Kidny

Kidny

அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு துணைபோகும் முஸ்லிம் தலைமைகள்-



எஸ்.றிபான் -

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமூகத்தின் எதிர் காலத்தினைப் பற்றி எந்த சிந்தனையுமில்லாது இருக்கின்றார்கள். அரசாங்கத்தினால் முன் வைக்கப்படும் திருத்தச் சட்ட மூலங்களில் உள்ள நன்மைகள், தீமைகள் பற்றி எந்த ஆய்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதும், குறிப்பிட்ட திருத்தச் சட்ட மூலம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதாக இருக்கின்றதா என்றெல்லாம் ஆழமாக சிந்திக்காமலும், கலந்துரையாடல்களைச் செய்யாமலும் கைகளை உயர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். 20வது திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கி மூக்குடைபட்டுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற்கும் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். 

இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக 154 பேரும், எதிராக 44 பேரும் வாக்களித்துள்ளார்கள். இதன் மூலம் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மூலம் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 
கடந்த வாரம் அதிகம் விமர்சிக்கப்பட்ட 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாகவே இருந்தார்கள். 

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தம்வசம் வைத்துள்ள முஸ்லிம் காங்கிரஸினதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதும் உறுப்பினர்களும் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாகவே இருந்தார்கள். முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்ளும் அரசாங்கத்தினால் முன் வைக்கப்படும் அனைத்தையும் கண்களை மூடிக் கொண்டு ஆதரிப்பார்கள் என்பது  மீண்டும் ஒரு தடவை காண்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புக்கு முரணானது 

அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்ட 20வது திருத்தச் சட்டம் அரசியல் அமைப்புக்கு மாற்றமானதாகும். இதனை நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொள்வதுடன், சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபா நாயகர் கருஜயசூரிய 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்தார். 

20வது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ள ஐந்து சரத்துக்களில் 2வது சரத்தில் உள்ள சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துதல், அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படும் திகதியை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமென்பதும், 3வது சரத்தில் உள்ள கலைப்பதற்கென குறித்துரைக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக முடிவடைகின்ற ஏதேனும் மாகாண சபையின் பதவிக் காலம் குறித்துரைக்கப்பட்ட அந்தத் திகதி வரை நீடிக்க வேண்டும். குறித்த திகதிக்கு அப்பால் தொடர்திருக்கின்ற ஏதாவவொரு மாகாண சபையின் பதவிக் காலம் அந்த திகதியன்று முடிவடைய வேண்டும் என்பதுடன் அந்த திகதியன்று அது கலைக்கப்பட வேண்டும் என்பதும், 4வது சரத்தில் உள்ள யாதேனும் ஒரு காரணத்திற்காக மாகாண சபை ஒன்று முன் கூட்டியே கலைக்கப்படும் பட்சத்தில், அத்தகைய மாகாண சபையின் அதிகாரங்கள் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படுவதற்கான திகதியை பாராளுமன்றத்தினால் தீர்மானிக்க வேண்டும் என்பதும் அரசியல் அமைப்புக்கு முரணாக காணப்படுவதனால் அச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்படுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினால் மக்கள் அங்கிகரித்தால் மாத்திரமே 20வது திருத்தத்தினை சட்டமாக்க முடியுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், அரசாங்கம் 20வது திருத்தச் சட்ட மூலத்தை கைவிட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம்
மாகாண சபைகளின் தேர்தலை ஒரே திகதியில் நடத்துதல் என்று தெரிவித்துக் கொண்டு முன் வைத்த 20வது திருத்தச் சட்ட மூலத்தினை அரசாங்கம் கொண்டு வந்ததன் நோக்கம் விரைவில் கலையவுள்ள கிழக்கு, வடமத்தி, சப்பிரகமுவ மாகாண சபைகளின் தேர்தலை ஒத்தி வைப்பதற்காகவேயாகும். மாகாண சபையின் காலத்தினை இன்னும் ஒரு வருடத்திற்கு நீடிக்க செய்யப்படும் என்பதற்காவே கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டது. 

