Ad Space Available here

வெட்கம்கெட்ட அனுதாபம் தேடும் அரசியல்சிலவாரங்களுக்கு முன்பு உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அவ்விவாதத்தில் உரையாற்றிய முஸ்லிம் பெருந்தலைவர்கள் எல்லாம் வட்டாரம் பிரிப்பதில் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களையெல்லாம் பட்டியல்போட்டுப் பேசிவிட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக கைஉயர்த்தினார்கள். 

சமூகத்தின் உரிமைக்காகப் போராடுவோம்; என்று மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு சமூகத்திற்கு அநியாயம் நடந்திருக்கின்றது; என்று பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுவிட்டு அந்த அநியாயங்களுக்கு ஆதரவாக கையுயர்த்துகின்ற ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நமது உரிமை அரசியல் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதன்விளைவு எதிர்வரும் ஜனவரிமாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் நிறைய பிரதிநிதித்துவங்களை இழக்கப் போகின்றோம். 

அண்மையில் ஒரு இணையத்தளத்தில் வெளியாகிய ஒரு செய்தியின்படி, ஒரு பிரதேசசபைக்கு ஏற்கனவே தெரிவான 15 உறுப்பினர்களுள் 4 பேர் முஸ்லிம்களாக இருந்தார்களாம். தற்போது அந்த எண்ணிக்கை 30 அதிகரிக்கப்படும் அதேவேளை முஸ்லிம் பிரதிநிதித்துவம் 2 ஆக குறைக்கப்பட்டிருக்கின்றதாம். நமது கட்சிகள் பெற்றுத்தந்த உரிமை இது.

மாகாணசபைத் தேர்தல் திருத்தம்
-------------------------------
இத்தேர்தல் திருத்தம் முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டு மீண்டுமொருமுறை அந்த முஸ்லிம்களுக்கு பாதிப்பான சட்டமூலத்துக்கு கைஉயர்த்தியிருக்கின்றார்கள். இந்த அடிமை அரசியலுக்குப் பெயர் உரிமை அரசியல்.

அடிமை அரசியலிலும் விளம்பரம்
------------------------------
முஸ்லிம்களுக்கு பாதிப்பான சட்டமூலத்தை ஆதரித்துவிட்டு " என்சோக கதையைக் கேளு தாய்க்குலமே " என்று போராடிய கதை 'ஆயிரத்தோர் இரவுகள்'  கதையையும் மிஞ்சிவிடுமளவு இன்னும் சொல்லி முடியவில்லை.

விளம்பரத்தின் மூலதனம் அனுதாபம்
----------------------------------
எல்லாம் முடிஞ்சுதாம், ' இலுப்பையில் ஏறியதாம் முடப்பேய்' என்பதுபோல்  ' ராஜித சேனாரத்ன அடிக்கப்போனாராம்' "சமூகத்திற்காக அடிவாங்கப்பார்த்தேன்" என்று ஒரு அனுதாபம் தேடல். தன்மானம் உள்ள எவனாவது இப்படியொரு செய்தி போடுவானா? சற்று சிந்தியுங்கள். அப்படியானால் அடிக்குப்பயந்தா கைஉயர்த்தினீர்கள். 

நீங்கள் மானமுள்ள அரசியல்வாதியாக இருந்திருந்தால் அவ்வாறு அவர் அடிக்கவந்தது உண்மையானால் அவருடைய அமைச்சுப் பதவியைப் பறிக்கவைத்திருக்க வேண்டும் அல்லது ஆகக்குறைந்தது அவரை மன்னிப்புக்கேட்க வைத்திருக்க வேண்டும்; அதன்பின்புதான் அதுவொரு நியாயமான சட்டமூலமாக இருந்தால்கூட நீங்கள் வாக்களித்திருக்க வேண்டும்; இல்லையெனில் தூக்கிவீசிவிட்டு வந்திருக்க வேண்டும். ஆனால் சமூகத்திற்கு அநியாயமான சட்டமூலத்திற்கே கைஉயர்திவிட்டுவந்து " அடிக்கவந்தார்" என்று கூறுகின்றீர்களே! வெட்கமாக இல்லையா?

அதனை உங்கள் ஊடக அடியாட்கள் மூலமாக சந்தைப்படுத்தி அனுதாபம் தேடுகிறீர்களே, உங்களைவிட பிச்சைக்காக புண்ணைக்காட்டி அனுதாபம் தேடும் பிச்சைக்காரன் எவ்வளவோ மேல். புரிந்துகொள்ளுங்கள், தன்மானமுள்ள எந்தவொரு ஆண்மகனும் எந்த விடயத்திலும் அனுதாபம் தேடமாட்டான்.

உங்களுக்கு அனுதாபம் தேடுவது தொழிலாகிவிட்டது. சில மாதங்களுக்குமுன் ஞானசார தேரர் தன்னை கொல்லுவதற்கு முயற்சி நடக்கின்றது; என்று அனுதாப அலையை எதிர்பார்த்து ஒரு செய்தியைப் போட்டதுதான் தாமதம் " உங்களையும் கொல்ல சதி நடக்கிறது" என்று உங்களது செய்தி வந்தது. ' ஆகா! Idea நன்றாக இருக்கிறதே என்று நினைத்துவிட்டீர்கள் போலும்.
ஆனால் அதற்குப் பின்னால் கொடுத்த விளக்கத்தில் கொஞ்சம் சொதப்பி விட்டீர்கள். அந்த விளக்கம்தான் அடுத்த தேர்தலில் உங்களைத் தோற்கடிக்க வேண்டும் அல்லது உங்களைக் கொல்லவேண்டும் ; என்று திட்டம் போட்டிருக்கின்றார்கள், என்பதாகும். தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கின்றன; என்பதை கவனத்திற் கொள்ள மறந்து விட்டீர்கள்.

