Ad Space Available here

மாகாண சபை தேர்தல் சட்டமும் முஸ்லிம் அரசியல் எதிர்காலமும்மயக்கமருந்து தடவப்பட்ட இனிப்புப் பண்டங்கள் பற்றி நாமறிவோம். யாரேனும் ஒருவர் அறியாப்பருவம் கொண்ட பிள்ளைகளிடமிருந்து மிகத் தந்திரமாக ஏதேனும் ஒன்றை அபகரித்துக் கொள்வதற்காக இவற்றை வழங்குவதுண்டு. எவ்வளவுதான் பெற்றோர்கள் இதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்திருந்தாலும், பிள்ளைகள் அந்த இனிப்பு அல்லது அதனைக் கொண்டுவரும் நபரின் பேச்சில் வசமிழந்து அதனை வாங்கிச் சாப்பிட்டு விடுவார்கள். இருந்;துமென்ன, நாவில் தித்திப்பு தீர்வதற்கிடையில் மயக்கம் வரத் தொடங்கிவிடும். கடைசியில், இரண்டு ரூபாய் இனிப்பை கொடுத்து அதைவிடப் பெறுமதியானதை அந்த நபர் அபகரித்துச் சென்றதாக ஊரில் பேசிக் கொள்வார்கள்.

இலங்கையில் பொதுவாக சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல்வாதிகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள், இணக்க அரசியல், இணங்க வைக்கப்படும் அரசியல் என்ற அடிப்படைகளில் பெருந்தேசியக் கட்சிகளோடு எல்லா விடயங்களிலும் இணங்கிச் செயற்படுதால் முஸ்லிம்கள் உரிமைசார்ந்த பல விடயங்களை அன்றாடம் இழந்து கொண்டிருக்கின்றனர். சின்ன சின்ன சந்தோசங்கள், சலுகைகளில் (இனிப்புக்களில்) கவரப்பட்டு சோரம் போய்விட வேண்டாம் என்று பொதுத் தளத்தில் இருந்து எழும் குரல்களை புறக்கணித்து, பெரிய பெரிய வரலாற்று தவறுகளை செய்கின்ற பக்குவப்படாத ஒரு அரசியல் கலாசாரமும் முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தையும் அந்த அடிப்படையிலேயே நோக்க வேண்டியிருக்கின்றது. சட்டமூலம் எனும் இந்த இனிப்பு மயக்கமருந்து தடவப்பட்டதா அல்லது ஆரோக்கியமானதா என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள இன்னும் காலம் செல்லும்.

ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளின் படி புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றால், அந்த இனிப்பு முஸ்லிம் அரசியலுக்கு நஞ்சாக மாறலாம். வாக்குறுதியின்படி புதிய திருத்தங்கள் அமுலுக்கு வந்தாலும் கூட இனிப்புக்கு ஆசைப்பட்டு மயங்கிவிழுந்த பிள்ளையின் நிலையே முஸ்லிம்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்த சட்டத்தால் வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் வெகுவாக பாதிக்கப்படும் என்பதனாலாகும்.

பல்வேறு திருத்தங்கள்

இலங்கையின் அரசியல் பெருவெளியில் கடந்த சில நாட்களாக மிக முக்கிய பேசுபொருளாக இருக்கின்ற அரசியலமைப்பு மறுசீரமைப்பு, 20ஆவது திருத்தம், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம், மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகியவை வேறுபட்டவை என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக 20ஆவது திருத்தத்திற்கும் மாகாண சபைதேர்தல்கள் சட்டமூலத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும்.

