எனக் கூறப்படுகின்றது. ஐ.தே.க.வின் மாகாண சபை உறுப்பினர்களும் இதற்காக கூட்டுச் சேர்ந்துள்ளனர்.  

பகீரத பிரயத்தனங்கள்
கிழக்கு மாகாண சபையில் இம்மாதம் 7ஆம் திகதி 20ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது. அன்று காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்கள்கூட்டம் ஆரம்பித்திருக்க 9 மணிக்குப் பிறகு அவசரஅவசரமாக வந்த முதலமைச்சர் நஸீர் அகமட், '20ஆவது திருத்தத்திற்கு நாம் அனுமதி வழங்கினாலும் வழங்காவிட்டாலும் மாகாண சபைகளின் காலத்தை ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு அரசாங்கம் நீதிமன்றத்தின் ஊடாகவோ, பாராளுமன்றத்தின் ஊடாகவோ அனுமதியைப் பெற்றுவிடும். எனவே, நாம் இதை நிறைவேற்றுவோம்' என்ற தொனியில் கூறியதாக அங்கிருந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி (த.தே.கூட்டமைப்பு மற்றும் ஐ.ம.சு,மு.வில் போட்டியிட்ட கட்சிகளின்) உறுப்பினர்கள் 'நீங்கள் நினைப்பது மாதிரி எம்மால் செய்ய முடியாது. இத் திருத்தத்தில் மாகாண சபைக்கு பாரிய பாதகங்கள் இருக்கின்றன. அதனாலேயே வட மாகாண சபையும் இதை தோற்கடித்துள்ளது. எனவே நாம் இதனை அங்கீகரிக்க மாட்டோம்' என்று கூறியுள்ளனர். கண்ணைமூடிக்கொண்டு எம்மை கையை உயர்த்தச் சொல்கின்றீர்களா? எனக் கேட்டுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், 'இல்லை இல்லை இதில் சில புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன' எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு 'அப்படியாயின் அதற்கு ஒரு முறையிருக்கின்றது. அப்புதிய திருத்தங்கள் உள்வாங்கப்பட்டு அது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, உத்தியோகபூர்மாக சபைக்கு வரட்டும் அதன் பிறகு பேசுவோம்' எனக் கூறியுள்ளனர். அதையும் மீறி உங்களுக்கு அவசரம் என்றால் உடனே கொண்டு வாருங்கள் நாங்கள் தோற்கடித்துக் காட்டுகின்றோம் என்று சவால் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ரகசிய காய்நகர்த்தல்கள்
இருப்பினும், கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்த பிறகு, 20ஆவது திருத்தத்தை எவ்வாறு சூசகமான முறையில் நிறைவேற்றுவதற்கு பல காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் நஸீர் அகமட் தலைமையில் மு.கா.வும், தவிசாளர் ச.கலபதி தலைமையில் ஐ.தே.க.வும் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் நம்பகமாக அறிய முடிகின்றது.

குறிப்பாக, சில வரப்பிரசாதங்களை தருவதாக கூறி பேரம் பேசி எதிர்தரப்பில் உள்ள ஓரிருவரை ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், ஒருசிலரை நடுநிலை வகிக்கச் செய்து விட்டு வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

கடைசிக் கட்டத்தில் 'சூறாவளி வீசப்போகின்றது' என்று சொல்லி சிலரை சூசகமாக வெளியேற்றி விட்டு யாரும் எதிர்பாராத தருணத்தில் தமக்கு விரும்பியதை சாதித்துவிடவும் முயற்சிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கூறினார்.
ஆனால், எந்த முயற்சிகளும் பயனளிக்கவில்லை. சில தளம்பல்நிலை உறுப்பினர்கள் தடுமாறியிருக்கலாம் என்றாலும் பொதுவாக தமிழ் தேசியக் கூட்டமைப்போ எதிர்க்கட்சியில் உள்ள வேறு சிறு கட்சிகளின் உறுப்பினர்களோ 20 இனை எதிர்க்கும் தமது முடிவில் உறுதியாக இருந்ததால் திட்டங்கள் பலிக்கவில்லை. இந்நிலையில் நாளை 12ஆம் திகதி 20ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக எதிர்க்கட்சியினர் நடத்திய ஊடக சந்திப்பில் அங்கு நடந்த விடயங்கள் சாடை மாடையாக குறிப்பிடப்பட்டுள்ளன. 

இங்கு முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான சி. சுந்திரகாந்தன் (பிள்ளையான்) 'இந்த பாதகமான திருத்தத்தை பின்கதவால் நிறைவேற்றிக் கொள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றார்' என்று பகிரங்கமாகவே சொல்லியிருக்கின்றார். அதுமட்டுமன்றி, இதில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் 20 இனை தோற்கடிப்போம் என்றும் எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருக்கின்றன.

வரலாற்றுத் தவறு
மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்களை மாநிலங்களை நோக்கி பகிர்ந்தளிக்கும் நோக்கிலேயே இலங்கையில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் சொல்லப்போனனால், வடக்கையும் கிழக்கையும் மையமாகக் கொண்டு வியாபித்திருந்த இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு ஒரு அடிப்படையாகவே இது நோக்கப்பட்டது. எனவே, அந்த அதிகாரங்களில் குறைப்புச் செய்யும் எந்தவொரு அரசியலமைப்பு திருத்திற்கும் இவ்விரு மாகாண சபைகளும் ஆதரவளிக்க முடியாது.

