Yahya

39 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாக சேவை புரிந்த ஏ.சி.எஸ். ஹமீத்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வருடம் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 40 வருட கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்படியாயின் கடந்த வருடம் 39 வருடம் பிரதமருக்கு பூர்த்தி, இதற்கு முன்னர் 39 வருடங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் ஒருவர் இருக்கின்றார். இவரும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்திய பண்முக ஆளுமை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெ ளிவிவகார பிரதியமைச்சராக இருந்தபோது அவர் வெ ளிவிவகார அமைச்சராக இருந்தவர். 

அந்த கணவான் அரசியல்வாதி வேறுயாருமல்ல 20 நூற்றாண்டில் இலங்கை அரசியல் வரலாற்றில் தனியிடம் பிடித்திருந்த ஏ.சி.எஸ்.ஹமீத் ஆவார்.

 1927 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அக்குறணையில் பிறந்த ஏ.சி.எஸ்.ஹமீத், கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்றர். மாத்தளை வின்ட்சர் கல்லூரியில் ஒரு ஆசிரியராக தனது சமுகப் பணியை ஆரம்பித்தார். ஆசிரியராக, அதிபராக கல்விப் பணி ஆற்றிவந்த காலகட்டத்தில் பொதுமக்களின், குறிப்பாக பெரும்பான்மைச் சமூக மக்களின் உந்துதலால் 1950 களில் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர். அவர் 1960 ஆண்டு மார்ச் தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் 4 வது பாராளுமன்றத்தில் உறுப்பினரானார். 

பின்னர் 1960 ஜுலை, 1965, 1970, 1977, 1989, 1994 ஆகிய வருடங்களில் இலங்கையின் 5 ஆம், 6 ஆம், 7 ஆம், 8ஆம், 9 ஆம் மற்றும் 10 ஆவது பாராளுமன்றிலும் இடம்பிடித்தார். 1960 ஆண்டு முதல் தோல்வியுறாது தொடர்ந்து மரணிக்கும் வரை மக்களால் தெரிவுசெய்யப்பட பிரதிநிதியாக திகழ்ந்தார்.

ஏ.சி.எஸ். ஹமீத் எனும் இம்மகான் இந்த நாட்டின் முப் பெரும் சமூகங்களாலும் முழுமையாக மதிக்கப்பட்ட ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார். இன, மத, குல, அரசியல் பேதங்களுக்கு அப்பால் நின்று அப்பழுக்கற்ற சேவையாற்றி மக்கள் உள்ளங் களிலே நிலையான ஓரிடத்தைத் தனதாக்கிக்கொண்டவர்.

இத்துடன் இலங்கை வரலாற்றில் முதலாவது வெ ளிவிவகார அமைச்சராக பதவிவகித்த பெறுமை ஏ.சி.எஸ்.ஸையே சாரும். அது மாத்திரமின்றி இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் வெளிவிவகார அமைச்சு எனும் பிராதான அமைச்சு பதவியை வகித்த ஒரே நபர் அவராவார். அத்துடன் நீதி அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார்.

இன்றைய, நாளைய அரசியல்வாதிகளுக்கெல்லாம் உதாரணத்துவமாக வாழ்ந்து காட்டிய பெருமகன் ஏ.சி.எஸ். ஹமீத் ஆவர். இதனால்தான் அவரால் எண்பது சதவீதமான பெரும்மான்மை யினர் மத்தியில் 39 ஆண்டுகாலம் தனது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது.

அரசியல்வாதிகள் என்போர் மக்களிடம் பெற்ற ஆணையைப் பரிபூரணமாக நிறைவேற்றும் தன்மையோடு விளங்க வேண்டும். இல்லாத பட்சத்தில் மக்களாலேயே நிராகரிக்கப் படுவதற்கு முன் தாமாகவே அரசியலிலிருந்து ஓய்வுபெறும் கலாசாரத்தை ஏற்க தம்மைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற யதார்த்தத்தையும் போதித்தவர் அவர்.

1960 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அக்குறணை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ஏ.சி.எஸ். அனைத்து இன மக்களுக்கும் பாரபட்சமின்றி தன் சேவையை ஆற்றிக்கொண்டிருந்த சம காலத்திலேயே உலக விவகாரங்கள் தொடர்பான துறையில் ஈடுபட்டு நாட்டின் மேம்பாட்டுக்கான வழிவகைகளையும் மேற்கொண்டார்.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே தொகுதி நிர்ணய அடிப்படையில் பெரும்பான்மையினரைப் பெருவாரியாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஹாரிஸ்பத்துவ எனும் இரட்டை அங்கத்தவர் தொகுதியில் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது, இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இலக்கின்றிப் பயணம் செய்துகொண்டிருந்த வேளையில் இப்பதவி இவரிடம் வழங்கப்பட்டிருந்தது. ஏ. சி. எஸ். ஹமீதுக்கு உலக விவகாரங்கள் தொடர்பில் ஏற்கனவே இருந்த ஆழ்ந்த பரிச்சயம், உலகத் தலைவர்களோடு குறிப்பாக முஸ்லிம் நாடுகளோடு கொண்டிருந்த நட்புறவு என்பவற்றைப் பிரயோ கித்து இலங்கையின் புகழை உலக அரங்கில் ஏற்றி வைப்ப தில் அவர் பெரும் வெற்றி கண்டார்.

அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் அமைப்பு நாடுகளின் கூட்டத் தொடர், பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினது கூட்டத் தொடர்கள், ஆயுத பரிகரண மாநாடுகள், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுக ளின் அமைப்பு என்பற்றில் கலந்துகொண்டு வெளியுறவு அமைச்சர் என்ற ரீதியில் அவர் வெளியிட்ட கருத்துக்களும், அபிப்பிராயங்களும், வேண்டுகோள்களும் உலக அரங்கில் இலங்கையைக் கீர்த்திமிக்க நாடாகப் பரிணமிக்க வைத்த அதேவேளை, நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும், அபிவிருத்திக்கும் பெரும் சக்தியாகவும் விளங்கின.

அரசியலில் பரந்த அறிவைப் பெற்றிருந்த இவர் பாராளு மன்ற நடவடிக்கைகளின் போது, வாதப் பிரதிவாதங்களின் போது எதிரணியினரை திணரச் செய்துள்ளதோடு, இவரின் கருத்துக்களை அங்கீகரித்து அதன் பிரகாரம் செயல்பட வகை செய்துள்ள சந்தர்ப்பங்களும் அனந்தம்.

சகல தரப்பி னரதும் கருத்துக்களைப் பணிவோடு ஏற்று மதிப்பளித்து எதிரணியினரின் கருத்துக்களாக இருந்தாலும் நியாயமான வற்றை ஏற்று நடைமுறைப்படுத்தும் தன்மை அவரிடம் காணப்பட்டது. நாட்டு நலனுக்கு அத்தியாவசியம் எனக் கருதும் பட்சத்தில் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது செயல்படும் துணிவும் இவரிடம் இருந்தது.
கலாநிதி ஏ. k. எஸ். ஹமீத் அரசியலில் உச்சாணியில் இருந்த போதிலும் தனது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அல்லல்கள், அநீதிகளை, தட்டிக் கேட்கத் தவறவில்லை. சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம் சமூகத்தின் குறைகளைக் களையவும் அவர் பின்வாங்கவில்லை. 

அதேவேளை முஸ் லிம் சமுதாயம் பின்னடைவு காண்பதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து நிவாரணம் பெற்றுக்கொடுப்ப திலும் அவர் முன்னின்றார்.

 முஸ்லிம் சமுதாயம் கல்வியில் சிரத்தை கொண்டால்தான் சமுதாயத்தின் நாளைய மறுமலர்ச்சி உறுதியாகும் என்பதை திடமாக நம்பிய அவர், அவருக்கு முன்னிருந்த தலைவர்கள் மேற்கொண்டது போல் கல்வியை மேம்படுத்தும் வழிமுறைகளை செயல்படுத்தினார். 

முஸ்லிம் கள் உயர் கல்வியிலும் தொழில்நுட்பக் கல்வியிலும் தம் திற மைகளைப் பறைசாற்ற வேண்டும் என்பதையும் அவர் சமுதா யத்துக்கு உணர்த்தினார். அதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் அவர் முனைப்போடு செயல்பட்டார்.

உலக நாடுகளில் குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் அன்னாருக்கிருந்த செல்வாக்கைப் பிரயோகித்து இலங்கையின் தூத ரகங்களை அங்கெல்லாம் நிறுவியதோடு, பல்வேறு தரப்பட்ட தொழில்வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அங்கு அனுப்பி அந்நிய செலாவணியை இங்கு குவிக்க வழிவகை மேற் கொண்டார். நாட்டின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே அச்சாணியாக அமைந்துள்ளது.

இது மட்டுமன்றி அராபிய நாடுகள் உட்பட அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தலைவர்களோடு தான் கொண்டிருந்த நட்பைப் பிரயோகித்து எமது நாட்டில் முதலீடுகளை மேற் கொள்ளுமாறும் அவர்களை ஊக்குவித்தார். அவர் தனது பதவிக் காலத்திலே முஸ்லிம்களுக்காக ஆற்றிய சேவைக ளைப் பற்றி அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கவில்லை. அது அவருக்கு அவசியமாக இருக்கவும் இல்லை.

அரசியலை அரசியலாக மட்டும் அவர் நோக்கவில்லை. அரசியலை சமூகக் கண்கொண்டும் அவர் நோக்கினார். மர்ஹூம் ஹமீத் பெரும்பான்மைச் சமூகத்தோடு ஒன்றி இருக்கவும். அவர்களுக்கு சேவை புரியவும் வேண்டிய கடப்பாடு உள்ளவராக இருந்ததால் தனது சமுதாய சேவை களைப் பிரபல்யப்படுத்தும் நிலையில் அவர் இருக்கவில்லை. இதனால் அவரதி பரந்துபட்ட சேவைகள் இன்று நினைவுகூறப்படாமலே இருக்கின்றன.

