tg travels

துரோகம்



எஸ்.றிபான் -
மாகாண சபைகளின் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துதல் என்ற நல்ல செய்திக்குப் பின்னால் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டிற்கு முரணான வகையில் அரசியல் அமைப்பின் 20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை கடந்த 11ஆம் திகதி அங்கிகாரம் வழங்கியுள்ளது. இத்திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

கிழக்கு மாகாண சபை கடந்த காலங்களில் கூட மத்திய அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்ட திவிநெகும சட்ட மூலத்தை ஆதரித்தது போல் இதனையும் ஆதரிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிப்பர் என்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். வேளைகளில் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஏதாவது மறைமுக ஒப்பந்தங்களை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்துள்ளதோ என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் முடிவு குறித்து தமிழர்களிடையே பலத்த விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன. இதே வேளை, 20வது திருத்தச் சட்ட மூலத்தை தமிழ்த் தேசிய கூட்;டமைப்பு ஆதரிக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனால், திருத்தங்களுடன் மீண்டும் வட மாகாண சபைக்கு 20வது திருத்தச் சட்ட மூலம் முன் வைக்கப்பட்டால் வடமாகாண சபையும் ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு
பாராளுமன்றத்தில் 20வது திருத்தச் சட்ட மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன் மொழியப்பட்டது. இது பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறாத நிலையில் குறிப்பிட்ட இச்சட்ட மூலத்தை மாகாண சபைகளின் அங்கிகாரத்திற்காக எல்லா மாகாண சபைகளுக்கும் அனுப்பி வைக்கபட்டது. இதனை வடமாகாண சபை ஏற்றுக் கொள்ளவில்லை. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் ஆளுந் தரப்பினர் 20வது திருத்தச் சட்ட மூலத்தில் மாகாண சபையின் அதிகாரத்தினை பறிக்காத வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் இதற்குரிய அங்கிகாரத்தை தாம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையை பொறுத்த அதிகார பரவலாக்கம், அரசியல் தீர்வு என்று வரும் போது வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை மையப்படுத்தியே அவை அமைய வேண்டியது அவசியமாகும். இவ்விரு மாகாண சபைகளிலும்தான் சிறுபான்மையினரின் பெரும்பான்மையாக உள்ளார்கள். இதனால், மாகாண சபைகளின் அதிகாரங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்விரு மாகாண சபைகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டியுள்ளது. பதவிக்காக, அரசாங்கத்தினை திருப்திப்படுத்துவதற்காக, பணத்திற்காக, ஆட்சி காலத்தினை ஒரு வருடத்திற்கு நீடிக்கச் செய்யலாமென்ற குறுகிய எண்ணத்திற்காக மாகாண சபையின் அதிகாரத்தினை தாரை வார்க்க முடியாது.

