Yahya

தமிழ் தேசிய கூட்டமைப்பினது அமைதியின் பின்னாலுள்ள ஆபத்து 
இதுவரை சிறிய விடயங்களுக்கும் பாய்ந்து பறந்து எதிர்ப்பை வெளிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது, தற்போது அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பதன் பின்னால் பெரும் ஆபத்துக்களே நிறைந்து காணப்படுவதாக நம்பப்படுகிறது. மாகாண சபைகளில் இருபதாம் சீர் திருத்தம் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடையே இருந்து கூட பலத்த எதிர்ப்புக்கள் தோன்றிய போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது கிழக்கு மாகாணத்திலே அதனை ஆதரிக்கும் விடயத்தை செய்திருந்தது. வட மாகாண சபையானது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முரண்பட்டுள்ள விக்னேஸ்வரனின் கையில் இருப்பதால் அங்கு அவர்களால் எதனையும் செய்ய முடியவில்லை. அல்லாது போனாலும் நிச்சயம் அங்கும் அது நிறைவேறி இருக்கும்.
 
அது போன்று மாகாண சபை தேர்தல் முறை மாற்றமானது தமிழ் தேசிய கூட்டமைப்பை பெரிதும் பாதிக்காது போனாலும் சிறுபான்மையின மக்களை அது நன்கு பாதிக்கும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றாகவே தெரியும். சிறுபான்மையின மக்களின் நலன் கருதி அவ்விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது மிகவும் காத்திரமான பங்களிப்பை செய்திருக்க வேண்டும். இருந்தாலும் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கவனத்தில் கொள்ளவில்லை. குறித்த முறையினூடாக மலையக தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட கூடிய சூழ் நிலை உள்ளதால் தமிழ் இனம் சார்ந்த ஒரு கட்சி என்ற வகையில் இதில்  சக தமிழின மக்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும். அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்திருக்கவில்லை.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த செயற்பாடானது, இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏதோ நன்மைகள் உள்ளதை எடுத்து காட்டுகிறது. இருபதாம் சீர் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அதனை ஆதரிக்கும் முடிவை அறிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பானது வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களை முன்னிறுத்தியே இதனை ஆதரிப்பதாக கூறியிருந்தது. இருபதாம் சீர் திருத்தத்துக்கும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கும் நேரடி சம்பந்தமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியானால் மறைமுக சம்பந்தம் உள்ளதை அவரது கூற்று தெளிவாக்குகிறது. குறித்த இருபதாம் சீர் திருத்தம் கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் கிழக்கு முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் உட்பட பலர் அரசியலமைப்பை நோக்கியே இதனை ஆதரித்ததாகவும் கூறியிருந்தனர்.
 
குறித்த இருபதாம் சீர் திருத்தத்தில் அரசு தோல்வியை தழுவி இருந்தால் அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு சாதகமாக அமைந்திருக்கும். அவர் மீள வருவதானது புதிய அரசியல் மாற்ற முயற்சிக்கு தடையாக அமைந்திருக்கும். இந்த வகையிலும் இதனை ஆதரித்திருக்கலாம். அது போன்று மாகாண சபை தேர்தல் மாற்ற விடயத்தை கொண்டு வந்து தேர்தலை பிற்போட்டிருக்காவிட்டால் மாகாண சபை தேர்தல் நடந்து, அதற்கு சில காலம் எடுத்திருக்கும். சில வேளை அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கூட்டு  அணியினர் வெற்றி பெற்றிருந்தால் புதிய அரசியலமைப்பு மாற்ற முயற்சிக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கும். குறித்த தேர்தலை நாடத்துவதற்கு முன்பு அரசியலமைப்பு மாற்றத்தை நிறைவேற்றுவது இவர்களின் திட்டமாக இருக்கலாம். தற்போது மிகவும் துரித கதியில் அதற்கான நடவடிக்கைகள் மேட்கொள்ளப்படுகின்றமையை அவதானிக்கலாம். மாகாண சபை தேர்தல் மாற்ற சட்டம் நிறைவேறிய மறுநாளே அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
விடயத்தை நீட்டாமல் சுருக்கமாக சொல்வதாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவானது எதிர்வரும் அரசியலமைப்பு மாற்றத்தை நோக்கியதாகும். இங்கு தான் ஒரு வினா எழுகின்றது. அரசியலமைப்பு மாற்ற முயற்சியில் இவ்வரசினர் கனதியான வாக்குறுதியை அளித்திருக்காவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள துணிந்திருக்குமா? என்பதாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு இணைப்பு கோரிக்கை முஸ்லிம்களை அதிகம் பாதிக்கவல்லது என்பதோடு வெளிவந்துள்ள இடைக்கால அறிவிக்கையில் மாகாணங்களின் இணைப்புக்களின் சாத்தியத்தன்மை அதிகரித்துள்ளதோடு அவ்வாறு வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் போது முஸ்லிம்களின் தீர்வான தனி அலகு பற்றிய எந்த விடயமும் இல்லாமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் மிக அவதானமாக தங்களது பார்வைகளை செலுத்த வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம்.
 
தொடரும்.....
 
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினது அமைதியின் பின்னாலுள்ள ஆபத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினது அமைதியின் பின்னாலுள்ள ஆபத்து Reviewed by Madawala News on 9/27/2017 11:12:00 PM Rating: 5