Ad Space Available here

மின்சார சபை ஊழியர் வேலை நிறுத்தம்.. ( சாமான்யனின் நிலையில் இருந்து ஒரு குமுறல்)


இருப்பதிலேயே மிக அநியாயமான வேலைநிறுத்தம் மின்சார சபையினரது வேலை நிறுத்தம் என்பது உலர் வலய குடிமகனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

இந்த நாட்டில் எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தம் என்பது எழுதப்படாத விதி.கோரிக்கைகள் நிறைவேறியதா? இல்லையா ?என்பதை புறந்தள்ளி  ஏனையவர்களுக்கான பாதிப்புகளாய் பார்த்தால் மிகவும் அரக்கத்தனமான மனித செயல் இது என்றே சொல்வேன்.

அரசாங்கமோ,அரசின் அதிகாரிகளோ  எது விதத்திலும் பாதிக்கப்படாமல் மக்களை மட்டுமே வதைக்கின்றன இந்த வேலை நிறுத்தங்கள்.

மற்றைய வேலை நிறுத்தங்களின் போது "மக்களின் உரிமை மீறப்படுகிறது,வாகன நெரிசல் ஏற்படுகிறது" என காட்டுக் கூச்சல் போடும் ஊடகங்களோ,எழுத்தாளர்களோ மின்சார சபை வேலை நிறுத்தத்தை பற்றி வாய் திறக்காமல் மௌனியாய் இருக்கும் போதுதான் ஏன் ஊடகங்களை விபச்சாரியாய் வர்ணிக்கிறார்கள் ?எனப் புரிகிறது.

எந்த ஊடகமும் வாய்திறக்கப் போவதில்லை.ஏனெனில் அவர்களும் அவர்களது நிறுவனங்களும் ஜெனரேட்டர் உதவியுடன் அதே ஏசி காற்றில் சுகமாகத் தான் இருக்கிறார்கள்.

மின்சார ஊழியர்களின் வேலைநிறுத்தம் நியாயமானதாக இருக்கலாம்.அன்றாடம் உணவுக்கே திண்டாடும் அரச ஊழியர்களின் போராட்டம் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை.ஆனால் இவர்கள் ஏறியும் ஈட்டி அமைச்சர்களையோ  அரச நிறுவனங்களையோ குத்துவதில்லை.கரண்ட் போனால் பெற்றோலை வைத்து ஜெனரேட்டர்கள் மூலம் அவர்களது இயல்பு வாழ்க்கை நகர்கிறது.குத்துப்படுவதும் கொல்லப்படுவதும் ஊழியர்களைப் போன்ற பொதுமக்களின் இன்னொரு சாரார் தான்.

ஞாயிறு மாலை ஆறு மணியளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் அடுத்த நாள் மதியம் வரை எட்டியும் பார்க்கவில்லை.

அயர்ன் பண்ணாமல் கசங்கிய ஆடைகளுடன் மாணவர்களும் வேலைக்குச் செல்வோரும் கூனிக் குறுகிப் போனதையாவது ஏற்கலாம்.இரவு முழுதும் வியர்வையில் மூழ்கி தூக்கம் தொலைத்த சில சிறுவர்கள் தூக்கம் தாங்காமல் வகுப்பறைகளில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
இது பற்றி யாரும் பேசப் போவதில்லை.

நுளம்பும்,வெப்பமும்,புழுக்கமும் இம்சிக்க இரவெல்லாம் வீறிட்டழுத சிறு குழந்தைகள் இந்த நாட்டிற்கு செய்த அநியாயம் யாது?
அந்த குழந்தைக்கு ஏதோ ஒரு புத்தகத்தால்,மட்டையால்  விசிறிக் கொண்டிருந்த அதன் தாய்.....?

விடிய விடிய  தூங்காமல் லொக்கு,லொக்கென்று இருமிக் கொண்டிருந்த பெரியவர்களதும், தூக்க மருந்து குடித்தும் தூங்க முடியாமல் தள்ளாடும் அந்த நோயாளிகளதும் ஓலங்களை எந்த வீடியோவும் பதிவு செய்யவில்லை.

கடந்த சில நாட்களாகவே ஒரு மணிக்கொரு முறை  பதினைந்து நிமிடம் மின் துண்டித்து விளையாடிக் கொண்டிருக்கிது CEB.போவதையும் வருவதையும் தாங்க மாட்டாமல்  குளிர்சாதன பெட்டியுட்பட எத்தனையோ மின் உபகரணங்கள் நிரந்தரமாய் ஓய்வெடுக்கத் தொடங்குவது பற்றி யார் தான் எழுதுவார்கள்?
அவர்களுக்கென்ன ஒன்று போனால் இன்னொன்று வாங்கிக் கொள்வார்கள் .மாதம் நாற்பதாயிரம் சம்பளம் போதாமல் பத்தாயிரம் கடன் வாங்கும் அடிமட்ட குடிமகனுக்குத் தான் அதன் வலி தெரியும்.

