Kidny

Kidny

ஆரம்பமானது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி.


​இலங்கையின் இலக்கிய மாதமான செப்டம்பரின்'சர்வதேசப் புத்தகக் கண்காட்சி'
15.09.2017 முதல்கொழும்பில், BMICH (Bandaranaike Memorial International Conference Hall - பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேசமாநாட்டு மண்டபம்) இல் ஆரம்பமாகியிருக்கிறது. இக்கண்காட்சி எதிர்வரும் 24 ஆம் திகதி வரைதொடரவிருக்கிறது. கண்காட்சி மண்டபத்துக்கு வந்துசெல்ல கொழும்பில் இலவச பேரூந்து வசதி ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது.


​இத் தினங்களில் தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். இம் முறைநானூறுக்கும் மேற்பட்ட புத்தகக் காட்சியறைகள் மற்றும்விற்பனை நிலையங்கள் வாசகர்களுக்காக புத்தகங்களைவழங்க தயாராக உள்ளதோடு, அவற்றுள் ஐம்பதிற்கும்மேற்பட்ட விற்பனை நிலையங்கள் வெளிநாட்டுபதிப்பகங்களுக்கானவை. அனுமதிக் கட்டணம் ஒருவருக்கு20/= மாத்திரமே. அத்தோடு இங்கு விற்கப்படும் அனைத்துப்புத்தகங்களுக்கும் 20% - 70% வரையான விலைக் கழிவுகிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


​இலங்கையில் வருடம்தோறும் நடைபெறும் மிகப்பெரிய அளவிலான புத்தகக் கண்காட்சி இதுவாகும். ஆகவேதினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இக்கண்காட்சியில் ஒன்று கூடுவர். எங்கும் சன நெரிசலும், புத்தகங்களுமே நிறைந்திருக்கும் இக் கண்காட்சியில்நீங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள சில வழிமுறைகளை அனுபவ ரீதியில் குறிப்பிடவிரும்புகிறேன்.


• நீங்கள் புத்தகக் கண்காட்சிக்கு செல்லத் தீர்மானித்ததன்பிறகு, வாங்க விரும்பும் புத்தகங்கள், நூலாசிரியர்கள், அவற்றின் பதிப்பகங்கள் குறித்து ஒரு பட்டியல்தயாரித்துக் கொள்ளுங்கள். இதனால் புத்தகக்கண்காட்சிக்கு சென்று வந்ததன் பிறகு, வாங்கமுடியாமல் போன அத்தியாவசியமான புத்தகங்கள்குறித்து வருந்த வேண்டி வராது. சன நெரிசலில் உங்கள்பட்டியலிலுள்ள புத்தகங்களைத் தேடிப் பெற்றுக்கொள்ள உங்களால் முடியாவிட்டால் காட்சியறைஉதவியாளரை தயங்காது நாடுங்கள். அவர் நிச்சயம்தேடித் தருவார் அல்லது அப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய காட்சியரங்குகளுக்குச் செல்லஉங்களுக்கு வழி காட்டுவார்.


• புத்தகக் கண்காட்சியில் செலவழிக்கப் போகும்பணத்தின் அளவை ஏற்கெனவே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது. புத்தகங்களை வாங்கும் ஆசையில், கையிலிருக்கும்கடைசித் தொகையையும் புத்தகங்களுக்காகச்செலவழித்து விட்டு, வீட்டுக்குத் திரும்பி வர வழிச்செலவுக்குக் கூடக் காசில்லாது  நடந்தே பயணிக்கும்  பலரையும் அங்கு பார்க்கலாம். அந்த நிலைக்குநீங்களும் ஆளாகாதிருக்க, உங்களால் அங்குபுத்தகங்களுக்காக செலவழிக்க முடிந்த தொகை, உணவு, குடிபானங்கள் மற்றும் பிரயாணச்செலவுகளுக்காக ஒரு தொகை எனத் தனியாகப்  பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். வாங்கியபுத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடித்ததன்பிறகும், உங்கள் வாழ்க்கை மீதமிருக்கப் போகிறதுஎன்பதை நினைவில் கொள்ளுங்கள். வங்கிப் புத்தகமீதியை புத்தகங்களுக்காக மட்டுமே முழுவதுமாகசெலவழித்து விடாதீர்கள்.


