Ad Space Available here

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் மாணவர்களின் பிரச்சினைகள் தீரும்வரை ஒத்திவைப்பு


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் மாணவர்கள் அவர்களது பரீட்சை அனுமதி விடயத்தில் உயர்நிருவாகம் பக்கச்சார்பாக நடந்தமையை முன்னிட்டு  பரீட்சைகளுக்குத் தோற்றாமல் பகிஷ்கரிப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.

இங்கு நடைபெற்ற பரீட்சைகளில் சில பாடங்களுக்கு Repeat ஆகத் தோற்றிய ஒரு சில மாணவர்களையும் தங்களுக்கான சுய இலாபங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக உபவேந்தரிடம் நற்பெயர் பெறுவதற்காகப் பாடுபடும் ஒரு சில குறுமனங்கொண்ட விரிவுரையாளர்களின் பொய் வாக்குறுதிகளையும் இனத்துவேசக் கருத்துக்களையும் உள்வாங்கிய முஸ்லிம் மாணவர்களின் ஒரு சிலரைத் தவிர (உதாரணமாக BCOM கற்கைகளை மேற்கொள்ளும் மூன்றாம் வருட மாணவர்களில் 5 பேர் மாத்திரமே ஒரு சில பாடங்களுக்கு சமுமளித்தனர்) ஏனைய அனைத்து முஸ்லிம், தமிழ், சிங்கள மாணவர்கள் அனைவரும் பரீட்சைகளைப் புறக்கணித்திருந்தனர்.
 
பல்கலைக்கழகத்தின் பரீட்சைகளைப் புறக்கணிக்குமளவுக்கு அவர்களது எதிர்கால வாழ்க்கையை அடமானம் வைத்து அவர்கள் பரீட்சைகளைப் புறக்கணித்ததற்காக காரணம் என்ன? 80 வீத வரவுப் பிரச்சினைதான் காரணம். எழுத்தில் எல்லா இடங்களிலும் 80 வீதத்தை அமுல்படுத்தும் படி சொல்லியிருந்தாலும் இலங்கையில் எந்தப்பல்கலைக்கழகத்திலும் அவ்வாறு அச்சொட்டாக 80வீத வரவுக்கான கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை யதார்த்தமாகப் பார்த்தால் அது இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. 

இது தொடர்பாக வேறு பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவர்களை அழைத்துச் சென்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரிகளிடம் எமது மாணவர்கள் உதாரணங்களைக் கோடிட்டுக் காட்டியுள்ளனர். 

மேலும் இப்பீடத்தின் மாணவர்கள் 80வீத வரவுக்கான நியமத்தை இல்லாதொழிக்குமாறு கேட்கவில்லை. மாறாக, ஏனைய பீடங்களில் இது மாதிரியான நியமங்களைப் பார்ப்பதில் தயவுகள் காண்பிக்கப் பட்டது போல தங்களுக்குக் காண்பிக்கப் படாமல் உபவேந்தரும் அவரிடம் இருந்து சுய இலாபங்களை அனுபவிப்பதற்காகக காத்துக் கிடக்கும் ஒரு சில திணைக்களத்தலைவர்களும் (உதாரணமாக தங்களது பதவிக்காலத்தை நீடித்துப் பெற்றுக் கொள்ளல், எதிர்காலத்தில் பீடாதிபதியாக வருவதற்காக உபவேந்தரின் அனுசரணையைப் பெற்றுக்கொள்ளல் போன்றவை), மூன்று விரிவுரையாளர்களும் தங்களுக்கு அநியாயம் இழைப்பதாகக் கூறியே அவர்கள் இந்தப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, இப்பீடத்தின் முகாமைத்துவ தகவத் தொழில்நுட்ப திணைக்கழத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவர்கள் 79.5 வீதம் வரவு தந்திருந்தும் பரீட்சைக்கு அனுமதிக்கப்படக்கூடாது என்று இத்திணைக்கழத் தலைவர் பரிந்துரைத்துள்ளார். 

இவ்வாறு 65 வீதத்திற்கம் 80வீதத்திற்கும் இடைப்பட்ட சுமார் 150 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திணைக்களத்தில் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ஏனைய இரண்டு திணைக்களங்களிலும் இவ்வாறே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இப்பீட மாணவர்கள் இந்த 80வீதத்து சட்டத்தை மீறுமாறு கூறவில்லை. மாறாக, ஏனைய கலை கலாச்சார பீடத்திலும், இஸ்லாமிய கற்கை பீடத்திலும் இடம்பெற்றது போன்று தாங்களுக்கும் இடம் பெற வேண்டும் என்றே போராடுகின்றனர். அதாவது, அப்பீடங்களில் 80 வீதத்திற்குக் குறைவாக வரவுள்ள மாணவர்களிடம் மருத்துவச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் ஆங்கிலபாடத் திணைக்கழம், அரசியல் விஞ்ஞானத் திணைக்கழம் போன்றவற்றில் அவற்றின் தலைவர்களே ஒப்பமிட்டு 80வீதத்திற்குக் குறைவாக வரவுள்ள மாணவர்களை பரீட்சைக்கு அனுமதிக்குமாறு பரிந்துரை செய்துள்ளனர். 

