Kidny

Kidny

கிண்ணியா சூறா சபைக்கு ரா.ப.அரூஸ் எழுதும் பகிரங்கக் கடிதம் 
மரியாதைக்குரிய கிண்ணியா சூரா சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களே...

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!
 
எமது தேசத்தின் மிக முக்கியமானதொரு விடயம் குறித்து உங்களுடன் இந்தக் கடிதத்தின் வாயிலாகப் பேச விளைகிறேன்.
 
அண்மைக் காலமாக நீங்கள் கிண்ணியாவின் நலன்சார் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தும் ஈடுபட்டும் வருவதனை அவதானிக்க முடிகிறது. முதலில் எனது மனப்பூர்வமான நன்றிகளையும் அவையனைத்தும் வெற்றியடைவதற்கான வாழ்த்துக்களையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்!
 
அதிலும் குறிப்பாக போராட்டங்கள் மற்றும் விளிப்புணர்வு வேலைத்திட்டங்களில் ஆரோக்கியமாகக் கலந்துகொள்கிறீர்கள். அனைத்தையும் முன்னின்று நடாத்துகிறீர்கள். கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்த்துதல் தொடர்பான ஒன்றுகூடல்கள் மற்றும் மியன்மார் முஸ்லிம்கள் தாக்கப்படுதல் பற்றிய எதிர்ப்புப்போராட்டம் போன்றவை அண்மையில் தங்களால் மேற்கொள்ளப்பட்டமை குறித்து சமூக வலைத்தளங்களின் வாயிலாக அறிய முடிந்தது. இந்த நடவடிக்கைகள் வெற்றியளிக்கின்றனவா? அல்லது வெற்றியளிக்குமா? என்பது ஒரு புறமிருக்க ஏதோ உங்களால் முடியுமானவற்றைச் செய்கிறீர்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.
 
இது போலவே கடந்த காலங்களில் பலஸ்தீன மக்களுக்காய் நாம் இங்கிருந்து குரல் கொடுத்திருக்கிறோம். ஈராக்கிய மக்களுக்காய் வெட்ட வெயிலில் ஊர் வலம் வந்திருக்கிறோம். ஒசாமா பின்லேடனுக்காய் மத்திய கல்லூரி மைதானத்தில் துஆ பிரார்த்தனை செய்திருக்கிறோம். எகிப்தில் பெய்த மழைக்கெல்லாம் இங்கே குடை பிடித்திருக்கிறோம். தமிழ் நாட்டில் Pது மழையில் நனைந்தால் இங்கு எம்மில் சிலருக்குத் தடிமன் வந்திருக்கிறது. நடிகர் கமல் ஹாசன் மற்றும் ஜோர்ஜ் புஷ; போன்றோருக்கு கொடும்பாவி எறித்திருக்கிறோம்.
 
இவ்வாறு ஏகப்பட்ட வீர சாகசங்களெல்லாம் செய்திருக்கிறோம். ஆனால் எமது தேசத்திலேயே எமக்கெதிராக அரங்கேறுகின்ற விடயங்கள் குறித்து நாம் இன்னும் அவ்வளவாகச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. எங்கே உள்ளோர்களுக்கெதிராகக் கூச்சலிடும் போது எமக்கு எதிராக இங்கு எதுவுமே ஆகப்போவதில்லை என்கின்ற தைரியமோ என்னவோ அதையெல்லாம் செய்கிறோம். ஆனால் இங்குள்ள பிரச்சினைகளுக்கு எதிராக ஏதும் குரலெழுப்பினால் ஏதும் நேரடி எதிர்வினைகள் வரும் என்கின்ற ஒரு நியாயமான பயமாகக் கூட இருக்கலாம். எனவே இந்த பயமறிந்து எவ்வாறு நேரடியாக சட்ட ரீதியான பிரச்சினையோ அல்லது சட்டவிரோதமான தாக்குதலோ எம்மை நோக்கி இடம்பெற முடியாத ஒரு நியாயமான ஜனநாயகப் போராட்ட வழி முறை பற்றி நானிங்கே உங்களது கவனத்தை குவிக்க விளைகிறேன்.
 
இலங்கையில் தேசிய அரசாங்கம் உருவானதிலிருந்து அரச பணியாளர்களின் பணிநிறுத்தப் போராட்டமும் ஆரம்பித்துள்ளது. இதற்கு முன்னைய அரசாங்கத்தில் வெள்ளை வேன் இருந்தது. எனவே இத்தகைய போராட்டங்கள் அவ்வளவாக இடம்பெறவில்லை. ஆனால் தற்போதோ அந்த வெள்ளை வேனே ஆதரவு வழங்குவதால் இத்தகைய போராட்;டம் நாட்டில் தலைதூக்கியுள்ளது. கடந்த அரசாங்கம் நாட்டைச் சூறையாடியது. கடன்களை சுமத்தியது. சர்வதேச எதிர்ப்புக்களைச் சம்பாதித்தது. அவற்றையெல்லாம் சரி செய்த தற்போதைய தேசிய அரசாங்கம் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்ளுகின்ற இத்தகைய தருணத்தில் இவ்வாறான அரச எதிர்ப்புப் போராட்டங்கள் உண்மையிலேயே ஆரோக்கியமானவையல்ல என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.    
 