உத்தேச 20ஆவது திருத்தம், அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடாத்தப்படல் வேண்டும் என்ற ஒரு நல்ல விடயத்தைக் கொண்டிருக்கின்றது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டியதே. ஆயினும், அனைத்து மாகாணசபைகளும் கலைக்கப்பட்டதாக இருக்க வேண்டிய திகதி பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் என்றும், அத்திகதி இறுதியாகத் நிறுவப்பட்ட மாகாணசபையின் பதவிக்கால முடிவுத் திகதிக்குப் பின்னராக இருக்கக் கூடாது என்றும் இது குறிப்பிடுகின்றது.

அதேபோன்று, (தேர்தல் நடைபெறும்) திகதிக்கு முன்னர் முடிவடையும் மாகாண சபையின் ஆட்சிக்காலம் தேர்தல் திகதி வரை நீடிக்கப்பட்டதாக கருதப்படுகின்ற அதேநேரத்தில் குறித்துரைக்கப்பட்ட (தேர்தல்) திகதியில் முடிவடையாதிருக்கின்ற மாகாண சபையின் ஆட்சிக்காலம் அத்திகதியில் முடிவடைதல் வேண்டும் என்றும் 20ஆவது திருத்தத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, ஏதேனும் காரணத்தால் மாகாண சபையொன்று கலைக்கப்படும் பட்சத்தில் அந்த சபையின் தத்துவங்கள், குறித்துரைக்கப்பட்ட (தேர்தல்) திகதி வரை பாராளுமன்றத்தால் பிரயோகிக்கப்படும் என்று குறித்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, மாகாண சபைக்கு பெயரளவிலேனும் இருக்கின்ற அதிகாரங்களை சூசகமான முறையில் மத்திய அரசாங்கத்தை நோக்கி இழுத்தெடுக்கும் ஏற்பாடுகளை இது கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதுமட்டுமன்றி, இன்னும் இரண்டு வருடமோ அல்லது 18 மாதங்களோ தேர்தல்  பிற்போடப்படுமாக இருந்தால் கிழக்கில் அதற்கு சமமான காலமும், (ஊவா தவிர்ந்த) ஏனைய மாகாண சபைகளில் அதற்கு சமமான அல்லது அதைவிட குறைந்த காலமும் ஆட்சிக்கட்டமைப்பு சீர்குலைந்து காணப்படும். ஒருவேளை முதலமைச்சர் ஆட்சியதிகாரத்துடன் இருந்தாலும் அவருடைய மூக்கணாங்கயிறு கொழும்பிடமே இருக்கும் வாய்ப்புள்ளது.

பெரும்பான்மையினரின் வசமுள்ள சபைகளுக்கு 20ஆவது திருத்தத்தால் இனரீதியான அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படப் போவதில்லை. ஆனபோதும் கூட வேறு பல மாகாண சபைகளில் 20ஆவது திருத்தம் தோல்வி கண்டுள்ளது. அதனாலேயே, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்த வரைபில் ஏதாவது திருத்தத்தை, மாற்றத்தை ஏற்படுத்தி, மீண்டும் மாகாண சபைகளுக்கு அனுப்ப அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்று 18 மாதங்களுக்கு மாகாண ஆட்சியை நீடிக்கவும் மந்திராலோசனைகள் நடத்தப்படுகின்றன.

நிலைமை இவ்வாறிருக்க, கிழக்கு மாகாண சபையில் எப்படியாவது இதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் அவசரப்படுவது வேறு விடயம். ஆனால் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் ஏன் அவசரப்படுகின்றது. திவிநெகுமவுக்கு அன்று ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது போல இப்போது 20இற்கு ஆதரவைத் திரட்டும் முயற்சி எதற்காக? வடக்கு முதலமைச்சருக்கு உள்ள நெஞ்சுரம் கிழக்கு முதல்வருக்கு ஏன் இல்லை? என்று மக்கள் கேட்கின்றனர்.

இப்போதிருக்கின்ற களநிலைவரத்தின் படி கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் அது தோற்கடிக்கபடுவதே சாத்தியமாகும். ஆனால், இதற்கு ஆதரவு திரட்டுவதற்காக எதிர்த்தரப்பில் உள்ள உறுப்பினர்கள் வெகுமதிகளைக் கொடுத்து, பேரம் பேசப்பட்டு, ஆதரவாளர்களாக மாற்றப்படுவார்கள் என்றால் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறு கிழக்கில் நடந்தேறலாம்.

அவ்வாறு எதுவும் செய்துவிடக் கூடாது என்பதே மக்களினதும் சமூக நலன்விரும்பிகளதும் வேண்டுகோளாக இருக்கின்றது. தமிழர்களின் கைவசமுள்ள வட மாகாண சபையில் 20ஆவது திருத்தம் நிராகரிக்கப்பட்டிருக்க, கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதனை எதிர்க்கின்ற நிலையில், இவ்வாறான ஒரு திருத்தத்திற்கு ஆதரவு தேடிக் கொடுத்து அரசுக்கு நல்லபிள்ளையாக காட்டும் முயற்சி முருஸ்லிம்களின் அடையாள அரசியலுக்கு நல்லதல்ல. 

ஒருவேளை, மீண்டும் சில மாற்றங்களோடு 20ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டால் அப்போது அது குறித்து பரிசீலனை செய்யலாம். இப்போது யாருக்காகவும், எதற்காகவும் அவசரப்படத் தேவையில்லை.

மீண்டும், கண்ணைத் திறந்துகொண்டே அரசியல்வாதிகளும் படுகுழியில் விழுந்து, தமது சமூகத்தையும் வீழ்த்திவிட வேண்டாம் !

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 10.09.2017)
20ஆவது திருத்தம்: கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தேடும் படலம் 20ஆவது திருத்தம்: கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தேடும் படலம் Reviewed by Madawala News on 9/10/2017 01:44:00 PM Rating: 5