மேலும், புவியியல் துறையில் கல்வி கற்கும் ஒரு மாணவி திருகோணமலையிலுள்ள அரச நிறுவனமொன்றில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். அவர் கடந்த இரண்டு வருட காலமாக அனைத்துப் பரீட்சைகளுக்கும் தோற்றியுள்ளார். இது சம்பந்தமாக உபவேந்தருக்கு பல ஆதாரங்களுடன் பலமுறைகளை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல் இங்குள்ள சில விரிவுரையாளர்கள் மாணவர்களைப் போராட்டத்திற்கு ஊக்கப்படுத்துவதாகக் கூறித்திரிகின்றார். 

அவ்வாறு மாணவர்களுக்கு சட்டத்திற்கு முரணான முறையில் ஆதரவு காட்டுவதெனில் இங்குள்ள விரிவுரையாளர்கள் இம்மாணவர்களுக்கு 100வீத வரவைப் பதிவிட்டு உரிய திணைக்களங்களில் வரவுப் பத்திரங்களைச் சமர்ப்பித்தருக்க முடியாதா என்ற கேள்வி மாணவர்களின் மத்தியில் காணப்படுகின்றது. ஆனால் உபவேந்தர் அவ்வாறு ஏன் குருட்டுத்தனமாகக் கருத்துத் தெரிவிக்கின்றார் என்று மாணவர்கள் அங்கலாய்க்கின்றனர். 

மேலும் உபவேந்தர் அவர்கள் பல்கலைக்கழக மூதவை மற்றும் பேரவைக்கூட்டங்களில் ஏனைய பீடங்களில் அவ்வாறு நடக்கவில்லை என்றும் இப்பீடத்தில் 10 இற்கும் குறைந்த மாணவர்களைத்தான் பரீட்சைகளுக்கு அனுமதிக்கவில்லையென்றும் பொய்கூறியிருப்பது வருந்தத்தக்கது.

இப்பின்புலத்தில், கடந்த மாதம் 21 ஆம் திகதி இரண்டாம் பருவத்திற்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ வர்த்தக பீடம் அறிவித்திருந்தும் இது வரைக்கும் மாணவர்களின் வரவு இல்லை என்றும், ஓரிரு பாடங்களுக்கு ஒரு சில சுயநல விரிவுரையாளர்களின் இரக்கமற்ற போக்கில் பயந்தமையினால் ஒரு சில மாணவர்கள் மாத்திரம் வரவளித்ததாலும் மாணவர்களின் எதிர்காலத்தினையும் பீடத்தினதும் பல்கலைக்கழகத்தினதும் நற்பெயருக்கு அவதூறு வரக்கூடாது என்ற நோக்கிலும் எதிர்காலத்தில் தேவையற்ற வெளியாட்களின் தலையீடுகள் இது தொடர்பாக வரக்கூடாது என்ற எண்ணத்தினாலும் இப்பீடத்தின் பீட சபை விசேட கூட்டமொன்றைக் கடந்த வாரம் கூடி, மாணவர்களின் சமகாலப் பிரச்சினைகளுக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவை ஒரு முடிவொன்றை தரும்வரையில் இப்பீடத்தின் இரண்டாம் பருவத்திற்கான கல்வி நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. 
குறிப்பு:
  1. ஏனைய பீடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக்கு எடுத்துக்காட்டாக இரண்டு மாணவர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன.
  1. இன்னுமொரு பீடத்தில் மாணவர்களின் வரவின்மையினால் 03ஆம் 04ஆம் திகதிகளில் நடைபெறாத பரீட்சைகள் மீண்டும் 19ஆம், 20ஆம் திகதியில் நடாத்தப்பட்டமைக்கான ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.
  1. இதே மாதிரியான பிரச்சினைக்குக் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பேரவை தலையீடு செய்து பரீட்சைகளை மீள நடாத்துவதற்கான பரிந்துரை செய்து தற்போது மாணவர்கள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்குச் சமுகமளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
(மேற்குறிப்பிட்டவை பொய்யெனில் ஆதாரத்துடன் எவரும் மறுப்புக்கூறலாம்)

இவ்வண்ணம்
தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீட மாணவர்கள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் மாணவர்களின் பிரச்சினைகள் தீரும்வரை ஒத்திவைப்பு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் மாணவர்களின் பிரச்சினைகள் தீரும்வரை ஒத்திவைப்பு Reviewed by Madawala News on 9/18/2017 10:15:00 AM Rating: 5