tg travels

நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் தொடர்பில் காணிக்கச்சேரி நடத்துமாறு அரச அதிபர் பணிப்பு




 
(ஏ.எல்.நிப்றாஸ்)
அக்கரைப்பற்று, நுரைச்சோலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு பல வருடங்களாக பயனாளிகளுக்கு வழங்கப்படாதிருக்கும் சுனாமி வீட்டுத் திட்டத்தை பொருத்தமானவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையின் ஒருகட்டமாக காணிக் கச்சேரி நடத்துமாறு அம்பாறை அரச அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, சம்பந்தப்பட்ட ஏழு பிரதேச செயலகங்களில்; காணிக் கச்சேரி செயன்முறைகள் ஒக்டோபர் 01ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டம் பல வருடங்களாக பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதாசாரத்திற்கு அமைய மூவின மக்களுக்கும் இவ்வீடுகளை பகிர்ந்தளிக்க வேண்டிய கடப்பாடு மாவட்ட செயலகத்திற்கு இருக்கின்;றது.

இந்நிலையில், காணிக் கச்சேரிகளை நடத்துமாறும் அந்நடவடிக்கையை 01.10.2017ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் துஷித பீ. வணிகசிங்க பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் மூலம் பணிப்புரை வழங்கியுள்ளார். அதற்கமைவாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, இறக்காமம், தமண, உகன, ஆலையடிவேம்பு, அம்பாறை ஆகிய பிரதேச செயலகங்களின் கீழுள்ள உத்தேச பயனாளிகளுக்காக காணிக் கச்சேரிகள் நடத்தப்படவுள்ளன.

அம்பாறை மேலதிக அரச அதிபரின் தலைமையில் அமைக்கப்படும் காணிக்கச்சேரி குழுவில் உதவி காணி ஆணையாளர், தலைமைப்பீட காணி உத்தியோகத்தர் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களும் உறுப்பினர்களாக இடம்பிடிப்பார்கள். அக்கரைப்பற்றைப் பொறுத்தவரை, நாம் ஏற்கனவே இதற்கான ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளோம் என்றார்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதையடுத்து சவூதி அரேபிய அரசாங்கத்தால் அக்கரைப்பற்று - நுரைச்சோலை கிராமத்தில் 500 வீடுகளை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையாலும், நீதிமன்றில் அதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாலும் அவ்வீடுகள் இதுவரை யாருக்குமே வழங்கப்படாமல் பாழடைந்து கிடக்கின்றன. அதேநேரத்தில் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்த குடும்பங்கள் தமக்கு இவ்வீடுகளை பகிர்ந்தளிக்குமாறு தொடர்ச்சியாக கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் தொடர்பில் காணிக்கச்சேரி நடத்துமாறு அரச அதிபர் பணிப்பு நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் தொடர்பில்   காணிக்கச்சேரி நடத்துமாறு அரச அதிபர் பணிப்பு Reviewed by Madawala News on 9/13/2017 05:44:00 PM Rating: 5