Ad Space avaiable

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பதிலை எதிர்பார்த்து வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் கேள்வியெழுப்புகிறார் உதுமாலெப்பை


கிழக்கு மாகாண சபையின் 85வது சபை அமர்வு நாளை (25) திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.  இதன்போது கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள வைத்தியசாலைகளின் தரமுயர்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையில் பல கேள்விகளை முன்வைக்கவுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பதிலை எதிர்பார்த்தே எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை பின்வரும் பல கேள்விகளை சபையில் முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளை தரமுயர்த்துவது சம்மந்தமாக மத்திய அரசின் சுகாதார அமைச்சினால் கடந்த 2017.08.04ஆம் திகதி மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜே.எம்.ஜெயசுந்தர பண்டார தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் தரமுயர்த்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வைத்தியசாலைகளின் பெயர் விபரங்களை சுகாதார அமைச்சர் சபையில் தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசாங்க சுகாதார அமைச்சில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தரமுயர்த்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் எந்தெந்த வைத்தியசாலைகள் தரமுயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனும் விபரங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சபையில் தெரிவிக்க வேண்டும்.

அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை தள வைத்தியசாலையை தரம் B இல் இருந்து தரம் A க்கு தரமுயர்த்தாமல் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு வைத்தியசாலையையும் தரமுயர்த்த மாட்டேன் என சுகாதார அமைச்சர் கடந்த 2017.07.18ஆம் திகதி கிழக்கு மாகாண சபையிலும்,  பின்னர் சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் தெரிவித்த நிலையில் 90ஆயிரம் மக்கள் வாழும் சம்மாந்துறை வைத்தியசாலை தரம் B இல் இருந்து தரம் A க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதா? இல்லையெனில் சுகாதார அமைச்சர் அதற்கான காரணங்களை சபையில் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிக்கு விடுவித்து அபிவிருத்தி செய்யக்கோரும் தனிநபர் பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்டு சபை நிகழ்ச்சி நிரலிலும், சேர்க்கப்பட்டிருந்த வேளை கிழக்கு மாகாண முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும், மாகாண சபையின் கீழுள்ள கிண்ணியா தள வைத்தியசாலையை எக்காரணம் கொண்டும் மத்திய அரசின் சுகாதார அமைச்சிக்கு விடுவிக்க மாட்டோம். கிண்ணியா தள வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனத் தெரிவித்து அந்த நிகழ்ச்சி நிரலில் இருந்த கிண்ணியா தள வைத்தியசாலை தொடர்பான விடயத்தினை நீக்கினீர்கள் சுமார் 90ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பிரதேசத்திலுள்ள கிண்ணியா தள வைத்தியசாலை தரமுயர்வு எந்த நிலையிலுள்ளது. என்கின்ற விபரங்களையும் சுகாதார அமைச்சர் சபையில் தெரிவிக்க வேண்டும்.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்த போதும் அது இதுவரை பிரதேச வைத்தியசாலையாக இயங்கி வருகின்ற நிலையில் மத்திய சுகாதார அமைச்சில் 2017.08.04ஆம் திகததி நடைபெற்ற விசேட கூட்டத்தில் அட்டாளைச்சேனை வைத்தியசாலை எவ்வகையான தரத்திற்கு தரமுயர்த்துவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. என்பதனையும், அட்டாளைச்சேனை வைத்தியசாலை தற்போது எவ்வகையான தரத்திற்கு தரமுயர்த்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனையும் சுகாதார அமைச்சர் சபையில் தெரிவிக்க வேண்டும் எனவும் உதுமாலெப்பை கேள்வியெழுப்பவுள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பதிலை எதிர்பார்த்து வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் கேள்வியெழுப்புகிறார் உதுமாலெப்பை  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பதிலை எதிர்பார்த்து வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் கேள்வியெழுப்புகிறார் உதுமாலெப்பை Reviewed by Madawala News on 9/24/2017 03:38:00 PM Rating: 5