Ad Space Available here

கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்துதல்.சிறப்புக்கட்டுரை .

நமது அரசியலில் கண்ணாமூச்சி விளையாட்டுக்களுக்கும் கண்ணைத் திறந்துகொண்டே படுகுழியில்
விழும் மடமைகளுக்கும் கண்ணிருந்தும் குருடர்களாக நடிக்கும் கயமைகளுக்கும் எப்போதும் பஞ்சமிருந்ததில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள், எல்லாம் கைமீறிப் போனபிறகு தங்கள் மீது தாங்களே கழிவிரக்கம் கொள்வதும், மக்களிடம் பாவமன்னிப்புத் தேடி வருவதும் நமக்கு பழகிப்போன அரசியல் வியாதிகள்தான்.

இப்போது இலங்கை அரசியல் மிகப் பெரும் கட்டமைப்பு மாற்றமொன்றுக்கு உள்ளாகியிருக்கின்றது. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் இரு பிரதான முஸ்லிம் கட்சித் தலைவர்களை அமைச்சர்களாகவும் ஆக்குவதற்காக, முஸ்லிம்களும் தமிழர்களும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆணை வழங்கவில்லை. மாறாக, அவர்களின் எதிர்பார்ப்பு அதையும் தாண்டி புனிதமானது.

அதன் ஒரு கட்டமாகவே அரசாங்கம் அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுத்தது. தற்போது நடைமுறையில் இருக்கின்ற 1978 இன் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் மீண்டும் மீண்டும் திருத்தங்களைக் கொண்டுவருவதை விட முற்றுமுழுதாக புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதே நல்லது என்று அரசாங்கம் நினைத்தது. ஆனால் நடைமுறை யதார்த்தத்தின்படி அப் பணிகள் சற்று தாமதமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.


எது எவ்வாறிருப்பினும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வரைக்குமான காலம் வரை தேவையாகவுள்ள மாற்றங்களை கருத்திற்கொண்டு தற்போதைய அரசியலமைப்பிலும், நடைமுறையிலுள்ள சட்டங்களிலும் திருத்தங்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முனைப்புக் காட்டி வருவதை நாம் அறிவோம்.

20ஆவது திருத்தம்

அந்த வகையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், மாகாண சபைகள் சட்டத்தின் மீதான திருத்தம் மற்றும் உள்ள10ராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் ஆகியவை இப்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்களாக இருக்கின்றன. இதில் உள்ள10ர் அதிகார சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அதில் கடந்த 31ஆம் திகதி சபாநாயரினால் ஒப்பமிடப்பட்டும் விட்டார். எனவே, அது இப்போது சட்டமாகி விட்டது.


இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஆகஸ்ட் 3ஆம் திகதி வெளியாகியுள்ள நிலையில், இது மாகாண சபைகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கின்றது. அத்துடன், மிக விரைவில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படலாம். எனவே, சிறுபான்மைச் சமூகங்கள் இதில் அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால், சிறுபான்மைக் கட்சிகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் வழக்கம் போல 20 ஆவது திருத்தத்திற்கும் கண்ணைமூடிக்கொண்டு கையை உயர்த்தி விடுவார்களா? என்ற நியாயமான கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், அவர்களைப் பற்றிய கடந்தகால அனுபவங்கள் அப்பேர்ப்பட்டதாக இருக்கின்றன. அதுமட்டும்ன்றி உள்ள10ராட்சி அதிகார சபைகள் திருத்தச் சட்டம் குறித்து அண்மைக்காலமாக வீராப்பு பேச்சுக்களையும், காட்டமான அறிக்கைகளையும் வெளியிட்டு வந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், கடந்தவாரம் பாராளுமன்றத்தில் எவ்வித உறுத்தலும் இன்றி ஆதரித்து வாக்களித்தமையானது அவ்விதமான கேள்வி எழுவதை தவிர்க்க முடியாததாக ஆக்கியிருக்கின்றது.

முதலில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் என்ன விதந்துரைகள் உள்ளன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு பொது மகனுக்கும் இருக்கின்றது. 20ஆவது திருத்தம் என்பது தனியொரு சட்டத்தை அல்லாமல், அரசியலமைப்பிலேயே புதியதொரு திருத்தத்தை கொண்டு வருவதற்கான முயற்சி என்பதால் 20ஆவது திருத்தமானது நேரடியான மற்றும் உட்கிடையான பல முன்மொழிவுகளை உள்ளடக்கியிருக்கின்றது.
குறிப்பாக, மாகாண சபைகளுக்கு ஒரே தினத்தில் தேர்தல் நடாத்தப்படல் வேண்டும் என்ற விடயத்தை 20ஆவது திருத்தம் வலியுறுத்துகின்றது. அத்துடன், அனைத்து மாகாணசபைகளும் கலைக்கப்பட்டதாக இருக்க வேண்டிய திகதி பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் என்றும், அத்திகதி இறுதியாகத் நிறுவப்பட்ட மாகாணசபையின் பதவிக்கால முடிவுத் திகதிக்குப் பின்னராக இருக்கக் கூடாது என்றும் இது குறிப்பிடுகின்றது.