1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பை முற்றாக மாற்றியமைத்து புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கான இடைக்கால அறிக்கையை கடந்த வியாழக்கிழமை பிரதமர் சமர்ப்பித்துள்ளார். இது அரசியலமைப்பு மறுசீராக்கம் ஆகும். இரு வாரங்களுக்கு முன்னர் உள்ள10ர் அதிகார சபைகள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு, முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் என்பது இலங்கையின் அரசியலமைப்பில் 20ஆவது தடவையாக திருத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியாகும். ஆனால், அதனை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தற்போது கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இப்போது பேசப்படுகின்ற மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நாட்டிலுள்ள மாகாண சபைகளின் தேர்தல் எவ்வாறு இடம்பெற வேண்டும், அதில் தொகுதிவாரி; மற்றும் விகிதாசார முறைகளுக்கு இடையிலான விகித அடிப்படை எவ்வாறு அமைய வேண்டும், பெண்கள்  பிரதிநிதித்துவம் எந்த மட்டத்தில் இருக்க வேண்டும் என்று வரையறை செய்கின்ற ஒரு சட்டமூலமாக காணப்படுகின்றது.

புதிய அரசியலமைப்பு உருவாவதற்கு இடையில் தம்முடைய அரசியல் வியூகத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக தற்போதுள்ள அரசியலமைப்பில் சில மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் எண்ணியது. அதன்படியே அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அங்கீகாரத்திற்காக மாகாண சபைகளுக்கு அனுப்பப்பட்டது. இப்போதைக்கு மாகாண சபைகளின் காலத்தை நீடித்து தேர்தலை பிற்போடுவதும், மாகாண அதிகாரத்தில் மத்திய அரசின் பிடியை இறுக்குவதும், ஒரேதினத்தில் அனைத்து மாகாணங்களுக்கும் தேர்தல் நடத்துவதும் இதனது உள்நோக்கமாக இருந்தது எனலாம்.

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல மாகாண சபைகள் கண்ணைமூடிக் கொண்டு இதற்கு ஆதரவளித்த போதும் நீதிதேவதை தன் கண்களை திறந்தாள். அதாவது, 20ஆவது திருத்தத்தை  நிறைவேற்றுவது என்றால் பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறுவது மாத்திரமன்றி சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றையும் நடாத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளி;த்திருந்தது. இதனை சபாநாயகர் 19ஆம் திகதி அறிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை சிறிது காலத்திற்கு பிற்போடுவதும் அதுவரைக்கும் மாகாணத்தின் நிழல் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தி தமக்கு சாதகமான நிலைமைகளை தோற்றுவிப்பதுமே ஆட்சியாளர்களின் உப உள்நோக்கமாக இருந்தது. இப்படியிருக்க, இப்படியிருக்க, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றிற்கு செல்வதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் தேர்தலுக்கு அஞ்சும் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்லாது.

எனவே, கிட்டத்தட்ட 20 இனை கைவிடுவது என்ற நிலைக்கு அரசாங்கம் வந்திருப்பதாக தோன்றுகின்றது. ஆனாலும், ஏற்கனவே திட்டமிட்டமிட்டிருந்ததன் பிரகாரம் மாகாண சபைகளின் தேர்தல் விடயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தது. இதற்குப் பல வெளிப்படையான, மறைமுக காரணங்களும் இருக்கின்றன.

சட்டத்தை திருத்துதல்

எனவேதான், ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி இச்சட்டமூலம் கடந்த 20ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான இச் சட்டமூலம் தொடர்பில், ஒரு குறைநிரப்பி வர்த்தமானி உள்ளடங்கலாக மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இவ்வர்த்தமானிகள் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றன.

குறிப்பாக, 'மாகாண சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு நியமனப் பத்திரத்திலும் பெயர் காணப்படுகின்ற மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 30 வீதத்திற்கும் குறையாத பெண் வேட்பாளர்களை கொண்டிருக்க வேண்டும்' என்று  குறிப்பிடுகின்றது. அந்த அடிப்படையில் பெண்களை உள்வாங்காத வேட்புமனுக்காளை நிராகரிக்கப்படுவதற்கான சட்ட ஏற்பாடும் இதில் உள்ளது. பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக வேறுபல சரத்துக்களிலும்  திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, 'அரசியலமைப்பின் 154ஈஈ உறுப்புரையின் நியதிகளின் படி குறித்துரைக்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் எல்லா மாகாண சபைகளுக்குமான தேர்தலொன்றை நடாத்துதல்' என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, 20ஆவது திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் முன்வைத்த ஒரே நாளில் தேர்தல் நடாத்துதல் என்ற ஏற்பாட்டுக்கு சமமானதாக இதை கருதலாம்.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிந்திய திருத்தங்களின் படி, கலப்பு முறையில் தேர்தல் நடாத்துவதற்கான சட்ட ஏற்பாட்டையும் இது கொண்டுள்ளது. அதாவது, தொகுதிவாரி அடிப்படையில் 60 சதவீதமும் விகிதாரசார அடிப்படையில் 40 சதவீதமும் மாகாண சபைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தது. பின்னர் இந்த விகித அடிப்படையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது.

