Ad Space Available here

20வது திருத்தச் சட்டமூலம் ஒரு அரசியல் சதுரங்கத்தின் முக்கிய காய், அதனை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.இன்று (04-09-2017) இடம்பெற்ற வடக்கு மாகாணசபையின் 104வது விஷேட அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார், அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் 20வது திருத்தச்சட்டமூலத்தை இரண்டு அடிப்படைகளில் நோக்க முடியும், ஒன்று இலங்கை அரசியலமைப்புச் சட்ட ரீதியாக நோக்கலாம், அடுத்து அரசியல் ரீதியாக நோக்கலாம்.


 எங்களுடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதுவிடயத்தில் ஒரு முழுமையான விளக்கத்தை வழங்குவார் என்று நாம் எதிர்பார்த்தோம், ஆனால் அவர் மேலோட்டமான விளக்கம் ஒன்றையே வழங்கியுள்ளார், இது போதாது, இந்த சபையிலே 20வது திருத்தச்சட்டமூலம் குறித்த உறுப்பினர்களின் முழுமையான கருத்துக்களும் கேட்டறிந்தே இறுதி முடிவு எடுக்கப்படுதல் வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்தும், தனிப்பட்ட ரீதியிலும் இதனை நிராகரிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். இச்சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படின் அதனை நாம் மீண்டும் பரிசீலிக்க முடியும், திருத்தங்களை நாம் முன்மொழியவேண்டிய அவசியம் கிடையாது, ஏனெனில் இவ்விடயம் குறித்து பாராளுமன்றிலே கட்சித்தலைவர்கள் மாநாட்டிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு சில விடயங்களை முன்வைத்திருக்கின்றது. அதாவது தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்பு இவை இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாகும், இதனை நாம் கருத்தில் எடுத்தல் அவசியமாகும். 


முதலமைச்சர் குறிப்பிட்டதுபோல மக்களின் தேர்தல் உரித்தை இச்சட்டமூலம் பாதிக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிமுக்கிய நியாயமாக இருக்காது, ஏனெனில் இச்சட்டமூலம் தேர்தல் உரித்தைப் பாதிக்காது, அத்தோடு ஒரேதினத்தில் தேர்தல்கள் என்ற விடயத்தையும் மக்களே எதிர்பார்க்கின்றார்கள். இதன் சட்டரீதியான வியாக்கியானங்களுக்குள் நான் பெரிதாக கருத்துரைக்க விரும்பவில்லை, மாறாக அரசியல் ரீதியாக ஒரு சில அவதானங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.


நல்லாட்சி அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக மஹிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை வைத்து சில பூச்சாண்டிகளைக் காட்டி வருகின்றது. அரசியலமைப்பு உருவாக்க விடயத்திலும் அரசாங்கம் இதே பூச்சாண்டியைத்தான் காட்டி வருகின்றது, நாட்டின் இன்னோரன்ன விடயங்களிலும் மஹிந்த பூச்சாண்டியைத் தான் நல்லாட்சி அரசு காட்டி வருகின்றது. இது உடனடியாக நிறுத்தப்படல் அவசியமாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த ஒரு தேர்தல் அவசியப்படுகின்றது; ஆனால் இலங்கை அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகின்றது. எனவேதான் தேர்தல்களை ஒத்திவைக்கின்ற சட்டமூலங்களை அது அறிமுகம் செய்கின்றது. 


மஹிந்த பூச்சாண்டி காட்டவேண்டிய அவசியம் இலங்கை அரசாங்கத்துக்கு இருப்பது வெட்கக்கேடான விடயமாகும், பாரிய மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய ஆயுள்காலம் நேற்றைய தினத்தோடு முடிவடைகின்றது, அதிலே நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் ஒரு சில முறைப்பாடுகளே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன, இவை குறித்து முறையாக விசாரணைகள் நடாத்தினால் இப்போது அரசாங்கத்தோடு இருக்கின்ற பல அமைச்சர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும், எனவே இதனைக் கைவிட முயற்சிக்கப்படுகின்றது. அதேபோன்றுதான் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் மீதும் ஏனைய ராஜபக்‌ஷக்கள் மீதும் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன அவற்றை இதுவரை முறையாக கையாளவில்லை அவற்றை உரிய முறையில் விசாரணை செய்து தீர்ப்புக்களை வழங்கினால் மஹிந்த பூச்சாண்டி அவசியப்படாது. இதனை நல்லாட்சி அரசு முன்னெடுப்பதற்குத் தவறியிருக்கின்றது.

இப்போது தேர்தல்களைப் பின்போடுகின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது, 20வது திருத்தச் சட்டமூலம் ஒரு அரசியல் சதுரங்கத்தின் முக்கிய காய், அதனை முழுமையாக நிராகரிக்க வேண்டும். இதனை நாம் வரவேற்க முடியாது. இதனை நாம் முற்றுமுழுதாக நிராகரித்தல் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.


தகவல் எம்.எல்.லாபிர்

20வது திருத்தச் சட்டமூலம் ஒரு அரசியல் சதுரங்கத்தின் முக்கிய காய், அதனை முழுமையாக நிராகரிக்க வேண்டும். 20வது திருத்தச் சட்டமூலம் ஒரு அரசியல் சதுரங்கத்தின் முக்கிய காய், அதனை முழுமையாக நிராகரிக்க வேண்டும். Reviewed by Madawala News on 9/04/2017 06:49:00 PM Rating: 5