(தேர்தல் நடைபெறும்) திகதிக்கு முன்னர் முடிவடையும் மாகாண சபையின் ஆட்சிக்காலம் தேர்தல் திகதி வரை நீடிக்கப்பட்டதாக கருதப்படுகின்ற அதேநேரத்தில் குறித்துரைக்கப்பட்ட (தேர்தல்) திகதியில் முடிவடையாதிருக்கின்ற மாகாண சபையின் ஆட்சிக்காலம் அத்திகதியில் முடிவடைதல் வேண்டும் என்றும் இதில் விதந்துரைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, ஏதேனும் காரணத்தால் மாகாண சபையொன்று கலைக்கப்படும் பட்சத்தில் அந்த சபையின் தத்துவங்கள், குறித்துரைக்கப்பட்ட (தேர்தல்) திகதி வரை பாராளுமன்றத்தால் பிரயோகிக்கப்படும் என்று குறித்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆட்சிக்காலம் முடிவடைவதற்கும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் மாகாண சபைகளின் மூக்கணாங்கயிறு பாராளுமன்றத்தில் (மத்தியஅரசிடம்) இருக்கும் என்பதையே இது குறிப்புணர்த்துகின்றது. அத்துடன் மாகாண சபையை கலைக்கும் அதிகாரமும் மறைமுகமாக வலுவிழக்கச் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. ஆகவே, இந்தப் பின்னணியுடனயே நடப்பு நிலவரங்களை நோக்க வேண்டியுள்ளது.

வழங்கப்பட்ட வாக்குறுதி

13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் பிரகாரமே 1988ஆம் ஆண்டு இலங்கையில் மாகாண சபைகள் முறைமை கொண்டுவரப்பட்டது. மத்தியில் குவிந்துள்ள அதிகாரத்தை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுப்பதே இந்த ஏற்பாட்டின் அடிப்படை நோக்கமாகும். ஆனாலும், 13ஆவது திருத்தம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாகாண சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே சிங்கள மத்திய அரசாங்கங்கள் கொடுத்திருந்தன. 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும், நிதி, பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டுமெனவும் தமிழ் தரப்பு கோரி வருகின்றது.
இந்நிலையில், 13இற்கும் அப்பாலான அதிகாரங்களை வழங்குவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த அரசாங்கமே இன்று இருக்கின்ற அதிகாரங்களையும் குறைக்கின்ற, மூக்கணாங்கயிற்றை சுண்டி இழுக்கின்ற வித்திலமைந்த 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைத்துள்ளது. இதிலுள்ள பாரதூரங்களை அறியாமலும் மக்களுக்கு விசுவாசமாக நடக்காமலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பது கவலையானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.


மாகாண சபை தொடர்பான இதுபோன்ற அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை நிறைவேற்றுவதாயின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையப் பெற வேண்டும் என்பதுடன் மாகாண சபைகளிலும் ஆதரவைப் பெற்று நிறைவேற்ற வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் உள்ளன என்று விடயமறிந்தவர்கள் கூறுகின்றார்கள். எனவேதான், 20ஆவது திருத்தம் இப்போது மாகாண சபைகளின் வாக்கெடுப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மாகாண சபைகளின் கையில்

அந்த அடிப்படையில், 20ஆவது திருத்தத்தை இதுவரை வடமத்திய மாகாண சபை மாத்திரமே அங்கீகரித்திருக்கின்றது. ஊவா மாகாண சபையில் இத்திருத்தம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தோல்வியடைந்துள்ளது. தென் மாகாண சபையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது பெரும் களேபரம் ஏற்பட்டதையடுத்து வாக்கெடுப்பு பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழர் ஆட்சியதிகாரத்தில் உள்ள வட மாகாண சபையில் இம்மாதம் 4ஆம் திகதி இதற்கான ஆதரவு கோரப்படவுள்ளது.

