Yahya

தோப்பாகிய மரத்தின் கதை.

நாச்சியாதீவு பர்வீன் 

(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 17வது நினைவு தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை) 

அஸ்ரப் எனும் தனிமரம் இன்று தோப்பாகி,காய்த்து,கனியும் நிழலும் தந்து வளர்ந்து வளமாக நிற்கின்றது . இது தனிமரம் தோப்பாகாது என்பர்களின் கூற்றை பொய்யாக்கியுள்ளது. தோப்பாகிய இந்த தனிமரம் ஒரு சமூகத்தின் நிழலுக்காக அது உருவாகிய காலத்திலிருந்து இன்று மட்டுக்கும் இதய சுத்தியோடு பாடுபடுகின்றது. 

அந்த மரம் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் இதயங்களில் வாழுகின்ற தோப்பாகிய தனிமரமாகும்.


மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் அரசியல் ரீதியில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்குள் விழிப்புணர்வை உண்டு பண்ணியவர். சிறுபான்மைச் சமூகமொன்றின் உரிமைப்போராட்டமானது வெற்றிபெற வேண்டுமாயின் அந்த சமூகத்தை வழிநடாத்துகின்ற தலைவன் ஆளுமைமிக்கவனாக இருக்க வேண்டும். அந்தத் தலைவனுக்கு சுயநலமற்ற சமூகப்பற்று அவசியமாகும்.சிக்கலான சந்தர்ப்பங்களில் துணிந்து செயலாற்றுகின்ற தற்றுணிவு அவசியமாகும்.இந்த ஒட்டுமொத்த தகைமைகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கு இருந்தது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் பேரியக்கமானது உருவானதன் பின்னணியில் பல தியாகங்கள் மறைந்து காணப்படுகின்றன. அவை வெளியே தெரியாமல் அடங்கிப்போயுமுள்ளது. சுயநலமற்ற போராளிகளினதும், தலைமையினதும் இரத்தம்,கண்ணீர்,மானம் என்பன இதற்கான விலையாக செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  


மர்ஹூம் அஷ்ரப் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது மனப்பதிவை இவ்வாறு கூறுகின்றார்.


1985ஆம் ஆண்டு அம்மன் கோவில் வீதியிலிருந்த தலைவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டதும், அங்கிருந்து வெளியேறி அவர் கொழும்பை நாடி சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் வீட்டில் தஞ்சமடைந்தார். அந்த இல்லத்திலேயேதான் நானும் ஒரு இளம் சட்ட உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன் சில மாதங்கள் அங்கே தலைவர் தங்கிருந்த போதுதான் அவரோடு மிகுந்த தொடர்பும், நெருக்கமும் ஏற்பட்டது. அந்த உறவின் நெருக்கமே இன்று என்னை முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தின் பொறுப்புக்களை சுமக்க வைத்திருக்கிறது.


நான் அவதானித்த மட்டில் கட்சியாக இருந்தாலும் வாசஸ்தலமாக இருந்தாலும் இரண்டிலும் தலைவர் அவர்கள் அதிகமாக அகதி வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருந்தார். அவ்வப்போது பல இடங்களிலும் இடம்பெயர்ந்து வாழும் சூழலைத்தான் அவர் எதிகொண்டார் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். 
என தனது ஆழ்மனதில் அடைந்து கிடக்கும் பதிவினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிந்துள்ளார்.


இலங்கையில் இரண்டாவது சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்கள் பெரும்பான்மைக் கட்சிகளுடன் ஒட்டியே தமது அரசியல் பயணத்தை காலாதிகாலமாக செய்துவந்திருந்தனர். பெரும்பான்மைக் கட்சிகளின் அலட்சியமான போக்கு, உரிமைகள் தொடர்பிலான முரணான நடத்தை முஸ்லிம் சமூகத்திற்கான நிலையான ஒரு அரசியல் இயக்கத்தை தோற்றுவிக்கும் எண்ணம் அவ்வப்போது பலருக்கு எழுந்திருந்தாலும் அதற்கான மனோதைரியம் அவர்களுக்கு இருக்கவில்லை.

வெறும் கூடிக்கலையும் அல்லது திட்டமிடும் நிகழ்வுகள் மாத்திரம் நிகழ்ந்து கொண்டு இருந்தன.


மர்ஹூம் அஷ்ரப் இளம் சட்டத்தரணியாக அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தார். தந்தை செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சிக்கு தனது ஆதரவினை வழங்கினார். தமிழ்,முஸ்லிம் ஆகிய இரண்டு சிறுபான்மை இனங்களும் இணைந்து ஒரு கட்சியில் செயலாற்றுவதன் மூலம் பெரும்பான்மை அரசிடமிருந்து இந்த இரண்டு சமூகத்திற்குமான நியாயங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பினார். 

ஆனால் இலங்கையின் முதலாவது சிறுபான்மையினரான தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக்கட்சி முஸ்லிம்கள் சார்பில் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடந்து கொண்டது.


