Ad Space avaiable

முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு துனைபோகின்றது


எம்.ஜே.எம்.சஜீத்

அன்று பெரும் தியாகத்துடன் இலங்கை முஸ்லிம்களின் உரிமைக்காக பெருந்தலைவர் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு துனைபோகின்றது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

பாலமுனை பிரதான வீதியில் தேசிய காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் கே.எல்.உபைத்துல்லா தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்….

உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டம், மாகாண சபைகள் திருத்தச் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் போது வட கிழக்கு மாகாணங்களில் வாழும் நமது சிறுபான்மை மக்களைவிட வட – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் ஏனைய 07 மாகாணங்களில் வாழும் சிறுபான்மை மக்களுக்கான பிரதேச மாகாண சபை பிரதிநிதித்துவம் இல்லாமல் போகின்ற நிலைமை ஏற்படப் போகின்றது. சிறுபான்மை மக்களை பாதிக்கும் சட்டங்கள் நன்கு திட்டமிட்ட முறையில் பேரினவாத கட்சிகளால் கொண்டு வரப்படுகின்ற போது அதனை எதிர்ப்பதாக மக்களுக்கு காண்பிப்பதற்காக வீரமாக பகலில் பேசிவிட்டு இரவில் சிறுபான்மை மக்களுக்கான அதிகாரங்களை பறிக்கும் சட்ட மூலங்களுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆதரவாக வாக்களிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையிலே முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்படாமலே திருத்தம் எனும் போர்வையில் வெற்றுக் காகிதத்திற்கு ஆதரவாக அதிகாரங்களை கோரி நிற்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ_ம் ஆதரவளித்து தங்களது சமூகங்களுக்கு வரலாற்று துரோகங்களை செய்துள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரினதும், ஆளுங்கட்சி உறுப்பினர்களினதும் பதவிகளுக்காகவும், விடயமறியாமலும் அதரவளித்துள்ளனர் என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ கனேசனும் ஏனையவர்களும் ஏழனம் செய்கின்ற நிலைமைகள் தோன்றியுள்ளன.

பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டு பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். தலைவரின் வழியில் பின் தொடர்ந்து செல்கின்ற தேசிய காங்கிரஸின் தலைவர் இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி பல்வேறு விடயங்களைச் செய்துள்ளார். குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களிலே வாழ்கின்ற மூவின மக்களும் நிம்மதியாகவும், ஐக்கியமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக வட கிழக்கு மாகாணங்கள் பிரிய வேண்டும் என குரல் கொடுத்தார்.

அதேபோன்று அவர் இந்த நாடு பூராகவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மிகவும் திட்டமிட்டு செய்துள்ளார். மேலும் இப்பிராந்தியத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் சமூக நலன் கருதி உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இந்த சமூகத்திற்கு எதனையும் செய்யாது பல்வேறு துரோகங்களை செய்து வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு துனைபோகின்றது  முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு துனைபோகின்றது Reviewed by Madawala News on 9/22/2017 07:23:00 PM Rating: 5