Ad Space Available here

முஸ்லிம் கட்சிகள் : இனத்துவ அடையாளத்தின் கோர முகங்கள்...!1981ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றமானது முஸ்லிங்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் இதன் ஸ்தாபகர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் எதிர்பார்த்த விடயங்களை விடவும் பாதகமான விளைவுளையே முஸ்லிம் அரசியலில் ஏற்படுத்தியது.
 
ஓர் இனத்தின் அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கட்சியானது ஏனைய இனங்களுக்கிடையிலான பரஸ்பர பகையுணர்வுகளும் சந்தேகங்களும் அதிகமாக தோன்றக் காரணமாக அமைந்துவிட்டது என்றால் இதனை யாராலும் மறுக்க முடியாது.
 
மேலும் அரசுக்கு துரோகம் செய்யாத ஓர் இனமாக தேசிய கட்சிகளால் காலாகாலமாக நம்பப்பட்டு வந்த முஸ்லிம் இனமானது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றத்தைத் தொடர்ந்து பேரினவாத அரசாங்கங்களின் நல்லெண்ணங்களை இழக்கத் துவங்கியது. இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி முஸ்லிம்கள் எதிர்காலத்தில் தமக்குள்ளேயே பிளவுபடவும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வழிவகுத்தது.
 
இத்தகைய பிரச்சினைகளெல்லாம் கட்சியின் ஸ்தாபகரான எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களினால் சற்று காலதாமதமாகவே உணரமுடிந்தது. ஓர் இனத்துவ அடையாளத்துடனான அரசியல் கட்சி எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களை உருவாக்கும் என்பதை பின்னாலில் உணர்ந்து கொண்ட எம்.எச்.எம்.அஸ்ரப் அதனை சரி செய்வதற்கு நுஆ என்ற கட்சியை இனத்துவ அடையாளமின்றி ஆரம்பித்தார். ஆனால் அதனால் வெற்றி காண்பதற்கு முன்னமே அவர் காலனால் வெற்றிகொள்ளப்பட்டார்.
 
அவரது மறைவிற்கு பின்னர் முஸ்லிம் அரசியல் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏந்த இனவாத அடையாளம் வேண்டாம் என மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் பின்னாளில் ஆசைப்பட்டாரோ அந்த இனவாதத்தையே முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் முன்னெடுத்தது. இதனால் முஸ்லிம் அரசியலில் மக்களுக்கு சொல்லும் படியாக எந்தவொரு இலாபமும் கிடைக்கவில்லை. மாறாக முஸ்லிம் என்கின்ற இனத்தின் பெயரை அடமானம் வைத்து அரசியல் தலைவர்கள் மாத்திரமே பிழைப்பு நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஒரு கட்சி போதாதென்று இன்று முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் என பலவாறு பிரிந்து நின்று தமக்கான தலைமைத்துவக் கதிரைகளைத் தாங்களாகவே போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலைமையானது முன்னரை விடவும் மோசமான பாதிப்புகளை முஸ்லிம் அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.
 
- தமக்கான தலைமைத்து ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டமை
- சமூகத்தை அடமானம் வைத்து தமது சொத்துக்களை பெருக்கிக் கொண்டமை 
- பதவி மற்றும் சுகபோக வாழ்க்கை
- தமது அரசியல் இருப்புக்காக இனவாதத் தீயை வளர்க்கின்றமை 
- தமது இன சகோதரர்ளுக்கிடையே முரண்பாடுகளை வளர்க்கின்றமை 
தவிர இந்த இனவாதக் கட்சிகளாலும் அதன் தலைவர்களாலும் சமூகத்திற்கு எந்த விதமான நன்மைகளுமில்லை.
 
இனியாவது எமது சமூகம் விழிப்படைய வேண்டும். குர்ஆன், ஹதிஸை யாப்பாகக் கொண்டவர்கள் என்றெல்லாம் ஏமாற்று வார்த்தைகளைக் கூறி மக்களை உணர்ச்சி வசப்பாட்டுக்குள்ளாக்கி வாக்குகளைச் சவீகரிக்கும் இத்தகையோருக்கு முஸ்லிம்கள் இனி ஓய்வு கொடுக்க வேண்டும். இவர்களுக்கே மீண்டும் வாக்குப்போட்டு மக்கள் அதிகாரத்தை வழங்குவார்களேயானால் இவர்கள் இன்னொரு மியன்மாரிய காண்டத்திற்கு எம்மை அழைத்துச் செல்வதனை எவராலும் தடுக்கமுடியாது.
 
இனவாத அரசியலின்றி தேசிய நலன்களையும் நீதியையும் மையப்படுத்தும் அரசியல் பயணத்தைத் தொடரவேண்டும். இருக்கும் தலைமைகளிலிருந்து அவ்வாறானவர்களை தெரிவு செய்து பயணத்தைத் தொடரவேண்டும் அல்லது அவ்வாறான புதிய தலைமைகளை உருவாக்கி பயணத்தைத் துவங்க வேண்டும். இனியும் இவர்கயை நம்பினால் எம் சமூகத்தின் கதி அம்பேல்தான்...!
 
ரா.ப.அரூஸ்
27.09.2017
 
முஸ்லிம் கட்சிகள் : இனத்துவ அடையாளத்தின் கோர முகங்கள்...! முஸ்லிம் கட்சிகள் : இனத்துவ அடையாளத்தின் கோர முகங்கள்...! Reviewed by Madawala News on 9/27/2017 11:07:00 PM Rating: 5