Ad Space Available here

முஹம்மது ஹுசைன் முஹம்மது அஷ்ரபின் அரசியல் வாழ்க்கை.

வாழ்க்கைக் குறிப்பு 

எம்.எச்.எம் அஷ்ரப் முஹம்மத் ஹுசைன், மதீனா உம்மாஹ் தம்பதியின் புதல்வனாக 1948 ஒக்டோபர் 23 இல் அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை என்னும் கிராமத்தில் பிறந்தார். அதே பிரதேசத்தில் கல்முனை நகரில் வளர்ந்த இவருக்கு மூன்று சகோதரிகள் உண்டு. கம்பளையைச் சேர்ந்த பேரியல் இஸ்மாயில் என்பவரை தனது 29வது வயதில் திருமணம் செய்த இவருக்கு அமான் எனும் மகனொருவர் உள்ளார்.

தனது ஆரம்பக்கல்வியை கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்திலும், அதன் பின்பு கல்முனை பாத்திமா கல்லூரி, கல்முனை வெஸ்லி உயர் பாடசாலை மற்றும் அலெக்ஸாண்ட்ரியா கல்லூரியிலும் பயின்றார். சட்டக்கல்லூரிக்கு தெரிவான அஷ்ரப் 1975 ஆம் ஆண்டு அரச சட்டத்தரணியாக நியமனம் பெற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து சட்டமாணி, சட்ட முதுமாணிப் பட்டங்களைக் பெற்றுக் கொண்டார். இவர் 1995 இல் அமைச்சராக இருந்த போதே சட்டமுதுமாணிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் 1997 இல் ஜனாதிபதி சட்டத்தரணியானார்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் (TULF) அரசியல் பிரவேசம்  
ஈழத்து தந்தை என்று மதித்து நேசிக்கப்படும் தந்தை செல்வாவை (வேலுப்பிள்ளை செல்வநாயகம்) முன்மாதிரியாகக் கொண்டு அரசியல் வாழ்வைத் தொடங்கினார். தமிழ் பேசும் மக்களுக்கான சமஷ்டி என்ற இலட்சியத்தாலும், செல்வநாயகத்தாலும் இவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

1976, பெப்ரவரி இரண்டாம் திகதி, பொலிஸாரினால் புத்தளம் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதுவிடயத்தில் புத்தளம், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான நய்னாமரிக்கார் உட்பட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விஷயத்தில் மௌனம் சாதித்தனர். இவ்வேளையில் இது பற்றி பேசிய ஒரே ஒருவர் தந்தை செல்வா மட்டுமே என்பதை அஷ்ரப் வியந்து பாராட்டினார். 


1947 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழ் அரசுக்கட்சி (ITAK) மற்றும் பல தமிழ் அரசியல் குழுக்கள் இணைந்து தமிழர் ஐக்கிய முண்ணனியை (TUF) 1972 இல் உருவாக்கி தந்தை செல்வா அவர்களை தலைவராக நியமித்தது. 1976 மே 14 ம் திகதி நடைப்பெற்ற  சரித்திர முக்கிகியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் ஐக்கிய முண்ணனியானது (TUF) தமிழர் ஐக்கிய விடுதலை முண்ணனியாக (TULF) பெயர் மாற்றப்பட்டது. தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். இம்மாநாட்டில் அஷ்ரப் அவர்களும் கலந்து கொண்டார்.


1977 இல் தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஏற்றார். இவர், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முஸ்லிம் ஐக்கிய முன்னணியை (MULF) உருவாக்கி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டார். தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் மேடைகளில் அமிர்தலிங்கத்துடன் இணைந்து அஷ்ரப் அவர்கள் தமிழ் ஈழத்திற்காக வேகத்துடன் பிரச்சார நடவடிக்கைககளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில்தான் “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழத்தை அமைக்க முடியாமல் போனால், தம்பி அஷ்ரப் அதை செய்வான்” என பகிரங்கமாக அஷ்ரப் அறிவித்தமை அவரது உரையின் உச்ச கட்டமாக அமைந்தது.


