Kidny

Kidny

20வது திருத்தச் சட்டமும், நமது பாராளுமன்ற உறுப்பினர்களின் திண்டாட்டமும்..!




நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பெரும்பாண்மை  சிங்கள அரசாங்கங்களினால் அவ்வப்போது கொண்டுவரப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள், சிறுபான்மை மக்களின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக கொண்டுவரப்பட்டதா? அல்லது பெரும்பாண்மை சமூகத்தின் இருப்பை பலப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதா? என்று பார்த்தோமேயானால் அது சிங்கள பெரும்பாண்மை சமூகத்தின் இருப்பை பலப்படுத்துவதாகவே அமைந்து வந்துள்ளது என்பதை நாம் அறியலாம்.

சுதந்திரம் பெற்றதன் பிற்பாடு நடந்த தேர்தல்களில் ஐ.தே.கட்சிக்கு,  இலங்கை பூராவும் பார்க்கும்போது  கூடுதலான மக்கள் வாக்களித்திருந்தாலும், தொகுதிவாரித் தேர்தல் முறை காரணமாக குறைவான உறுப்பினர்களை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 

இதனை நிவர்த்தி செய்யுமுகமாகத்தான் 1977ம் ஆண்டு பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிக்கொண்ட ஐ.தே.கட்சி அரசாங்கம், இனிமேல் தொடர்ந்தும் ஐ.தே.கட்சிதான் நாட்டில் ஆட்சிசெய்ய வேண்டும் என்ற என்னத்தில் விகிதாசார தேர்தல் முறையை கொண்டுவந்தது. அத்தோடு ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் சிங்கள பெரும்பாண்மை கட்சிகளே பாராளுமன்றத்தில் இருக்கவேண்டும் என்பதும் ஒரு காரணமாகும்.

1977ல் நடந்த பொதுத்தேர்தலில் தொகுதிவாரித் தேர்தல் மூலம் ஐ.தே.கட்சி 5/6 பெரும்பாண்மையை பெற்றிருந்தாலும், ஸ்ரீ.ல.சு.கட்சி 9 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது, அதே நேரம் 17ஆசனங்களை பெற்ற தமிழர் விடுதலை கூட்டணி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுக்கொண்டது.
இதன் காரணமாக தமிழர்களுடைய தனிநாட்டு கோரிக்கை வழுவாக பாரளுமன்றத்திலும் ஓங்கி ஒலிப்பதற்கும் அது காரணமாக அமைந்தது.

இதனை ஒரு தலைவலியாக உணர்ந்த அன்றய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள், இதற்கு முடிவுகட்டும் முகமாக ஆறாவது திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியபோது, அதனை எதிர்த்து அன்றய எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் தலைமையிலான அத்தனை எதிர்க்கட்சி பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களும், பாராளுமன்றத்தை பகிஷ்கரித்து வெளியேரினார்கள்.

அதன் பிற்பாடு நடந்த விகிதாசார தேர்தல்கள் அனைத்திலும், சிங்கள பெரும்பாண்மை கட்சிகளே ஆளும்கட்சியாவும் அதேநேரம் எதிர்க்கட்சியாகவும் இருந்துவருகின்றது என்பதை நாம் கண்டுவருகின்றோம்.

இந்த விகிதாசார முறைமூலம் அவர்கள் திட்டமிட்டு நண்மைகளைப் பெற்றாலும், இலங்கையில் சிறுபாண்மையாக வாழும் முஸ்லிங்களுக்கும், மலைநாட்டு தமிழர்களுக்கும் அது சாதகமாகவே அமைந்தது எனலாம், வட கிழக்கு தவிர்ந்த வெளி மாவட்டங்களில் சிதறி வாழும் சிறுபாண்மை மக்கள் கூடுதலான பிரதிநிதிகளைப் பெறுவதற்கு இது ஏதுவாக அமைந்தது.

இந்த நிலையில்தான் சகல அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி பதவி மூலம், வளம்பொருந்திய நாடாக இந்த நாட்டை  மாற்றமுடியும் என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் நினைத்ததன் காரணமாகவே அதனையும் நடைமுறைக்கு கொண்டுவந்தார்.  இந்த செயல்பாடுகள்  சிங்கள சமூகத்தின் மேலாண்மையை காட்டிநின்றாலும், இதன் காரணமாக சிறுபாண்மை சமூகத்துக்கு நண்மைகளும் ஏற்பட்டது என்பதில் கருத்துவேறுபாடு இல்லையெனலாம். 

இலங்கை முழுவதும் ஒரு தேர்தல் தொகுதியாக நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு ஒருவர்  முகம்கொடுக்கும் போது சிறுபாண்மையினரின் வாக்குகளும் அவர்களுக்கு தேவைப்படும் நிலை ஏற்படும், அது சிறுபாண்மை மக்களுக்கும் ஒரு சாதகமான நிலையையே ஏற்படுத்தி இருந்தது.
ஒரு ஜனாதிபதியானவர் சிறுபாண்மை மக்களின் வாக்குகளின் மூலம் தெறிவு செய்யப்படும்போது, அந்த மக்களுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு வழங்குவதற்கும் அது உதவியாகவும் இருந்து வந்தது.

