tg travels

அமெரிக்காவுக்கு சமமாக ராணுவ கட்டமைப்பு உருவாக்கம்.. வடகொரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் வராமல் செய்வோம்.


வடகொரியா, 2006–ம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு, அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. கடந்த 3–ந் தேதி 6–வது முறையாக அந்த நாடு அணுகுண்டு சோதனை நடத்தியது. இது ஹைட்ரஜன் குண்டு சோதனையாக அமைந்து உலக நாடுகளை அதிர வைத்தது.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பெருமுயற்சியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், வடகொரியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதன் காரணமாக வடகொரியாவுக்கு ஆண்டுக்கு ரூ.7,800 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.


ஆனால் இந்த பொருளாதார தடைகளை தாண்டி, நேற்று முன்தினம் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஹூவாசாங்–12 ஏவுகணையை மீண்டும் ஏவி சோதித்தது. 770 கி.மீ. செங்குத்தாக சென்ற இந்த ஏவுகணை 3,700 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, ஜப்பானின் ஹொக்கைடோ தீவை கடந்து சென்று கடலில் விழுந்தது.

இந்த ஏவுகணை சோதனை, அமெரிக்காவின் குவாம் தீவினை சென்றடைகிற திறனை வடகொரியா பெற்றிருப்பதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனையை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் ராணுவ உயர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார்.

அமெரிக்காவுக்கு சமமாக...

இந்த சோதனை வெற்றி அடைந்திருப்பது குறித்து கிம் ஜாங் அன் கூறியதாவது:–

அமெரிக்க துருப்புகளுக்கு சமமாக உண்மையான ராணுவ கட்டமைப்பை உருவாக்குவதுதான் வடகொரியாவின் லட்சியம் ஆகும்.

இதன் மூலம் அமெரிக்க ஆட்சியாளர்கள், வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பேசுகிற துணிச்சல் வராமல் செய்வோம்.

மேலும், எல்லையற்ற பொருளாதார தடைகளையும், பிற தடைகளையும் தாண்டி, நாம் எப்படி அணு ஆயுத சக்தியை அடைந்தே தீருவோம் என்பதை அதிகார சக்தி படைத்த வெறியர்களுக்கு தெளிவாக காட்டுவோம்.

இவ்வாறு கிம் ஜாங் அன் கூறியதாக வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. கூறி உள்ளது.


இதற்கிடையே வடகொரியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘ வடகொரியா மீண்டும் அண்டை நாடுகளுக்கும், ஒட்டுமொத்த உலக சமுதாயத்துக்கும் தனது அவமதிப்பை காட்டி உள்ளது. அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை தேவை என்பதை முன்பை விட இப்போது நான் அதிகமாக நம்புகிறேன்’’ என கூறினார்.

மேலும், நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி சோதித்திருப்பதற்கு வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
அமெரிக்காவுக்கு சமமாக ராணுவ கட்டமைப்பு உருவாக்கம்.. வடகொரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் வராமல் செய்வோம். அமெரிக்காவுக்கு சமமாக ராணுவ கட்டமைப்பு உருவாக்கம்..  வடகொரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் வராமல் செய்வோம். Reviewed by Madawala News on 9/17/2017 08:59:00 AM Rating: 5