Kidny

Kidny

இரத்தினபுரி (கலபட ) பாரிய மண்சரிவு.90 குடும்பங்கள் வெளியேற்றம்.



எம்.எல்.எஸ்.முஹம்மத் - இரத்தினபுரி 


அண்மைக்காலமாக இரத்தினபுரி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து  மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தமும் மண்சரிவு அபாயமும் தொடர்ந்தும்  நிலவி வருகிறது .
 கடந்த சில வாரங்களாக இரத்தினபுரி - வேவல்கெடிய பிரதான பாதையை அண்மித்து  பல இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்ந்து நிகழ்ந்து  வருகின்றன .இதேபோன்று கடந்த 17 ஆம் திகதி முதல்  கலபட ஸில்வலேன் தோட்டத்தில் இரத்தினபுரி -வேவல்வத்த பிரதான பாதையை அண்மித்து பாரிய மண்சரிவுகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

இதனால் அப்பகுதியில் வசித்து வந்த  90 குடும்பங்கள் இரத்தினபுரி பிரதேச செயலாளரின் பணிப்புரைக்கிணங்க அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அரச அதிகாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.தற்போது 62 குடும்பங்களைச் சேர்ந்த 345 பேர் கலபட நுகேபொல பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளர்.

இரத்தினபுரி பிரதேச செயலகம்  சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இவர்களுக்கு  தேவையான ஒருசில கூடாரங்களை வழங்கியுள்ளது.எனினும்  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மேற்படி தோட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நுகேபொல  முகாமில் எவ்வித அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லையென அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஏனெனில் இங்கு அதிக அளவிலான  கைக் குழந்தைகள் ,சிறுவர்கள் ,பெண்கள் உட்பட கர்ப்பினித் தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் பலரும் பல தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதில்  பல அசௌகரியங்களையும்  சிரமங்களையும் எதிர்கொண்டு வருவதையும் அங்கு செல்லும் அனைவராலும்  அவதானிக்க முடிகிறது.

அத்துடன் தரம் 9 வரை வகுப்புக்கள் உள்ள ஸில்வலேன் தோட்டப் பகுதி மாணவர்கள் கல்வி கற்று வரும் இரத்தினபுரி கலபட தமிழ் வித்தியாலயமும்  மேற்படி மண்சரிவு பாதிப்புக்களையும் அபாயங்களையும் எதிர்கொண்டுள்ளது.இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியும் தடைப்பட்டுள்ளது.

அதேபோல்  மிகவும் வறுமைக்கு மத்தியில் தோட்டத் தொழில்களில் ஈடுபட்டு வரும் மேற்படி 90 குடும்பங்களின் வீடுகளும் நேரடியாக மண்சரிவு அபாயத்திற்கு உட்பட்டுள்ளதால் மீண்டும் அங்கு சென்று வசிக்க முடியாமல் தமது எதிர்காலம் குறித்து ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

மேற்படி மக்களின் நிலைமைகளை பார்வையிடுவதற்காக அரசியல் தலைவர்களும் முக்கிய அரச அதிகாரிகளும் வந்து சென்ற போதிலும் இதுவரை தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளும் போதுமான நிவாரண உதவிகளும் கிடைக்கப் பெறவில்லையெனவும் இம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இம்மக்களுக்கு மேலதிக நிவாரண உதவிகளை வழங்க விரும்புவோர் சில்வலேன் தோட்ட சமூக செயற்பாட்டாளர் பிரகாஷுடன் 077 9061785  தொடர்புகொள்ளுமாறு இம்முகாமில் தங்கியுள்ள மக்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.


 கடந்த காலங்களில் இரத்தினபுரி நகரில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களின் போது மிக வேகமாக செயற்பட்ட எந்தவொரு நிறுவனமும் அமைப்பும் தமக்கு உதவிசெய்ய முன்வராமை தொடர்பிலும் இம்மக்கள் தமது ஆழ்ந்த கவலைகளையும் வருத்தங்களையும் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி (கலபட ) பாரிய மண்சரிவு.90 குடும்பங்கள் வெளியேற்றம். இரத்தினபுரி (கலபட ) பாரிய மண்சரிவு.90 குடும்பங்கள் வெளியேற்றம். Reviewed by Madawala News on 9/29/2017 06:49:00 AM Rating: 5