Ad Space Available here

வெற்றிகரமான பத்தாவது வருடத்தில் காலடி வைக்கிறது அக்குறணை யகீன் மொடல் ஸ்கூல். பிரதம அதிதியாக வருகிறார் சயீத் அன்வர்.கண்டி அக்குறணையில் இயங்கி வரும் யகீன் மொடல் ஸ்கூல் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் தனது பத்து வருட சேவையைப் பூர்த்தி செய்கிறது.


இப்பாடசாலை அதன் தலைவர் முஹம்மது பஹ்மி பாரூக் அவர்களினால் 2007 செப்டெம்பர் 7 ம் திகதி புனித மக்காவில் ஹரம் ஷரீபில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையின் வகுப்புக்கள் 2008 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பம் செய்யப்பட்டன.


யகீன் மொடல் ஸ்கூலில் இலங்கை அரச பாடத்திட்டம் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்படுகின்ற அதேவேளை குர்ஆன் ஹதீஸ் என்பன இதன் பாடவிதானத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.


2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் யகீன் மொடல் ஸ்கூலின் பெண்கள் பிரிவான நிஸ்வான் மொடல் ஸ்கூல் மீண்டும் புனித ஹரம் ஷரீபில் வைத்து அல்ஹாஜ் பஹ்மி பாரூக் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்பொழுது இவ்விரு பாடசாலைகளும் வெவ்வேறாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.


இவ்விரு பாடசாலைகளிலும் மொத்தமாக 350 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் தமது பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக புனித குர்ஆனை மனனம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய மாணவ மாணவியர் தமது பாடசாலைக் கல்வியை மாத்திரம் பேணுதலான ஒரு இஸ்லாமியச் சூழலில் தொடர்கின்றனர்.


சிறு வயதிலேயே புனித அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் மற்றும் ஹாபிழாக்களை உருவாக்கும் நோக்குடன் இங்குள்ள Y! Kids எனும் விசேட பிரிவு இயங்கிக் கொண்டிருக்கின்றது.


மாணவ மாணவிகள் தமது 3ம் வகுப்பைப் பூர்த்தி செய்யும் நேரத்தில் 40 ஹதீஸ்களை அவற்றின் மொழிபெயர்ப்புடன் மனனம் செய்திருப்பது இங்குள்ள மற்றுமொரு சிறப்பம்சமாகும்.


வேகமாக மாறிக்கொண்டு வரும் இன்றைய உலகில் ஒரு சிறந்த முஸ்லிமாகவும் தேர்ச்சியான துறை சார் நிபுணராகவும் அவர்களை எதிர்காலத்தில் உருவாக்குவதற்கு அவசியமான தர்பியாக்களும் தலைமைத்துவப் பயிற்சிகளும் ஏராளமாக இப்பாடசாலைகளின் பாட விதானத்தில் உள்ளடக்கம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மாணவ மாணவிகளின் பண்பாட்டு விருத்தி சம்பந்தமான பல செயற்பாடுகளும் இவற்றில் அடங்குகின்றன .

https://www.youtube.com/watch?v=4GlqIajZ7oo&t=439s


இலங்கையில் முதன் முதலாக ஒரு நவீன Digital Studio வை நிறுவி e Teaching கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்திய பாடசாலை யகீன் மொடல் ஸ்கூல் ஆகும். இந்த Studio பெண்கள் பிரிவான நிஸ்வான் மொடல் ஸ்கூலில் அமைந்துள்ளது. மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான ஏராளமான வீடியோக்கள் இந்த ஈ லேனிங் ஸ்டூடியோவினால் தயாரிக்கப்படுகின்றன.


பாடசாலையின் பத்தாண்டுப் பூர்த்தியை முன்னிட்டு அதன் சில பிரிவுகள் வெவ்வேறு முக்கிய நகரங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாக யகீன் குழுமத்தின் தலைவர் அல்ஹாஜ் பஹ்மி பாரூக் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.


இப்பாடசாலையின் 10ம் ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரரும் அணித் தலைவருமான சயீத் அன்வர் அவர்கள் இலங்கை வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமான பத்தாவது வருடத்தில் காலடி வைக்கிறது அக்குறணை யகீன் மொடல் ஸ்கூல். பிரதம அதிதியாக வருகிறார் சயீத் அன்வர். வெற்றிகரமான பத்தாவது வருடத்தில் காலடி வைக்கிறது அக்குறணை  யகீன் மொடல் ஸ்கூல். பிரதம அதிதியாக வருகிறார் சயீத் அன்வர். Reviewed by Madawala News on 9/19/2017 08:57:00 AM Rating: 5