முஸ்லிம் காங்கிரஸின் கடந்த 15 வருட கால வரலாற்றைப் பார்த்தால் அக்கட்சி ஆளுந் தரப்பில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் அனைத்து சட்ட மூலத்தையும் ஆதரித்தே வந்துள்ளது. இது போலவே ஏனைய முஸ்லிம் கட்சிகளும் செயற்பட்டுள்ளன. திவிநெகும சட்ட மூலம் மாகாண சபையின் அதிகாரத்தினை மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்ளும் சட்ட மூலம் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையிலும், பாராளுமன்றத்திலும் ஆதரவாக வாக்களித்தது. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தினை இன்னும் அதிகரிக்கும் வகையிலும், ஒருவர் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்பதனையும் பிரதானமாகக் கொண்ட 18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆதரவு அளித்தன. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் 18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு அளித்தமை கண்களை திறந்து கொண்டு பாதாளத்தில் விழுந்தாகத் தெரிவித்தார். பின்னர் 18வது திருத்தச் சட்ட மூலத்தை வலுவற்றதாக்குவதற்கும், ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தச் சட்ட மூலத்திற்கும் முஸ்லிம் கட்சிகள்  ஆதரவு அளித்தன. ஆதலால், அரசாங்கம் எந்த சட்ட மூலத்தை கொண்டு வந்தாலும் அதனை கண்களை மூடிக் கொண்டு ஆதரிக்கும் நிலைப்பாட்டையே முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும்; பின் பற்றி வருகின்றனர். இந்த நடைமுறையை 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய முஸ்லிம் கட்சிகளும் பின்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் தாருஸ்ஸலாமில் கூடிய போது 20வது திருத்தச் சட்ட மூலம் பற்றி விவாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 20வது திருத்தச் சட்ட மூலம் பற்றிய தமது நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸோ, அதன் தலைமையோ தெரிவிக்காத நிலையில்தான் கிழக்கு மாகாண சபையில் உள்ள அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். 20வது திருத்தச் சட்ட மூலம் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது. இது பற்றிய தெளிவு தரப்பட வேண்டுமென்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் கேட்டுக் கொண்டதாகவும், இதன் போது குறிப்பிட்ட சட்ட மூலம் தேசிய தேவைக்கு அவசியம் என்று மாத்திரம் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், ஒரு சட்ட மூலத்தை ஆதரிப்பதாக இருந்தால் அதற்கு கட்சி மட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கட்சியின் உயர்பீடத்தில் விவாதிக்கப்படாமலும், கட்சியினால் முடிவு செய்யப்படாமலும் உள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 20வது திருத்தச் சட்ட மூலத்தை ஆதரித்துள்ளமை முஸ்லிம் காங்கிரஸில் ஒழுங்கு முறை பேணப்படுவதில்லை என்பதனை உணர்த்துவதாக இருக்கின்றது. கட்சியின் மட்டத்தில் முடிவு செய்யப்படாத சட்ட மூலத்திற்கு தமது கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளமை பற்றி ரவூப் ஹக்கீம் எக்கருத்தினையும் தெரிவிக்கவில்லை. ஆதலால், 20வது திருத்தச் சட்ட மூலத்தினை முஸ்லிம் காங்கிரஸ் ஒழித்து விளையாடிக்; கொண்டிருப்பதாகவுள்ளது. இது கட்சியின் ஆதரவாளர்களுக்கு மாத்திரமின்றி நாட்டு மக்களுக்கும் செய்யும் நம்பிக்கை துரோகமாகும்.  20வது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ள பாதிப்பினை கவனத்திற் கொள்ளாது அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று  முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன ஆதரவு அளித்துள்ளமை ஜனநாயக துரோகமுமாகும்.

இணைந்த வடகிழக்கு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்த வடகிழக்கை கோரிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இணைந்த வடகிழக்கை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைப் பெற்றுக் கொள்வதற்காகவே 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கதைகள் உலாவுகின்றன. 

மேலும், இன்றைய அரசாங்கத்தினை பாதுகாத்துக் கொள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்வதற்கு தயாராகவே உள்ளது. பலவீனமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அரசாங்கத்தினை பாதுகாத்துக் கொள்வதன் மூலமாக தமிழர்களின் உயர்ந்த பட்ச தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கணக்குப் போட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேண்டி நிற்கும் இணைந்த வட கிழக்கிற்குள் சிங்கள பிரதேசங்கள் யாவும் தனியாகப் பிரிக்கப்பட்டு புதிய மாகாண சபை ஒன்றினை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஏனைய கட்சிகளில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயநலன்களுக்காக சட்ட மூலங்களை ஆதரித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சராக இருக்க வேண்டும். ஆளுந் தரப்பாக இருக்க வேண்டும். பணம் உழைக்க வேண்டுமென்பதனை தவிர வேறு நோக்கங்கள் எதனையும் அவதானிக்க முடியவில்லை.