வெளிநாடுகளின் அழுத்தம், பெண்ணுரிமை அமைப்புக்களின் கோரிக்கை போன்ற பலவற்றை பிரதான காரணமாகக் கொண்டு 30 வீதம் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவசரமான வாக்கெடுப்பு

2017ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் கடந்த 20ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆயினும் இந்த சட்டமூலத்தில் காணப்படுகின்ற கலப்பு தேர்தல் முறைமையின் விகித அடிப்படை, எல்லை நிர்ணயம் உள்ளிட்ட விடயங்கள் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சில முஸ்லிம், தமிழ் கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் இதில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதியையும் பிரதமரையும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவையும் கோரி நின்றன. மேற்படி கட்சிகளின் தலைவர்களான றிசாட் பதியுதீன், றவூப் ஹக்கீம், மனோகணேசன் ஆகியோருடன் சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீரலி போன்றோர் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டனர். தமது பரிந்துரையின் படி புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை என்றால் இதற்கு சபையில் ஆதரவளிக்கப் போவதில்லை என்று கூறினார்கள்.

இது அரச தரப்பிற்கு பெரும் ஆத்திரத்தை உண்டுபண்ணியதாக அமைச்சர் ஒருவர் கூறினார். ஒரு கட்டத்தில் உங்களது (முஸ்லிம் எம்.பி.க்களின்) ஆதரவு எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் நிறைவேற்றிக் காட்டுகின்றோம் என்ற தொனியில் அவர்கள் கூறியிருந்தார்கள். இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதென்றால் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும் என சட்டமா அதிபர் அறிவித்தார்.

இச்செய்தி அரச தரப்பை தூக்கி வாரிப்போட்டது. மேற்குறிப்பிட்ட தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களை பிரதமர் மீண்டும் அழைத்து மனங்கவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அமெரிக்காவில் இருந்து ஜனாதிபதியும் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அந்த நேரத்தில் பல கோரிக்கைகளை ஹக்கீம், றிசாட், மனோ, ஹிஸ்புல்லா போன்றோர் முன்வைத்துள்ளனர்.

அந்தவகையில், தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைக்கு இடையில் உத்தேசிக்கப்பட்டுள்ள 60:40 என்ற விகித அடிப்படையை 50:50ஆக மாற்ற வேண்டும் எனக்கோரியுள்ளனர். மாகாணங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்படுவதுடன் அந்தக் குழுவின் அறிக்கை திருப்திப்படும் விதத்தில் இல்லாதபட்சத்தில் மீண்டும் பிரதமர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தல், எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றல், பல்-அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்கல் போன்ற கோரிக்கைகள் சிறுபான்மை அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்க தரப்பு வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டதாக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சிறுபான்மை அரசியல்வாதிகள் வசப்படுத்தப்பட்டனர். பாராளுமன்றத்திற்கு வராமல் இருந்த எம்.பி.களும் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

கடைசிநேர அவதி

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் குறித்தும் தேர்தல் முறைமை குறித்தும் நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்றது. புதிய கலப்பு முறையால் பாதிக்கப்படப் போவது, வடக்கு, கிழக்கு மாகாணம் போன்று முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளின் பிரதிநிதித்துவம் அல்ல. மாறாக, வடக்கு, கிழக்கிற்கு வெளியில் சிறுதொகையாக வாழும் மக்களின் பிரநிதித்துவமே ஆகும். இவ்வாறிருக்கையில், அதனது விகித அடிப்படையை மாற்றச் சொல்லி வடக்கு, கிழக்கில் அரசியல் செய்யும் றிசாட்டும், ஹிஸ்புல்லாவும், ஹக்கீமும் போராடும் போது, பெருந்தேசிய கட்சிகளில் அங்கம்வகிக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் கண்டும் காணாது போலிருந்தது, வெட்கக் கேடானது ஆகும். அதுபோல த.தே.கூ. ஆதரவளித்ததும் கவனிப்பிற்குரியது.