அடுத்ததாக ஆடிய நாடகம்தான் ' உங்கள் வீட்டை இனவாதிகள் சுற்றி வளைக்கப் போகின்றார்கள்' என்ற விளம்பரமாகும். தொகுதியில் சடைவு ஏற்படும்போதெல்லாம் இப்படி அனுதாபம் தேட முயற்சிக்கின்றீர்கள். இப்பொழுது கிடைத்தது "ராஜித அடிக்கவந்தார்" என்ற கதை.

நடிக்காமல் உண்மையாக மக்களுக்காக உழைத்திருந
தால் எதற்காக இந்த அனுதாப நாடகம். 

பாவம் ஹிஸ்புல்லா
-----------------
நீங்கள் " ராஜித அடிக்க வந்தார்" என்று ஏற்கனவே செய்த விளம்பரத்தை பொய்யாக்கவும் முடியாமல் உண்மையையும் மறைக்கமுடியாமல் ' கைகலப்பு நடந்ததுதான் ஆனால் அடிபிடிப் படவில்லை' என்று " வரும் ஆனா வராது' என்பதுபோல் சொல்லிச் சமாளிக்க வேண்டி இருந்தது ஹிஸ்புல்லாவுக்கு.

ஏன் இந்த வெட்கம்கெட்ட அனுதாப அரசியல். கடந்த ஞாயிறு Sunday Times இல் " ரவூப் ஹக்கீம்தான் இந்த வாக்கெடுப்பில் எல்லோரையும் குழப்புகின்றார்" என்று ரவிகருணாநாயக்க ரவூப் ஹக்கீமைப் பார்த்து சத்தம் போட்டதாக எழுதப்பட்டிருக்கின்றது. அதைவைத்து அவர்கள் விளம்பரம் தேடினார்களா? துமிந்த திசாநாயக்க போன்றவர்கள் ஹிஸ்புல்லாவைப் பார்த்து 'நீதான் எல்லோரையும் குழப்புகின்றாய்' என்று கூறியதாக அவரும் கூறுகின்றார். எனவே, இவ்வாறான காரசாரமான பேச்சுக்கள் அரசியலில் சகஜம். ஆனாலும் நீங்கள் மட்டும் எப்படி அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கின்றீர்கள். மக்களுக்கு உங்கள் நடிப்பு எப்போதோ புரிந்துவிட்டது என்பதை நீங்கள்தான் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

ரவூப் ஹக்கீமைக் காப்பியடித்தல்
----------------------------
குறித்த சட்டமூலத்துக்கு கையுயர்த்தியதும் மக்கள் ஆவேசப்பட்டார்கள். உடனே உங்கள் உத்தியோகபூர்வ ஊடகப்பிரிவினூடாக அறிக்கை விட்டீர்கள். " நாங்கள் எதிர்த்துத்தான் வாக்களிக்க இருந்தோம். ரவூப் ஹக்கீம் குழப்பிவிட்டார். அவர் வாக்களித்ததனால்தான் நாங்களும் வாக்களித்தோம்" என்று நீங்கள் நல்ல பிள்ளைபோல் ரவூப் ஹக்கீமின்மேல் பழியைப் போட்டுத் தப்பலாம்; என நினைத்தீர்கள். இது சிறுபிள்ளைத்தனமாக தெரியவில்லையா? ரவூப் ஹக்கீம் செய்வதை நீங்கள் செய்வதென்றால் உங்களுக்கு எதற்கு தனிக்கட்சி. எதற்காக நீதிமன்றப்படி ஏறி இறங்குகிறீர்கள். பேசாமல் ரவூப் ஹக்கீமின் கட்சியில் போய்ச்சேரலாமே!

"ரவூப் ஹகீம் பிழை. நான்தான் சரி. நான்தான் சமூகத்தின் காவலன். தேசியத்தலைவன். சர்வதேசத்தலைவன்" என்று தம்பட்டம் அடிக்கும் நீங்கள், இதை நாளாந்தம் எழுதுவதற்காக கூலிப்பட்டாளம் வைத்திருக்கும் நீங்கள், ரவூப்ஹக்கீம் கைஉயர்த்தினார், நானும் உயர்த்தினேன், என்று சொல்ல நாக்கூசவில்லையா? பேசாமல் தலையில் ஒரு சீலையைப் போட்டுக் கொண்டு ரவூப் ஹக்கீமின் கட்சியில் போய்ச்சேருங்கள்.

மானம் ரோசம் இருந்தால் நானும் ஒரு தலைவன் எனக்கும் ஒரு கட்சி என்று இன்னொரு தடவை சொல்லாதீர்கள்.

வை எல் எஸ் ஹமீட்
வெட்கம்கெட்ட அனுதாபம் தேடும் அரசியல் வெட்கம்கெட்ட அனுதாபம் தேடும் அரசியல் Reviewed by Madawala News on 9/26/2017 11:28:00 PM Rating: 5