அரசாங்கம் தமிழர்களை ஏதாவது ஒரு வழியில் திருப்திபடுத்தி சர்வதேசத்தின் அழுத்திலிருந்து விடுபடுவதற்கு எண்ணுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாம் நினைத்ததை சர்வதேச அழுத்தின் மூலமாக இன்றைய ஆட்சிக் காலத்தில் பெற்றுக் கொள்ள திட்டமிடுகின்றது. இந்த இரண்டு தரப்பும் முஸ்லிம் சமூகத்தினை கவனத்திற் கொள்வதில்லை. இதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் காணப்படும் பலவீனமே காரணமாகும். குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் அதன் ஒழுங்கு முறைகளை இழந்துள்ளன. முரண்பாடுகளினால் சூழப்பட்டுள்ளன. அரசாங்கத்தில் பதவிகளைப் பெற்றுள்ளவர்கள் தங்களையும், பதவியையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தின் இழுவைக்கு ஏற்றவாறு சென்று கொண்டிருக்கின்றார்கள். அரசியல் தீர்வு என்று வரும் போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தியவாறு முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்க்கப்பட வேண்டும். இந்த சுயநிர்ணய உரிமை அலகு இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லம்களின் குரலாக செயற்படும். இந்த நிலையை அடைந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் கட்சி அமைத்தார். ஆனால், இன்று அவரின் கொள்கைள் காற்றில் விடப்பட்டுள்ளன. அவரின் கொள்கை காலத்திற்கு ஒவ்வாது என்றும், சாபக்கேடு என்றும் மாற்றம் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போது அது வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச் சாசனம் என்றார் அஸ்ரப். அது போல் தேர்தல் மாற்றம், வட்டார முறை, 20 திருத்தச் சட்டம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு போன்றவற்றைக் கொண்டதாக அரசியல் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு அல்லது புதிய அரசியல் அமைப்பு முன் வைக்கப்படுமாயின் அது முழு நாட்டு முஸ்லிம்களினதும் கால்களில் போடப்பட்டுள்ள அடிமைச் விலங்காகவே அமையும் என்பதனை முஸ்லிம் அரசியல் தலைவர்களும், முஸ்லிம் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். 

இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட போது அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக பதவிகளுக்காக அடங்கி இருந்தார்கள். இதனால், வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்கள் இரவோடு இரவாக 17 வீதமாக மாற்றப்பட்டார்கள். இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதனை வடகிழக்கு முஸ்லிம்கள் மறந்து விடவில்லை.
ஆகவே, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அரசாங்கத்தின் தேவைக்காக முஸ்லிம்களை அதிகாரமற்ற தரப்பாக மாற்றிக்  கொண்டிருக்கின்றார்கள். 

முஸ்லிம் தலைவர்கள் மௌனம்
20வது திருத்தச் சட்ட மூலம் ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரைக்கும் 20வது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ள நன்மை, தீமைகளைப் பற்றி எந்த விளக்கமும் முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் அளிக்கப்படவில்லை. எல்லா தரப்பு முஸ்லிம் தலைவர்களும் மௌனமாகவே உள்ளார்கள். குறிப்பிட்ட சட்ட மூலத்தினால் நன்மைகள் அதிகம் இருக்குமென்றால் நிச்சயமாக அவை பற்றியும், தாங்கள்தான் அவற்றை அரசாங்கத்திடம் கோரியதாகவும் பெருமை பேசிக் கொள்வார்கள். மஹிந்தராஜபக்ஷவின் தேவைக்காக ஊவா மாகாண சபையில் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்கள், ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்காக 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக இணைந்து வாக்களித்துள்ளார்கள்.

பெரும்பாலும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கைகள் சுத்தமில்லாதுள்ளது. இதனால், தங்களின் கறைகளை மறைப்பதற்காக அரசாங்கத்தின் அனைத்து காரியங்களுக்கும் தலையாட்டி, கைகளை உயர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். 

தேர்தல் காலங்களில் மாத்திரம் உரிமைகளைப் பற்றி பேசுவதனால் முஸ்லிம் சமூகத்தின் தலைவராக முடியாது. தமது கட்சியில்தான் மக்கள் பிரதிநிதிகள் உள்ளார்கள் என்பதற்காக முஸ்லிம்களின் தலைவராக முடியாது. அமைச்சர் பதவியை பெற்றுள்ளதால் முஸ்லிம்களின் தலைவராக முடியாது. முஸ்லிம்களின் அரசியல் தலைவர் என்பவர் முஸ்லிம்களின் உரிமைகள், பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கக் கூடியவராகவும், சமூகத்திற்காக பதவியை பெற்றுக் கொள்ளவும், துறப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், இன்று முஸ்லிம் சமூகம் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றது. அரசியல் தலைவர்கள் நாளாந்தம் இன்பக் களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் கால தலைவர்கள்தான் இன்று முஸ்லிம்கள் மத்தியில் உள்ளார்கள். உண்மையான தலைவர்களில்லாத சமூகமாக முஸ்லிம்கள் உள்ளார்கள். இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும். 