இதேவேளை. கிழக்கு மாகாண சபையில் கடந்த மாதம் 25ஆம் திகதி இதுதொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் இது 29ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது. கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தேடும் பல சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். எவ்வாறிருந்தபோதும், இந்த விவாதம் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


20ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஒரே நாளில் தேர்தல் நடாத்துதல்' என்ற முன்மொழிவு மிகவும் வரவேற்கத்தக்கதே. ஆனால், இதனை அமுல்படுத்த தொடங்கும்போது 8 மாகாண சபைகள் தமது சுய அதிகாரத்தை சற்று இழக்க வேண்டி ஏற்படும் என்பதே இங்குள்ள பிரச்சினையாகும். அதாவது, ஊவா மாகாண சபையின் காலம் 2019இல் முடிவடையும் வரை அரசாங்கம் ஏனைய 8 மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்தாது என்பதுடன், அக்காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் ஊடாக மத்திய அரசின் பலமே மேற்படி மாகாணங்களில் இருக்கும். மறைமுகமாக, கொழும்பு அதிகார மையமே இம்மாகாணங்களை ஆளும். இதுதவிர வேறு பல பாதகங்களும் 20 இல் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

2019 வரையான 2 வருடங்களிலும் அரசாங்கம் உள்ள10ராட்சி தேர்தலை நடத்தும். இன்னும் பல காய்களையும் நகர்த்தும். சிறுபான்மைச் சமூகங்கள் ஆட்சி அதிகாரம் இல்லாத காரணத்தால் இதில் பெரிய செல்வாக்கைச் செலுத்த முடியாது என்பதுடன், கிட்டத்தட்ட ஒருபார்வையாளராகவே காலத்தை கடத்த வேண்டியிருக்கும். இதனாலேயே 20ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கருதப்படுகின்றது.

20ஆவது திருத்தத்தால் ஊவா மாகாண சபைக்கு எந்த பாதிப்பும் பெரிதாக ஏற்படப் போவதில்லை. ஆனாலும் அங்கு இது தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, பெரும்பான்மையினரின் ஆட்சியில் இருக்கின்ற ஏனைய 6 மாகாண சபைகளுக்கு அதிகாரமிழப்பு ஏற்பட்டாலும் மத்தியில் உள்ள சிங்கள ஆட்சியாளர்களே அதனை பார்த்துக் கொள்வார்கள் என்பதால் அங்கு  ஐ.தே.க. – சு.க. போட்டி இருக்குமே தவிர இனம்சார் புறமொதுக்கல்கள், அதிகார மேலாதிக்கங்கள் இருக்காது. எனவே, இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது வடக்கு,கிழக்கு மாகாணங்களாகவே இருக்கும்.

வடக்கு, கிழக்கு நிலை

வட மாகாண சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை போல பயந்து நடுங்காமல் சிலவேளைகளில் கொழும்புக்குச் சவாலான நகர்வுகளையும் வடக்கு எடுக்கின்றது. அத்துடன், மாகாண சபைகளுக்கு மேலும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று தமிழ் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கோரி வருகின்றது. எனவே, அதற்கு மாற்றமான 20ஆவது திருத்தத்திற்கு வட மாகாண சபை ஆதரவளிக்காது. ஆதரவளிக்கவும் முடியாது. ஆனால், கிழக்கு மாகாண சபை இதில் தவறிழைத்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


கிழக்கு மாகாணத்தில் ஆட்சியதிகாரத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீமும், கிழக்கு முதலமைச்சரும் தற்போது பிரதமருக்கு சார்பான போக்கையே வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 20ஆவது திருத்தத்திற்கு எப்படியாவது கிழக்கு மாகாண சபையில் ஆதரவைப் பெற்றுக் கொடுக்க முதலமைச்சர் நஸீர் அகமட் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஆகஸ்ட் 25ஆம் திகதியும் 29ஆம் திகதியும் அவர் சந்திப்புக்களை நடத்தி இது பற்றி பேசி இருக்கின்றார்.


அதுமட்டுமன்றி எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை போன்றோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் நாடி பிடித்துப் பார்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ் உள்ளடங்கலாக எதிர்க்கட்சியினர் 20ஆவது திருத்;தத்தை ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகின்றது. ஆளும் கட்சியில் உள்ள மு.கா. மற்றும் ஐ.தே.க. உறுப்பினர்கள் ஆதரவளிக்க சித்தமாயுள்ள போதிலும் ஆளுந்தரப்பின் வேறு ஒரு சில உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்கும் சாத்தியமிருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே வாக்கெடுப்பு தள்ளிப்போடப்பட்டுள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

கடந்தகால அனுபவம்

முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்ணைமூடிக்கொண்டு கையை உயர்த்தி வாக்களித்த அனுபவங்கள் பல உள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால், ஒருவர் மூன்று தடவை ஜனாதிபதியாக போட்டியிடலாம் என்ற ஏற்பாட்டை உள்ளடக்கியதாக கொண்டுவரப்பட்ட 18ஆவது திருத்தத்திற்கு சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் வாக்களித்தன.