1977ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் கல்முனை, சம்மாந்துறை, புத்தளம், மூதூர் ஆகிய இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் ‘சூரியன்’ சின்னத்தில் தேர்தலில் இறக்கப்பட்டனர். இதில் அஷ்ரப் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) தமிழ் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 18 ஆசனங்களை தக்கவைத்ததோடு இலங்கை வரலாற்றில் ஒரு தமிழ்க்கட்சி இரண்டாம் அதிகூடிய ஆசனங்களை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.  எனினும் இந்த கட்சிப்பட்டியலில் போட்டியிட்ட முஸ்லிம்கள் எவரும் வெற்றி பெறவில்லை.


தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் (TULF) ஏற்பட்ட முரண்பாடு  
தேர்தலில் ஏற்றபட்ட தோல்வியை வேறு கோணத்தில் உற்று நோக்கினார் அஷ்ரப். அஷ்ரபினுடைய தமிழ் ஈழம் மீதான விருப்பம் மற்றும் தமிழ் – முஸ்லிம் அரசியல் இலட்சியத்தை பகிரும் விருப்பத்துக்கு அப்பால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் வேறு அபிலாஷைகளை கொண்டிருந்தனர் என்பதை உணர்ந்தார்.


இந்த வேளையில் 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, மன்னாரிலும், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமிழர்களை மட்டும் தனது பட்டியலில் போட்டியிட வைத்தது. அஷ்ரபின் முஸ்லிம்களையும் சேர்க்கும் கோரிக்கை மறுக்கப்பட்டது. இதன் காரணமாக அஷ்ரப்  தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து முற்றாக விலகி, தனிவழி செல்ல தீர்மானித்தார். 

முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பம்

தமிழ் அரசியலிலிருந்தும் சிங்கள அரசியலிலிருந்தும் வேறுபட்ட ஒரு சுயாதீனமான அரசியல் தேவை முஸ்லிம்களுக்கு உண்டு என்பதை உணர்ந்த அஷ்ரப் அவர்கள் அஹமத்துடன் கூட்டுச் சேர்ந்தார். இலங்கை முஸ்லிம் காங்கிரசை (SLMC) 1981 செப்டம்பர் 21 இல் காத்தான்குடியில் ஆரம்பித்தார். அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் பிரச்சினைகளை விட அதிகமாக சமூக கலாசார விடயங்களில் அக்கறைப்பட்ட, ஏறத்தாழ ஒரு கிழக்கு மாகாண அமைப்பாகவே காணப்பட்டது.


இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவு புதுப்பிக்கப்பட்டமை தொடர்பில் முஸ்லிம்களின் எதிர்ப்பை ஜே.ஆர். ஜயவர்த்தன அலட்சியமாக தட்டிக் கழித்த போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குப்படுத்துவதில் அஷரப் மூலகர்த்தாவாக இருந்தார். 


அஷ்ரபின் கொழும்பு நோக்கிய நகர்வு மற்றும் கட்சி அங்கீகாரம் 
1985 கல்முனை- காரைத்தீவு, தமிழ் – முஸ்லிம் இனமுரண்பாடுகள் இவரை நேரடியாக பாதித்தன் காரணமாக அஷ்ரப் கொழும்பு நோக்கி குடிபெயர்ந்தார். இவ்வாறு கல்முனையில் இருந்து கொழும்புக்கு சென்றமையை முஹம்மத் நபி அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற ஹிஜ்ரத் யாத்திரையுடன் ஒப்பிட்டு பேசியமை பல்வேறு எதிர்ப்புக்களை தோற்றுவித்தது. 

இருந்தபோதிலும் அஷ்ரப் அவர்களின் கொழும்பு நோக்கிய நகர்வு அவரது அரசியலின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இவரது அரசியல் முயற்சிகளுக்கு பாயிஸ் முஸ்தபா அடங்கலாக அக்கறை கொண்ட முஸ்லிம்கள் பலர் ஒத்துழைப்பு வழங்கினர். இதன்போதே அஷ்ரப் அவர்களின் அறிமுகம் ரவுப் ஹக்கீமுக்கு கிடைத்தது.


ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் மீது மக்கள் விரக்தியுற்றிருந்ததையும் முஸ்லிம் சமூதாயத்தின் அடையாளத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தையும் உணர்ந்த அஷ்ரப் அவர்கள் கிழக்குக்கு அப்பாலும் முஸ்லிம் காங்கிரஸ் விரிந்து செல்ல வேண்டிய தேவைப்பாடையும் இனங்கண்டார். 