எவ்வாறாயினும், ஒரு சிலராவது கடைசிக் கட்டத்தில் அழுத்தம் கொடுத்தார்கள் என்பது முஸ்லிம்களுக்கு ஆறுதலளிப்பதாக இருக்கின்றது. அந்த அடிப்படையில், மேற்குறிப்பிட்ட தமது கோரிக்கைகளை அரச தரப்பு ஏற்றுக் கொண்டு, சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வந்ததாகவும், அந்த திருத்தங்களுடனேயே அது நிறைவேற்றப்பட்டதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்புவதற்காக ஒப்பமிடப்பட்ட ஆவணத்தை தான் கண்ணுற்றதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கூறினார். இதே கருத்தையே சம்பந்தப்பட்ட மற்ற அரசியல்வாதிகளும் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், இவர்களுக்கு வாக்குறுதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது உண்மையாக திருத்தப்பட்டுள்ளதா என்பதில் சந்தேகமிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இதனையே தெரிவித்துள்ளார். அரசாங்கம் இத்திருத்தங்களை பின்னிணைப்பாக இணைக்கலாம், அல்லது மிகவும் சூசகமான முறையில் சட்டத்திற்குள் உள்ளடக்காமல் விடுவதற்கும் நுட்பங்கள் இருக்கின்றன என்று விடயமறிந்தோர் கூறுகின்றனர். எனவே, இந்த சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியான பிறகே உண்மையாக என்ன நடந்திருக்கின்றது என்பது தெரியவரும்.

முஸ்லிம்களுக்கு சமய ரீதியான கட்டுப்பாடுகள் இருக்கின்ற நிலையில் 30 சதவீதம் பெண் வேட்பாளர்களை தேர்தலில் களமிறக்குவது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றபடியால் இது எந்தளவுக்கு சாத்தியமென்று தெரியவில்லை. அதேநேரம், இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா மாகாண சபைகளுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடாத்துதல் என்ற விடயம் சிறப்பானதே. ஆயினும், முதற்கட்டமாக இம்முறை மாகாண சபைக்கு கலப்பு முறையில் தேர்தலை நடத்த முற்படுகின்ற போது தேர்தல் ஆணையாளர் உத்தேசித்திருந்த திகதியில் இருந்து குறைந்தது நான்கு மாதங்கள் தேர்தல் தாமதமாகலாம். மார்ச்சில் தேர்தல் நடக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், எல்லை நிர்ணயத்தை செய்து புதிய முறைமையின் படி தேர்தலை நடாத்துவதற்கு யதார்த்தபூர்வமாக அதிக காலம் எடுக்கக் கூடும்.

அப்படி நடக்குமாயின், மாகாண சபை தேர்தல் உரிய தேதியில் நடைபெறாது போவதுடன், காலம் முடிவடைந்த சபைகள் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் கொழும்பின் செல்வாக்கோடு இருக்கும். சுருங்கக் கூறின் தேர்தலை ஒரு சில மாதங்களுக்காவது தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் உள்நோக்கமும் வெற்றியளிக்கும்.

திருத்தச் சட்டமூலத்தில் சிறுபான்மைக் கட்சிகள் கொடுத்த அழுத்தத்தால் கடைசிநேரத்தில் சில புதிய திருத்தங்கள் உள்வாங்கப்பட்டாலும் கூட, நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் கூட சிறுபான்மைச் சமூகங்களுக்கு மிகவும் பாதகமாகவே இருக்கின்றது. எனவே, முஸ்லிம் கட்சிகள் ஆதரவாக வாக்களித்ததே பெரும் தவறு என்ற ஒரு கடுமையான விமர்சனமும் இங்கு முன்வைக்கப்படுகின்றது.