• இந்தத் தடவை இக் கண்காட்சி தினங்களில், நான்குவிடுமுறை தினங்களும், ஆறு வேலை நாட்களும்அடங்கியிருக்கின்றன.  கண்காட்சியின் ஆரம்பதினத்திலும், வேலை நாட்களின் காலை நேரங்களிலும்கூட்டம் கணிசமான அளவில் குறைந்து காணப்படும். அதற்கு எதிர்மாறாக விடுமுறை நாட்களிலும், கண்காட்சியின் இறுதித் தினத்திலும் கூட்டம் மிகஅதிகமாகக் காணப்படும். கடந்த புத்தகக்கண்காட்சிகளின் போது, கண்காட்சியின் இறுதித்தினத்தில், தமது புத்தகங்களை விற்றுத் தீர்ப்பதற்காகவேண்டி, பதிப்பகங்கள் அவற்றுக்கு பெரிய அளவில்விலைக் கழிவினைக் கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. எனவே நீங்கள் கண்காட்சிக்குசெல்லும் தினத்தை இவற்றைக் கவனத்தில் கொண்டுதீர்மானியுங்கள். 


• புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி வரச்செல்லும் பயணம் என்பது வெறுமனே கை வீசிக்கொண்டு, காலாற நடந்து வரச் செல்லும் பயணமல்ல. இது மலையேறுவதற்கு ஒத்தது.  அதற்கிணையானஏற்பாட்டோடு செல்லுங்கள். பாரமற்றதும், உங்களுக்குநடமாட இலகுவானதுமான ஆடைகளையே அணிந்துசெல்லுங்கள். ஆடை கசங்குவதைப் பற்றிக்கவலைப்படத் தேவையற்ற ஆடையாக அதுஇருக்கட்டும். புத்தகக் கண்காட்சியின் சன நெரிசலில், நின்று கொண்டும், அங்குமிங்கும் நுழைந்து நடந்துகொண்டும், சிறிய இடைவெளிகளில் மக்கள்கூட்டத்தில் சிக்குண்டு, வியர்வையில் குளித்து, புத்தகப்பாரங்களையும் சுமந்து கொண்டு மீண்டு வரவேண்டியிருக்கும். எனவே புத்தகக் கண்காட்சிக்குவரும்போது அதற்கேற்ற ஆடைகளையும், பாதணிகளையும் அணிந்து வருவதோடு, வெளியரங்குக்கடைகளையும் பார்வையிட வேண்டியிருப்பதனால்குடை மற்றும் வெயில் கண்ணாடிகளையும் எடுத்துக்கொண்டு வர மறக்க வேண்டாம். 


• வாங்கும் புத்தகங்களைப் பத்திரமாக எடுத்துக் கொண்டுவர ஒரு பையை (Bag) எடுத்துச் செல்ல மறக்கவேண்டாம். காட்சியரங்குக் கடைகளில் பொலிதீன்பைகளுக்கு அனுமதியில்லை. காகித உறைகளில்புத்தகங்களை இட்டுத் தருவார்கள்.  அவற்றை நீண்டநேரம் கைகளில் சுமந்து செல்லும்போது விரல்களில்வலியெடுக்கும். அத்தோடு உறை கிழிந்தால் வாங்கியபுத்தகங்களெல்லாம் தரையில் விழுந்து வேலையைக்கூடுதலாக்கும். எனவே உங்கள் பட்டியலை வைத்து, வாங்கத் தீர்மானித்துள்ள  புத்தகங்களுக்கு ஏற்றபையை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லுங்கள். அதுமுதுகில் சுமந்து செல்லக் கூடிய பையாக இருப்பின்இன்னும் இலகு. புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்ககைகள் எப்போதும் வெறுமனே இருக்கட்டும். 


• காட்சியரங்கில் உணவு, குடிபானங்கள் விற்பனைக்குஇருக்கின்றன. ஆனால் அவற்றையே முழுவதுமாகநம்பிச் செல்லாதீர்கள். இருக்கும் சன நெரிசலில், அவற்றை வாங்கக் காத்திருப்பதில் நேரம் அதிகளவுவிரயமாகும். எனவே தண்ணீர் மற்றும் சிற்றுண்டிவகைகளை கையோடு எடுத்துச் செல்வது நல்லது. அதுஆரோக்கியமானதும் கூட. அத்தோடு நீங்கள்மருந்துகளைப் பாவிப்பவராக இருந்தால் அன்றையதினத்துக்கு அருந்தத் தேவையான மருந்துகளையும், தற்காலிக நிவாரணி மாத்திரைகளையும் எடுத்துச்செல்வது சிறந்தது. 