ஆனால் பெரும்பாண்மை கட்சிகளுக்கு இந்த முறைமை வேறுசில பிரச்சினைகளையும் உண்டுபண்ணியது எனலாம். விகிதாசார தேர்தல் முறைமூலம் ஒரு கட்சிக்குள்ளேயே வேட்பாளர்கள் முட்டிமோதும் நிலையும் ஏற்படுவருகின்றது, அதனால் பல பிரச்சினைகளை கட்சித்தலைவர்கள் சந்தித்து வருகின்றார்கள் என்பதும் உண்மைதான்.

இது ஒரு வெளிப்படையான பிரச்சினையாக இருந்தாலும், விகிதாசார தேர்தல்முறை  மூலம், பெரும்பாண்மை கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு சிறுபாண்மை கட்சிகளின் தேவையும் ஏற்படுகின்றது.  அந்த நிலையினால் சிறுபாண்மை சமூக கட்சிகளின் பேச்சுக்களுக்கும் அடிபணியவேண்டிய  நிலை ஏற்படுவதன் காரணமாக, சில மேலாதிக்க என்னம் கொண்ட சிலபேருக்கு எறிச்சலை ஊட்டி வருக்கின்றது என்பதையும் நாம் கவணித்து வருகின்றோம்.

இதன் காரணமாகத்தான் சகல அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்துக்கு அந்த அதிகாரங்களை வழங்க முற்படும் செயலாகும்.

அதே நேரம் விகிதாசார முறையை ஒழித்து தொகுதிவாரி தேர்தல் முறையை கொண்டுவந்தால், சிறுபாண்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிடலாம், அதன் மூலம் அவர்களின் பேரம்பேசும் சக்தியை இல்லாதாக்கிவிடலாம் என்ற மறைமுகமான திட்டமும் அவர்களிடம் உள்ளது எனலாம்.

இதன் காரணமாகவே இந்த நல்லாட்சி அரசாங்கம் 20வது தேர்தல் திருத்தச்சட்டத்தின் மூலம் விகிதாசார தேர்தல் முறையை ஒழிப்பதற்கு முயற்ச்சிக்கின்றது என்ற உண்மையை சிறுபாண்மை கட்சிகள் புரிந்து கொண்டதா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
இந்த 20வது தேர்தல் சட்டதிருத்தத்தின் மூலம் சிறுபாண்மையினருக்கு இழப்புகளே அதிகம் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக இருந்துவருகின்றது.

60வீதம் தொகுதிவாரியாகவும், 40வீதம் விகிதாசார முறைமூலமும் பிரதிநிதிகளை தெறிவு செய்ய ஏற்பாடாகி இருந்தாலும், அதனை எப்படி தெறிவு செய்து கொள்வது என்றவிடயத்தில் பொதுமக்களுக்கு பூரண விளக்கம் இல்லாமல் உள்ளது. 

இது சம்பந்தமாக எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவாக உள்ளனரா என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்படுகின்றது. 

அவர்களின் பாராளுமன்ற உரைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இது சம்பந்தமாக பேசும் போதும் பட்டும் படாமலுந்தான் பேசிவருவதை காண்கின்றோம்.

இந்த 20வது திருத்தச்சட்டத்தின் மூலம் சிறுபாண்மை மக்களுக்கு தீமையா? அல்லது நண்மையா? என்று அர்த்தம் திருத்தமாக இவர்கள் இதுவரை கூறவில்லை, ஆனால் சட்டதிருத்தம் பாராளுமன்றத்துக்கு வரும்போது மட்டும், எங்களுக்கு அந்த பிரச்சினை உள்ளது இந்தப்பிரச்சினை உள்ளது என்று கூச்சலிட்டு விட்டு, அதே நிமிடம் அந்த சட்டமூலத்தை ஆதரித்தும் வாக்களிப்பார்கள். இப்படியானவர்களை நம்பித்தான் சிறுபாண்மை சமூகம் காலத்தை ஓட்டிக்கொண்டு போகின்ற நிலைமையாகும்.

என்னதான் இருந்தாலும் நூற்றுக்கு நூறு வீதம் இந்த சட்டமூலத்தின்  சாதக பாதக நிலையை அறிந்துகொள்ளாமல் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்களேயானால், அது எதிர்காலத்தில் நமது சமூகத்துக்கு செய்யும் பெரிய துரோகமாகவே கருதவேண்டிவரும் என்ற உண்மையை நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கவணத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே, பெரும்பான்மை சமூகம் ஒருகாலும் சிறுபான்மை சமூகத்தின் மீது, இந்த விடயத்தில் கருணைகாட்டாது என்பதை நமது சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். அதன் காரணமாக நமது சமூக புத்திஜீவிகள் இதனை கவணத்தில் எடுத்து சிந்தித்து செயல்பட்டு நமது பாராளுமன்ற உறுப்பினர்களை சரியான வழியில் வழிநடத்த முன்வர வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.

20வது திருத்தச் சட்டமும், நமது பாராளுமன்ற உறுப்பினர்களின் திண்டாட்டமும்..! 20வது திருத்தச் சட்டமும்,  நமது பாராளுமன்ற உறுப்பினர்களின் திண்டாட்டமும்..! Reviewed by Madawala News on 9/04/2017 04:08:00 PM Rating: 5