Ad Space avaiable

உடனடியாக தேர்தல்களை நடாத்துமாறு கோருவது வியப்பாக உள்ளது.



-எம்.ஜே.எம்.சஜீத்

இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தின் படி 13வது அரசியல் திருத்த சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை 20வது அரசியல் திருத்த சட்டத்தின் ஊடாக மத்திய அரசாங்கத்தின் பாராளுமன்றத்திற்கு வழங்கும் முறையை எதிர்க்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்த போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு வெற்றுக் காகிதத்தை காட்டி 20வது திருத்த சட்ட மூலத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தை கொலை செய்து மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பிவிட்டு தற்போது கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை ஆளுனரிடம் கையளிப்பதை நிறுத்துமாறும் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறும், கிழக்கு மாகாண சபையில் அவசரப்பிரேரனை சமர்ப்பித்திருப்பது குறித்து நாம் வியப்படைய வேண்டியுள்ளது என கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி நேற்று(28) நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது சிறுபான்மை மக்களின் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை குறைக்கும் இச் சட்டமூலத்தினை நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என்று கூறிவிட்டு இரவு 08.30மணிக்கு இடம் பெற்ற வாக்கெடுப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கியதனால் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் 2/3 பெறும்பான்மையினால் நிறைவேறியது.

முஸ்லிம் காங்கிரஸினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மாகாண சபை தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருப்பார்கள் என்றால் அச் சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெறும்பான்மை அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கமாட்டாது. 

பெரும்பான்மை கிடைத்திருக்காவிட்டால் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தும் காலம் நீடிக்கப்படாமல் உரிய நேரத்தில் மாகாண சபை தேர்தல்கள் நடந்திருக்கும்.
பாராளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்திற்கும், மாகாண சபைகளுக்கான தேர்தல் காலங்களை நீடிப்பதற்கும் ஆதரவு வழங்கிவிட்டு அக்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று சட்ட விரோதமான முறையில் கிழக்கு மாகாண சபையில் அவசரப் பிரேரனையை சமர்ப்பித்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியின் அதிகாரத்தை ஆளுனரிடம் கொடுக்க கூடாது என்றும் உடனடியாக தேர்தல்களை நடாத்துமாறும் கோருவது கிழக்கு மாகாண மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் ஒரு நாடகமாகும்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு பொறியியலாளராக இருந்தும் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளும் , புத்திஜீவிகளும் இருந்தும் ஒரு வெற்றுக் காகிதத்தை காட்டி 20வது அரசியல் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கி ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

13வது அரசியல் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை திருத்துவது என்றால் சர்வஜென வாக்கெடுப்பு ஊடாகத்தான் மாற்ற முடியும் என்று நாங்கள் இந்த மாகாண சபையில் அன்று தெரிவித்தோம் நீங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜேவர்த்தன அவர்கள் நமது நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தினார். ஒரு பெண்ணை ஆணாகவும், ஒரு ஆணை பெண்ணாகவும் மாற்றாமல் ஏனைய எல்லா அதிகாரங்களையும் செய்யக் கூடிய அதி உச்ச அதிகாரங்களை கொண்டு வந்த  ஜே.ஆர்.ஜேவர்த்தனவால் கூட தனது ஆட்சிக் காலம் முடிந்தவுடன் ஒரு நாள் கூட ஜனாதிபதி பதவியில் அவரால் இருக்க முடியவில்லை. அதனால் அவர்; சர்வஜென வாக்கெடுப்பை நடாத்தி தனது ஆட்சியை தொடர்ந்தார்.

தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அதிகாரங்கள் கோரி போராட்டம் நடாத்தினார்கள் இதனால் ஆயிரக்கணக்கான தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்கி விட்டு இப்போது தலைகுணிந்த நிலையிலே உள்ளீர்கள். இந்த 20வது அரசியல் திருத்த மூலத்திற்கு ஆதரவு வழங்கி வரலாற்று துரோகம் செய்த மாகாண சபை உறுப்பினர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

2012ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மஹிந்தவா? பள்ளிவாசலா? எனக் கேட்ட போது முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு வாக்களித்தனர். தேர்தல் முடிந்தவுடன் மஹிந்தவிடம் சரணடைந்து முஸ்லிம் காங்கிரஸூக்கு தேவையானவற்றை பெற்றுக் கொண்டதுடன் மஹிந்த மரணிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய சந்தர்ப்பத்தை வழங்கும் 18வது சரத்துக்கு ஆதரவாக தனது ஆதரவினை வழங்கி வரலாற்று துரோகம் செய்த முஸ்லிம் காங்கிரஸூக்கு எவ்வளவு தொகை பணம் வழங்கப்பட்டது என்பதனை பசீர் சேகுதாவுதிடம் சென்று விபரமாக கேளுங்கள்.
சிறுபான்மை மக்களுக்கு வரலாற்று துரோகங்களை செய்து விட்டு வெட்கம் இல்லாமல் சமூப் பற்றுள்ளவர்களாக நடித்து இச் சபையில் பேசுவது குறித்து வெட்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.


-- 

MJM.Sajeeth.
Addalaichenai.
Tel:- 0774646658
        0752952866




-- 

உடனடியாக தேர்தல்களை நடாத்துமாறு கோருவது வியப்பாக உள்ளது.  உடனடியாக தேர்தல்களை நடாத்துமாறு கோருவது வியப்பாக உள்ளது. Reviewed by Madawala News on 9/30/2017 07:20:00 AM Rating: 5