1986.11.29 இல் புஞ்சிபொரளையில் நாடளாவிய கட்சி மாநாடொன்றை கூட்டி முஸ்லிம் காங்கிரசின் கட்சித் தலைமையை அஹமத் லெப்பையிடம் இருந்து கௌரவமாக பொறுப்பேற்றுக் கொண்டார். முஸ்லிம் காங்கிரஸை அகில இலங்கைக் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களை மீளமைத்து யாப்பை திருத்தி எழுதினார். 1988, பெப்ரவரி 11 இல் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்துடன் தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தேர்தல் வெற்றிகள், அரசியல் தந்திரோபாயங்கள் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988, நவம்பர் 11 இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டது. இது வடக்கு – கிழக்கில் 17 இடங்களையும் மேற்கு, வட மேற்கு, மத்திய, தென் மாகாணங்களில் 12 இடங்களையும் கைப்பற்றியது. வட கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் முறையே 9,3,5 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. புதிதாக அமைக்கப்பட்ட இக்கட்சியின் அமோக வெற்றி முஸ்லிம் காங்கிரசின் அடுத்த நகர்வுகளுக்கு பெறும் உந்துசக்தியளித்தது. முதலமைச்சர்  அண்ணாமலை வரதராஜ பெருமாளின் தலைமையிலான வட கிழக்கு மாகாணசபை நிர்வாகத்திற்கு பிரதான எதிர்க்கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் விளங்கியது.


1988, டிசம்பர் 19 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளரான ரணசிங்க பிரேமதாஸவை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது. அதன் பின்னர், 1989 பெப்ரவரி 15   இல் இடம்பெற்ற நாடாளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 4 ஆசனங்களை பெற்றுக் கொண்டது. இதில் மாவட்ட ரீதியான மூன்று ஆசனங்களும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் அடங்கும். அம்பாறை மாவட்டத்திலிருந்து அஷ்ரப்பும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லாவும், வன்னியில் இருந்து அபூபக்கரும் பாராளுமன்றத்துக்கு தெரிவானனர். பாராளுமன்றத்தில் தனது மும்மொழிப் பேச்சாற்றலாலும், நிதானமும் துணிச்சலும் நிறைந்த உரைகளாலும் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்தார். 


1993 மே 1ம் திகதி இடம்பெற்ற மே தின நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி பிரேமதாச LTTE இன் தற்கொலைத்தாக்குதலில் உயிரிழந்தார். இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி சற்று பலவீனம் அடைந்தது. 1994 ஆகஸ்ட் 16 இல் 10 வது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அஷ்ரப் அவர்கள் தந்திரோபாயமாக சந்திரிக்காவுடன் 1994.07.01 இல் ஒரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார். இத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு – கிழக்கில் தனது சொந்த சின்னத்திலும், வேறு மாகாணங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி சின்னத்திலும் போட்டியிட்டது. 


இத்தேர்தலில் பொது ஜன முன்னணி 105 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 94 ஆசனங்களையும் பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையும், ஒரு தேசிய பட்டியல் அங்கத்தவரையும் பெற்றுக் கொண்டது. இத்தேர்தலிலேயே ரவுப் ஹகீம் அவர்கள் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். 

தொங்கு நாடாளுமன்றம் அமைந்த நிலையில் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தை நிறுவுவதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பேரம் பேசும் சக்தியாக விளங்கியது. அஷ்ரப் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து புனர்வாழ்வு அமைச்சராக நியமிக்கப்பட்ட அதேவேளை ஹிஸ்புல்லாவும், அபூபக்கரும் பிரதியமைச்சர்களாயினர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரவூப் ஹக்கீம் குழுக்களின் தவிசாளரானார். அஷ்ரப் அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு வேலைவாய்ப்புக்களை துறைமுக அதிகார சபையிலும் பல்வேறு திணைக்களங்களிலும் இளைஞ்ஞர்களுக்கு பெற்றுக்கொடுத்தார். 

ஒலுவில் துறைமுகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்மாணம் 
வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முஸ்லிம் மாணவர்கள் தயங்கினர். இதேபோல தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பிணக்குகளும் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்தும் மாணவர்கள் வெளியேற காரணமாக அமைந்தது. 