திருத்தப்பட்ட சட்ட மூலம்
மாகாண சபைகளை அதன் ஆட்சிக் காலத்திற்கு முன்னதாக கலைக்க வேண்டுமாயின் முதலமைச்சரின் ஒப்புதல் வேண்டும். கலைக்கப்பட்ட மாகாண சபையின் தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக் குழு தீர்மானிக்கும். ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட 20வது திருத்தச் சட்ட மூலத்தின் பிரகாரம் மாகாண சபையை கலைக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்குரியதாகும். ஆட்சிக் காலத்திற்கு முன்னதாக மாகாண சபையை கலைப்பதற்கு முதலமைச்சரின் பரிந்துரை அவசியமில்லை. மாகாண சபையின் தேர்தல் திகதியை பாராளுமன்றமே தீர்மானிக்கும். எல்லா மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே திகதியில் நடத்துதல், எல்லா மாகாண சபைகளினதும் ஆட்சிக் காலம் (கிழக்கு, சப்பிரகமுவ, வடமத்திய மாகாணங்கள் விரைவில் கலைக்கப்படவுள்ளது) முடியும் வரை கலையவுள்ள மாகாண சபையின் ஆட்சிக் காலத்தை நீடிக்கச் செய்தல் போன்ற விடயங்கள் உள்ளக்கப்பட்டே 20வது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்;கப்பட்டுள்ளது.

இவற்றில் சகல மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே திகதியில் நடத்துதல் என்பது மாத்திரமே நல்ல செய்தியாகும். ஏனையவைகள் மாகாண சபையின் அதிகாரத்தினை பறிக்கும் செயலாகும். மேலும், இனங்களிடையே அரசியல் அதிகாரம் பகிரப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் சூழலில் 20வது திருத்தச் சட்டம் அந்த எண்ணங்களை நொறுங்கச் செய்துள்ளது. 

வடக்கு மாகாண சபை உட்பட்ட தென் மாகாண சபையும், ஊவா மாகாண சபையும் இச்சட்ட மூலத்தை நிராகரித்துள்ளன. மத்திய மாகாண சபை, மேல் மாகாண சபை, வடமேல் மாகாண சபை ஆகியன குறிப்பிட்ட சட்ட மூலத்தில் திருத்தங்களைக் கேட்டுள்ளன. இந்நிலையில் கிழக்கு மாகாண சபை, மேல் மாகாண சபை ஆகியன திருத்தப்பட்ட 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. திருத்தியமைக்கப்பட்ட 20வது திருத்தச் சட்ட மூலத்தில் மாகாண சபைகளின் அதிகாரத்தினை பறிக்கும் நிலை காணப்படவில்லை. இதனால் இதனை ஆதரித்தோம் என்று கிழக்கு மாகாண சபையின் ஆளுந் தரப்பினர் தெரிவிகின்றனர்.

இதே வேளை, மாகாண சபைகளின் அங்கிகாரம் ரணில் விக்கிரசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கே கேட்கப்பட்டுள்ளது. ஆதலால், முதலில் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த 20வது திருத்தச் சட்ட மூலத்தினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் திருத்தப்பட்ட 20வது சட்ட மூலத்தினை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னரே மாகாண சபைகளின் அங்கிகாரத்திற்கு விட வேண்டும். ஆனால், இது நடைபெறவில்லை.