அதிலும் குறிப்பாக இலங்கை அரச வைத்தியர்கள் அண்மைக்காலமாக அடிக்கடி வேலை நிறுத்தப்போராட்டங்களை முன்னெடுத்து வருவதனையும் அதனால் பொதுமக்கள் படுகின்ற சிரமங்களையும் அவதானிக்க முடிகிறது. அது போதாதற்கென்று தற்போது இலங்கை மின்சார சபை ஊழியர்களும் ஆரம்பித்துள்ளனர்.
 
அரச தொழிலொன்று கிடைத்துவிடாதா என்று அலையும் எம்மவர்கள் அது கிடைத்ததன் பிற்பாடு அந்தப் பொறுப்பினை தார்மீகமாகச் செய்வது ரொம்பவும் அரிது. மக்களின் வரிப்பணத்திலிருந்தே ஊதியம் பெறும் அவர்கள் அந்த மக்களையே அடமானம் வைத்து பிளைப்பு நடாத்துகின்றமை ரொம்பவும் அநீதியான விடயமாகும்.
 
எல்லாவற்றுக்கும் வேலை நிறுத்தம், போராட்டம் என்றே காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். இத்தகையோர் தாம் சார்ந்த துறைகளின் சீர்திருத்தம் மற்றும் சேவை விரிவுபடுத்தல் போன்ற பொது நன்மைகளை அடிப்படையாக வைத்து எந்தப் போராட்டத்தினையும் முன்னெடுப்பது கிடையாது. அனைத்தும் தமது சொந்த லாபங்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுகின்றமை இவர்களது மிலேசத்தனத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
 
அதாவது ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் ஒருபோதும் பாடத்திட்ட ஒழுங்குபடுத்தல் பற்றியோ மாணவர்களுக்கான விமோசனங்கள் பற்றியோ எந்தப் போராட்டங்களையும் முன்னெடுப்பதில்லை. அவர்களது சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் கோரியே பெரும்பாலான போராட்டங்களை மேற்கொள்ளுகின்றனர். அதுபோல வைத்தியர்களாக இருந்தால் நோயாளிகளுக்கான வசதிகளை விஸ்தீரணப்படுத்துதல் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான பற்றாக்குறையை சரிசெய்தல் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மனித மற்றும் பௌதீக வளங்களை அதிகரித்தல் போன்ற பொது இலக்குகளுக்காக வேண்டி ஒருபோதும் குரல் கொடுப்பதுமில்லை, போராடுவதுமில்லை. மாறாக தமது சம்பள உயர்வு மற்றும் தமது தனித்தன்மையைப் பேணுதல் போன்ற சுய இலாபங்களுக்கான போராட்டங்களே அதிகம்.
இத்தகைய போராட்டங்களில் விசேடமான விடயம் என்னவென்றால் இவை அனைத்தினாலும் பாதிக்கப்படுவதும் துன்புறுவதும் அவர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற பொதுமக்கள்தான். எமது வரிப்பணத்தை ஊதியமாகப் பெறும் இவர்கள்தான் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் என்ற பெயரில் எம்மை துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்க நிறுவனங்களுக்கும் அவர்களுக்குமிடையில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு பொதுமக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவது அநாகரிகத்தின் உச்சமாகும்.
 
இந்த விடயங்களைச் சரிசெய்வதற்கு,

1. அரச ஊழியர்களை உள்ளீர்ப்புச் செய்யும் அரச நெறிமுறைக் கோட்பாடுகள் இறுக்கமான முறையில் சரிசெய்யப்படல் வேண்டும்.
 
2. அரச ஊழியர்களுக்கான போராட்ட உரிமை பொது மக்களைப் பாதிக்காத வகையில் சட்டமியற்றப்படல் வேண்டும். பிரான்சில் இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது.
 
இவ்வாறான விடயங்கள் அரசால் ஒழுங்குபடுத்தப்பட்டால் ஏராளமான நன்மைகள் உண்டு.
 
1. சமூக அக்கறையுள்ளவர்கள் மாத்திரமே அரச பணிகளுக்கு ஆர்வங்காட்டுவர்
2. அரசாங்கத்திடம் வேலை கோரி நடாக்கின்ற ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் குறைந்து சுயதொழிலில் இளைய சமூகம் ஆர்வங்காட்டத் தொடங்கும்
3. அரச ஊழியர்களிடமிருந்து வினைத்திறனான சேவைகளை தேசம் அனுபவிக்கும்
எத்தனையோ இளைஞர்கள் தமக்கு அரச பணியில் ஈடுபடும் வாய்ப்புக்கிடைக்காதா என்று வெளியே காத்துக்கிடக்கிறார்கள். அவர்களை மேற்சொன்ன கோட்பாடுகளின் கீழ் இணைத்துக்கொளவதோடு பழைய சுயநல அரச அலுவலர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேள்கொள்வதாக அரசு அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பை அடுத்து பாதிப்பேர் அடங்கிவிடுவார்கள்.
 