20வது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மாகாண சபைத் தேர்தலை ஒத்தி போடுவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், மாகாண சபை தேர்தலில் திருத்தங்களை கொண்டு வருவதற்குரிய சட்ட மூலத்தினை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதனை அவசரமாக நிறைவேற்றியுள்ளது. அரசாங்கத்திற்கு உடனடியாக தேர்தலொன்றுக்கு முகங் கொடுப்பதற்கு பயம் இருக்கின்றது. தேர்தலில் நாம் தோற்றுவிடுவமோ என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருந்து கொண்டிருப்பதனால்தான் தேர்தல்களை பிற்போட்டுக் கொண்டிருக்கின்றது. உள்ளுராட்சித் தேர்தலை இரண்டு வருடங்களாக ஒத்தி போட்டுள்ளது. இதனால், உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மிகவும் மோசமாகக் காணப்படுகின்றன. பல உள்ளுராட்சி சபைகளில் ஊழல்கள் அதிகரித்துள்ளமை பற்றி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாகாண சபைகளின் தேர்தலை ஆகக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒத்தி போட வேண்டும். இதுதான் அரசாங்கத்தின் திட்டமாகும். ஆறு மாதங்களுக்குள் தம்மை தயார்படுத்திக் கொள்ள முடியுமென்று அரசாங்கம் எண்ணுகின்றது. மாகாண சபை திருத்தச் சட்ட மூலம் அரசாங்கத்திற்கும், வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கும் பெரிய பாதிப்பு இல்லாத போதிலும் முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்களின் மக்கள் பிரதிநிதித்துவம் மாகாண சபைத் தேர்தலில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் மூலமாக குறைவடையும் என்பது கவலைக்குரியதாகும். 

இத்தகையதொரு சட்ட மூலத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளமை அவர்களின் பச்சை சுயநலத்தைக் காட்டுவதோடு, சமூகத்தின் மீது அவர்களுக்கு அக்கறையில்லை என்பதும் தெளிவாகின்றது. 20வது திருத்தச் சட்ட மூலம் சிறுபான்மையினருக்கு ஆபத்து, மாகாண சபையின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கை, அரசியல் அமைப்புக்கு முரணானது என்று பல தரப்பாலும் சொல்லப்பட்ட போதிலும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாகவே இருந்தார்கள். அதே வேளை, இதில் எந்தப் பாதிப்புமில்லை. இதனை எதிர்ப்பவர்கள் மஹிந்தராஜபக்ஷவின் ஆட்கள் என்று கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்தார்கள். மஹிந்தவின் ஆட்சியில் அவரின் காலடியில் கிடந்தவர்கள் இன்று நாங்கள் அவரின் எதிரி என்று தெரிவத்துக் கொண்டிருக்கின்றார்கள். பாம்புக் தலையும், மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன் போன்று முஸ்லிம் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தினை எடுத்துக் கொண்டால் இச்சட்ட மூலத்தினை 20ஆம் திகதி புதன்கிழமை கொண்டு வந்து அன்றே அதனை நிறைவேற்றிய அவசரம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மாகாண சபைகளில் 30 வீதமான இடத்தினை பெண்களுக்கு வழங்குவதனை உறுதிப்படுத்துவதற்கான சட்ட மூலம் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இதனை உறுதி செய்து கொள்வதுடன, தொகுதிவாரி, விகிதாசார முறை இரண்டையும் கலந்த கலப்பு தேர்தல் முறையை மாகாண சபைத் தேர்தலுக்கும் கொண்டு வருவதற்கே மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தினை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