மாகாண சபைகளில் திருத்தப்பட்ட 20வது திருத்தச் சட்ட மூலத்தினை அங்கிகாரத்திற்கு விட்டதன் பின்னர் கூட பாராளுமன்றத்திற்கு திருத்தப்பட்ட சட்ட மூலத்தை வைத்து விவாதிக்கலாம். ஆயினும், திருத்தப்பட்ட விடயங்கள் எங்கும் வெளியிடப்படவில்லை. அதிமீயுயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் 20வது சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென்று தெரிவித்துள்ளாரே அன்றி திருத்தப்பட்டவைகள் எங்கும் வெளியாகவில்லை.
மேலும், ஒரு சட்ட மூலம் மாகாண சபையின் அங்கிhரத்திற்கு வருகின்றதென்றால் அது மாகாண சபையின் அதிகாரத்தோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். அதன் படி திருத்தங்கள் செய்யப்பட்டாலும் மாகாண சபையின் அதிகாரத்தினை மத்திய அரசாங்கம் எடுப்பதாகவே அமையும். 
20வது திருத்தச் சட்ட மூலத்தில் செய்து கொள்ளப்பட்ட திருத்தங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது, தேர்தல் நடத்தும் திகதியை தேர்தல் ஆணைக் குழுவே தீர்மானித்தல், ஐந்து வருடங்களுக்கு முன் மாகாண சபை கலைக்கப்பட்டால் இடைக்கால தேர்தல் நடைபெற வேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன் கலைக்கப்படும் போது மீதிக் காலம் 18 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் இடைக்கால தேர்தல் நடத்தப்படாது. இத்திருத்தங்கள் கூட மாகாண சபையின் அதிகாரத்தினை பறிப்பதற்கும், ஜனநாயகத்திற்கு விரோதமானதுமாகவே உள்ளன.

திருத்தம் கூட விரோதமானது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள போதிலும், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரோ, மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களோ எவ்வகையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடவில்லை. வெறுமனே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை மாகாண சபையின் அதிகாரத்தினை பறிப்பதாகயில்லை என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சுமந்திரன் சொல்லியுள்ள மாற்றங்களை பார்க்கும் போது மத்திய அரசாங்கம் ஐந்து வருடத்திற்கு முன்னதாக மாகாண சபையை கலைப்பதற்குரிய அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்கின்றது. ஒரு மாகாண சபையின் ஆட்சியாளர்கள் மத்திய அரசாங்கத்தின் ஆட்சி அமைத்துள்ள கட்சியாக இல்லாருந்தால் அதனை கலைப்பதற்கும், புதிய தேர்தலை நடத்துவதற்கும் மத்திய அரசாங்கத்தினால் முடியும். ஐந்து வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படும் மாகாண சபையின் மீதி ஆட்சிக் காலம் 18 மாத்திற்கு உட்பட்டதாக இருந்தால் இடைக்கால தேர்தல் நடைபெறாது எனும் போது ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக அம்மாகாணம் மாறும். 

மேலும், கிழக்கு மாகாண சபையை எடுத்துக் கொண்டால் இதன் ஆட்சிக் காலம் இம்மாதம் செப்டம்பர் 28ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதனால், கிழக்கு மாகாண சபைக்கு இடைக்கால தேர்தல் நடைபெறாது. ஆதலால், ஆளுநரின் கீழ் முழுமையாக கிழக்கு மாகாணம் கொண்டு வரப்படும். இந்நிலையில் ஏனைய மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒரு திகதியில் தேர்தல் நடைபெறும் வரை காத்திருக்க வேண்டும். தென் மாகாண சபை மற்றும் ஊவா மாகாண சபைகள் 2019ஆம் ஆண்டுதான் கலைக்கப்படும். இதனால் 20வது திருத்தத்தின் படி கிழக்கு மாகாண சபைக்குரிய தேர்தல் 2019ஆம் ஆண்டுதான் நடைபெறும். அது வரைக்கும் கிழக்கு மாகாணம் சபை ஆளுநரின் அதிகாரத்தினால் நேரடியாக ஆளுகை செய்யப்படும். இத்தகையதொரு நிலையில் கிழக்கு மாகாண சபையின் தேர்தலும், எதிர்காலமும் உள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸினதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதும் உறுப்பினர்கள் 20வது திருத்தச் சட்ட மூலத்தினை ஆதரித்துள்ளமை எதற்காக என்ற கேள்வி இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஏற்படலாம்.