•  நீங்கள் பேரூந்திலோ, ரயிலிலோ கண்காட்சிக்குவருபவராக இருப்பின், திரும்பிச் செல்லும்போதுபுத்தகப் பையை சுமந்து செல்ல ஏற்றதான, சனநெரிசலற்ற பேரூந்தோ, ரயிலோ புறப்படும் நேரத்தைஅறிந்து அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சொந்த வாகனத்தில் வருபவர்களும்கூட வாகனத் தரிப்பிடத்துக்கு ஏற்ற இடங்களைநுழைவாயிலிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வதன்மூலம், வீண் செலவுகளைத் தவிர்க்கலாம். மோட்டார்சைக்கிள்களில் வருபவர்கள் ஹெல்மட்தலைக்கவசங்களை சைக்கிளிலேயே விட்டுச் செல்லவேண்டாம்.


• புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போதுஇன்னுமொருவருடன் சேர்ந்தோ, குழுவாகவோசெல்வதோ நல்லது. புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க, புத்தகப் பாரங்களை சுமக்க ஒருவருக்கொருவர்உதவிக் கொள்ளலாம்.  உங்களோடு கூட வரும் நபரும்/ நபர்களும் புத்தக வாசிப்பை விரும்புபவர்களாகஇருப்பது அவசியம். இல்லாவிட்டால் சன நெரிசலில், காட்சியரங்குகளில் காத்திருக்க பொறுமையற்று, அங்கிருந்து அகன்று சென்று விட நச்சரித்துக்கொண்டேயிருப்பார்கள். அவ்வாறே கைக்குழந்தைகளை, சிறு பராயத்தினரைகாட்சியறைகளினுள்ளே அழைத்துச் செல்லவேண்டாம். அது உங்களுக்கும், ஏனையவர்களுக்கும்இடைஞ்சல்களை ஏற்படுத்தும்.


• புத்தகக் கண்காட்சிக்காக BMICH க்கு வந்ததுமேஅங்குமிங்குமாக அலைந்து திரிய முற்படாதீர்கள். நுழைவாயிலிலேயே காட்சியரங்கின் கடைகள் குறித்ததெளிவான விவரணப் படம் இலவசமாகத் தருவார்கள். அது மிகவும் பெறுமதியானது. அதனை வைத்து நீங்கள்செல்லப் போகும் கடைகளை முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். காட்சியரங்கின் கடைகள் ஒருஒழுங்கிற்கமையவே அங்கு காணப்படும். கதை, கவிதை, இலக்கியப் பிரதிகளுக்கான காட்சியறைகள் ஒரு புறம், கல்வி சார்ந்த புத்தகங்களுக்கான காட்சியறைகள் ஒருபுறம், பிற நாட்டு பதிப்பகங்களுக்கான காட்சியறைகள்ஒரு புறம், பாடசாலை அப்பியாசப் புத்தகங்களும், பொருட்களும் விற்கும் கடைகள் ஒரு புறம் எனதனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருக்கும். எனவேவழிகாட்டல் படத்தினைப் பார்த்து அதற்கேற்ப நீங்கள்செல்லப் போகும் கடைகளைத் தேர்ந்தெடுத்து அங்குசெல்லுங்கள். செல்லும் வழியில் கண்ட விஷேடமானஅடையாளங்களை அவ் வழிகாட்டல் படத்திலேயேகுறித்துக் கொள்ளுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரேகடையைச் சுற்றுவதை விட்டும் உங்களைத் தவிர்க்கச்செய்யும். 