மாகாண சபை அதிகாரங்களை பின்கதவால் பிடுங்கும் முயற்சி என வர்ணிக்கப்பட்ட திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதில்லை என்று கூறிவந்த முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாண சபையில் முழுமையான ஆதரவை வழங்கி அதனை வெற்றிபெறச் செய்ததன் மூலம் மக்களின் நம்பிக்கையில் மண்ணை வாரிப்போட்டது. கடைசியாக, கடந்தவாரம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட உள்ள10ராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்திற்கும் முஸ்லிம் கட்சி தலைவர்களும் முஸ்லிம் எம்.பி.க்கள் கணிசமானோரும் கையை உயர்த்தியிருக்கின்றார்கள்.

உள்ள10ராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச்சட்ட மூலத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமான பல விடயங்களும் முரண்பாடுகளும் இருக்கின்றமையால் அதன்மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டி ஏற்படும் என்று சபையில் பேசியிருந்த மு.கா. தலைவர் ஹக்கீம், கடைசியில் சார்பாக வாக்களித்துள்ளார். மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனும் மேலும் பல முஸ்லிம் எம்.பி.க்களும் சார்பாகவே வாக்களித்திருக்கின்றனர். இது எந்த அடிப்படையில் எனத் தெரியவில்லை.

முரண்பாடுகளை திருத்துவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டுமென கூறிய முஸ்லிம் தலைமைகள், அவ்வாறு ஏதேனும் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டதா என்பதைக் கூட வாக்களித்த மக்களுக்கு கூறாமல், தமது முடிவே சமூகத்தின் முடிவு என்ற எகத்தாளத்தில் வாக்களித்திருக்கின்றனர். எனவே, இதேபோல் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கும் மு.கா. கிழக்கு மாகாண சபையில் ஆதரவைப் பெற்றுக் கொடுத்துவிடுமோ என்ற ஒரு சந்தேகம் ஏற்படுவது ஆச்சரியமில்லையே.

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான ஒரு ஏற்பாடாக அமைந்த இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை பின்புலமாகக் கொண்டே மாகாண சபைகள் முறைமை உருவாக்கப்பட்டதுடன், பெயரளவிலாவது அதிகாரங்கள் சில பகிரப்பட்டன. எனவே, நாட்டில் உள்ள ஏனைய ஆறு மாகாண சபைகள் இதற்கு ஆதரவளித்தாலும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள  தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் ஆதரவளிக்க நியாயங்கள் இல்லை.
இதேவேளை, 20இற்கு எதிராக பல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மறுபுறத்தில், மாகாண சபைகளில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது சிக்கல்களை தோற்றுவித்துள்ளதால், இதில் இன்னும் இரு மாற்றங்களை கொண்டு வந்து, மீண்டும் மாகாண சபைகளுக்கு அனுப்ப அரசாங்கம் மந்திராலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எது எவ்வாறிருப்பினும், மாநிலங்களின் அதிகாரத்தை எந்த அடிப்படையிலேனும் மத்திய அரசாங்கத்திற்கு கொடுக்கும் திருத்தத்திற்கு வாக்களிப்பது மற்றுமொரு வரலாற்றுத் துரோகமாகவே அமையும்.
வழக்கமாக, மக்களுக்கு பாதகமான 18ஆவது திருத்தம், திவிநெகும ஆகியவற்றுக்கு சார்பாக வாக்களித்து விட்டு தம்மை அரசாங்கத்தின் அபிமானிபோல காட்டி அதனூடாக வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகள், பிறகு தம்மீதே அனுதாபப்பட்டு கழிவிரக்கம் கொள்வதுண்டு. 'நாங்கள் கண்ணை திறந்துகொண்டே படுகுழியில் விழுந்து விட்டோம், தெரிந்து கொண்டே தவறிழைத்து விட்டோம்' என்று சொல்லி, தமது இயலாமையை காரணமாகக் காட்டி, மக்கள் மன்றத்தில் பாவமன்னிப்பு தேடுவதுண்டு. அந்த உத்தியை இம்முறையை கையாள நினைக்கக் கூடாது.

இது விடயத்தில், கண்ணை மூடிக் கொண்டு கையை உயர்த்துவதும், கண்ணைத்திறந்து கொண்டு படுகுழியில் விழுவதும் ஒன்றுதான்!

- ஏ.எல்.நிப்றாஸ்  (வீரகேசரி 03.09.2017)
கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்துதல். கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்துதல். Reviewed by Madawala News on 9/03/2017 12:30:00 PM Rating: 5