கிழக்கு மாகாண சபை இம்மாதம் 28ஆம் திகதியுடன் கலையும் என்றாலும் 20வது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதும் தற்போதைய உறுப்பினர்கள் 2019ஆம் ஆண்டு வரை மாகாண சபையின் உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருப்பதற்குரிய ஏற்பாடும் 20வது திருத்தத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால்தான், கிழக்கு மாகாண சபையின் ஆளுந் தரப்பினர் எதனையும் சீர்தூக்கிப் பாராது திருத்தங்களுடன் 20வது திருத்தத்தினை ஏற்றுக் கொள்கின்றோம் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்கள். 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் 2019ஆம் ஆண்டுதான் தேர்தல் நடைபெறும். அது வரைக்கும் ஆளுநரின் ஆளுகைக்குரியதாக மாகாண சபை இருக்கும் என்றிருந்தால் நிச்சயமாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் இச்சட்ட மூலத்தினை எதிர்த்து இருப்பார்கள். இன்னும் ஒரு வருடத்திற்கு மேலாக ஆட்சியில் இருக்கலாமென்ற நப்பாசையால் 20வது திருத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்கள். இவர்களின் ஆதரவை இன்னுமொரு கோணத்தில் பார்க்கும் போது தற்போது ஆளுந் தரப்பிலுள்ள கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் தேர்தலொன்றுக்கு முகங் கொடுப்பதற்கு அச்சப்படுகின்றார்கள் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளல்
இலங்கை அரசியல் அமைப்பு 154(2) இற்கு எதிராகவே 20வது திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரபட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகின்றது. மாகாண சபையின் அதிகாரங்களை மாற்றுவதமாக இருந்தால் மாகாண சபைகளின் அங்கிகாரத்தினைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். மாகாண சபையின் அங்கிகாரத்தினைப் பெற்றால் சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் 20வது திருத்தச் சட்ட மூலத்தினை நிறைவேற்றலாம். மாகாண சபைகளில் ஒன்று நிராகரிக்குமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டும். 

மாகாண சபைகளின் அங்கிகாரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சாதாரண பெரும்பான்மையுடன் 20வது திருத்தச் சட்ட மூலத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுமென்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. 20வது திருத்தச் சட்ட மூலத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் பேர் எதிர்க்கின்றார்கள். இதனால்தான் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தினைப் பொறுத்த வரை உடனடியாக மாகாண சபை ஒன்றின் தேர்தலுக்கு முகங் கொடுப்பதால் பின்னடைவுகள் ஏற்படுமென்று எண்ணுகின்றது. இதனால்தான், உள்ளுராட்சி தேர்தலை வட்டார எல்லைகள், புதிய தேர்தல் முறைகளை முன் வைத்து ஒத்தி வைத்ததைப் போன்று மாகாண சபைகளின் தேர்தலை எல்லா மாகாண சபைகளின் தேர்தலையும் ஒரே தடவையில் வைக்க வேண்டுமென்று கூறிக் கொண்டு மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

மொத்தத்தில் விரைவில் முடிவடையவுள்ள மாகாண சபைகளின் தேர்தலை எதிர்கொள்வதற்கு முடியாத நிலையில் உள்ள அரசாங்கம் மாகாண சபைகளின் ஆட்சிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்கும், மாகாண சபையின் சில அதிகாரங்களை தம்வசப்படுத்தி வைத்துக் கொண்டு தாம் நினைத்த போது மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கும்  அரசாங்கம் தந்திரம் பண்ணியுள்ளது. இதற்கு அதிகார பரவலாக்கம் வேண்டும். சுயநிர்ணயம் வேண்டும். 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு தரப்பட வேண்டுமென்றெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸினதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விலை போய் உள்ளார்கள். இதன் மூலமாக இக்கட்சிகளின் அதிகாரம், உரிமை, சுயநிர்ணயம் என்ற கதைகளின் பின்னால் போலித்தனம் உள்ளதென்பது நிருபணமாகியுள்ளது.

நன்றி - விடிவெள்ளி 15.09.2017
துரோகம் துரோகம் Reviewed by Madawala News on 9/17/2017 02:06:00 AM Rating: 5