பெருந்தவறு

இலங்கையில் தொகுதிவாரி மற்றும் விகிதாசார அடிப்படையிலான கலப்பு தேர்தல் முறை அமுலுக்கு வருமானால், அதற்காக ஒற்றை வாக்குமுறையே கடைப்பிடிக்கப்படுமானால், அந்தந்த பகுதிகளில் செல்வாக்குள்ள கட்சிகள், இனக் குழுமங்களின் பிரதிநிதிகளே மாகாண சபைக்கு அதிகமாக தெரிவு செய்யப்பட வாய்ப்புள்ளது. இது வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பெரிய பிரச்சினை இல்லை. பிரேதமாசவிடம் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் போராடி பெற்றுத்தந்த வெட்டுப்புள்ளியின் அனுகூலங்களை முழுமையாக பெற முடியாது போகலாம் என்றாலும் பெரிதாக அவர்களது பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படாது.

ஆனால், வடக்கு கிழக்கிற்கு வெளியே சிங்கள மக்களுக்கு மத்தியில் சிறுஅளவில் வாழ்கின்ற மக்களின் பிரதிநிதித்துவம் புதிய முறையில் வெகுவாக பாதிக்கப்படும். இரட்டை வாக்கு முறை இல்லை என்பதால் 50 வீத விகிதாசார உறுப்பினர்கள் பிரதான வேட்பாளர் பட்டியலில் இருந்தே நியமிக்கப்படுவார்கள். அப்படியாயின், பெருந்தேசியக் கட்சிகளில் போட்டியிட்டு தோல்வியுற்ற, சிங்களவர்களுக்கே அக்கட்சிகள் முன்னுரிமை அளிக்கும் என்று விடயமறிந்தோர் கூறுகின்றனர்.

இலங்கை முஸ்லிம்களில் மூன்றிலிரண்டு பங்கினர் வடக்கு, கிழக்கிற்கு வெளியிலேயே வாழ்கின்ற நிலையில் அம்மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையுமானால் அது ஒட்டுமொத்த முஸ்;லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதிக்கும். இதன் விளைபயனாக முஸ்லிம் அரசியலின் பலமும் பெரும்பான்மைக் கட்சிகளோடு பேரம் பேசும் ஆற்றலும் குறையும். அதனை குறைப்பதற்காகவே இந்த ஏற்பாட்டை பெருந்தேசியக் கட்சிகள் சூட்சுமமாக சட்டத்தில் கொண்டு வந்திருக்கின்றன என்றும் குறிப்பிட முடியும்.

எனவேதான், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆதரவளித்திருக்கக் கூடாது என்ற அபிப்பிராயம் முன்வைக்கப்படுகி;ன்றது. மு.கா, மக்கள் காங்கிரஸ் எம்.பி.க்களும் ஹிஸ்புல்லா போன்றோரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற முடியாமல் போயிருக்கும். ஆனால் வழக்கம் போலவே இம்முறையும் அது நடைபெறவில்லை.

மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் இப்போது சட்டமாகியிருக்கின்றது. இதில் சில திருத்தங்களை பெற முஸ்லிம் அரசியல்வாதிகள் குரல் கொடுத்தார்கள் என்று ஆறுதலடைவதா? இதற்கு ஆதரவாக வாக்களித்து விட்டார்களே என்று ஆத்திரப்படுவதா? என்பதைக் கூட தீர்மானிக்க முடியாத ஒருவித மயக்க நிலையிலேயே முஸ்லிம் சமூகம் இருக்கின்றது.

என்ன செய்வது, ஆறுதல் பரிசாக கிடைக்கும் இனிப்புப் பண்டங்களுக்குப் பின்னால் போவதாகவே முஸ்லிம் அரசியல் இருக்கின்றது !

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 24.09.2017)
மாகாண சபை தேர்தல் சட்டமும் முஸ்லிம் அரசியல் எதிர்காலமும்  மாகாண சபை தேர்தல் சட்டமும் முஸ்லிம் அரசியல் எதிர்காலமும் Reviewed by Madawala News on 9/25/2017 12:58:00 PM Rating: 5