தெருவிற்கொரு பெட்டிக் கடையில்,பத்து ரூபாய் இலாபத்திற்காக பத்து கிலோ இறைச்சியை வாங்கி வைத்திருந்த இப்றாகீம் காக்காமாருக்கே தெரியும் அவ்வளவும் நாறிப் போய் முதலுக்கே மோசம் போன சோகம்.

தையல்காரனுக்கும் மர வேலை செய்பவனுக்கும் ஜெனரேட்டர்கள் இருப்பதில்லை.கரன்ட் போனால் வேலையும் இல்லை.வேலை செய்யாததால் வேலையாளுக்கு சம்பளம் கொடுக்காதிருக்க மனசும் இல்லை.பொருளாதாரம்  பற்றி பேசும் எந்த அரசியல் கட்சியும் இதைப் பற்றி வாய் திறப்பதும்  இல்லை.

மாதாந்த க்ளினிக்கில் வழங்கப்படும்  இன்சுலின் ப்ரிஜ்ஜில் தான் வைக்கப்பட வேண்டும்.ஏனெனில் வெப்பநிலை உயர்வு அதில் அமைப்பு மாற்றங்களை நிகழ்த்திவிடும்.கரண்ட் இல்லாமல் போன போது எந்த நோயாளியும் அதை தூக்கி எறிவதில்லை.வழமைப் போல ஊசியேற்றுவார்கள்.
ஊசிப் போன மருந்தேற்றி சக்கரையினளவு குறையும்??
வைத்தியர்கள் வைத்தியத்தை விலை பேசுவதை பற்றி பேசும் யாரும் இத்தகைய நோயாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய்வதுமில்லை.

இன்சுலின் மட்டுமல்ல suppositaries மற்றும் பல வகை ஊசி மருந்துகள்,சில வகை மருந்துகள் குறித்த வெப்பநிலையில் பேணப்பட்டால் தான் வினைத்திறனுடன் செயலாற்றத் தக்கவை.இதனால் தான் நாடு முழுவதிலுமுள்ள பார்மசிகள் குளிரூட்டப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கடனுக்கும் கந்து வட்டிக்கும் பார்மசி வைதிருப்பவர்களெல்லாம் ஜெனரேட்டரா வைத்திருக்கிறார்கள் ?
அப்படியே இருந்தாலும் திடீரென நள்ளிரவில் பல மணி நேரம்  மின் துண்டிக்கப்பட்டால் யார் வந்து ஜெனரேட்டர் போடுவது?
அரச வைத்தியசாலை என்றால் மின் துண்டிக்கப்பட்டதும் எல்லா மருந்தையும் தூக்கி போட்டு விட்டு புதிதாக ஓர்டர் செய்வார்கள்.பார்மசிகாரன் அமைப்பு மாற்றம் நடந்தாலும் காலாவதியானாலும் அதை தூக்கிப் போடப் போவதில்லை.இலாபம் அவனுக்கு வேண்டும்.பாதிப்பெல்லாம் யாருக்கு??
இதெல்லாம் எந்த பத்திரிகையிலும் வருவதுமில்லை.

இது மட்டுமல்ல...
சமூக வலைத்தளங்களும் ஸ்மார்ட் போன்களும் உயிர் மூச்சாகிப் போன ஒரு இளைஞர் சமூகமொன்று போனுக்கு சார்ஜ் இல்லாமல் செவ்வாய் கிரகத்திலிருப்பது போல பவர் பேங்குகள் சகிதம்  தவிப்பதை யாரும் பேசப் போவதில்லை.

மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் போது அமைச்சர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுமில்லை.அரச நிறுவனங்களின் பணிகள் ஸ்தம்பிதமடைவதுமில்லை.

பாதிப்பெல்லாம் ஊழியர்களுக்கு இலவச கல்வி வழங்கவும்,பாதுகாப்பு வழங்கவும் ஏன் சம்பளம் வழங்கவும் வரியெனும் பெயரில்  கொஞ்ச கொஞ்சமாய் கிள்ளிக் கொடுத்த  பொது மக்களுக்கே.....

Fauzuna Binth Izzadeen
19/9/17
மின்சார சபை ஊழியர் வேலை நிறுத்தம்.. ( சாமான்யனின் நிலையில் இருந்து ஒரு குமுறல்) மின்சார சபை ஊழியர் வேலை நிறுத்தம்.. ( சாமான்யனின் நிலையில் இருந்து ஒரு குமுறல்) Reviewed by Madawala News on 9/19/2017 05:01:00 PM Rating: 5