இதனை உணர்ந்த அஷ்ரப் ஒலுவில் பிரதேசத்தில்  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நடவக்கைகளை முன்னெடுத்தார். பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் 1995.10.23 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும். தற்போது இப்பல்கலைக்கழகத்தில் ஆறு பீடங்கள் நிறுவப்பட்டு இலங்கையின் ஒரு முன்னணிப் பல்கலைக்கழகமாக திகழ்கின்றது.அஷ்ரப் அவர்கள் அமைச்சராக இருந்த போது ஒலுவில் துறைமுகம் ஒன்றை அமைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்தார். 2013 இல் துறைமுக நிர்மாணப்பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மணல் தேங்குவதன் காரணமாக கடற்பகுதியின் ஆழம் குறைவடைந்துள்ளது. இதன்காரணமாக கப்பல்கள் துறைமுகத்துக்கு வருவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. பெருமளவான பணம் தேங்கியுள்ள மணலை அகற்ற தேவைப்படுகின்றது. இதேபோல துறைமுகத்தை அண்டியுள்ள சில பிரதேசங்களில் கடுமையான கடலரிப்பு காரணமாக கடற்கரைப்பகுதிகள் கடலினுள் உள்வாங்கப்பட்டுள்ளன. பல பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இத்துறைமுகத்தினை அரசாங்கம் கைவிட்டுள்ள நிலையில் மக்கள் கடலரிப்பால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி உள்ளனர். 


இதற்கான தீர்வை அரசாங்கம் விரைவில் முன்னெடுக்க வேண்டும்.
தேசிய ஐக்கியக் கூட்டமைப்பின் (NUA) ஆரம்பம் 
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்கள் இன்னுமொரு அரசியல் கூட்டணியை நிறுவுவதற்கான கலந்துரையாடல்களை 1998 களில் ஆரம்பித்தார். இக்கூட்டணியை நிறுவுவதன் நோக்கம் இலங்கையிலுள்ள வெவ்வேறு இன மக்களுக்கிடையே ஒற்றுமையை கொண்டுவருவதாகும். இது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காதபோதும் கட்சியானது தேசிய ஐக்கிய கூட்டமைப்பு எனும் பெயரில் புறாச் சின்னத்துடன் தேர்தல் ஆணையளரினால் 1999 ஆகஸ்ட் 23 இல் பதிவு செய்யப்பட்டது. இககட்சியின் தொனிப்பொருள் “ஒவ்வொரு குடிமகனும் இலங்கைத் தாய்நாட்டுக்குத் தேவை. எல்லா குடிமகன்களுக்கும் தேவை ஒரே இலங்கை” ஆகவும் 2012 இல் ஒற்றுமை நிறைந்த இலங்கையை உருவாக்குவதாகவும் இருந்தது. எனினும் அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் ஹக்கீம், பேரியல் அஷ்ரப் ஆகிய இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அஷ்ரபின் கனவு NUA விடயத்தில் நனவாகவில்லை.


மறைவு 

2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக செப்டம்பர் 26 அம்பாறை நோக்கி அஷ்ரப் அவர்கள் பயணித்த வேளையில் கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியில் இலங்கை விமானப்படையின் எம்.ஐ- 17 ரக ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகிய துன்ப நிகழ்வில் அஷ்ரப் மரணமானார். இவருடன், சேர்த்து 14 பேர் இவ்விபத்தில் உயிரிழந்தனர்.

அன்னாரின் இழப்பு நாட்டுக்கு ஈடு செய்யமுடியாதவொரு இழப்பாகும். ஆறு வருடங்கள் மாத்திரமே அமைச்சராக இருந்த இவர் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் அரும் சேவையாற்றினார். அஷ்ரப் மரணமடைந்து 17 வருடங்கள் கடந்தபோதும் அவருடைய நினைவு, சேவை மக்கள் மனதில் என்றும் உள்ளது.

By:
முஹம்மது ஹுசைன் முஹம்மது அஷ்ரபின் அரசியல் வாழ்க்கை. முஹம்மது ஹுசைன் முஹம்மது அஷ்ரபின் அரசியல் வாழ்க்கை. Reviewed by Madawala News on 9/15/2017 11:46:00 PM Rating: 5