• நீங்கள் வாங்குவதற்காகப் பட்டியலிட்டிருக்கும்புத்தகங்களை, அப் புத்தகங்களை வெளியிட்டுள்ளபதிப்பகத்தின் காட்சியரங்குகளிலேயே வாங்குவதுஅதிகமான கழிவினைப் பெற்றுத் தந்து, உங்கள்செலவினைக் குறைக்கும். பிரசித்தமான, புகழ் பெற்றபதிப்பகங்களின் காட்சியரங்குகளுக்கு மாத்திரமேசெல்லாது, சிறிய காட்சியறைகளுக்கும் சென்றுவாருங்கள். மிகப் பெறுமதியான புத்தகங்கள், குறைந்தவிலையில் அங்கு கிடைக்கும். அவ்வாறே இங்குள்ளபழைய புத்தகங்களுக்கான காட்சியறைகளில்,  விலைமதிக்க முடியாத, அரிய புத்தகங்களை மிக மிகக்குறைந்த விலையில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.


• பாடசாலை வாசிகசாலைகளுக்கான புத்தகங்களை பலபதிப்பகங்கள் இலவசமாகவும்,  மிக மிகக் குறைந்தவிலையிலும் வழங்குகின்றன. அவற்றைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பாடசாலைகளின் ஆசிரியர்களோ, அதிபர்களோ தேவையான ஆவணங்கள், பட்டியல்களோடு சம்பந்தப்பட்ட பதிப்பகங்களைஅணுகி அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.


•  மிக முக்கியமாக, நீங்கள் வாங்கும் புத்தகங்கள் குறித்துஎப்போதும் ஞாபகத்திலேயே வைத்திருங்கள். ஒருகாட்சியறையிலிருந்து இன்னுமொரு காட்சியறைக்குச்செல்லும்போது, சில வேளைகளில் வாயிற்காவலரிடம்பொதிகளைக் கொடுத்து விட்டுச் செல்ல நேரும். திரும்பி வரும்போது அவற்றைப் பெற்றுக் கொள்ளமறக்காதீர்கள். அத்தோடு சன நெரிசலானஇடமென்பதால் உங்கள் பணப் பை, சிறிய கைப்பைகள்கீழே விழுந்தாலும் இலகுவில் தேடிப் பெற்றுக் கொள்ளமுடியாது. எனவே அவற்றைக் குறித்தும் கவனமாகஇருங்கள்.


•  இந்த இறுதிக் குறிப்பை, புத்தகங்களை வாங்கவருவோரும், கண்காட்சியை வெறுமனே பார்க்கவருவோரும் கண்டிப்பாக நினைவில் வைத்திருக்கவும். காட்சியரங்கில் மூலைக்கு மூலை குப்பைத் தொட்டிகள்வைக்கப்பட்டுள்ளன. நம்மவர்கள் பொதுவாகஅவற்றைக் கவனத்தில் கொள்ளாத காரணத்தால், காட்சியரங்கின் நடைபாதைகள் தோறும் குப்பைகளைமிதித்தபடியே உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. உங்களது வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள், கரண்டிகள், தட்டுக்கள், மீதமான உணவுகள், ஏனையகுப்பைகள் போன்றவற்றை அவற்றுக்கேயுரிய குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போட்டு விடுங்கள்.  அதுஅனைவருக்கும் உங்களால் ஆற்றப்படும் பேருதவியாகஇருக்கும்.


​இப் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கச்செல்லவிருப்போருக்கு இக் குறிப்புக்கள் பயனுள்ளதாகஅமையுமென நம்புகிறேன். உங்களுக்காக புத்தகங்களைவாங்கும்போது, வீட்டிலிருக்கும் உங்கள் குழந்தைகளையும்,பரீட்சைகள் எழுதிவிட்டு பெறுபேறு வரும்வரையில்காத்திருக்கும் மாணவப் பருவத்தினரையும் நினைவில்கொள்ளுங்கள். அவர்களுக்காகவும் நல்ல புத்தகங்களைத்தேர்ந்தெடுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களதுவிஷேட தினங்களில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். சிறுவயதிலிருந்தேயான வாசிப்புப் பழக்கம் அவர்களை நல்லமனிதர்களாக வளர்த்தெடுத்து சமூகத்துக்குபயனுள்ளவர்களாக மாற்றித் தரும். நம்
சமூகத்துக்குஅவ்வாறானவர்களே தேவைப்படுகிறார்கள் எப்போதும்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

​“A reader lives a thousand lives before he dies, said Jojen. The man who never reads lives only one.” 
― George R.R. Martin, A Dance with Dragons, Chapter 34
ஆரம்பமானது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி. ஆரம்பமானது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி. Reviewed by Madawala News on 9/17/2017 11:10:00 AM Rating: 5