இச்சட்ட மூலத்தினை அமுல்படுத்துவதாக இருந்தால் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும். அதற்குரிய எல்லைகளை நிர்ணயம் செய்ய வேண்டும். உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும். எல்லைகளை வரையறை செய்யும் போது ஏற்படும் முரண்பாடுகளையும், அச்சங்களையும் தீர்க்க வேண்டும். இவ்வாறு பல பணிகள் உள்ளன. இவற்றினை செய்வதற்கு ஆறு மாத காலம் தேவைப்படும். இதனால்தான் மாகாண சபைத் தேர்தலை 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் நடத்துவதற்கு முடியுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2018 மார்ச் மாதத்திற்கு முன்னதாக உள்ளுராட்சி தேர்தலை நடத்த உள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தலில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி எல்லை நிர்ணயம் போன்ற வேலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகின்றன. இன்னும் பூர்த்தியாகவில்லை. இன்னுமொரு வர்த்தமானி அறிவித்தல் வர வேண்டுமென்று தெரிவிக்கப்படுகின்றது. ஆதலால், மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தின் பிரகாரம் மாகாண சபைகளின் தேர்தல் 2018 மார்ச்சில் நடைபெறுமென்பதனை நம்ப முடியாது. சில வேளைகளில் இதற்குரிய காலம் இன்னும் நீடிக்கும். அரசாங்கம் தேர்தல் ஒன்றினை நடத்துவதற்குரிய சூழல் ஏற்படும் வரை மாகாண சபைகளின் தேர்தல் பின்நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை. 

ஆளுநரின் ஆட்சி

எதிர்வரும் 24ஆம் திகதியுடன் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுகின்றது. இதன் பின்னர் மாகாண சபைத் திருத்தச் சட்ட மூலத்தினால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த முடியாது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னரே தேர்தல் நடைபெறும். சில வேளை, உள்ளுராட்சி தேர்தலைப் போன்று இரண்டு வருடத்தையும் தாண்டலாம். ஆதலால், தேர்தல் நடைபெறும் வரைக்கும் மாகாண ஆளுநரினாலே மாகாண சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஏதோவொரு திகதியில் தேர்தல் நடைபெற்றாலும் ஆகக் கூடிய காலம் கிழக்கு மாகாண சபையே ஆளுநரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கப் போகின்றது. இதனால், கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுபான்மையினர் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிடலாம். மாகாணத்தின் ஆட்சியை மக்கள் பிரதிநிதிகள் செய்யும் போது கூட ஆளுநரின் கட்டுப்பாடுகள் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. முழு மாகாணத்தினதும் அதிகாரம் தனியே ஆளுநர் எனும் நபருக்கு செல்லும் போது அவர் அரசாங்கத்தினது தேவைக்கேற்றவாறு எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பார். 

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்த போது தமிழ், முஸ்லிம்களின் காணிகள் பறி போயின. ஏனைய விடயங்களில் புறக்கணிப்புக்கள் நடைபெற்றன. இதில் தமிழர்களை விடவும் முஸ்லிம்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். தமிழர்களில் பலர் இம்மாகாணங்களில் உயர் பதவிகளில் இருந்தமையால் அவர்கள் தமிழர்களின் விடயங்களில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்கள். இதனால், முஸ்லிம் இளைஞர்களினால் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவதில் பலத்த சிரமங்கள் காணப்பட்டன. 

முஸ்லிம் பிரதிநிதிகள் ஆதரவு

முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளும் கொள்கையற்றவர்கள் போலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மாறிமாறி ஆட்சி அமைக்கும் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு ஆட்சியாளர்களின் தாளத்திற்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். ஏன், எதற்கு என்று கேள்விகளைக் கேட்காமலேயே அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்தழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நடந்து கொண்டதனை விட மோசமான நடவடிக்கைகள் இன்றைய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு அநீயாயம் நடந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளுராட்சி சபைகளிலும், மாகாண சபைகளிலும், பாராளுமன்றத்திலும் குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. இவற்றிக்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், இவை முஸ்லிம் கட்சிகளா? இவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களா என்று கேள்வி கேட்கும் நிலையில் ஒவ்வொரு முஸ்லிமும் உள்ளனர். திரும்பும் பக்கம் எல்லாம் முஸ்லிம்களுக்கு அநீதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை தட்டிக் கேட்பதற்கு யாருமில்லை. 

நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்று எல்லா முஸ்லிம் கட்சியினரும் தெரிவித்தார்கள். ஆனால், இன்றைய ஆட்சியில் ஆங்காங்கே ஒரு சில அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்காக அபிவிருத்தி விழாக்களை கொண்டாடுகின்றார்கள். அபிவிருத்தி மழை என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி கவலையில்லை. முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது அல்லது இல்லாமல் செய்யப்பட்டுவது முஸ்லிம்களின் தேசியத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும். இன்றைய அரசாங்கம் முஸ்லிம் தேசியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதற்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் துணையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் பதவிகளுக்கும், கொந்தராத்துக்களுக்கும் வாய் பிளந்து நிற்கின்றார்கள். பொம்மைகள் போல் தலையாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். தலையை ஏன் ஆட்டுகின்றோம் என்று தெரியாமலேயே தலையை ஆட்டுகின்றார்கள். அமைச்சர் பதவிகளும், ஏனைய சுகங்களும் பறி போய்விடக் கூடாதென்பதற்காக முஸ்லிம்களின் உரிமைகளை தாரைவார்த்துக் கொண்டிருக்கும் கயமைத்தனத்தினை முஸ்லிம்கள் தட்டிக் கேட்க வேண்டும்.

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக மலையக மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்படக்கூடாது என்று நாங்கள் பல தடவைகள் வலியுறுத்திக் கேட்டோம். எமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. இன்று வரைக்கும் எமக்கு காத்திரமான பதில் வழங்கப்படவில்லை. நாட்டிலே பொதுவாக மாற்றம் வரவேண்டும் என்பதில் எமது கட்சிக்கு எந்தமுரண்பாடு கிடையாது. ஆனால் தேர்தல் திருத்தச் சட்ட மூலங்கள், பிரதிநிதித்துவத்தை குறைக்குமளவுக்கு இடம்பெறுமானால் அவற்றுக்கு நாங்கள் இடமளிக்க முடியாது. உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் எமக்கு எற்பட்ட படிப்பினைகளும் ஏற்கனவே இதனால் இழந்த துர்ப்பாக்கிய நிலைமைகளும் எமது கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் இன்று சமரப்பிக்கப்படும் மாகாண சபை தேர்தல் திருத்த மூலத்தை ஆதரிப்பதில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.அமீரலி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மலையக மக்கள் முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான கோரிக்கை ஒன்றினை மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் அமீரலி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்ற சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகள் அரசாங்கத்தினால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்காது அதற்கு ஆதரவு அளித்து விட்டு அதில் திருத்தங்களை செய்ய வேண்டுமென்று இக்கட்சிகள் கோரிக்கைகள் முன் வைப்பது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். நாங்கள் அரசாங்கத்துடன் சமூகத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பிட்ட சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் அதில் முஸ்லிம்களுக்கு பாதிப்புக்கள் உள்ளன. அவற்றை நீக்க வேண்டும். முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு செய்யப்பட வேண்டிய திருத்தங்களை முதலில் கூறுதல் வேண்டும். அதனைச் செய்யாது மாகாண சபை தேர்தல் திருத்தத்திற்கு ஆதரவு அளித்துவிட்டு, இதில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை.