இந்த நிகழ்வானது மர்ஹூம் அஸ்ரப் அவர்களுக்கு தமிழரசுக்கட்சியின் மீதிருந்த நம்பிக்கையில் தளர்ச்சியை உண்டுபண்ணியது. முஸ்லிம் சமூகம் சுயமான அரசியல் தளத்தில் இயங்குகின்ற ஒரு இயக்க ரீதியிலான கட்டமைக்கப்பட்ட, பலம் கொண்ட கட்சியாக உருவாக வேண்டுமென்பது தொடர்பில் சிந்திக்கதொடங்கினார். 

அதன் விளைவு தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இந்த மக்கள் பேரியக்கம். தனிமனிதாக மரத்தை சின்னமாக கொண்டு ஆரம்பித்த இக்கட்சியானது இப்போது தோப்பாகி, முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் முன்னின்று குரல் கொடுக்கின்ற முஸ்லிம் சமுகத்தின் தனித்துவமான கட்சியாக பரிணமித்து மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் கனவினை நிறைவேற்றிவருகின்றது.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் காலத்தில் தனது பேரம் பேசுகின்ற சக்தியை உறுதிசெய்த இந்த மக்கள் இயக்கமானது தற்போது நாடுதழுவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் தொடர்பில் மட்டுமின்றி, அபிவிருத்தி தொடர்பிலும் மிகுந்த கரிசனையுடன் செயலாற்றி வருகின்றது என்பது பதியப்பட வேண்டிய வரலாறாகும்.


அஸ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்ற தற்போதைய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் சந்தித்த சோதனைகள் ,தடைகள் ,கழுத்தறுப்புக்கள் என்பவற்றை விடவும் பலமடங்கு சந்தித்த போதும் இந்த மக்கள் இயக்கத்தின் கட்டுக்கோப்பை சாணக்கியமாக பாதுகாத்து வருகிறார்.


கடந்த 17 வருட காலத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தக் கட்சியினை காப்பாற்றவும், இந்த இயக்கம் தொய்வடைந்து விடாமலும் இருப்பதற்காகவும் பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். கட்சியை உடைத்து பிரிந்து சென்றவர்கள், பெரும்பான்மைக் கட்சிகளின் அரசியல் ரீதியான அழுத்தங்கள், பணத்திற்கும்,பதவிக்கும் அடிமைப்பட்டு பிரிந்து சென்றவர்கள் மற்றும் அதிகார மையங்களின் பிரித்தாலும் தந்திரங்கள் போன்றவற்றினாலும் பல நெருக்குவாரங்கள் உருவானபோதும். இவை எல்லாவற்றிலுமிருந்து கட்சியை காப்பாற்றுகின்ற விடயத்தில் கட்சியின் பழைய போராளிகளைப் போலவே அமைச்சர் ரவூப் ஹக்கீம் புதிய போராளிகளையும் இணைத்து பல அர்ப்பணிப்புக்களை செய்துள்ளார்.


அதுமட்டுமின்றி தற்போது தலைவர் அஸ்ரப் அவர்கள் விட்டுச்சென்ற அதே இடத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அபரிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது எனலாம்.


இதன் அடிப்படையில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் 17வது நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிறப்பிடமான அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவது அம்பாறை மாவட்ட கட்சியின் ஆதரவாளர்களை கௌரவிப்பதாக கொள்ளமுடியும்.


தொடர்ச்சியாக வருடா வருடம் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்கள்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னின்று நடாத்தி வருகின்றது. அந்தவகையில் மர்ஹூம் அஸ்ரப் அவர்களுக்கான நினைவு முத்திரை வெளியிட்டமை, தலைவர் அஷ்ரபின் பாராளுமன்ற உரைகளை ஆறு தொகுதிகளாக வெளியிட்டமை, ஆதம்பாவா மௌலவியினால் எழுதப்பட்ட தலைவர் அஸ்ரப் தொடர்பான புத்தகத்தினை வெளியிட்டு வைத்தமை, கடந்த வருடம்(2016) தேசிய மட்டத்தில் காரிகளுக்கிடையிலான அழகிய தொனியில் அல்-குர்ஆன் எனும் தலைப்பில் கிராஅத் போட்டி நிகழ்ச்சியை நடத்தியமை என்பன கடந்த காலங்களில் இடம்பெற்ற சில விடயங்களாகும்.


இவற்றைவிடவும் அல்-குர்ஆன் ஆராய்ச்சி மாநாட்டை தலைவர் அஸ்ரபின் நினைவாக நடாத்துகின்ற பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.எதிர்காலத்தில் இது சாத்தியப்படலாம் 


இந்தத்தொடரிலேயே தலைவர் அஸ்ரபின் 17வது நினைவேந்தல் நிகழ்வு பொத்துவில் பிரதேசத்தில் நடைபெறுகின்றது.


கட்சியின் காத்திரமான ஆதரவுத்தளமான அம்பாறை மாவட்டத்தில் மரத்தின் வளர்ச்சியானது வெட்டி வேறாக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு போராளிகளினதும் மனதில் வேரூன்றியுள்ளது.மரத்தை அழிக்க முனைகின்றவர்கள் மாண்டு போவார்கள் மரம் எப்போதும் தோப்பாகிக்கொண்டே இருக்கும்.  தோப்பாகிய மரத்தின் கதை. தோப்பாகிய மரத்தின் கதை. Reviewed by Madawala News on 9/15/2017 07:24:00 PM Rating: 5