இவையெல்லாம் நடக்கவில்லையென்றால் எம்மைத் துன்புறுத்தும் அரச ஊழியர்களின் போராட்டத்திற்கெதிராக பொதுமக்களாகிய நாம் நாடு தழுவிய போராட்டத்தில் இறங்கவேண்டும். இத்தகைய சுயநலம் பிடித்த அரச ஊழியர்களை உடனடியாக அரச பணியிலிருந்து நீக்கி புதியோர்களுக்கு வாய்ப்பளித்து சேவைகளை முன்னெடுக்குமாறு எமது போராட்டக் கோசம் அமையவேண்டும். இது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனினதும் உரிமையும் கடமையுமாகும்.
அரசால் அவர்கள் பாதிக்கப்படுவதாகக் கோசமிட்டு அவர்கள் செய்கின்ற போராட்டத்தைத் அவர்களால் பாதிக்கப்படும் நாமே தடுக்கவேண்டும்.
அரச வைத்தியர்கள் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் ஆகியோரின் போராட்டத்திற்கு எதிராக பொதுமக்களாகிய நாம் எல்லோருமாக ஒன்றிணைந்து நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
 
நிச்சயமாக இந்தப் போராட்டத்திற்கு ஒருபோதும் அரச எதிர்ப்பு வரப்போவதில்லை. ஏனெனில் இத்தகைய பொதுமக்கள் விழிப்பொன்றிற்காகவே அரசாங்கம் காத்துக்கிடக்கிறது. நிச்சயமாக இந்தப் போராட்டத்திற்கு அரச தரப்பு ஆதரவு கிடைக்கும். எனவே இதில் நிச்சயம் பொதுமக்களாகிய நாம் வெற்றியடையவே நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறானதொரு வெற்றி கிட்டுமானால் அது ஒட்டுமொத்த தேசத்திற்குமான வெற்றியாகும்.
 
மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசியல்வாதிகளை அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவது மாத்திரம் ஜனநாயகமல்ல, தமது கடமைகளைப் பொறுப்புடன் செய்யாத அரச ஊழியர்களுக்கெதிராகத் திரண்டெழுவதும் ஜனநாயகமே...!
 
பொறுப்பில்லாமல் தமது சுயலாபங்களை முன்னிறுத்தியே அடிக்கடி வேலை நிறுத்தம் செய்கின்ற அரச வைத்தியர்கள் மற்றும் இதர அரச பணியாளர்களுக்கெதிராக மக்கள் போராட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட மறுகணமே மனச்சாட்சியுள்ள அரச பணியாளர்கள் யாவரும் மக்களின் பக்கம் வந்துவிடுவார்கள்...!
 
அரசை வலுப்படுத்தி, நாமும் வளம் பெறுவோம்...!
சுயநலப் பேர்வழிகளை அரச நிறுவனங்களை விட்டு வெளியேற்றுவோம்!

தகுதியும் பொறுப்புமுள்ளோர் வெளியே காத்துக்கிடக்கிறார்கள்...!
 
எனவே இத்தகையதொரு போராட்டத்திற்கு கிண்ணியா மஜ்லிஸ் சூறா தலைமை தாங்கி கால்கோலிடுமாயின் இந்த தேசத்திற்கே இது ஓர் எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதனைக் கண்டு ஏனைய பிரதேசங்களிலும் இத்தகைய போராட்டங்கள் அரங்கேறும். இன ரீதியான கூக்குரல்களுக்கு அப்பால் முழு தேசத்தின் நலனில் எமக்கு அக்கறையிருக்கிறது, அநீதியை எதிர்க்கும் தைரியம் இருக்கிறது என மாற்று மத சகோதரர்களுக்கு உணர்த்துவதற்கும் அவர்களும் இதைப் பின்பற்றுவதற்கும் இது நல்லதொரு தருணமாகும்.
 
கிண்ணியா சூறா சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களே,

தயவு செய்து எமது ஊரினதும் ஒட்டுமொத்த தேசத்தினதும் நன்மை கருதி இது குறித்து கொஞ்சம் சிந்தியுங்கள் என பணிவுடன் உங்களை வேண்டி விடைபெறுகிறேன்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவரின் நல்லெண்ணங்களையும் பொருந்திக்கொள்வானாக!
 
எதிர்பார்ப்புக்களுடன்,
ரா.ப.அரூஸ்
19.09.2017
கிண்ணியா சூறா சபைக்கு ரா.ப.அரூஸ் எழுதும் பகிரங்கக் கடிதம் கிண்ணியா சூறா சபைக்கு ரா.ப.அரூஸ் எழுதும் பகிரங்கக் கடிதம் Reviewed by Madawala News on 9/19/2017 08:59:00 PM Rating: 5