Yahya

கிழக்கு மாகாண சபையும் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கான ஆதரவும்


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

20 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் நடத்துவதாகவிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்தச் சட்டமூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் எந்தளவு போலித்தனமாக அமைந்துள்ளன என்பதனை  இனிமேலும் யாரும் கூறித் தெரிந்து கொள்ளும் தேவை  இல்லை.

ஆணை வழங்கிய மக்களை தவறான வழியில் இட்டுச் சென்று தங்களது ஆட்சி அதிகார கால எல்லையை நீடிக்க வேண்டுமென்பதற்காக 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அங்கீகரிப்பதற்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஆதரவுக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன இணைந்து ஆடிய நாடகம் இன்று அம்பலத்துக்கு வந்துள்ளது.

வடமாகாண சபையிலும் 20 ஆவது திருத்தம் தொடர்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது பல திருத்தங்கள் அவற்றில் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் கூட அதனைப் படித்துப் பார்த்தே தாங்கள்  தீர்மானிக்க முடியுமென அந்த மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா தெரிவித்திருந்தார்.

ஆனால், இதுவரை அவ்வாறான எந்தத் திருத்தங்களுடனும் குறித்த சட்டவரைவு தங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களால் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அவர் தெட்டத் தெளிவாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா நேற்று (14) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக எந்தவித திருத்தங்களும் வரவில்லை.அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால், முறையாக பரிசீலித்து சரியான முடிவுக்கு வருவோம். இதுவரையில் திருத்தங்கள் செய்யப்பட்டு எமக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. 

அண்மையில், கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர்.

அவர்களுக்கு தெளிவின்மையினால் தமது ஆதரவை தெரிவித்திருக்கக் கூடும். அதைப்பற்றி எமக்கு சரியாகத் தெரியாது. தற்போது இருக்கும் நிலையில், எமக்குத் தரப்பட்டது முன்னைய ஆவணம் மட்டுமே புதிய ஆவணம் திருத்தங்களுடன் வந்தால், கட்டாயம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”எனத் தெரிவித்துள்ளார்.

நிலைமை இப்படி இருக்க, கிழக்கு மாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட அல்லது பரிந்துரை செய்யப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கான திருத்தங்களை உடனடியாகச் செய்து சட்டமா அதிபர் அல்லது பொறுப்பு வாய்ந்த தரப்பு தங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அதனை தாங்கள் பரிசீலனை செய்த பின்னரே அதற்கான அங்கீகாரத்தை  தாங்கள்  வழங்கியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபையின் சம்பந்தபப்ட்ட தரப்புகள் தெரிவிக்கின்றன.   

மேலும்,   தங்களால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் இணைக்கபப்டும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே இதற்கான அங்கீகாரத்தை வழங்கினோம் என்ற பிந்திய புதுக் கதைகளும் இப்போது  அவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் நினைக்கும் போது அந்தக் காலத்தில் நான் கேட்ட ஒரு சினிமா பாடல் எனக்கு ஞாபகத்துக்கு அதாவது…

சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா
சிலுக்கு சட்டை சீனப் பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா
அப்போ..கலகலனு சிரிச்சுகிட்டு என்னைப் பாரம்மா…

என்ற அந்த ஏமாற்றுப் பாடலையே எனக்கு நினைவுபடுத்துகிறது.

20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் தங்களது ஆலோசனைகளும் உள்ளடக்கப்பட்டு விட்டதாகவும் அதனையடுத்து தாங்கள் அதனை அங்கீகரித்ததாகவும் கூறும் தரப்பினரே!  குறித்த திருத்தச் சட்டத்தை அமுல் அமுல்படுத்துவதாகவிருந்தால் சர்வஜன  வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் முதலாவது சமர்ப்பணத்துக்கே வியாக்கியானம் தெரிவித்துள்ள நிலையில், இரண்டாவதாக நீங்கள் தெரிவித்துள்ள ஆலோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று நீங்கள் வாய் கூசாமல் எவ்வாறுதான் பொய் கூறுகிறீர்களோ தெரியாது. இது பச்சை நிர்வாணக் கதையல்லவா? 

உங்களை ஆட்சியில் ஏற்றி ஆணை வழங்கிய மக்களை நீங்கள் மாக்களாக்க முயற்சிக்க வேண்டாம்.. மக்கள் மடையர்கள் அல்லர்.  அவர்கள் மடை திறந்த சிந்தனையாளர்கள் என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டுக்கு வெளிச்சம் வர வேண்டுமென்பதற்காக உங்களது வீட்டுக் கூரையை நீங்கள் விரும்பினால் எரியுங்கள். ஆனால் அக்கம் பக்கம் உள்ள வீடுகளின் நிலைமைகளையும் சிந்தித்து செயற்படுங்கள்.

கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட ஓர் ஆவணத்தை  இங்கு வெளியிட்டுள்ளேன். அந்த ஆவணத்தில் “திருத்தங்கள் சட்ட மூலத்தின் குழு நிலையில் சமர்ப்பித்தல்” என்ற வாசகமும் அதனையடுத்து “பக்கம்01:சரத்து 02: வரிகள் 10லிருந்து 18 வரை (இரண்டும் உட்பட) நீக்கி விட்டு பின்வருவனவற்றை பதிலிடவும்” என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பரிந்துரை குறிப்பை எவ்வாறு சட்ட ரீதியான ஆவணமாக அல்லது திருத்தமாகக் கொள்ள முடியும் என்பதனை  சிந்தித்து பாருங்கள் மக்களே!

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கிழக்கு மாகாண சபையும் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கான ஆதரவும்  கிழக்கு மாகாண சபையும் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கான ஆதரவும் Reviewed by Madawala News on 9/15/2017 04:07:00 PM Rating: 5