உள்ளுராட்சி தேர்தலில் திருத்தங்கள் செய்யப்படும் போது முஸ்லிம்களுக்கு பாதிப்பாக உள்ள இச்சட்ட மூலத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்கமாட்டோம் என்று எதிர்த்து இருந்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். சில வேளை மாற்றங்களை செய்யாது அமுல்படுத்துவதற்கு முற்பட்டால் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமலேயே சட்ட மூலம் நிறைவேறும் என்பதற்காக முஸ்லிம்களின் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்க முடியாது. நாங்கள் குறிப்பிட்ட சட்ட மூலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று காட்டுவது முஸ்லிம் கட்சிகளினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கடமையாகும். ஏற்கனவே பல படிப்பினைகள் உள்ளன. அவற்றை முன் உதாரணமாகக் கொண்டு எதிர்த்திருக்க வேண்டும். கண்களை திறந்து கொண்டே படுகுழியில் முஸ்லிம் சமூகத்தினை முஸ்லிம் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக படுகுழியில் தள்ளிக் கொண்டிருப்பதனை சமூகத்தின் மீது பற்றுள்ள எந்த முஸ்லிமும் ஏற்றுக் கொள்ளமாட்டான். 

புத்திஜீவிகளும், ஏனையவர்களும்

தலைவர் என்னோடு சிரித்தார். எங்கள் கட்சி, அமைச்சர் தொழில் தந்தார். கொந்தராத்து தந்தார். பொருள் தந்தார் என்பதற்காக மக்கள் பிரதிநிதிகள் சமூகக் கடமைகளில் விடும் தவறுகளை சுட்டிக் காட்டாலும், தட்டிக் கேட்காமலும் இருக்க முடியாது. 

முஸ்லிம்கள் மத்தியில் உள்ள புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், உலமாக்கள், ஏனைய துறைசார்ந்தவர்கள் அரசியல்வாதிகளுக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தினை இன்றைய அரசியல்வாதிகளின் பொறுப்பில் விடக் கூடாது. அவர்கள் கடந்த 15 வருடங்களாக எதனைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெளிவானதாகும். ஆதலால், முஸ்லிம் சிவில் சமூகத்தினர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க முடியாது. ஒரு சில சிவில் அமைப்புக்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி கொழும்பு முதல் நாட்டின் எல்லா பாகங்களிலும் கருத்தரங்குகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. அங்கு முஸ்லிம்களின் இன்றைய அவல நிலைக்கு முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும்தான் காரணம் என்றும் அறிந்து கொள்கின்றார்கள். ஆயினும், இந்த அமைப்புக்கள் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. மக்களின் உரிமைக்கான பணியை முறையாக செய்ய முடியாதவர்கள் நிராகரிக்கபட வேண்டியவர்கள். 

முஸ்லிம்களின் தேசியத்தை படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கும் இன்றைய ஆட்சியில் முஸ்லிம் தரப்பினர் ஆளுந் தரப்பினர் என்று பட்டம் சூட்டிக் கொண்டிருப்பது வீணாகும். அரசாங்கத்தில் இருந்தால்தான் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் இது வரைக்கும் முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகள் எதுவுமில்லை. பேரினவாதிகளை திருப்திப்படுத்திக் கொண்டு தமக்கான அரசியல் இலாபத்தை அடைந்து கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் நாளைய முஸ்லிம் சமூகத்தின் எட்டப்பர்கள் என்று சொல்லுவதில் யாரும் தப்புக் காண முடியாது. தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்றால் உரிமைகளை பெற்றுக் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.  முஸ்லிம் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமூகத்தின் தலைகளை அடமானம் வைக்கும் நிலை மாற்றப்பட வேண்டுமாயின் முஸ்லிம்களுக்கு புதிய தலைமைகளும், மக்கள் பிரதிநிதிகளும் உருவாக்கப்பட வேண்டும். தவறுகளை செய்து பழக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள் என்று இனியும் நம்பிக் கொண்டிருப்பது ஜாஹிலியாக் காலத்தில் பெண் பிள்ளைகள் உயிரோடு புதைத்ததை விடவும் மோசமானதாகும்.
அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு துணைபோகும் முஸ்லிம் தலைமைகள்- அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு துணைபோகும்  முஸ்லிம் தலைமைகள்- Reviewed by Madawala News on 9/22/2017 02:38:00 PM Rating: 5