ஜனநாயக ஆட்சி முறையில் பண்பட்டிருந்த இலங்கை காலத்துக்குக் காலம் பதவிக்கு வந்த அரசாங்கங்களின் முரண்பட்ட கொள்கைகள் காரணமாக இளைஞர்கள் மத்தியில், இனங்கள் மத்தியில், பிரதேசங்கள் மத்தியில் சிக்கல் களை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. காலப்போக் கில் இது புரட்சியாகவும் தலையெடுத்தது.

இலங்கையிலே காலம் காலமாக நிலைபெற்று வந்த ஜனநா யக அரசியல் முறை தடம்மாறி, கசப்பான உணர்வுகளும் பசப்பான வார்த்தைகளும் மேலோங்கி, ஆயுத கலாசாரம் தலைதூக்கிய வேளையில், அதனை அடக்கு முறையில் ஒடுக்குவதை விடுத்து இளைஞர் அமைதியின்மைக்கான காரணங்களைக் கண்டுபிடித்து, அவற்றுக்குத் தீர்வு காண்பது தான் சிறந்த அணுகு முறை என்பதை அன்றைய ஆட்சியாளர்களுக்கு எடுத்துக் கூறிய அரசியல் ஞானி அவர்.

சமாதானத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த கலாநிதி ஏ.சி.எஸ். ஹமீத் நாட்டின் சமாதா னத்துக்கான விலையாக உயிரையே பணயம் வைத்து செயல் பட்டார். புரிந்துணர்வுட னான பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானத்தை நிலைநிறுத்த அரும்பாடுபட்டார்.

நாட்டில் நிலவிய இனப்பிரச்சினை பதவிக்கு வரும் அரசுகளுக்கு மட்டுமே பொறுப்பான ஒன்றல்ல. எதிரணியினருக்கும் அவதானம் செலுத்தவேண்டிய பாரிய தேசியப் பிர ச்சினை இதுவென்பதை அதிகார தரப்பில் இருந்த போதிலும், எதிர்க்கட்சியில் இருந்த போதிலும் அவர் வலியுறுத்தினார்.

அத்தோடு, அவர் மற்றுமொரு அரசியல் தலைமையையும் உருவாக்கிவிட்டுச்சென்றார். *தனது சகோதரியின் மகனும்  எனது சகோதரரும் தபால் தபால் சேவைகள் மற்றும் முஸ்லீம் கலாச்சார அமைச்சருமான கௌரவ. அப்துல் ஹலீமை பிரத்தியேக செயலாளராக நியமித்திருந்த ஹமீத் 1989 மாகாண சபை தேர்தலில் போட்டியிடச்செய்து வெற்றிபெற அவருக்கு மாகாண அமைச்சுப்பதவியும் பெற்றுக்கொடுத்தார். 1999 ஆம் ஆண்டு கணவான் அரசியல்வாதி ஏ.சி.எஸ். ஹமீத் இவ்வுலகை விட்டுப்பிரிய அவரது பாசரையில் வளர்ந்த அப்துல் ஹலீம் 2000 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இன்றுவரை மக்கள் பிரதிநிதியாக வலம்வருகிறார். ஏ.சி.எஸ்.ஹமீதின் அரசியல் வாரிசாக அவரது  பணிகளை தொடர்கிறார்.  இது ஏ.சி.எஸ். எமது சமூகத்திற்காக விட்டுச்சென்றிருக்கும் பெரும் அரசியல் சொத்து எனலாம்.

அரசியலை அடிப்படையாகக் கொண்டு தான் பிறந்த பொன் நாட்டுக்கும், தான் சார்ந்த சமுதாயத்துக்கும் அரும்பணி ஆற்ற இன்றைய காலகட்டத்தில் ஏ.சி.எஸ். ஹமீத் போன்ற தலைவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். தேசிய ஐக்கியத்துக்கும், சமுதாய விமோசனத்துக்கும், கனவான் அரசியலுக்கும் இன்றியமையாத காலகட்டத்தில் 1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி அன்னாரை இழக்க வேண்டி நேரிட்டது உலகத்துக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அல்லாஹ் அன்னாருக்கு சிறப்பான ஜென்னதுல் பிர்தெளஸை வழங்குவானாக.

தபால் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் கலாச்சார அமைச்சரின் ஊடக செயலாளர் ரஷி ஹாஷிம்.
39 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாக சேவை புரிந்த ஏ.சி.எஸ். ஹமீத் 39 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாக சேவை புரிந்த ஏ.சி.எஸ். ஹமீத் Reviewed by Madawala News on 9/06/2017 07:24:00 AM Rating: 5